Review

Danger’s Hour மற்றும் நமது கடற்படை பாதுகாப்பு

Print Friendly, PDF & Email
தற்செயலானதா என்று தெரியவில்லை.

இந்த புத்தகத்தைப் படித்த சில நாட்களுக்குள் இந்த செய்தியைக் படிக்க நேர்ந்தது. “மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து. இரண்டு வீரர்கள் மாயம் மற்றும் ஐந்து வீரர்கள் காயம். கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் ஏற்பட்ட விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகினார்.”

நான் 2001’இல் வேலை தேடி அலைந்த போது தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை மூன்றுக்கும், கிராமத்தில் இருந்து ஓடிப்போகும் எந்தவொரு நாயகனுக்கும் ராணுவத்தில் வேலை கிடைத்து பார்த்திருக்கும் நம்பிக்கையில், விண்ணப்பித்து உடல் தகுதி இல்லாததால் துரத்தி விடப்பட்டிருக்கிறேன். பின்னாட்களில், கடலோரக் காவல்படையில் இருக்கும் நடராஜ் அண்ணா தன் கப்பலைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார். ஆனால், நீர்மூழ்கிக் கப்பலை மட்டும் காண்பிக்கவில்லை. எங்களுடன் நந்தினி அக்கா, என் அம்மா மற்றும் சில பெண்களும் இருந்ததால், குறுகிய பாதை கொண்ட நீர்மூழ்கியில் நுழைந்து வெளிவருவது கஷ்டம் என்று கூறி தவிர்த்து விட்டார். மேலும், பேச்சினூடே, நீர்மூழ்கியில் உள்ள சிரமமான ஆபத்து நிறைந்த சூழ்நிலையைக் கருதி இந்திய அரசாங்கம் அதில் வேலை பார்ப்பவர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் (Double basic) உண்டு என்று கூறுனார். (கொசுறு: சியாச்சின் மலையில் காவல் காக்கும் இந்திய வீரர்களுக்கும் இரண்டு மடங்கு சம்பளம் உண்டு. இந்த கூடுதல் பணம் ஒன்றும் அங்கீகாரமோ அல்லது பெருமையோ அல்ல, வெறும் ஒரு வகையான காப்பீடு மட்டுமே.) அதிகாரம், நிரந்தர வேலை, சம்பளம் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து நீர்மூழ்கி வேலையை மிகவும் வசதியாகத்தான் உணர்ந்தேன். ஆனால் சமீபத்தில் கேட்ட பத்துக்கும் மேற்பட்ட விபத்துச் செய்திகள் பயமுறுத்துகின்றன.

போரில் சில சமயம் இழப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. ஆனால் அமைதி காலத்தில் ஏற்படும் இந்த இழப்புகளுக்கு காரணம் என்னவாக இருக்கும், கவனமின்மை தவிர? நாம் இதை ஒரு செய்தியாக கடந்து விடுகின்றோம். இத்தகைய விபத்துகளில் சிக்கும் வீரர்களின் நிலைமை ராணுவ ரகசியம் என்ற பெயரில் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் என்ன மாதிரியான கஷ்டங்களை இத்தகைய நேரங்களில் எதிர்கொள்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. சரியாக ஆவணப் படுத்தப்படுவதும் இல்லை. விஷயம் தெரிந்தவர்கள் அதை புத்தகமாக எழுதும்போது வெறும் விஷயங்களின் குவியலாக்கி விடுகிறார்கள். ஒரு கதை போல் சுவாரஸ்யம் ததும்ப சொல்பவர்கள் வெகு சிலரே.

ஆகஸ்ட் 12, 2000’இல் RFS Kursk (குர்ஸ்க்) எனும் ருஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி அதில் இறந்த 118 வீரர்களும் பேரெண்ட்ஸ் கடலின் 330 அடி ஆழத்தில் உயிரழந்தனர். 2002’இல் ஜேம்ஸ் ப்ரான்சிஸ் (James Francis) என்பவர்  டேன்ஜர்’ஸ் ஹௌர் (Danger’s Hour) என்ற புத்தகத்தை எழுதினார். நீர்மூழ்கிக் கப்பல் விபத்து பற்றியது அவரது இந்த புத்தகம். குர்ஸ்க்’கின் விபத்துச் செய்தியே இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதாகக் ஜேம்ஸ் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். இவர் 18 வருடம் இங்கிலாந்து கடற்படையில் பணியாற்றியவர். நீரில் மூழ்கி, கடலுக்கு அடியில் மருத்துவம் அளிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவர். அது சம்பந்தப்பட்ட பல சர்வதேச குழுக்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அமெரிக்க கப்பற்படை இவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது நீர்மூழ்கி கப்பல்களின் மீட்பு வழிகளை மேம்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் தன் துறை சார்ந்த புத்தகம் எழுதும் போது சற்று விரிவாகவே இருக்கும். இந்த புத்தகம் இருக்கிறது. மேலும் புத்தகத்தை மிக சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் ஜேம்ஸ் அட்டகாசமாக வெற்றி பெறுகிறார். சாதாரண ஆங்கிலம் தெரிந்தாலே புரியும் அளவிற்கு எழுத்து நடை உள்ளது.

ஒரு இரகசிய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ஒரு ருஷிய நீர்மூழ்கிக் கப்பல். அதை ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் சத்தமில்லாமல் கண்காணிக்கிறது. ஒரு கட்டத்தில் தாம் பின்தொடரப்படுவதை ருஷியக் கப்பல் விலகி ஓடுகிறது. அப்பொழுது நடக்கும் பரபரப்பில் இரண்டும் இடித்துக்கொள்ள, சில சேதங்களுடன் ருஷிய நீர்மூழ்கி தப்பிவிடுகிறது. அமெரிக்க நீர்மூழ்கி பலத்த சேதங்களுடன் மூழ்கி விடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த நீர்மூழ்கியில் உள்ளவர்கள் காப்பாற்றப்படும் வரை கதை செல்கிறது. காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிந்தாலும் அதுவரையான பரபரப்பு, அரசியல், தியாகம், போராட்டங்கள், கிளர்ச்சிகள், வீரர்களின் உறவுகள் படும் அவஸ்தை முதலியவை மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் அதில் சிக்கியவர்களின் மனநிலை எப்படி இருக்குமென்பது பல நிகழ்வுகளின் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. சுவாசிக்கும் காற்று குறையும் போது எப்படி சமாளிக்கிறார்கள், இருக்கும் குறைந்த உணவு எப்படி பகிரப்படுகிறது, காயமடைந்தவர்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள், காத்திருத்தலின் போதான நேரத்தை எப்படி கொல்கிறார்கள், கணநேர முடிவுகள், தகவல் தொடர்பு, நீர்க் கசிவு, மின்சாரம் முதலிய பல விஷயங்களை உணரமுடிகிறது. குர்ஸ்க் நீர்மூழ்கியில் கடைசி நேரத்தில் எப்படி சிரமப்பட்டிருப்பார்கள் என்று வருத்தம் வருகிறது.

Verdict: ஒரு முறை படிக்கலாம்.

பிற்சேர்க்கை

ஆகஸ்ட் 2013 முதல் மார்ச் 2014 வரை இந்திய கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சார்ந்த அசம்பாவிதங்கள்.

  1. INS சிந்துரக்ஷக் (INS Sindhurakshak) – 14 ஆகஸ்ட் 2013: மும்பை கரையோரம் மராமத்துப் பணிக்காக ஒதுங்கியிருந்த கப்பலின் ஆயுதக் கிடங்கில் (Torpedo compartment) திடீரெனத் தீப்பிடித்தது. சடசடவென ஆயுதங்கள் வெடித்தது. 15 மாலுமிகளும் 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். நீர்மூழ்கி பத்து அடி ஆழத்தில் மூழ்கிப்போனது. நீரில் மூழ்கிய பிறகும் இரண்டு மூன்று மணி நேரத்துக்கு சூட்டின் காரணமாக யாராலும் நீர்மூழ்கிக் கப்பலை நெருங்க முடியவில்லை. 
  2. INS விராட் (INS Viraat) – செப்டம்பர் 2013: இந்த விமானம் தாங்கிக் கப்பலின் உணவு உண்ணும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
  3. INS கொங்கன் (INS Konkan) – 4 டிசம்பர் 2013: மராமத்துப் பணிகளுக்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒதுங்கியிருந்த இந்தக் கிழக்கு பிராந்தியக் கப்பலில், கண்ணி வெடிகளைத் கண்டுபிடித்து அழிக்கும் கருவி திடீரென தீப்பிடித்தது. தீயை அணைப்பதற்குள் கப்பலின் உட்பகுதிகள் தீக்கிரையாகி விட்டிருந்தன. உயிர்ச் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
  4. INS தர்காஷ் (INS Tarkash) – டிசம்பர் 2013: மறைந்திருந்து தாக்கும் ஆற்றல் பெற்ற இந்த போர்க்கப்பல் மும்பை துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தும்போது இடித்துக் கொண்டுவிட்டது. மொத்த கப்பலுக்கும் பலத்த சேதம். உயிர்ச் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
  5. INS பெட்வா (INS Betwa) – 22 ஜனவரி 2014: இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டது இந்த போர்க்கப்பல். எதிரே உள்ள பொருட்களின் தூரத்தை அளக்க பயன்படும் இதன் சோனார் (SONAR) கருவி பழுதாய் இருந்ததால், மும்பை துறைமுகத்தில் நுழையும் போது, தவறான அளவீடுகளைக் காட்டிக் கொண்டிருந்தது. விளைவு, ஏதோ ஒன்றோடு முட்டிக்கொண்டு விட்டது. கடல் நீர் உள்ளே புகுந்து பல முக்கிய கருவிகள் பணால்.
  6. INS விபுல் (INS Vipul) – ஜனவரி 2014: ஏவுகணை தாங்கிச் செல்லக்கூடிய சிறப்புக் கப்பல் இது. வழக்கமான செயல்பாட்டில் இருந்தபோது இதன் முக்கிய அறையில் ஒரு துளை கண்டுபிடிக்கப் பட்டது. அப்புறமென்ன, தலையில் அடித்துக்கொண்டு மாராமத்து பணிகளுக்காக துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
  7. INS சிந்துகோஷ் (INS Sindhugosh) – ஜனவரி 2014: இந்த நீர்மூழ்கி கப்பல் மும்பை துறைமுகத்தில் தரைதட்டி விட்டது. அப்பொழுது கப்பல் தன் அத்தனை ஆயுதங்களையும் கொண்டிருந்தது. அதன் 70 வீரர்களும் கப்பலில் இருந்தனர். நல்லவேளையாக யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. கப்பலுக்கும் அப்படியொன்றும் பெரிய சேதாரம் இல்லை.
  8. INS ஐராவட் (INS Airavat) – 3 பிப்ரவரி 2014: நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய கப்பல் இது. கரையோரம் நெருங்கி பீரங்கிகளை தரையில் இரக்கவல்லது. ஆனால் விசாகபட்டினத்தில் தரை தட்டிக்கொண்டு விட்டது. இதன் முக்கிய இறக்கைகள் (Propeller) மொத்தமாக வீணாகி மாற்ற வேண்டியதாகி விட்டது.
  9. INS சிந்துரத்னா (INS Sindhuratna) – 26 பிப்ரவரி 2014: டீஸல் என்ஜின் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் இது. கேபிளில் ஏற்பட்ட ஒரு நெருப்பைத் தொடர்ந்த புகையில் சிக்கி மூச்சுத் திணறி 2 வீர்கள் இறந்து போயினர். 7 பேர் கப்பலில் இருந்து அகற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
  10. INS கொல்கத்தா (INS Kolkata) – 7 மார்ச் 2014: மும்பை துறைமுகத்தில் இருந்த இந்த அதிநவீன போர்க்கப்பலில் ஏற்பட்ட ஒரு கசிவின் காரணமாக கரிமில வாயுவை சுவாசித்து ஒரு அதிகாரி உயிரிழந்தார். மற்றும் ஒரு பணியாள் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைக்கு ஒரு சின்ன விண்ணப்பம். நீங்க எங்களை காப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.