Review

நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா – ஆர்.சி.சம்பத்

Print Friendly, PDF & Email

நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா
– ஆர்.சி.சம்பத்
கவிதா பப்ளிகேஷன்

2001 மும்பை வந்தபோது நான் நந்தினி அக்கா (பெரியம்மா பொண்ணு) வீட்டில் தங்கியிருந்து வேலை தேடினேன். அத்தான் என் கல்லூரி சீனியர். வேலை தேடும் அந்த காலகட்டங்களில் மனதில் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கும். புத்தகங்கள் ஒரு வடிகால். நந்தினி அக்காவும் புத்தக பிரியை என்பது ஒரு ஆசுவாசம். எப்போதும் ஏதேனும் புது புத்தகம் வீட்டில் கிடைக்கும். அவரது அந்த வாசிப்புப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் முன்பு அவர் வீட்டில் கிடைத்த புத்தகம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றியது. மாபெரும் மேடைக்கலைஞன். முற்போக்கு சிந்தனையாளன். நாடகத்திலும் திரையுலகிலும் அவர் பாணி தனி பாணி. வில்லன். நகைச்சுவையாளன் (எனக்கு பிடித்தது ‘பலே பாண்டியா’ – அதிலும், ‘மாமா… மாப்ளே…‘ பாடலில் அவரது நடிப்பு, ஆஹா ஆஹா).  குணசித்திர நடிகர். எல்லாம் தாண்டி உண்மையான மனிதர்.

‘நீயே உனக்கு நிகரானவன்’ என்ற தலைப்பில் நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவைப் பற்றிய இந்த புத்தகம் படிக்க மிகவும் இலகுவாக இருந்தது. அவர் வாழ்வின், இளம் பிராயம் முதல் மரணம் வரையிலான சம்பவங்களின் தொகுப்பு. அவரை பற்றிய சம்பவங்கள், அவரைப் பற்றி பிறர் – பொன்னுசாமிப்பிள்ளை, எம்.ஆர்.ஆர்.வாசு, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, ‘மேக்கப் மேன்’ கஜபதி, எம்.கே.ராதா, இயக்குனர் கே.சங்கர், இயக்குனர் கே.ராஜசேகர் – கூறியவை, எம்.ஆர்.ராதாவே தன்னைப் பற்றி கூறியவை என ஒரு அட்டகாசான தொகுப்பு. படிக்கும்போது அலுப்பின்றி கதைகளாக சென்றது. அதன் மூலம் எம்.ஆர்.ராதாவின் எண்ணவோட்டத்தை நாம் அறிகிறோம். புத்தகத்தில் படித்த சில விஷயங்களை இங்கு தொகுத்துள்ளேன்.

  • பெரியாரின் சீடர் போல இருந்த ராதா, கடைசி வரையில் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக சேரவில்லை.
  • ராதா நாத்திகர். சீர்திருத்தவாதி. குருவாயூர் மட்டும் ஏனோ பிடிக்கும். குருவாயூரப்பன் சன்னதியில் போய் கண்ணை மூடிக்கொண்டு, தியானத்தில் இருப்பதுபோல் அப்படியே நிற்பார். ஆனால், சாமியைக் கையெடுத்துக் கும்பிடமாட்டார்.
  • பிறந்த ஊர் மதராஸ் (சென்னை). தந்தை பெயர் ராஜகோபால். அதனால் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன்.
  • ராதா தனது நாடக நிகழ்ச்சியில் ‘இடைவேளை’ விடமாட்டார். “இடைவேளை விட்டால், என் நாடகத்தைப் பற்றிய கருத்துகளை ‘லாவட்டரி’யில் பேசுவார்கள். என்னைப் பற்றிப் பேசக்கூடிய இடமா அது?” என்பார்.
  • ‘ஒன்ஸ்மோர்’ கிடையாது. யாராவது ஒன்ஸ்மோர் கேட்டால் “நாளைக்கு வந்து பார்த்துக்கோ” என்று கூறி மறுத்து விடுவார். “பார்வையாளர்களால் இழுத்தடிக்கப்பட்ட கூத்தாடிகளை ‘கலைஞர்கள்’ ஆக்கியவன் நான். நடிகர்களுக்கு மதிப்பு மரியாதை பெற்றுத் தந்தவன் நான்!” என்பார் ராதா.
  • ராதா ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற சொந்த நாடகக் கம்பெனி நடத்தினார். அன்றைய நாட்களில் (1943s) நாடக அரங்கின் முகப்பில் தொங்கும் பெரிய திரையில் கம்பெனி பெயர் அல்லது சரவணபவா, கடவுள் துணை போன்ற வாசகம் இருக்கும். ராதாவின் நாடக மேடை திரையில் “உலகப் பாட்டாளிகளே; ஒன்றுபடுங்கள்!” என்றிருக்கும். அந்த நாட்களில் யாரும் சொல்வதற்குக் கூட பயந்து தயங்கிய கம்யூனிஸ்ட்களின் கோஷம் இது.
  • தன் காதல் மனைவி பிரேமாவதி நோயால் மரணித்தபோது, கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு போகும் வழியில் உள்ள ஆற்றுப்பாலத்தை அடுத்த மயானத்தில் அடக்கம் செய்து, சுமார் 25 அடி உயர ஸ்தூபி எழுப்பினார். அது 70 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நின்று கொண்டிருந்தது. ஆண்டுதோறும் பிரேமாவதியின் நினைவு நாளில் ராதா அங்கு வந்து அஞ்சலி செலுத்துவார்.
  • எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக வைத்து ‘ரத்தக்கண்ணீர்’ எடுக்க முற்பட்டபோது அவர் மூன்று நிபந்தனைகள் வைத்தார். முதலாவதாக, நாடகம் பாதிக்கப்படாமல் இரவு 11 மணிக்கு பிறகே படப்பிடிப்பு நடைபெறவேண்டும். இரண்டாவதாக, சினிமா உலகில் அன்றைய தேதியில் அதிகபட்ச சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர் கே.பி.சுந்தராம்பாள். அவரை விட ஒரு ரூபாய் அதிகம் போட்டு சம்பளம் கேட்டார். (“ரத்தக்கண்ணீர்” என் வெற்றி நாடகம். அது படமா வெளிவந்துட்டா, அதன்பிறகு அந்த நாடகத்தைப் பார்க்க ஜனங்க ஆர்வமா வரமாட்டாங்க” என்றார் ராதா). மூன்றாவதாக, “என் நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் தன மனைவியைத் தனது நண்பனுக்கு மணமுடிக்கும் காட்சியை மாற்றக்கூடாது. என்னுடைய புரட்சி கருத்து படத்திலும் வரணும். பண்பாடு அது இதுன்னு சொல்லி, சினிமாக்காரங்க கதையின் முடிவை மாத்தச்சொல்வாங்க. கூடாது” என்று கண்டிஷன் போட்டார். மூன்றுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. எழுதப்படாத ஒப்பந்தம். படம் பிரமாண்ட வெற்றிப்படம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்.
  • “கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, தேனில் மருந்தைக் கலந்து கொடுப்பதைப்போல மென்மையாக சுய மரியாதைக் கருத்துகளை மக்கள் உள்ளத்தில் பதியச் செய்தார். நடிகவேள் புயல் வேகத்தில் இந்தக் கருத்துகளைப் பதியச் செய்தார்” – 35 ஆண்டுகளாக நடித்து வரப்பட்ட நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘தூக்குமேடை’ நாடகத்தை 24-07-1978ல் பார்த்து, ராதாவுக்கு பொன்னாடை போர்த்தி கலைஞர் பேசியது. இந்த நாடகத்தை 1946ல் ராதாவுக்கு எழுதி வழங்கியவரும் கலைஞர் கருணாநிதிதான்.
  • அப்பொழுதுதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்த ‘இம்பாலா’ கார் ஒரு ‘ஸ்டேட்டஸ்’ஆக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரிடம் மட்டுமே இருந்தது. “என்னடா, சில பேர் இம்பாலா வைச்சிக்கிட்டு பயம் காட்டறான். உடனே, நாமளும் ஒரு இம்பாலா வாங்கணும்” என்றார் ராதா. ஆனால், கொஞ்ச நாளில் அந்த கார் அலுத்துவிட்டது. தன்னிடம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் தந்து வைக்கோல், விறகு, கயிறு எடுத்துப் போகும் ‘லோடு’ வண்டி ஆக்கிவிட்டார்.
  • ‘ரத்தக்கண்ணீர்’ படப்பிடிப்பில் ஒரு ‘ஷாட்’டின் போது கேமராமேன், ராதாவிடம், “அண்ணே… நீங்க ‘மார்க்’ விட்டு தள்ளிப்போயிடுறீங்க. கேமராவில் ‘ஃபோகஸ்’ மாறிடும். அதனால, ‘மார்க்’ தாண்டி போகாதீங்கண்ணே” என்றார். ராதா கோபத்துடன், “என் நடிப்பைப் படம் பிடிக்கிறதுக்குத்தானய்யா உன் கேமரா! உன் கேமராவுக்கு தகுந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது. நான் நடிக்கும்போது எமோஷனிலே அங்க இங்க போவேன். அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் கேமராவோடு என் பின்னாலேயே வா!” என்றார்.
  • ரத்தக்கண்ணீர் நாடகம் 5000 தடவைக்கு மேல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தமிழ் நாடக உலகில் மாபெரும் சாதனை.
  • ‘கைராசி’ படப்பிடிப்பில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, தங்கவேலு போன்றவர்களுடன் ராதா நடித்தார். ஒரு முக்கிய காட்சியில் ராதாவுக்கு தன் நடிப்பு மீது திருப்தி ஏற்படவில்லை. அதற்கு முதல் நாள் இருந்த இடைவிடாத படப்பிடிப்புகளின் அசதி காரணமாக. தயாரிப்பாளரை அழைத்து, “இன்றைய என் நடிப்பில் எனக்கே திருப்தி இல்லை. நாளை நீங்கள் நடிகர்களை மட்டும் வரச் சொல்லுங்க. நான் மறுபடியும் நடிக்கிறேன். நாளை இதே ஷூட்டிங்கை மறுபடி வைக்க ஆகிற செலவை எல்லாம் நான் ஏத்துக்கிறேன்” என்று வேண்டினார். Perfectionism.
  • ‘வேலும் மயிலும் துணை’ என்ற படம் எழுதி ராதாவிடம் சென்றார் ‘மலையூர் மம்பட்டியான்’ இயக்குனர் ராஜசேகர். பயத்துடன் கதை சொல்லி முடிக்க ராதா “நல்லா பண்ணிருக்கே” என்றார். ராஜசேகர், “இந்த கதையில் நடிக்க நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ, என்று பயந்துகொண்டே வந்தேன்!” என்று சொல்ல, அதற்கு ராதா, “நானும் பெரியாரும் கடவுள் என்றால் இயற்கையின் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக் கொண்டோம். ஆனால், அந்த சக்தியைக் கீழ்த்தரமான உருவங்களாக ஆக்கி, ‘அதற்கு காவல்கார்கள் நாங்கள்தான், எங்களுக்கு காசு கொடுத்தால்தான் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்’ என்று போலித்தனமாக ஏழை எளிய மக்களை இறுக்கிப் பிடித்திருக்கும் இரும்புப் கரங்களை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் போராடினோம்!” என்று விளக்கினார்.
  • ‘விமலா, அல்லது விதவையின் கண்ணீர்’ என்று ஒரு சீர்திருத்த நாடகத்தைத் தயாரித்தார். மக்கள் இந்த நாடகத்தை தடை செய்ய சொல்லி நீதிமன்றம் சென்றனர். ஜட்ஜ் கணேசய்யர் தானே வந்து பார்த்தார். ராதாவை மனதார வாழ்த்தி, நாடகம் வெற்றிபெற ஆசியும் வழங்கி சென்றார். அப்புறம் தடையாவது, மண்ணாவது. பெரியாரும் இந்த நாடகத்தை பார்த்துவிட்டுத்தான், ‘திராவிடர் கழக மாநாடு நூறு நடத்துறதும் ஒண்ணு. ராதா ஒரு நாடகம் நடத்துறதும் ஒண்ணு’ன்னு அறிஞர் அண்ணா சொன்னதை அப்படியே ஆமோதிச்சார்.
  • ஆனந்த விகடன், 1964கேள்வி: நீங்கள் சினிமா உலகில் 30 ஆண்டுகளாக உள்ளவர். இந்த முப்பது வருஷத்திலே தமிழ் சினிமா முன்னேறியிருக்கா?

    எம்.ஆர்.ராதா: தொழில்நுட்பத்திலே நிறைய முன்னேறி இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்தான் அட்வான்ஸ் ஆகலே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்கறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு மொத்தமா டிக்கெட் வாங்கி, ரெண்டு வாரத்துக்கு ‘ஹவுஸ்புல்’ போர்டு மாட்டி, சந்தோஷப்படறாங்க. வெட்கக்கேடு! ஒண்ணு சொல்றேன். நானும், என்னை மாதிரி சர்வீஸ் ஆன நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாதான் தமிழ்ப்பட உலகம் உருப்புடும். அப்போதான் புது ஆசாமிங்களா போட்டு, நல்ல கதைகளா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க சம்பளமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?

  • 15-09-1954 அன்று பெரியார் தலைமையில் சென்னையில் ராதாவின் ராமாயணம் அரங்கேறியது. நாடக மேடையின் இருபுறமும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மக்கள் பார்வைக்கு அலமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தது.நாடகம் தொடங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலிக்கும்.

    “என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. அயோத்தி ராமனல்ல!” – இது காந்தியார் சொன்னது.

    “ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும், குடிக்காதவர்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது” – ஹென்றி ஸ்மித்.

    “ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள குரங்குகள் என்பவை, தென்னிந்தியாவில் உள்ளவர்களை – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்” – ரமேஷ் சந்திரதத்.

    “ராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது” – ராவ் சாகிப் தினேஷ் சந்திரன்.

    “ராம…லட்சுமணர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு” – சி.ஆர்.சீனிவாச ஐயங்கார்.

    “அயோத்தி ராஜ பாட்டையில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும்” – சருக்கம் 4-33-7, வால்மீகி சுலோகம்.

    இதன் பிறகு ராதாவின் குரல் மக்களைப் பார்த்து கேட்கும், “இது போன்ற அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா ஆகியோரின் மொழி பெயர்புகளின் அடிப்படையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மேடையின் இருபுறமும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் வைத்துள்ளோம். சந்தேகம் உள்ளவர்கள் விளக்கம் கேட்டால், நாடக முடிவில் விளக்கம் ஆதாரத்துடன் தரப்படும். தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத் தயார். சரி என்றால் உங்களைத் திருத்திக் கொள்ளத் தயாரா?”

My verdict: உங்கள் நூலகத்தில் வைத்து படிக்கவும்.

Karthik Nilagiri

Related posts

2 Comment's

  1. V Natarajan says:

    Good narration

  2. Thanks அண்ணா… இதெல்லாம் புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதியதுதான்…

Leave a Reply

Your email address will not be published.