Moon

நிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)

Print Friendly, PDF & Email

(இதற்கு முன்…)

நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய  ‘சாட்டர்ன் V’ வகையைச் சார்ந்த ராக்கெட்டுக்கும் பொருந்தும். நாசா எந்தவித உயிர் சேதமோ பொருள் சேதமோ இன்றி 13 முறை சாட்டர்ன் Vயை விண்ணில் செலுத்தியுள்ளது. டிசம்பர் 1968இல் இருந்து டிசம்பர் 1972 வரை 24 வீரர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது.

அப்போலோ 11 – சாட்டர்ன் V வகை ராக்கெட்கள் ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டது:

1. கமாண்ட் மாட்யூல் [Command Module]

2. லூனார் மாட்யூல் [Lunar Module]

3. மூன்றாம் நிலை பூஸ்டர் [S-IVB third stage]

4. இரண்டாம் நிலை பூஸ்டர் [S-II second stage]

5. முதல் நிலை பூஸ்டர் [S-IC first stage]

இப்பொழுது தெரிகிறதா, இந்த வகை ராக்கெட்கள் ‘சாட்டர்ன் V’ அதாவது ‘சாட்டர்ன் ஐந்து’ என்று ஏன் அழைக்கப்படுகிறதென்று?

போயிங் நிறுவனத்தால் (The Boeing Company) நியூ ஆர்லியான்ஸில் (New Orleans) தயாரிக்கப்பட்ட முதல் நிலை பூஸ்டர், மிஸ்ஸிஸிப்பி (Mississippi) நதியிலும் பல்வேறு கால்வாய்களிலும் பயணித்து ஃப்ளோரிடா’வில் இருக்கும் VABக்கு வந்தடைகிறது. இந்த பூஸ்டரின் வேலை, ராக்கெட்டை 67 கிலோமீட்டர் உயரத்திற்கு இரண்டே முக்கால் நிமிடத்தில் ஏற்றிவிட்டு பின்பு என்ஜின் அணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுவதுதான். இதன் மைலேஜ் பிசாத்து 4 சென்டி மீட்டர் / லிட்டர். இது ஐந்து F-1 வகை என்ஜின்களைக் கொண்டது. நடுவில் இருக்கும் ஒரு என்ஜின் ஆடாதிருக்க வெளியில் பொருத்தப் பட்டிருக்கும் நாலு என்ஜின்கள் தேவைக்கேற்ப அசைந்து ராக்கெட்டை செலுத்தவேண்டிய பாதையில் செலுத்த உதவி செய்யும்.

முதல் நிலை பூஸ்டர் S-IC

நார்த் அமெரிக்கன் ஏவியேஷனால் (North American Aviation) கலிபோர்னியாவின் சீல் பீச்’சில் கட்டமைக்கப்படும் இரண்டாம் நிலை பூஸ்டர் பனாமா (Panama) கால்வாய் மூலம் நாசாவின் மிஸ்ஸிஸிப்பி (Mississippi) சோதனைத் தளத்தை வந்தடைகிறது. அங்கு அதன் எரிதிறன் சோதிக்கப்பட்டு பின் கப்பல் மூலமாகவே ஃப்ளோரிடா’வில் இருக்கும் VABக்கு வந்தடைகிறது. இதன் வேலை ராக்கெட்டை இன்னும் பூமியை விட்டு வேகத்தோடு தள்ளிவிட்டு கழண்டுவிடுவது. ராக்கெட் கிளம்பிய ஒன்பதாவது நிமிடத்தில் இந்த பூஸ்டர் கழண்டு விடுகிறது. முதல் நிலையைப் போலவே இதிலும் ஐந்து என்ஜின்கள் உண்டு. ஆனால் இவை J-2 வகை என்ஜின்கள். வெற்றிடங்களில் (Vacuum) இயங்கக் கூடியது இந்த வகை என்ஜின்களின் சிறப்பு. மிஸ்ஸிஸிப்பியில் ஸ்பெஷல் சோதனையும் அதற்காகத்தான்.

இரண்டாம் நிலை பூஸ்டர் S-II
பரிசோதனைக்கு தயாராகிறது 

நம் காற்று மண்டலத்தில் இயங்க F-1 என்ஜின் போதும். ஆனால் விண்வெளியில், காற்று இல்லாத இடத்தில், J-2 என்ஜின் தான் ஓடும். அதனால் முதல் நிலை பூஸ்டரில் F-1 என்ஜின். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பூஸ்டரில் J-2 என்ஜின்.

டக்லஸ் (Douglas Aircraft Company) எனும் கம்பெனியால் கலிபோர்னியாவில் தயாரிக்கப்படும் மூன்றாம் நிலை பூஸ்டர் சற்றே குட்டியானதால் ‘ப்ரெக்னென்ட் கப்பி’ (Pregnant Guppy) என்ற ஒரு சூப்பர் ஸ்பெஷல் விமானம் மூலம் VABயை வந்தடைகிறது. இந்த மூன்றாம் நிலை பூஸ்டர் ஒரே ஒரு J-2 என்ஜின் கொண்டது. இரண்டாம் நிலை பூஸ்டர் கழண்டு விழுந்த பத்தாவது நொடி இது இயங்க ஆரம்பிக்கும். அடுத்த மூன்று நிமிடத்திற்குள் (அதாவது ராக்கெட் கிளம்பிய பனிரெண்டாவது நிமிடத்திற்குள்) இது ராக்கெட்டை 191 கிலோமீட்டர் உயரத்தில் பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றவிட்டு அணைந்துவிடும். ஆனால் கழண்டு விடாது. ராக்கெட் கிளம்பிய இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு பிறகு இதன் என்ஜின் இரண்டாவது முறையாக இயங்கி, ராக்கெட்டை பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் தள்ளி விடுகிறது.

மூன்றாம் நிலை பூஸ்டர் S-IVB

ராக்கெட் நிலவின் சுற்றுப் பாதையில் சுற்ற ஆரம்பித்த பிறகு, அதாவது ராக்கெட் கிளம்பிய நாலேகால் மணி நேரத்திற்கு பிறகு, மூன்றாம் நிலை பூஸ்டர் முதலில் அப்போலோ ராக்கெட்டை விடுவிக்கிறது. அப்போலோ ராக்கெட்டில் கமாண்ட் மாட்யூல் மற்றும் சர்வீஸ் மாட்யூல் உள்ளடக்கியது. அது ஒரு 180 டிகிரி திரும்பி மூன்றாம் நிலை பூஸ்டரில் இருக்கும் லூனார் மாட்யூல்லை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இப்பொழுது மூன்றாம் நிலை பூஸ்டரின் வேலை முடிந்தது. அது நிலவில் விழுந்து நொறுங்கி விடுகிறது அல்லது வெளியில் தள்ளிவிடப்படுகிறது.

லூனார் மாட்யூல்லை தன்னுடன் இணைத்துக் கொள்ள அப்போலோ திரும்புகிறது
(வரைபடம்)

கமாண்ட் மாட்யூல் மற்றும் சர்வீஸ் மாட்யூல் (Command/Service Module – CSM) நார்த் அமெரிக்கன் ஏவியேஷனால் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்டு அந்த ஸ்பெஷல் ப்ரெக்னென்ட் கப்பி விமானம் மூலம் VAB வந்தடைகிறது. வீரர்கள் அமர்ந்து இருக்கும் கமாண்ட் மாட்யூல் மற்றும் பயணத்தின் போது தேவைப்படும் சேவைகளுக்காக இருக்கும் சர்வீஸ் மாட்யூல் இரண்டும் சேர்ந்துதான் அப்போலோ என்றழைக்கப்படுகிறது. இது நிலவில் தரை இறங்காது. அதை சுற்றிக்கொண்டே இருக்கும். நிலவில் தரையிறங்கிய லூனார் மாட்யூல் (Lunar Module – LM) க்ரம்மான் (Grumman) எனும் கம்பெனியால் நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டு இரயில் மூலம் VAB வந்தடைகிறது.

இதற்கிடையில், அப்போலோ 9இன் வீரர்கள் தங்கள் கமாண்ட் மாட்யூல்லை கம்ட்ராப் (Gumdrop) என்றும் லூனார் மாட்யூல்லை ஸ்பைடர் (Spider) என்றும் அதன் உருவங்களைப் பார்த்து விசித்திரமாக பெயர் சூட்டினர். மக்கள் தொடர்பு அதிகாரிகள் அப்போது அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் அப்போலோ 10இன் வீரர்கள் தங்கள் கமாண்ட் மாட்யூல்லை சார்லி பிரவுன் (Charlie Brown) என்றும் லூனார் மாட்யூல்லை ஸ்நூப்பி (Snoopy) என்றும் பெயர் சூட்டிய போது நாசாவின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ஜூலியன் ஷீர் (Julian Scheer) சற்றே நெளிந்தார். அப்போலோ 11இன் கமாண்ட் மாட்யூல்லுக்கு அவரே கொலம்பியா (Columbia) என்று முன்மொழிந்தார். ஜிம் லொவெல் (Jim Lovell) எனும் விண்வெளி வீரர் லூனார் மாட்யூல்லுக்கு ஈகள் (Eagle) என்று முன்மொழிந்தார். இந்த இரண்டு பெயர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த அப்போலோ 11 தான் மனிதனை முதன் முதலாக விண்ணில் இறக்கியது.

கமாண்ட் மாட்யூல்
லூனார் மாட்யூல்

பின்குறிப்பு: விசித்திரமாக, நான் இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில் அமெரிக்காவில் நிலவும் அசாதாரண நிதி நெருக்கடி காரணமாக நாசா இயங்கவில்லை. அதன் வலை தளமும். இன்றைய தேதிக்கு, நாசாவின் 18000 ஊழியர்களில் வெறும் 600 பேர் மட்டுமே பணியில் உள்ளனர், விண்வெளியில் ISS (International Space Station)இல் உலகை சுற்றிக்கொண்டிரருக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சேர்த்து.

நாசா வலைதளத்தை இப்போது சொடுக்கினால் வரும் பக்கம் இது தான்.

www.nasa.gov
05-Oct-2013

Karthik Nilagiri

Related posts