திரைக்கதை எழுதலாம் வாங்க
“To hell with facts! We need stories!” – Ken Kesey
கிராமங்களில் சந்தோஷமா படிச்சிக்கிட்டிருந்த என்னை தூக்கி மதுரையில் ஒரு பள்ளியில் போட்டபோது நான் ஆங்கிலம் மற்றும் கணினி கண்டு கலங்கிப் போனேன். இந்த இரண்டு புதிய துறையைவிட, என்னை அதிகம் பயமுறுத்தியது ‘ஹிஸ்ட்ரி‘ என்று செல்லமாக அழைக்கப்படும் சரித்திரம். அது இந்தியா / உலகம் பற்றிய ஐநாவின் ஆய்வறிக்கை போல இருந்தது. பெயர், தேதி மற்றும் சம்பவங்களால் மட்டுமே நிரம்பியிருந்தது. உருட்டுப் போட்டும் மாளவில்லை. ஆனால், அதே சரித்திரத்தை பின்னாட்களில் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்‘, எஸ்ரா‘வின் ‘எனது இந்தியா‘ மற்றும் ‘மறைக்கப்பட்ட இந்தியா‘, நேஹ்ருவின் ‘Glimpses of World History’ மற்றும் ‘The Discovery of India’, பெர்னியர்‘இன் பயணக் கட்டுரைகள் ஆகிய புத்தகங்களில் படித்த போது அவ்வளவு ஆர்வமாகப் படித்தேன். இவைகளில் சரித்திரம் சுவையான கதை வடிவில் சொல்லப் பட்டிருந்தது. கதைகளாகவே நினைவில் பதிந்தது.
சரித்திரம் மட்டுமல்லாமல் வாழ்வைப் பற்றிய நல்ல பழக்கங்களும் கதைகள் மூலமாகவே நமக்கு சொல்லப் பட்டது – முல்லா கதைகள், விக்ரமாதித்யன் கதைகள், ஆயிரத்தியோரு இரவுகள், ஈசாப் நீதிக் கதைகள், சிலப்பதிகாரம், மஹாபாரதம், இராமாயணம் மற்றும் பல. அதிலும் இந்த தாத்தா பாட்டிமார்கள் கதை சொல்லும் அழகே தனிதான். ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா‘ என்று தான் எப்போதுமே ஆரம்பிப்பார்கள். ஆனால், அந்த ஒரே ராஜாவுக்கே ஒவ்வொரு கதையிலும் ஒரு இன்ட்ரோ கொடுத்து, குணாதிசயங்கள் விளக்கி, பிரச்சனை ஏற்படுத்தி, வில்லனை திருத்தி (அல்லது கெட்ட ராஜா திருந்தி நல்லவனாகி), சுபமான முடிவு கொடுத்து அத்தனை டிசைன் டிசைனாக கதையைக் கொண்டு செல்வார்கள். கதை கேட்டு வளர்ந்தவர்கள், அதுவும் தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் பாக்கியவான்கள். இந்த அவசர யுகத்தில் தாத்தா பாட்டியிடம் கதை கேட்க தாத்தா-பாட்டிகள் இல்லாமல் (சமந்தாவே தன் தாத்தாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிடவில்லையா), புத்தகங்களில் கதை படிக்க பொறுமையில்லாமல், மக்கள் சென்று தஞ்சமடையும் இடம் சினிமா. மற்றவைகளை விட சினிமா மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் – அதாவது வர்த்தகரீதியில். கோடியில் புழங்கும் இடம் இது. சமுதாயத்தை பொங்கியெழச் செய்யும் அல்லது கலையம்சம் ததும்பும் படமாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் லாபமாவது வேண்டும். பைரஸி எல்லாம் தாண்டி, பார்வையாளரை தியேட்டருக்கு இழுத்து, போட்ட காசுக்காவது போணியாக வேண்டும். அதற்கு இங்கு கதை முக்கியம். அதுவும் பார்வையாளருக்கு புரியும்படி, அவர்களின் கோணத்தில் இருந்து கதையை சொல்லவேண்டும். ஆகவே, கதையோடு சேர்ந்து ‘திரைக்கதை‘ என்றும் தனியாக உழைப்பு தேவையாகி விட்டது. ஆங்கிலத்திலும், ஏனைய மொழிகளிலும் திரைக்கதை பற்றி புத்தகங்கள் இருக்கலாம். நான் படித்ததில்லை. தமிழிலும் வந்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால், திரைக்கதை பற்றி, அதுவும் திரைக்கதை எப்படி அமைப்பது என்பது பற்றி தமிழில் நான் படித்தது நண்பர் ‘கருந்தேள்‘ ராஜேஷின் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க‘ என்ற இந்த புத்தகம் தான். சூரியன் பதிப்பகம். விலை – இருநூறு ரூபாய். (PDF லிங்க் கேட்காதீர்கள்)
இதோ, மேலே இருக்கும் கொலாஜ்‘ஐப் பாருங்கள். தமிழ்த் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஒவ்வொரு frame’ஐப் பார்த்தாலே நமக்கு முழு கதாபாத்திரம் மற்றும் கதை நினைவுக்கு வந்துவிடும். பலருக்கு வசனம் கூட மூளையில் ரோல் ஓவர் ஆக ஆரம்பித்திருக்கும். காரணம். அந்த படத்தின் கதை மட்டுமல்ல, அந்த கதை எடுக்கப்பட்ட விதமும் அந்த கதாபாத்திரமும் அவர்கள் பேசும் வசனம் + மாடுலேஷன் அனைத்தும் தான். இங்கு தான் கதை தாண்டி திரைக்கதை நுழைகிறது. எப்படிப்பட்ட கதையாகினும் திரைக்கதையால் அதை ஒரேயடியாக ஒழித்து கட்டியும் விடலாம். அல்லது தூக்கி நிமிர்த்தியும் விடலாம். இந்த திரைக்கதை அமைத்தல் என்பது ஒரு கலை என்றாலும், இதை ஒரு பாடம் போல் கற்கவும் முடியும். (யார் சொன்னதா? ராஜேஷ் தான் சொன்னார்). ஆங்கிலத்தில் இப்படி திரைக்கதைகளை அமைப்பது பற்றி பல புத்தகங்கள் உள்ளன. அதில் சிறப்பான ஒன்றை ராஜேஷ் முறையான அனுமதி பெற்று, அழகாக உள்வாங்கி, நமக்கு தெரிந்த தமிழ்ப் படங்களில் மற்றும் ஆங்கிலப் படங்களில் இருந்து எடுத்துக் காட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
திரைப்படங்களின் மீது உள்ள ஆர்வத்தாலும், தன்முனைப்பாலும் சிட் ஃபீல்டின் ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு திரைக்கதைகளைப் பற்றியும் அதைக் கட்டமைப்பதைப் பற்றியும் தன் இணையத்தளத்தில் ராஜேஷ் 2011’இல் இருந்து எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட கால் சென்சுரி அடித்தபோது, கே.என்.சிவராமன் விருப்பப்பட, இந்தத் தொடர் தினகரன் வெள்ளி மலரில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியது (மே 2013 – ஜூன் 2014). அதன் பின்பே இவை அப்படியே மொத்தமாக தொகுக்கப்பட்டு இப்பொழுது ஒரு முழு புத்தகமாக வந்துள்ளது. விஷயங்களை அனாயாசமாக மறந்துபோகும் ஆற்றல் கொண்ட என் போன்றோர்களுக்கு, மீண்டும் மீண்டும் படித்து ரெஃபர் செய்துகொள்ள புரட்டிப் படிக்கக்கூடிய புத்தகமே மிகச் சிறந்த துணை.
‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ ஒரு கதையை எப்படி திரைக்கதையாய் மாற்றலாம் என்று சொல்லித் தருகிறது. என்ன கதை, என்ன வசனம், என்ன காட்சி என்பதை எல்லாம் படைப்பாளியின் சிந்தனைக்கே விட்டுவிட்டு, அவை எல்லாம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் அவற்றை எப்படி ஒரு திரைக்கதையாக மெருகேற்றலாம் என்று சொல்லித் தருகிறது. இப்படித்தான் திரைக்கதை இருக்க வேண்டும் என்று ஆணையிடாமல், இன்ன இன்ன அம்சங்கள் இப்டி இப்டி இருந்தால் பார்க்கும் பார்வையாளனுக்கு போரடிக்காது. அல்லது இப்படி கதை சொன்னால் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்கிறது. அதற்கு ஜாம்பவான்களின் படங்கள் மற்றும் வெற்றி பெற்ற படங்களில் இருந்து உதாரணங்களோடு. சரி, இந்த முறையில் இல்லாமல் வெற்றி தர முடியாதா? கண்டிப்பாக முடியும் என்கிறது. அதே சமயத்தில், ஒரு கமர்ஷியலாக வெற்றி பெற வேண்டிய படத்தில் இந்த அம்சங்கள் பொதுவாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டுகிறது. (தமிழ்ப் பட ஹிட்டுக்கு ஒரு கானா/குத்து பாட்டு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட மறந்து விட்டார். மன்னிப்போம்). மேலும், இந்த வழிமுறைகள் அப்படியே பின்பற்றப்பட வேண்டிய டேம்ப்ளேட் அல்ல என்பதையும் உணர்த்துகிறது. ஒரு திரைக்கதை எவ்வளவு பக்கங்கள் இருக்க வேண்டும், எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும், எத்தனை சீக்வென்ஸ், எத்தனை ஸீன் இருக்க வேண்டும், கதாப்பாத்திரங்கள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்கள் எப்படி திரையில் கொண்டுவர வேண்டும் என்று ஒரு ஃபார்முலா போல சொல்லித் தருகிறது. அதே சமயம் இது வெற்றிக்கு தேவையான திரைக்கதைகளுக்கு இருக்க வேண்டிய ஒரு பொது விதிதானேயன்றி, இது ஒன்றே வெற்றிக்கான விதி அல்ல என்று அவ்வப்போது சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. மேலும் முக்கியமாக, இதன்படி திரைக்கதை அமைத்து விட்டால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள் என்றும் சொல்லி விடுகிறது. நீங்கள் ஒரு சினிமா பிரியர் என்றால், புத்தகதில் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால், அந்தப் படங்களைத் தேடித் பார்த்து சினிமா பிரியராகி விடுங்கள்.
டெக்னிகல் விஷயங்கள் தாண்டி, மூன்று விஷயங்கள் எனக்கு இந்தப் புத்தகத்தில் மிகவும் பிடித்திருந்தது.
முதலாவதாக, சிறந்த கதை / திரைக்கதை என்பது சினிமாவை தாண்டி இருக்கும் ஆட்களாலும் எழுதப் படும் என்று கூறுகிறது. ஒரு அறைக்குள் உட்கார்ந்து எழுதுவதை விட, சினிமா சாராதவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் கொண்டு ஒரு சிறந்த திரைக்கதை அமைக்க முடியும் என்று ஊக்கப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் அன்றாட தேவைகளுக்காக உழைத்துவிட்டு பின் நேரம் ஒதுக்கி திரைக்கதை எழுதுபவர் என்று கருதிக்கொண்டே புத்தகம் முன்னே செல்கிறது. இது சினிமாகாரர்களுக்கான வழிகாட்டுதல் என்று எண்ண வைக்காமல், வேறு துறையில் இருக்கும் என்னை/உங்களைப் போன்றவர்களுக்குமானது என்று நம்பிக்கை தருகிறது. மதிப்புரை எழுதிய நலன் குமாரசாமியின் முதல் பத்தியே இதைப் பற்றித்தான்.
இரண்டாவதாக, காப்பியடிப்பதை மொத்தமாக நிராகரிக்கிறது. சிறந்த படங்களை/காட்சிகளை/கதைகளை காணுங்கள். அவற்றில் இருந்து உத்வேகம் பெறுங்கள். ஆனால், அவைகளை காப்பியடித்தால் மொத்தமும் தப்பு என்கிறது. இந்த புத்தகமே கூட சிட் ஃபீல்ட்’இடம் முறையான அனுமதி பெற்றே எழுதப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக, வெறும் திரைக்கதை அமைக்கும் வழிமுறைகளை மட்டும் சொல்லி அப்படியே விட்டுவிடாமல், அதை எழுதும் போது ஏற்படும் சோர்வு, மன உளைச்சல்கள் ஆகியவற்றை கூறி, இவை எல்லாம் சாதாரணம் தான், அதை தாண்டி வாருங்கள் என்று ஊக்குவிக்கிறது. திரைக்கதை எழுதும் போது ஏதோ ஒரு இடத்தில் நின்று போய், மேற்கொண்டு முன்னேற முடியாமல் ‘ச்சே… என்னடா இது… நமக்கு இது வரவேயில்லை…’ என்று நாம் நொந்து போகும் வேளையில், ‘அட… அது அப்டித்தான் பாஸ்… முக்காவாசி பேர் இந்த கட்டத்தில் கொஞ்சம் தடுமாறுவார்கள்… இது சாதாரணம்… உங்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க… மறுபடி திருத்தி/புதுசா எழுதலாம்…’ என்று நம்பிக்கை தருகிறது. இது எனக்கு மிக முக்கியமாக அணுகுமுறையாகப் பட்டது. திரைக்கதை எழுதுவது பற்றி வெறும் அட்வைஸ் செய்வதோடு என் வேலை முடிந்தது என்று போகாமல், ஒரு திரைக்கதை ஆசிரியரின் மனநிலையில் இருந்துகொண்டு, அவர் சோர்வுறும் போது ஒரு நண்பனாகத் தோள் கொடுக்கின்றது இந்தப் புத்தகம்.
திரைக்கதை எழுதுபவர்கள் மட்டுமல்ல, பத்திரிக்கைகளுக்காகவோ அல்லது தங்கள் இணையதளத்திர்காகவோ சிறுகதை / கதை / சம்பவங்கள் எழுதுபவர்களும் இதை படித்தால் பயன் பெறுவார்கள். மற்றபடி, நீங்கள் திரைக்கதை எழுதும் ஐடியாவே இல்லாமல் இருந்தாலும் (திரைத்துறை தழைக்க நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்) இந்த புத்தகத்தை ஜாலியாக படிக்கலாம். போர் அடிக்காது. கியாரண்டி.
ராஜேஷ் சொல்வது போல் – Cheers…
பிற விமர்சனங்கள்:
Your website makes it very easy to read, comment and share!
Thanks…
நான் சினிமாவுக்கு கதை எழுதுகிறேன். அதை எப்படி பிறித்து எழுத வேண்டும்.
ஹாய் கிருஷ்ணா… நான் “திரைக்கதை எழுதலாம் வாங்க” புத்தகத்தை படித்து அதற்கு என் வாசிப்பு அனுபவம் மட்டுமே எழுதினேன்… உங்க கேள்விக்கு சரியான பதில் அளிக்கக்கூடியவர் புத்தக ஆசிரியர் ‘கருந்தேள்’ ராஜேஷ்… இங்க பிடிங்க அவரை http://karundhel.com/about
அப்புறம் கிருஷ்ணா, ஒரு நண்பனாகவும் சகோதரனாகவும் திரைத்துறையில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…