Experience

பள்ளிக்கூடம்

Print Friendly, PDF & Email
நீங்கள் எத்தனை பள்ளிக்கூடம் படித்திருப்பீர்கள்?

இப்பொழுதெல்லாம் பலர் தங்கள் குழந்தைகளை ஒரு சிறந்த(!!!) பள்ளியில் சேர்த்துவிட்டு அதை அப்படியே மறந்துபோக எண்ணுகின்றனர். ஏனெனில், பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பதைவிட சிரமம் பள்ளி மாற்றுவது. புது பள்ளியில் இடம் காலி இருக்க வேண்டும் முதலில். அப்படியே ஒன்றிரண்டு இடம் இருந்தாலும் அதற்கு மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கான குத்தகை போல அடிதடியே நடக்கும். அது போக டொனேஷன், காப்பிடேஷன், பள்ளி மாற்றுச் சான்றிதழ், லொட்டு லொசுக்கு என்று பர்ஸுக்கும் ஏகப்பட்ட வேட்டு வைத்து விடும். சேரப்போகும் வகுப்பைப் பொருத்து இந்த பீஸ்களின் அளவும் ஏறும். சமயத்தில் நேர்முகத் தேர்வு வேறு வைத்து கொல்வார்கள். குழந்தைக்கு கேள்வி கேட்கப்படும் போது குழந்தை அங்கிருக்கும் படம், பொம்மை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும். நாமும் பதில் தெரியாமல் கேள்வி கேட்கும் அந்த டீச்சரையோ அல்லது அருகில் இருக்கும் வேறு அழகான டீச்சரைப் பார்த்துக் கொண்டிருப்போம். நம் பார்வை கவனிக்கப்பட்டு, குழந்தைக்கு சீட் மறுக்கப்பட்டு, அங்கேயே அக்கணமே திருப்பி அனுப்பப்படும் சாத்தியங்கள் மிக அதிகம். நர்ஸரிக்கே அலெக்சாண்டர்’இன் குதிரை பெயர் வரை கேட்பார்கள். நாலாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு சேர்க்கை என்றால் போச்சு. பாமக எந்த வருடத்தில் ஆட்சி அமைக்கும் என்பதுவரை கேட்டுத் தொலைக்கலாம். மேலும் பல பள்ளி மாற்றினால் படிப்பு கேட்டுப் போகும் என்று ஒரு ஐதீகம் வேறு பெற்றோரிடையே உண்டு. அதனால் பலர் ஒரே (அதிகபட்சம் மூன்று) பள்ளியில் படித்து முடித்துவிடுகின்றனர்.

அப்பா இந்தியன் வங்கியில் வேலை பார்த்தார். அதனால் ஊர் மாற்றல் வந்துகொண்டே இருக்கும். அப்பா தாத்தா, பாட்டி, அம்மா, நான், தங்கை மற்றும் தம்பி என்று மொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு செல்வார். இதனால் எனக்கு பல பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அட்டகாசமான நண்பர்களும் அனுபவங்களும் கூட.

என் முதல் பள்ளி குகன் நர்சரி. மதுரையில் என் பள்ளிப் படிப்பு தொடங்கியது. அப்பொழுது நாங்கள் இலட்சுமிபுரம் இரண்டாம் தெருவில் இருந்த தாத்தா வீட்டில் இருந்தோம். எதிரே குகன் நர்சரி. வீட்டில் அதிகம் தொல்லை தந்ததால் பொறுக்கமாட்டாமல் என்னை அங்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள், ஒரு இரண்டு மணி நேரமாவது தொலையட்டும் என்று. எதிர் வீட்டில் இருந்த அந்த பள்ளியில் கொண்டுபோய் விடவே என் பாட்டி வருவாள். சக பெண் மாணவிகளின் மத்தியில் அது என் கௌரவத்துக்கு குறைவாகப் பட்டதால், நானாகப் போய் விடுவேன் என்று கூறி பாட்டியை விரட்டி விடுவேன். பையில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் இருக்கும் அவ்வளவுதான். ஆனாலும் நானே தூக்கிக் கொண்டு எங்கள் வீட்டு படியிறங்கி, சாலை கடந்து, மறுபுறம் படியேறி பள்ளிக்கு செல்வேன். அந்த காலத்தில், அந்த வயதில் அது பெரிய விஷயம்தான்.

என்னை சேர்த்த இரண்டாவது பள்ளி, மதுரையில் இருந்த ஹார்வி மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு நான் படித்தது LKG. குகன் நர்சரி என் அறிவுக்கு தீனி போடாததாலோ அல்லது அங்கு நான் மனம் வேண்டிய வேளையில் வீட்டுக்கு ஓடிவந்த காரணத்தினாலோ என்னவோ, என்னை சற்று தள்ளியிருந்த பெரிய பள்ளியான ஹார்வி’யில் சேர்த்தார்கள். அங்கு எதுவும் படித்த ஞாபகம் இல்லை. கொண்டுவிடும் போது அம்மாவைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று ஒரு ஓரத்தில் அமர்ந்து விடுவேன். அங்கு தட்டியில் இருக்கும் ஒரு இடைவெளி வழியாக தெருவைப் பார்த்துக் கொண்டிருப்பேன். கோரஸாக எல்லாருடன் ரைம்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாலும், இடைவெளி வழிகாக அம்மாவின் வருகையை எதிர்நோக்கியிருப்பேன். மதியும் வந்து மரத்தடியில் துண்டு விரித்து உட்காரவைத்து கொண்டுவந்த சோறை ஊட்டிவிடுவாள் அம்மா. பிறகு மறுபடி வகுப்பு. அம்மாவின் வருகைக்கான எதிர்பார்ப்பு. இதனிடையே அப்பாவுக்கு கல்கத்தா மாற்றல் வந்தது. அப்பா முதலில் சென்று வீடு பார்த்த பிறகு நாங்கள் அனைவரும் கல்கத்தா கிளம்பினோம்.

மூன்றாவது பள்ளி, லேக் கார்டன்ஸ் ஸ்கூல். தமிழ் நாட்டில் பள்ளி ஏப்ரல்’இல் தொடங்கி அடுத்த மார்ச்’இல் முடியும். ஆனால், கல்கத்தா’வில் ஜனவரி’யில் தொடங்கி டிசம்பர்’இல் முடியும். மேலும் தமிழ் நாட்டில் மூன்று வயதில் LKG; ஆனால் வட இந்தியாவில் நாலு வயதில்தான் LKG. இந்த குழப்பத்தில் ஏதோ நடந்து என்னை மறுபடியும் LKGயில் சேர்த்து விட்டார்கள். ஹிந்தி வழி கல்வி மற்றும் பெங்காலியும் உண்டு. பள்ளி எங்கள் வீட்டுக்கு மிக அருகில். அதனால் தாத்தா தன் சைக்கிளில் அமர வைத்து அழைத்துச் செல்வார். உயிரைக் கொடுத்து சொல்லிக் கொடுத்தும், நானும் மாங்கு மாங்கு என்று படித்தும், அதிரடியாக நான் பெயில் ஆகித் தொலைக்க எனக்கு out-pass கொடுத்தார்கள். அதாவது ‘ஐயா, நான் உங்க பள்ளியில் படித்து உங்கள் வெற்றி சதவிகிதத்தை குறைக்க மாட்டேன். வெளியே எங்காவது போய் படித்து டாக்டரோ எஞ்சிநீயரோ ஆகிக் கொள்கிறேன். எனக்கு பாஸ் போட்டுக் கொடுங்கள்’ என்பது அதன் சாராம்சம். சந்தோஷமாய் வெளியே வந்தேன். சில கொழுக் மொழுக் பெங்காலி தோழிகளை இழந்தது மட்டுமே சோகம்.

நான்காவதாக என்னைச் சேர்த்தது, நேஷனல் ஹை ஸ்கூல். வீட்டில் இருந்து சற்று தொலைவுதான். ஆனால் அங்கு ஆங்கில வழிக் கல்வி. ICSE பாடத் திட்டம். என்னை அங்கு ஒரு நிபந்தனையுடன் UKGயில் சேர்த்துக் கொண்டார்கள். Out-pass மாணவன் என்பதாலும், வயது கம்மி என்பதாலும் அவர்கள் கூறிய நிபந்தனை இது தான் – ‘முதல் காலாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், இல்லேன்னா மறுபடியும் LKG’. வீட்டில் மீண்டும் அதே மாங்கு மாங்கு. இந்த முறை நானும் ஊன்றிப் படித்தேன். மூன்றாவது முறையும் LKG படித்து அதை ஒரு இளநிலை படிப்பு போல மாற்ற விருப்பம் இல்லை. LKG போட்டாலும் ஒரு வகையில் ஓகே, பள்ளியை விட்டு விலக்கி விட்டால் என்ன செய்வது என்ற பயம் மேலோங்கி இருந்தது. காரணம் நேஷனல் ஹை ஸ்கூல் ஒரு பெண்கள் பள்ளி, அட இருங்கப்பா, பட் ஐந்தாவது வரை ஆண்கள் அனுமதிக்கப் படுவர். பெண்கள் பள்ளியில் படிக்கக் கிடைத்த வாய்ப்பை எவனாவது இழப்பானா? முதல் தேர்வில் பத்து ரேங்க்’கிற்குள் வந்தேன். என்னை UKG மற்றும் பள்ளியில் தொடர அனுமதித்தார்கள். மேலும் என் தங்கை சுபா’வுக்கும் அங்கேயே சேர்த்துக் கொண்டார்கள். அங்கு எனக்கு படிப்பு சார்ந்த நான்கு பரிசுகள் கிடைத்தது. என் தமிழ் டீச்சர் என்னை ‘இட்லி கன்னம்’ என்று கொஞ்சிக் கொண்டிருப்பார். மற்றபடி, அந்த பள்ளி ஒரு சுத்த போர். அங்கு விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டு நேரம் இல்லை. அதிகபட்ச விளையாட்டு, பெல் அடித்த பிறகு கும்பலாக வகுப்பிலிருந்து ஓடி வருவதுதான். UKG, முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படித்தேன். ஜனவரியில் மூன்றாவது பாடம் தொடங்கியபோது அப்பாவுக்கு மீண்டும் மாற்றல், கோவில்பட்டிக்கு.

நான்காம் வகுப்பு
(மேல் வரிசையில் வலது பக்கத்தில் இருந்து நாலாவது)

எனது ஐந்தாவது பள்ளி கோவில்பட்டியில் இருந்த செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேட்ரிகுலேஷன் பள்ளி. வீட்டில் இருந்து மிக அருகில். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை கல்கத்தா பள்ளியில் மூன்றாம் வகுப்பு பாதி படித்திருந்ததால் என்னை நான்காம் வகுப்பில் சேர்த்தார்கள். அதே நிபந்தனை – படிக்காவிட்டால் மறுபடி மூன்றாவது. நான் படித்து விட்டேன். இந்த பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. மற்றும் நிறைய தென்னை மரங்களுடன் ஒரு தோட்டம் இருந்தது. மதிய உணவு தோட்டத்தில், மரங்களுக்கிடையே உண்டு, ஊடே ஓடிய வாய்க்காலில் கை கழுவி, வேலியைத் தாண்டி இருந்த பாட்டி கடையில் கைநீட்டி கடலை பொரி வாங்கி தின்று பொழுது ஓடியது. இரண்டு மூன்று நண்பர்கள் அமைந்தார்கள். நரேஷ், பக்கத்து வீட்டில் இருந்த வகுப்புத் தோழன். பாக்கியராஜ், விடுதியில் தங்கி படித்த தோழன். ஒரு எட்டு பத்து வயது பையனை விடுதியில் சேர்ப்பார்கள் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண் தோழிகளும் இருந்தனர். அதில் ஒரு பெண் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தூண்டிவிட, சாரிடான் மாத்திரையை அப்படியே கடித்து சாப்பிடுவேன் என்று பந்தயம் வைத்தேன். கடித்து சாப்பிட்டபின் ஒரு பீரியட் முழுசா தண்ணி குடிக்கக் கூடாது, உன்னால் முடியுமா என்று கேட்டாள். ஏற்றுக் கொண்டேன். உணவு இடைவேளைக்கு பிறகு நண்பர்கள் சுற்றி நின்று உற்சாகப்படுத்த அவள் அருகில் அமர்ந்து மாத்திரையை ஊட்டி விட்டாள். கசப்பு வாயில் பரவ பரவ, “முழுங்கக் கூடாது, கடி” என்றாள். கடித்து பொடிப்பொடியாக்கி வாய் பூராவும் பரவிக்கொண்டேன். மதியம் முதல் பீரியட் பேயறைந்தது போல் நான் உட்கார்ந்திருந்தேன். மற்றவர்கள் பாடத்தையும் என்னையும் கவனித்துக் கொண்டிருந்தனர். பீரியட் முடிந்தபின் பத்து நிமிட இடைவேளையில் நான் போய் தண்ணீர் குடித்து இளைப்பாறிக் கொண்டேன். இன்று வரை மாத்திரை சாப்பிடுதல் எனக்கு ஒவ்வாது. வாயில் போடும்முன்னேயே உவ்வாவாக் என்று கொட்டித் தீர்த்துவிடுவேன். அப்புறம், சொல்ல மறந்துட்டேனே, அன்று மாலை பள்ளி முடித்துப் போகும் போது தகரக் கடை முக்கில் தனியாக என்னை மடக்கிய அவள், “டேய் லூஸு… இப்டியா பண்ணுவே… இந்தா…” என்று ஒன்று கொடுத்துச் சென்றாள். அத்தனையும் மறந்து வாய் சற்றே இனித்தது. காரணம், அவள் கொடுத்த அந்த ‘தேன்மிட்டாய்’. ரொம்ப யோசிச்சிட்டீங்களா, அட அப்ப நாங்க படிச்சது நாலாவது தாங்க. இவ்வளவு தான் முடியும். இந்த மாத்திரை வளர்வதற்குள் அப்பாவுக்கு மீண்டும் மாற்றல். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் அவருக்கு அலுவல். நாங்கள் அருகில் இருந்த வேதரண்யத்தில் வீடு பார்த்தோம்.

என் ஆறாவது பள்ளி, செயின்ட் அந்தோனி’ஸ் மேட்ரிகுலேஷன் பள்ளி. ஐந்தாம் வகுப்பு சேர்த்து விட்டார்கள். அந்த பள்ளியில் ஷூ போட்டுக் கொண்டு போன சிலரில் நான் ஒருவன். மேலும் ஆங்கிலத்தில் உறுதிமொழி சொல்லத் தெரிந்த காரணத்தால் என்னை ‘பள்ளி மாணவர் தலைவர்’ ஆக்கி விட்டார்கள். ஒரு வருடம் படித்தேன். இங்கு படித்த போது முதல் முதலாக நாடகத்தில் நடித்தேன். சென்னைக்கு பள்ளி மூலம் முதல்முறையாக தனியாக சுற்றுலா சென்று வந்தேன். முக்கியமாக என் முதல் பெண் தோழியை இந்த பள்ளியில்தான் சந்தித்தேன், மண்டை உடைத்துக் கொண்டு ஒரு தையலும் போட்டுக் கொண்டேன். மிக மிக சுமாராக படித்தாலும் இரண்டாவது ரேங்க் எடுத்தேன் (முதல் ரேங்க், சுரேகா எடுப்பாள்), ஏன்னா வேற யாரும் பாஸ் கூட பண்ண மாட்டார்கள். அந்த பள்ளியே செம ஜாலியாக இருந்தது. போட்டி மிகவும் கம்மி என்பதால் மிக சந்தோஷமாகப் படித்தேன். ஆனால், வழக்கம் போல் ஒரே வருடத்தில் மாற்றல். இந்த முறை அப்பாவுக்கு அல்ல. என் பள்ளியே புது கட்டிடத்துக்கு மாறியது.

என் ஏழாவது பள்ளி, அதே செயின்ட் அந்தோனி’ஸ் மேட்ரிகுலேஷன் பள்ளி தான், ஆனால் புது கட்டிடத்தில். ஆறாவதும் ஏழாவதும் இங்கு படித்தேன். இந்த பள்ளியிலும் நான் இரண்டாவது ரேங்க் தான் (சுரேகா போய்விட்டாள். மாறாக மேனேஜரின் மகள் மீனாக்ஷி வந்துவிட்டிருந்தாள்). ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பள்ளி சற்று தள்ளி இருந்ததால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள் வீட்டில். படிப்பை விட சைக்கிள் பயணம் தான் அதிகம் ஞாபகம் இருக்கிறது. இங்கு எல்லா போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு வாங்குவேன். பாட்டுப் போட்டி என்றால் இயேசு புகழ் பாடல்கள், அல்லது ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ வகையறாப் பாடல்கள். ஒரு பரிசைத் தூக்கி கையில் கொடுத்து விடுவார்கள். திங்கள் கிழமை தலைமையாசிரியரின் அறையில் இருந்து, மைக் மூலம், அத்தனை வகுப்புகளுக்கும் கேட்குமாறு திருக்குறள் சொல்வது என் கடமை. சிலபல திருக்குறள் கவனித்துப் படித்தது அதனால்தான். இந்த பள்ளியில் நான் ராஜாவைப் போல் உணர்ந்தேன். காரணம், இந்த பள்ளியைத் தாண்டி இந்த ஊரில் நான் பல அற்புதங்களை எதிர்கொண்டதுதான். என் முதல் பெண் தோழியை சந்தித்தது இந்த ஊரில் தான். நாட்ராஜ் அண்ணா கிடைத்தது, தம்பி வேதராமன் பிறந்தது, நாடகத்தில் நடித்தது, தனியாக பள்ளி சுற்றுலா சென்றது, மாட்டுப் பொங்கலில் கன்று குட்டியை அடக்கியது, கோழியை உரித்தது, பேயை தேடியது, சில மரணங்களை சந்தித்தது, ஈழத்தில் இருந்து வந்த நண்பர்களைப் பெற்றது, பெண்ணொருத்தி சாமியாடிப் பார்த்தது, ஆண்கள் குடித்துவிட்டு ஆடுவதைப் பார்த்தது, முயல் வளர்த்தது, நூலகம் செல்ல ஆரம்பித்தது, புது சைக்கிளைப் பெற்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்து அப்பாவுக்கு மாற்றலானது மதுரைக்கு.

பத்தாம் வகுப்பு
(கீழ் வரிசையில் வலது பக்கத்தில் இருந்து மூன்றாவது)

என் எட்டாவது பள்ளி, வீ.கே.கே.ப்ளே குரூப் மேட்ரிகுலேஷன் பள்ளி. சின்னசொக்கிக்குளத்தில் இருந்தது. RTO ஆபீஸ் மற்றும் காக்கைப் பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகில். எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது இங்கு படித்தேன். பெயருக்கு ஏற்றது போல இங்கு பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிப்பார்கள். நான் பல பரிசுகள் பெற்றது இங்குதான். ஓட்டப் பந்தயம் மட்டுமல்ல, டிஸ்கஸ் த்ரோ, ஜாவ்லின், லாங் ஜம்ப், வில் அம்பு என்று பல. என் எடைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத குண்டு எறிதல் போட்டியிலும் பரிசு வாங்கியிருக்கிறேன். முதல் முறை கணினி பார்த்தது இங்குதான். என்னடா இது, நாம் மனக் கணக்கில் போடுவதை இது பல வரி ப்ரோக்ராம் எழுதினால் சொல்கிறது, சரியான அசட்டு இயந்திரம் என்று வெறுத்திருக்கிறேன். ஏசி அறையில் இருப்பதாலே மட்டுமேயும், கேம்ஸ் விளையாட முடிவதால் மட்டுமே எனக்கு கம்ப்யூட்டர் வகுப்பு பிடித்தது. மற்றபடி காக்கை பாடினியார் பள்ளி மாணவிகள் வெளியே சுற்றும் போது விளையாட்டு மைதானத்தில் சத்தம் போட்டு விளையாடப் பிடிக்கும். இங்கு ஓரளவு நன்றாகப் படித்தேன். ஒரு முறை எட்டாவது படிக்கும் போது வரலாறில் 100க்கு 59 வாங்கி வைத்திருந்தேன். அது செகண்ட் கிளாஸ் என்று நண்பன் தாமோதரன் சொல்லிவிட ஓஓஓவென்று மூன்று மணி நேரம் அழுதேன். என் மீது பரிதாபப்பட்டு (அல்லது என் ஓலத்தை தாங்க முடியாமல்) நண்பர்கள் மிஸ்ஸிடம் சிபாரிசு செய்ய (கம்ப்ளைன்ட் என்றும் கொள்ளலாம்) அவர் அழைத்து 10 மார்க் அதிகம் போட்டு 69 ஆக்கினார். மற்றபடி ஜாலியான பள்ளி. பத்தாவது பப்ளிக் தேர்வு மட்டும் கடுப்பாக இருந்தது. அதுவும் கடைசி தேர்வின் போது யாரோ ஒரு தேசிய தலைவர் இறந்துவிட, தேர்வு ஒரு நாள் தள்ளிப் போனது. ஒரு வழியாக எழுதி முடித்த போது வளர்ந்த பிள்ளைகளாக உணர்ந்தோம். இடையே அப்பாவுக்கு பல  மாற்றல்கள் வந்து கொண்டிருந்தது, மேலூர், பரமக்குடி, மதுரை மெயின், அண்ணா நகர் கிளை என்று. என் படிப்பு கருதி என் பள்ளி மாற்றவில்லை. அவர் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால், என் பள்ளி மாறியது. என் பள்ளியை மொத்தமாக தூக்கி சின்னசொக்கிக்குளத்தில் இருந்து தூரத்தில் காளவாசலில் மாப்பிள்ளை-மாணிக்க விநாயகர் திரையரங்கம் அருகில் வைத்தார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு
(மேல் வரிசையில் இடது பக்கத்தில் இருந்து மூன்றாவது)

என் ஒன்பதாவது பள்ளி, காளவாசலில் புது கட்டிடத்தில் நிறுவப்பட்ட வீ.கே.கே.ப்ளே குரூப் மேட்ரிகுலேஷன் பள்ளி. பத்தாவதில் நான் ஸ்கூல் பிரஸ்ட். ஆனா அதுல பாருங்க, ஆங்கிலத்தில் 200க்கு 107, அறிவியல் பாஸ் தான் ஆனால் கெமிஸ்ட்ரி’யில் தனிப்பட்ட முறையில் 50க்கு 14. என்னை எதிரே அமர வைத்து தன் மேஜையில் என் மதிப்பெண் தாளைப் பரப்பி என்னை என்ன செய்வதென்று தெரியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நான் வேறு நிலைமை புரியாமல், “கவலைப் படாதீங்க மேடம். நான் வேற எந்த பள்ளிக்கும் போக மாட்டேன். இங்கேயே படித்து எஞ்சினீர் ஆவேன்” என்று உரை நிகழ்த்த, அவர் மேலும் கலவரமானார். கடைசியில், எனக்கு சீட் கொடுத்தார்கள், பழைய மாணவன் என்ற அடிப்படையில். PCM – Physics, Chemistry, Maths – மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ். மதிப்பெண் கம்மியாகலாம் என்றாலும் விரும்பி தமிழை முதல் பாடமாய் எடுத்தேன். இரண்டு வருடம் ஜாலியாகப் படித்தேன். பத்தாவதில் இரண்டாம் இடம் பிடித்த அருண், இப்பொழுது முதல் ரேங்க் எடுக்க ஆரம்பித்தான். நான் அவனைத் துரத்த, அவன் மேலும் முன்னேற நாங்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம். அவன்  இல்லையெனில் நான் படித்திருக்கவே மாட்டேன். படிப்பு போக, விளையாட்டு பரிசுகள் தொடர்ந்தது. மேலும் மேலும் பரிசுகள் வாங்கினேன். ‘பாரதி ஹவுஸ்’இன் தலைவராக நியமிக்கப்பட்டு குழுவாக பரிசுகளை வென்றோம். இந்த சமயங்களில் சில நண்பர்கள் காதலில் விழுந்தனர், சிலர் படிப்பு நின்றது, அடிதடியில் இறங்கி அடி வாங்கி வந்தனர், பலான புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன, வாத்தியாரிடம் சண்டை போட்டோம் இன்னும் பல. அந்த நட்பு இன்றும் உள்ளது. Whatsapp தொடர்பில் உள்ளோம். நான் chemistry டியூஷன் போனேன், காட்டுப் பிள்ளையார் கோவில் பின்னே இருந்த ஜோசப் சாரிடம். அப்பாவின் அலுவலக நண்பர் நாகநாதன் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தார். Physics நானாகப் படித்தேன். ஆனாலும் நல்ல மதிப்பெண் எடுத்தேன். பனிரெண்டாவது பொதுத் தேர்வு முடித்த போது பள்ளி முடிந்தது. மனம் கனத்து வெளியே வந்தேன்.

என் பத்தாவது பள்ளி, சென்னையில் உள்ள MIT பொறியியல் கல்லூரி.

பதினோராவது பள்ளி, பெங்களூரில் உள்ள IIM-B மேலாண்மைக் கல்லூரி.

இதையெல்லாம் விட ஒரு பெரிய பள்ளி உள்ளது. அதுவே வாழ்க்கை.

டஜன் பள்ளியில் படித்து விட்டேன் / கொண்டிருக்கிறேன். நல்லாத்தான்யா போகுது.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.