Experience

நூறு ரூபாய்

Print Friendly, PDF & Email

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

இவர்களை நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்த்திருக்கலாம். ஒல்லியான, கணுக்கால் வரை பேண்ட் போட்டு, இன் செய்யாத முழுக்கை சட்டை அணிந்து, புகையிலை போடாமல், கறை படிந்த பற்களுடன், ரப்பர் செருப்பு அணிந்து, ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் தந்தை. அவர் பின்னே உயரம் அதிகமில்லாத, அதே ஒல்லியான, முக்காடு அணிந்தோ அணியாமலோ புடவை கட்டி, பிளாஸ்டிக் வளையல் அணிந்து, மூக்குத்தி குத்தி, ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாய். இருவர் முகத்திலும் பரிதாபம் தாண்டவமாடும். கைக்குழந்தை தூங்கியிருக்கும். பெரிய குழந்தை அமைதியாய் தந்தையின் தோளில் வீற்றிருக்கும். அல்லது தந்தையின் நிலையை காணச் சகிக்காமல் அதுவும் தூங்கியிருக்கும். இந்த நால்வர் குடும்பத்தை எந்த பரபரப்பான ரோட்டின் முச்சந்தி/நாற்சந்தியிலும் பார்த்திருக்கலாம்.

நானும் என் அறைத் தோழன் தீபாங்கர் க்ஹாடா’வும் அப்படி ஒரு குடும்பத்தைக் கண்டது சூரத்தில் உள்ள பிப்லோத் பகுதியில். அதற்கு முன்பே அப்படிப்பட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உதவத் தோன்றியதே இல்லை. ரிலையன்ஸ் சேரும் முன் நிதி நிலைமையும் சரியில்லை. நானும் பார்க்க பஞ்சப் பராரியாகத்தான் தெரிவேன் என்பதால் அவர்களும் என்னிடம் காசு கேட்டதில்லை. இந்த முறையும் அந்த குடும்பம் என்னை சீண்டவில்லை. தீபாங்கரிடம் சென்று காசு கேட்டார்கள். வேலைக்காக கட்ச் பகுதியில் இருந்து சூரத்துக்கு அருகில் இருக்கும் மோரா கிராமத்துக்கு வந்திருந்தார்களாம். மூன்று மாதம் வேலை முடிந்து ஊருக்கு கிளம்புகையில் பார்த்தால் அவர்களிடம் இரயில் பயண செலவுக்கு எண்பத்தைந்து ரூபாய் குறைகிறதாம். நூறு ருபாய் கொடுத்தால் நிம்மதியாக ஊருக்கு போய்ச் சேர்ந்துவிடுவோம் என்று கூறினார்கள்.

தீபாங்கர் உணர்வுப்பூர்வமானவன். ரொம்ப நல்ல மனசுக்காரன். ஏதோ ஒரு முறை நானும் அவனும் எங்கள் அபார்ட்மெண்ட்’இல் தேநீர் தயாரித்து குடித்துக் கொண்டிருந்தோம். என் கை வழுக்கி நான் குடித்துக் கொண்டிருந்த டீ கப் கீழே விழுந்து அதன் பிடி உடைந்து விட்டது. சரி தொலையுது என்று நானும் அள்ளிக்கொண்டு போய் குப்பையில் போட்டு விட்டேன். தீபாங்கர் என்னை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். இரவு வரை அமைதியாக இருந்தான். என்னோடு பேசவில்லை. “என்னடா… ஆசையா வாங்குன உன்னோட டீ கப் ஒடஞ்சு போச்சுன்னு வருத்தமா… வேற வாங்கித் தர்றேன்டா… பேசாம இருக்காதே…” என்று அவனிடம் நான் கூறிய போது, அவன் சொன்னான் “டேய்… நீ உடைச்சது பத்தி கோவமே இல்ல… ஆனா, இவ்ளோ அழகான பொருள் உடைஞ்சிருக்கு… ஆனா நீ மனசே உறுத்தாம அதை குப்பைல அள்ளிப் போட்டுட்டு போயிட்டே… ஒரு நல்ல பொருள் வீணா போயிருசேன்னு உனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்ல… உன்னோட இந்த மனோபாவம்தான் என் மனசை சங்கடப் படுத்துது…” குழந்தை மனசுக்காரன். அவனிடம் போய் குழந்தையை வைத்துக்கொண்டு காசு கேட்டால் என்ன செய்வான் பாவம். அந்த தந்தையிடம் அக்கறையுடன் கதை கேட்டு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். பின் குழந்தைகளை பார்த்தவன் “சாப்ட்டாச்சா…” என்று கேட்க, அவர்கள் பதில் சொல்ல வாய் திறக்கும்முன் மேலும் இரண்டு நூறு தாள்களை அந்த தந்தை கையில் அழுத்தினான். “அடேய்… இவங்கல்லாம் ஏமாத்துக் காரங்களா இருப்பங்கடா…” காசு தராத என் செயலை நியாயப் படுத்த வேண்டிய கடமை எனக்கு. ஆனால் தீபாங்கர்க்கு அந்த குடும்பம் தெரிந்ததேயன்றி  நான் தெரியவேயில்லை. அவன் அப்படிதான்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் சென்றிருக்கும். சூரத்தின் டப்கர்வாட் பகுதியில் நானும் தீபாங்கரும் வழக்கம் போல் சுற்றிக்கொண்டிருந்தோம். திடீரென்று என்னிடம் இருந்து வேகமாக விலகி சாலையை கடந்து எதிர்ப் பக்கம் சென்றான், யாரையோ துரத்துவது போல. இருபுறமும் வரும் வாகனங்களை கவனித்து நான் சாலையை கடந்த போது அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். இவன் பரிதாபமாக ஏதோ கேட்க, அந்த மனிதர் தலை குனிந்து நின்றிருந்தார். கையில் ஒரு மூன்று அல்லது ஐந்து வயது குழந்தை. பின்னே ஒரு பெண். அவர் கையில் ஒரு கைக்குழந்தையை. ஆறு மாதம் முன்பு தீபாங்கரிடம் பணம் வாங்கியவர்கள். அதே குடும்பம். ‘அதான் நான் அப்பவே சொன்னேன்லே… இவங்கல்லாம் ஏமாத்துக்காரங்க…‘ என்று தீபாங்கரிடம் சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை. அந்தத் தந்தையிடம் அவன் கோபப்படவோ சண்டை போடவோ இல்லை. மாறாக வருந்திக் கொண்டிருந்தான். ஏன் இப்படி ஏமாத்தணும் என்ற கேள்வியே அவனிடம் இருந்தது.

வாழ்க்கை நமக்கு பெரும்பாலும் ஏமாற்றங்களையே அளிக்கிறது.

சென்னையை மாபெரும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அரசியல்வாதிகளைக் காணோம். மக்கள் பிரதிநிதிகள் பேச மறுத்தார்கள். அப்படியே அகப்பட்டவர்களும் மைக் முன்பு பதில் தராமல் (அல்லது தர அஞ்சி / தர தெரியாமல்) நழுவினார்கள். தந்தவர்களும் தங்கள் பெற்ற தாயின் ஆணைக்கிணங்க அருள்வாய் மலர்ந்தார்கள். இவர்களையா நாம் ஓட்டு போட்டு மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தோம்?

சாலையே தெரியாமல் தண்ணீர் நிறைந்திருக்க, கடமை தவறாமல் சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். மழை வெள்ளத்துக்கு அஞ்சி ஊரை விட்டு ஓடிக்கொண்டிருப்பவர்களிடம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஊருக்குள் நிவாரணப் பொருட்களை கொண்டு வருபவர்களிடமும். ரோடே இல்லாமல் சுங்கம் வசூலிக்கவா சட்டம் இயற்றி இருக்கிறோம்?

கிராமங்கள் நோக்கி உதவி கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து கையில் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்காகவா வேலைவெட்டி விட்டு கைக் காசு போட்டு நிவாரணம் கொண்டு வந்தோம்? ஒருவருடமாய் சிறுக சிறுக சேர்த்த காசை கொட்டிக் கொடுத்தோம்?

ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க, இரண்டு பேர் பீப் பாடலை வெளியிடுகிறார்கள். இவர்கள் நடனம், படம் மற்றும் இசைக்கா நாம் கை தட்டி தாளம் போட்டோம்?

சாமானியனும் ஏழையும் தன்னால் முடிந்த காசை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க, நட்சத்திர நாயகர்கள் வெறும் லட்சங்களில் அருளி அமைதியானார்கள். ஒருவர் மட்டும் போனா போகுதேன்னு ‘தமிழ் நாட்டு மக்களுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்’ என்று திருவாய் மலர்ந்தார். இவர்களுக்கா பேனர் கட்டி, பாலாபிஷேகம் செய்து, முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்து கோடீஸ்வரர்களாக்கினோம்?

பள்ளியில் லிஃப்ட்’இல் தலை சிக்கி ஒரு நான்கு வயது குழந்தை உயிர் இழக்கிறது. ஒரு பெண்ணை கடத்திச் சென்று இரண்டு வாரம் பாலியலாக துன்புறுத்தி, அவள் மார்பிலும் அடி வயிற்றிலும் துப்பாக்கியால் சுட்டு, நீரற்ற ஒரு பாழும் கிணற்றில் தூக்கி எறிந்துச் செல்கிறார்கள். அவள் இரவு முழுவதும் அபயக் குரல் எழுப்பி, காலையில் அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டிடையனால் கண்டெடுக்கப் படுகிறாள். போர்வெல் துவாரத்தில் மேலும் ஒரு குழந்தை விழுந்து உயிர் துறக்கிறது. இன்னொரு குழந்தை பாலியல் வல்லுரவுள்ளாகிறது. கூட்டாக வல்லுறவு கொண்டு, உடலைக் குதறி, குடலை உறுவி குப்பையாய் ஒரு பெண்ணை தூக்கி எறிந்தவன், சட்டம் நிர்ணயித்த வயதின்படி ஒரு சிறுவன் என்பதால் எந்தவித தண்டனையும் இன்றி, வெறும் மூன்று வருட சீர் திருத்தப் பள்ளி வாழ்க்கைக்கு பிறகு சுதந்திர மனிதனாக வெளிவருகிறான். போதையில் வண்டியோட்டி ஒருவரை கொன்றவன், எந்தவித தண்டனையும் இன்றி சட்டத்தால் விடுவிக்கப் படுகிறான். மாட்டிறைச்சி இருப்பதாக சந்தேகப்பட்டு ஒரு பெரியவரை அடித்தே கொல்கிறார்கள். தீவிரவாத தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியவன் சிறையில் இருக்கும்போது பலமுறை பரோல் அளிக்கப்பட்டு கடைசியில் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப் படுகிறான். தன்னை எதிர்த்தவன் தன்னை விட கீழ் ஜாதிக்காரன் என்பதால் மூன்று வயது மழலை மற்றும் ஒரு வயது தேவதை தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் நம்மை அயற்சியடைய வைத்திருக்கிறார்கள். இவங்களுக்காகவாடா இவ்ளோ பண்றோம் என்று எண்ண வைத்திருக்கிறார்கள். நம் உதவிகளையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். நாம் நியாயம் என்று நம்புவதை கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இவர்களால் வாழ்க்கையில் ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

தளர்ந்து போய் அனைத்திலிருந்தும் விலகிச் செல்கிறேன். உலகமே ஜீவனற்று தெரிகிறது.

சட்டென்று எங்கிருந்தோ ஒரு அற்புதமான பூவாசம் வருகிறது.

மிக அழகானதொரு பூ பூக்கிறது.

தானியம் கொத்திக்கொண்டிருக்கும் புறாக் கூட்டத்திற்குள் புகுந்த ஒரு குழந்தையை தோள் சுருங்கிச் சிரிக்கச் செய்துவிட்டு புறாக்கூட்டம் பறக்கிறது.

தொட்டவுடன் தன் இலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் ‘தொட்டச் சுருங்கி’ செடியைத் தொட்டு தொட்டு ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது. இலை சுருங்கிவவுடன் அட்டகாசமாய் புன்னைகைக்கிறது. பின் வானத்தைப் பார்த்து புன்னகைக்கிறது. பின் என்னைப் பார்த்தும்.

மலை மீது ஏறி களைத்தபோது எனக்கும் என் இரண்டு குழந்தைகளுக்கும், தான் அடிவாரத்திலிருந்து கொண்டு வந்த தண்ணீர் குடத்திலிருந்து ஒரு குவளை நீரை குடிக்கத் தருகிறார் ஒரு பன்னிரண்டு வயது நங்கை.

பிச்சை எடுக்காமல் களைத்துக் படுத்திருக்கும் ஒரு பாட்டிக்கு ஒரு ‘வடா பாவ்’ வாங்கித் தந்தால், அதில் சிறிய துண்டை அருகில் இருக்கும் நாயுடன் பகிர்கிறார்.

தள்ளுவைண்டியில் இருந்து விழுந்து உருண்டு சென்ற தக்காளியை துரத்திப் பிடித்து, துடைத்து, மீண்டும் வண்டியில் வைக்கிறது ஒரு மூன்று வயது குழந்தை. பொக்கைவாய் தள்ளுவண்டி தாத்தா முகமலர்ந்த புன்னகைனூடே அதற்குள் விளையாட ஓடிவிட்ட குழந்தையை ஆசீர்வதிக்கிறார்.

வழிவிட்ட பாதையில் முந்திச் செல்லும் ஆம்புலன்ஸ்’இன் பின்புறம் ஒரு பெரியம்மா அமர்ந்திருக்க, மடியில் ஏதோவொரு சொந்தம் இருக்கலாம். கண்ணோடு கண் நோக்கியாவுடன் நாங்கள் கையெடுத்து கும்பிட்டு மேலே கடவுளைக் காட்ட, அவர் எங்களை ஆசீர்வாதம் செய்கிறார்.

லிஃப்ட் நின்றவுடன் நான்கு சிறுவர்கள் வெளியில் ஓடிவிட, ஒருவன் மட்டும் திரும்பி வந்து மெதுவாக வரும் ஒரு பாட்டி லிஃப்ட்’இல் ஏறும் வரை கதவைத் திறந்து வைத்து காத்திருந்து, பாட்டி ஏறியவுடன் தன் நண்பர்களைத் துரத்தி தலை தெறிக்க ஓடுகிறான்.

தலைகுனிந்து மொபைலை நோண்டிகொண்டிருந்தவர்கள் ஒரு வெள்ளத்தின் போது தகவல் தொடர்பால் மட்டுமே துணை கொண்டு ஒரு நிவாரண இராஜாங்கமே நடத்துகிறார்கள்.

முகமறியா நண்பர்கள் முகநூல் அறிமுகம் மட்டுமே கொண்டு நம்பிக்கையாக வெள்ள நிவாரண நிதி அனுப்புகிறார்கள். இன்றைய தேதிக்கு கிட்டதட்ட நாற்பத்தியோரு லட்சம் ரூபாய் (நிசப்தம்).

சமூக ஆர்வலர் என்று நாங்கள் வேடிக்கையாக கேலி செய்த ஒரு சகோதரர் வெள்ளத்தின் போது ஒரு இராணுவ தளபதி போல் செயல்படுகிறார்.

தொல்லைகள் வரும் என்று கண்டிப்பாக தெரிந்தேயிருந்தாலும், அதையும் மீறி உதவி செய்வதே பிரதானம் என்று கருதி, வெள்ள நிவாரணத்தின் போது தங்கள் அலைபேசி எண்களை பொதுவில் பகிர்கிறார்கள் தோழிகள்.

அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வெள்ள பாதிப்பின் போது சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வைக்கிறார் ஒரு தோழர்.

பணமாக கொடுத்தால் மட்டுமே போதுமா, உடலுழைப்பே முக்கியம் என்று கருதி அரபு நாட்டில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு வருகிறார் ஒரு நண்பர்.

சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் பொத்திக் கொண்டிருக்க, இரு நல்லவர்கள் வெள்ள நிவாரணத்தை மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

கடலில் அவர்கள் சுடப்பட்டபோது நாம் அவர்களை கொண்டுகொள்ளவில்லை. ஆனால் நாம் வெள்ளத்தில் சிக்கியபோது அவர்களே தங்கள் படகு கொண்டுவந்து நம்மை மீட்டார்கள்.

அத்தனை வெள்ள அமளியிலும் எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்னையும் இல்லை. கொள்ளை இல்லவே இல்லை. (கொண்டு வரும் நிவாரண பொருட்களை வழியில் மக்கள் எடுத்துக் கொள்வதை கொள்ளை என்று நான் கருதவே இல்லை… உங்கள் குழந்தை பசியால் குளிரால் வாடும்போது, அரசாங்கத்திடம் இருந்து உதவி வராதபோது நீங்கள் வேறு என்ன தான் செய்வீர்கள்??? அப்படியும் அவர்கள் பிறர் வீட்டையோ, கடையையோ, பொருட்களையோ கொள்ளையடிக்கவே இல்லை… நிவாரணத்துக்கு என வந்தவைகளையே எடுத்துக்கொண்டனர்…)

கொண்டு வரும் நிவாரண பொருட்களை வழியில் மக்கள் எடுத்துக் கொண்டாலும், கொண்டு வந்தவர்கள் அவர்களை அடித்து விரட்டவோ திட்டவோ ஏளனப்படுத்தவோ இல்லை. “அண்ணா அண்ணா… வெறும் துணி’ண்ணா… விடுண்ணா… வெறும் சாப்புடுற பொருள்தாண்ணா இருக்கு…” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பொருட்கள் கொண்டு வந்தவர்.

வெள்ளத்தின் போது நிறைமாத கர்பிணியான தன்னை காப்பற்றியவரின் நினைவாக தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘யூனுஸ்’ என்று பெயர் வைக்கிறார் ஒரு ஹிந்துப் பெண். அதே வேளையில், கோவிலில் பிறக்கும் தன் குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் வைக்கிறார் ஒரு முஸ்லிம் பெண்.

முழங்காலளவு தண்ணீரில் நின்றுகொண்டு தான் உண்ணும் பிஸ்கட்டை, அருகில் அதே பசியோடு தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும் நாயோடு பகிர்ந்து கொள்கிறார் ஒரு இராணுவ வீரர்.

மார்பளவு தண்ணீரில், தலைக்குமேல் ஒரு பெரிய தட்டை சுமந்து அதில் உணவு எடுத்துக்கொண்டு விநியோகிக்க செல்கின்றனர் முகம் தெரியாத நால்வர்.

கோவில்களில் புகுந்து உணவை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள் நம் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள். ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்களில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தார்கள், ஜாதிமத பேதமின்றி.

டிசம்பர் 6 எந்த வித பதட்டமும் இன்றி அமைதியாக பரஸ்பர உதவிகளால் சப்தமின்றி நழுவிச் செல்கிறது.

வெள்ளத்தின் போது நாலாயிரம் பேருக்கு மேல் சமைத்துப் போடுகிறார் ஒரு அறுபது வயது பெரியவர்.

வெள்ளத்தினூடே தவறாமல் பால் பாக்கெட் போடுகிறார் ஒரு அப்பாச்சி.

உடலை வருத்தி சேர்த்த பணத்தை, வயிறை வருத்தி மிச்சம் பிடித்து ஒரு லட்சம் ரூபாய் அனுப்புகிறார்கள் மும்பையில் இருக்கும் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சகோதரிகள். (இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமாய்யா…)

வாழ்க்கை ஒண்ணும் அவ்ளோ மோசமில்லையா. நல்லவைகள் அங்கங்கே பரவலாக சிந்தியே கிடக்கிறது. நாம்தான் தவறவிட்டுவிடுகிறோம்.

“போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்; எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.”ஷாஜஹான்

வாழ்க்கை நமக்கு பெரும்பாலும் ஏமாற்றம் அளிப்பது போலவே இருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் வாழ்க்கை நமக்கு மிகப் பெரும் நம்பிக்கையையே அளித்து வந்திருக்கிறது. அதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை.

இதற்கிடையில், நான் அவர்களை நெருங்கி விட்டிருந்தேன். கனத்த அமைதி நிலவிக்கொண்டிருந்தது. தீபாங்கர் அழுது விடுவான் போல் இருந்தான். அந்த தந்தை தலை குனிந்திருந்தார். குழந்தை செய்வதறியாமல் தந்தையின் சட்டையில் இருந்து ஒரு நூலை பிரித்துக் கொண்டிருந்தது. தீபாங்கர் தோளைத் தொட்டு, “டேய்… விட்ருடா… போலாம்டா…” என்றேன்.

அதுவரையில் சற்று தள்ளி நின்றிருந்த அந்தத் தாய், தன் கைக்குழந்தையுடன் அருகில் வந்தார். “தப்புதான் ஸார்… ஆனா, நீங்க குடுத்த நூறு ரூபாய்ல என் குழந்தைங்க ரெண்டுநாள் வயிறார சாப்டாங்க ஸார்…” என்று கூறி கையெடுத்து கும்பிட்டார். சட்டென்று உடைந்து விட்டான் தீபாங்கர். அந்த தாயிடம் இருந்து கைக்குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தமிட்டான். குழந்தை அட்டகாசமாக வாய் மலர்ந்து சிரிக்க, தீபாங்கர் கண்ணீரூடே சிரித்தான். அவர்கள் மறுக்க மறுக்க சில நூறு ரூபாய் தாள்களை அவர்கள் கையில் இம்முறையும் திணித்தான். பெரிய குழந்தையின் கன்னத்தை தட்டி “குட் பாய்…” என்றான். கண்களைத் துடைத்துக் கொண்டு மிக உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான்.

hundred rupee

ஒரு டீ கடையில் நின்று குளிர்ந்த நீரால் முகம் கழுவிக் கொண்டான். பின் ஆளுக்கொரு கட்டிங் டீ வாங்கி குடித்தோம். தீபாங்கர் தெளிவாகச் சொன்னான், “எத்தன பேர் வேணா ஏமாத்தட்டும்டா… ஒருத்தருக்கு சந்தோஷம்னா கூட போதும்… எனக்கு திருப்திதான்… எவன் எக்கேடோ இருந்துட்டுப் போகட்டும்… நான் நல்லவனா இருந்துட்டுப் போறேனே… எவன் தடுப்பான் பாப்போமே…

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மஹாகவி பாரதி

Karthik Nilagiri

Related posts

2 Comment's

  1. Natarajan says:

    விழியோரத்தில் கண்ணீர் எட்டிபார்த்ததை சென்னை நகர மின்வண்டியின் சக பயணிகள் வித்தியாசமாக பார்த்தது கூட ஒரு பொருட்டாக தெரியவில்லை. “யார் எப்படியிருந்தாலென்ன நான் நல்லவனாக இருந்துவிட்டு போகிறேன்”… வித்தியாசமான பார்வை.

    1. நன்றி அண்ணா…

Leave a Reply

Your email address will not be published.