Experience

நவநீதகிருஷ்ணன்

Print Friendly, PDF & Email

செப்டம்பர் 9, 2016. ஹோட்டல் இம்பீரியல், டெல்லி.

ஒரு கருத்தரங்கிற்காக நானும் என் பாஸும் டெல்லி சென்றிருந்தோம். எக்கச்செக்க பணம் கொட்டி, கலைநயத்துடன் இருந்தது அந்த ஹோட்டல் இம்பீரியல். தொழில் + அதிகார வர்க்கத்தினர்கள், தொழில் + அரசியல் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மாணவர்களால் நிரம்பியிருந்தது நாங்கள் இருந்த அந்த அரங்கம். மேடையில் ராஜ்ய சபா எம்.பி. ராஜ்குமார் தூத் (இவர் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்’இன் சகோதரர்) உட்பட பல முக்கிய புள்ளிகள் இருந்தனர். உக்கிரமான கவனத்துடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் வேஷ்டி சட்டை போட்டு ஒருவர் அரங்கின் பின்புறத்தில் இருந்து யாரையும் தொந்தரவு செய்யாமல் நுழைந்தார். முன்வரிசைக்கு சென்ற அவருக்கு, அவ்வளவு கூட்டத்திலும் ஒருவர் குடுகுடுவென்று ஓடிவந்து இடம் ஒதுக்கித் தந்தார். தமிழர் என்று தெரிந்தாலும், அவர் திரும்பியபோது முகம் எங்கோ பார்த்தமாதிரி இருந்தாலும், சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பத்து நிமிடம் கழித்தே பொறி தட்டியது. அட! இது அவர்’ல?

பதினோரு மணியளவில், தேனீர் இடைவேளையில் பாஸிடம் சொன்னேன், “எங்கூர்காரர் ஸார்…”

“அதான் பார்த்தாலே தெரியுதே… வேஷ்டி கட்டி, நெற்றியில் பட்டை பூசி… தெரியுமா அவரை..?”

“ராஜ்ய சபா எம்.பி. ஸார்… அம்மாவோட அ.தி.மு.க. கட்சி…”

“அட… அப்படியா… அப்ப போய் பேசவேண்டியது தான..?”

“நீங்க வேற… நா பாட்டுக்கு ஏதாவது வாய கொட்டி உளறி வெச்சிடப்போறேன்… எதுக்கு வம்பு…”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… சும்மா போய் பேசு… அதிகபட்சம் என்ன பண்ணுவாரு, பேசாம மூஞ்சிய திருப்பிக்கலாம்… அவ்ளோதான… போ… போய் பேசு…”

தோளில் தட்டி அனுப்பி வைத்தார் என் பாஸ்.

எம்.பி. ஒரு ஓரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து இன்னொருவருடன் பேசிகொண்டிருந்தார். அவரும் தெற்கத்திக்காரர் போலவே இருந்தார். மெல்ல அவர்களை நெருங்கி, “ஐயா… உங்ககிட்ட பேசலாங்களா..?”

“அட… நம்மூர் பையனா…”

“ஆமாங்கையா… மதுரை…”

“சொந்த ஊரே மதுரையா…”

“பக்கத்துல… பரமக்குடி… இராமநாதபுரம் மாவட்டம்… அங்க ஆத்துக்கு அந்தப் பக்கம் எமனேஸ்வரம்’ன்னு… சௌராஷ்டிரா பையங்க…”

இடியென சிரித்தார், “சொல்லாத… இதோ இவன் லோடலோடவென ஆரம்பிச்சிடுவார் உங்ககூட…”

அருகில் இருந்தவரை கை காட்டினார். அவரும் சௌராஷ்டிராவாம். சுப்ரீம் கோர்ட் அட்வகேட். முப்பது வருடமாய் டெல்லி வாசி. கைகுலுக்கிய அட்வகேட், “மதுரைல எங்க..?” சௌராஷ்டிரா’விலேயே கேட்க, “ஆரம்பிச்சிட்டான் பார்த்தியா…” என்று கேலி செய்தார் எம்.பி.

“லட்சுமிபுரம் ஏரியா… எம்.எல்.ஏ. சரவணன் இருக்காருல… அவர் ஏரியா… ஒரு வகைல தூரத்து சொந்தம்…”

“ஆமாமா… நம்ம எஸ்.எஸ். சரவணன் தான… ரைட் ரைட் ரைட்…”

“இருங்க ஸார், ஒரு டீ எடுத்துட்டு வர்றேன்…”, பிஸ்கட் தட்டை கீழே வைத்துவிட்டு பிரயத்தனப்பட்டு எழ முனைந்தார்.

“இருங்கைய்யா… நா எடுத்தாரட்டுங்களா..?”

“சரிப்பா… பால் இல்லாம, வரட்டீ…”

“சக்கரை…”

“கொண்டாப்பா…” அதற்குள் அந்த அட்வகேட் இரண்டு பாக்கெட் கொண்டுவந்திருந்தார்.

“பால் இல்ல தான…” என்று கேட்டுக்கொண்டே டீ அருந்த ஆரம்பித்தவர், “இப்ப என்ன வேலை பாக்குறீங்க ஸார்..?”

“இன்ஜினியருங்க… இந்த ரிலையன்ஸ் இருக்குல்ல… அதுல… ஆனா, இப்ப கொஞ்சம் லீகல் பக்கம் வந்தாச்சு…”

“எந்த அம்பானி குருப்பு..?”

“பெரியவருங்க… முகேஷ் அம்பானி கம்பெனி’ல இருக்கேன்…”

“ரைட் ரைட் ரைட்… நல்ல வேலை ஸார்… லா படிச்சிருக்கீங்களா…”

“இல்லீங்கையா… ட்ரான்ஸ்பர்’ல அங்க இங்க தூக்கிபோட்டு கடைசில இங்க செட்டில் ஆகிட்டேன்…”

“டெல்லி’லயா ஸார் வேலை..?”

“இல்லீங்க… ஆபீஸ் மும்பைதான்… வீடும் புள்ள குட்டிகளும் அங்கதான்… சும்மா இன்னைக்கு ஒருநாள்தான் வந்துட்டு போறேன்… அதிகபட்சம் மாசம் ஒருக்கா வரவேண்டியிருக்கும்… மத்தபடி உடனே திரும்பிடுவோம்… உங்களுக்கு எப்படி இருக்குய்யா டெல்லி… சாப்பாடெல்லாம் ஒத்து வருதா…”

“சாப்பாடு கஷ்டம் தான் ஸார்… கஞ்சி… அதான் சாப்பாடு…”

navaneethakrishnan

திரு. நவநீதகிருஷ்ணன், ராஜ்ய சபா MP, அதிமுக

எனக்கு அவ்வளவாக போட்டோ எடுக்கும் பழக்கமில்லை. ஆனாலும் உடன் இருந்த சுப்ரீம் கோர்ட் அட்வகேட் என் மொபைலை பிடுங்கி, “ஐயாவோட நில்லுங்க தம்பி…” என்று ஒரு போட்டோ எடுத்துத் தந்தார். “ஞாபகமா இருக்கும்…”

“ஐயா… இது என்னோட கார்டு… மும்பைல இருக்கேன்…”

பத்திரமாக வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டவர், “என் நம்பர் எழுதிக்கோங்க…” என்று இரண்டு மொபைல் நம்பர் தந்தார். அவர் தந்த எண்களை என் மொபைலில் பதிகையில், “என் பேரு எழுதிக்கோங்க ஸார்… ஏ. நவநீதகிருஷ்ணன்…”

“ஐயா, உங்க பேரு தெரியாதுங்களா…”

“எப்படி ஸார்…”

தேவையில்லாமல் சரடு விட்டு மாட்டிக்கிறதுக்கு, உண்மையே சொன்னேன், “நீங்க பாடுனீங்களே… ராஜ்ய சபால…”

“ஹா ஹா ஹா ஹா…” வெடித்துச் சிரித்தார். “நம்ம பாட்டு எவ்ளோ பேமஸ் பார்த்தியா…” என்று அட்வகேட் தோளில் தட்டினார். பின் என்னை பார்த்து, “அதுக்கப்புறம் பேசுனத கேட்டீங்களா..?”

சங்கோஜத்துடன், “இல்லைங்க ஐயா…” என்றேன்.

“கேளுங்க ஸார்…” என்றார். ஆனால் ஏனோ, இப்பவரை நான் கேக்கலை. “அப்புறம், உங்க நம்பர்’ல இருந்து எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிச்சிருங்க ஸார்…”

அதற்குள் தேநீர் இடைவேளை முடிந்து உள்ளே சென்றோம். அவர் முன் வரிசையில் சென்று அமர, நான் என் பாஸ் அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.

பாஸ் கேட்டார், “என்ன நல்ல பேசினாரா..?”

நான், “எஸ் ஸார்… நான் ரொம்ப பயத்தோடையே அவரை நெருங்கினேன்… ஆனா அவர் என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்துட்டாரு… எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்காம என்னை ‘ஸார் ஸார்’ன்னே கூப்பிட்டு சங்கோஜப்பட வெச்சிட்டாரு…”

பாஸ், “நைஸ்… ஆமா, அவருக்கும் இந்த காம்படீஷன் லா’க்கும் என்ன சம்பந்தம்..?” என்று கேட்டபோதுதான் நான் கூகிள் செய்து பார்த்தேன்.

மே 18, 1956ல் பிறந்த திரு. நவநீதகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பொன்னப்பூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர். பூண்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம், சைபர் கிரைம் மற்றும் சட்டத்தில் முதுகலை பட்டயப் படிப்பு படித்துள்ளார். 1981ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துள்ளார். 1991 – 1996’ல் தஞ்சாவூரில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டின் சிறப்பு அரசு குற்றவியல் வக்கீலாக (Special Public Prosecutor under the Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act and Essential Commodities Act) இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் கழித்து, 2001’ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீலாக (Additional Public Prosecutor) பணியாற்றியுள்ளார். 2004’ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினராக 2008 வரை பதவி வகித்துள்ளார். அதன் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். 2011-2013’ல் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். 2014’ல் தமிழ் நாடு சார்பாக அ.தி.மு.க.வால் ராஜ்ய சபாவுக்கு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்காக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கு மற்றும் செல்வ வரி கணக்கு தாக்கல் செய்யாததாக செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றிலும் ஆஜராகியுள்ளார். (தகவல்: Elections.in மற்றும் Court Verdict)

மதிய உணவு இடைவேளையின்போது அவர் அருகில் சென்றேன். சிலர் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக மாணவர்கள். சிநேக பாவத்துடனேயே பேசிக்கொண்டிருந்தார் அனைவருடனும்.

இடையே என் தட்டைப் பார்த்தவர், “நல்ல சாப்பிடுங்க…” என்றார்.

“நல்லா வயிறார சாப்டுட்டேங்க… வெள்ளிக்கிழமையா, அதான் கறி போட்டுக்கல… மத்தபடி திருப்தியா சாப்ட்டேன்… இதுக்கு மேல சாப்பிட்டா மதியம் தூங்கிருவேன்… பாஸ் வேற கூட இருக்காரு…”

மீண்டும் சிரித்தவர், “ஆமா… உங்க கம்பெனி’ல முக்கியமான பொறுப்புல இருபீங்கல்ல…”

“அப்படி எல்லாம் இல்லேங்க ஐயா… சும்மா மேனேஜரா இருக்கேன்…”

“அந்த பதவி பெருசுல்ல… கம்பெனி’க்கு உபயோகமா இருக்கீங்கல்ல…”

“அது என்னமோ இருக்கேங்க…”

“ரைட் ரைட்… அதான் முக்கியம்…”

மீண்டும் மற்றவர்களிடம் பேசப் போனார்.

சிறிது நேரம் கழித்து அவரை நெருங்கி, “மீட்டிங் முடிச்சி பாஸோட அப்படியே கிளம்பினா கிளம்பிடுவேன்… அதான் சொல்லிட்டு போலாம்னு…”

“பத்திரமா போயிட்டுவாங்க… என் நம்பர் இருக்குல… ஏதும்’னா சொல்லுங்க…”

“கண்டிப்பாங்க… வர்றேங்கய்யா…”

“ரைட் ரைட்…”

இரண்டரை மணிக்கு லஞ்ச் முடித்து அனைவரும் அரங்கத்திற்குள் வந்திருக்க வேண்டும். நான் என் இடத்தில் அமர்ந்த போது  பலர் இன்னும் வெளியே பேசிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் உள்ளே வரச்சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால் திரு. நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே நேரத்தோடு வந்து உள்ளே அமர்ந்து விட்டிருந்தார். மதியம் கருத்தரங்கு தொடங்கிய அரைமணிநேரம் கழித்து பலர் தலை நடனமாடத் தொடங்கியது. ஆனால்  திரு. நவநீதகிருஷ்ணன் மிகவும் உன்னிப்பாக மேடையில் பேசுபவரை கவனித்துக்கொண்டும் குறிப்புகள் எடுத்துக்கொண்டும் இருந்தார்.

அன்று அவரோடு இருந்த பொழுது மொபைல் எடுத்து பேசி பார்க்கவில்லை. பேசுபவரோடு மட்டும் கவனம் செலுத்தினார். நேரத்தை கடைபிடிப்பதில் (punctuality) குறிப்பாக இருந்தார். பிறருக்கு மரியாதை தந்தார். கவனமாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார். வாய்விட்டு சிரித்தார். சந்தோஷமாக இருந்தார். அவரைப்பற்றிய மற்றவர்கள் அபிப்ராயம் எனக்குத் தெரியவில்லை. இது அன்று ஒரு நாளில் நான் அவருடன் இருந்த போது உணர்ந்தது. ஒருவர் உயர, படிப்பு திறமை தாண்டி இந்த பண்புகளும் முக்கிய காரணம்.

Karthik Nilagiri

Related posts

2 Comment's

  1. Natarajan V says:

    நல்ல பதிவு, அரசியல்வாதிகள் என்றாலே தவறான ஒரு அபிப்ராயம் இருக்க தேவையில்லை என புரியவைத்த ஒரு எதார்த்தம் கலந்த எளிமையான ஒரு பதிவு.

    1. நிச்சயம் அண்ணா… நானும் பயந்தபடியே தான் அவரை நெருங்கினேன்… ஆச்சரியப்படுத்திவிட்டார்…

Leave a Reply

Your email address will not be published.