Review

ழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார்

Print Friendly, PDF & Email

ழ என்ற பாதையில் நடப்பவன்
-பெரு. விஷ்ணுகுமார்
மணல்வீடு

கவிதை தொகுப்புகளை படிப்பதை விட மிகவும் கடினம் அதை பற்றி எழுதுவது. கவிஞரும் வாசிப்பவரும் ஒரே மனதில் இருந்தாலொழிய கவிதைகள் ஒழுங்காக வாசிப்பவரிடம் போய் சேருவது கடினம். கவிஞர் ஒரு கோணத்தில் எழுதி இருக்க வாசகர் அதை புரிந்து கொள்ளாமலே போகவோ, அல்லது தப்பாகப் புரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் அதிகம். கவிஞரே அத்தனை கவிதைகளையும் ஒரே மனதில் எழுதுவது இல்லை. அதனால் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதுவது சற்று ரிஸ்க் நிறைந்ததுதான்.

‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு பெரு. விஷ்ணுகுமார் எழுதியது. இந்தத் தொகுப்பு மொத்தம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத எண்ணி மறந்துபோன வரிகள், ஏயம், சிறுநனிப் புள்ளிகள், துவாரங்கள், ட்ரெக்கிங் போகும் கவிதைகள் மற்றும் வயலீனா.

‘எழுத எண்ணி மறந்துபோன வரிகள்’ பகுதியின் முதல் கவிதை மற்றும் இந்த தொகுப்பின் முதல் கவிதை சொல்லி வைத்தார் போல் ‘நூதனக் கிறுக்கன்’. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது முதல் கவிதையின் தலைப்பு. அடுத்தடுத்த பக்கங்களில் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிய ஒரு பக்க கவிதைகள். ‘உரையாடல்’ எனும் கவிதையின் முதல் வரிகள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தன. ஏனென்றால் பல முறை வாழ்வில் நாம் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு இருப்போம். அதனால் டக்கென்று மனதில் ஒட்டி விட்டது.

உரையாடல்

உரையாடுகையில் உங்கள் முன்னே
கொட்டாவியை விழுங்க தெரிந்த நானே
கைதேர்ந்த நடிகன்

இரண்டாம் பகுதி ‘ஏயம்’. இந்தப் பகுதியிலும் சில கவிதைகள் நம்மோடு வாழ்வில் சந்தித்த சம்பவங்களை பிரதிபலிக்கின்றன. ‘விவஸ்தை கெட்ட நாணயங்கள்’ வாழ்வில் பலருக்கும் பல சமயங்களில் நடந்திருக்கலாம். பகுதியின் தலைப்பு ‘ஏயம்’ என்றால் என்ன என்று தெரியாவிட்டாலும் கவிதைகள் எல்லாம் ஓரளவு புரியவே செய்தன.

மூன்றாம் பகுதி ‘சிறுநனிப் புள்ளிகள்’. இந்தப் பகுதியில் எனக்கு பிடித்தது சற்று நீண்ட கவிதை ‘போரின் முனையில் பாத்திரம் கழுவுதல்’. சாதாரண வாழ்வையும் போரின் நிகழ்வையும் பின்னி எழுதி இருந்தது போல் எனக்கு தோன்றியது.

இந்தத் தொகுப்பில் நான்காம் பாகம் ‘துவாரங்கள்’. பத்திரிக்கை தர்மம் பற்றி, கடல் பற்றி, காமம் பற்றி, காடு பற்றி, ஆசிரியர் பற்றி, நீதிமன்றம் பற்றி, மழை பற்றியெல்லாம் கவிதை உண்டு. சிலப்பதிகாரம் பற்றியும் ஒரு கவிதை இருந்தது.

வீசியெறிதல்

முன்பொரு காலத்தில்
ஒரு வணிகரின் மனைவியும்
உன்னைப்போல்
தன்னொரு கொலுசை வீசியெறிய

உன்னுடையதாவது பரவாயில்லை
அது தன்னையொரு
ட்ராகனாக நினைத்துக்கொள்ள

அப்புறமென்ன
ஊரே பற்றி எரிந்தது.

சற்றே funnyயாக, சூரிய வம்சம் படத்தில் மணிவண்ணன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு பஸ்ஸில் தூங்குபவரை எழுப்புவாரே அதைப் பற்றியும் ஒரு கவிதை இருந்தது. அதன் தலைப்பு ‘கடுப்பை அழைத்தல்’.

ஐந்தாம் பகுதி ‘ட்ரெக்கிங் போகும் கவிதைகள்’. இந்தத் தொகுதியில் என்னை மிகவும் பாதித்த கவிதைகளாக இந்தப் பகுதியின மூன்று கவிதைகளை சொல்லலாம். இந்த மூன்று கவிதைகள் ‘குழந்தைகளைக் கொல்லும் வழிமுறைகள்’ எனும் தலைப்பின் கீழ் வருகின்றன. அதிலும் ‘நீச்சல் பயில்வித்தல்’ எனும் கவிதை தன் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொன்றுவிட்டு தானும் இறந்து போகும் ஒருவனை பற்றியது.

கடைசி பகுதி ‘வயலீனா’ இசை பற்றிய நீண்ட நீண்ட கவிதைகளைக் கொண்டது. இசை மற்றும் கவிதையின் பால் ஆர்வம் கொண்டவர்கள் இதை பொறுமையாக படிக்கலாம் அல்லது ஒரு தேவ பானத்திற்குப் பின்னும் படிக்கலாம். நான் சற்று வேகமாக குதித்து படித்துத் தாண்டி விட்டேன்.

My verdict: கவிதையின் பால் ஆர்வம் கொண்டவர்கள் ஒரு முறை படிக்கலாம்

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.