Fiction

தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12

Print Friendly, PDF & Email
தொடர்கதை எழுதுவது எனக்கு ஒரு புது முயற்சி.
என்னை யாரோ “தொடர்கதை வெறியர்கள்” என்ற முகநூல் உள்வட்டத்தில் இணைத்து விட்டார்கள். அதன் நிர்வாகி நண்பர் திரு. Andichamy GA.பொதுவாக நான் எந்த முகநூல் பக்கத்தையும் ‘லைக்’ பண்ணுவதில்லை, எந்த உள்வட்டத்தில் இணைவதும் இல்லை. ஆனால், இந்த உள்வட்டம் எனக்கு சற்று வித்தியாசமாகப் பட்டது. இது ஒரு தொடர்கதை உள்வட்டம். என்ன வித்தியாசம் என்றால், இந்த ‘கொல்லத் துடிக்குது மனசு‘ தொடர்கதை ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதுகிறார். ஒரு ஆர்வக்கோளாறில் நான் 12ஆம் பாகம் எழுதுவதாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். பலர் எழுதுவதால் கதை அட்டகாசமாக பல்வேறு கோணத்தில் செல்கிறது. தொடரில் இதுவரை நடந்த சம்பவங்களை ஒருங்கிணைத்து ஒரு பகுதியை எழுதுவது சவாலாக இருந்ததால் மிக சுவாரசியமாக உணர்ந்தேன்.கொல்லத் துடிக்குது மனசு, கிட்டத்தட்ட 50 பாகங்கள் எழுதப்பட்டு, ஒரு நூலாக வெளியிடப்படும் எண்ணம் இருக்கிறது. இத்தொடரின் முந்தைய 11 பாகங்களைப் படிக்கவும், பல்வேறு எழுத்தாளர்கள் இனி எழுதவிருக்கும் பாகங்களைப் படிக்கவும், நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டு எழுதவும், “தொடர்கதை வெறியர்கள்“இன் நிர்வாகி திரு. Andichamy GA‘வை முகநூலில் தொடர்பு கொள்ளவும்.இனி நான் எழுதிய 12ஆம் பாகம் கீழே.
(பின் குறிப்பு: சில பல காரணங்களால் இந்த கதை சற்றே மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த புதிய, சற்றே மேம்படுத்தப்பட்ட பாகத்தைப் படிக்க இங்கே கிளிக்கவும்.)—–     —–     —–     —–     —–     —–

தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு – பாகம் 12

தொடர்கதை வெறியர்கள் என்ற முகநூல் உள்வட்டத்தில் எழுதப்பட்ட கொல்லத் துடிக்குது மனசு என்ற தொடர்கதையின் பாகம் 12இன் பழைய பதிப்பு

தொடர்கதை – கொல்லத் துடிக்குது மனசு

—–     —–     —–     —–     —–     —–

எல்லா போலீஸ் ஸ்டேஷனையும் போல பரபரப்பான ஒரு போலீஸ் ஸ்டேஷன்.

குமார் ஸ்டேஷனில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். போலீஸ் வேலையில் சேரும்போது என்னவெல்லாம் செய்ய யோசித்தோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அவர் பர்ஸில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் வால்டர் வெற்றிவேல் போட்டோவெல்லாம் வைத்திருந்தார். அதெல்லாம் அந்தக் காலம். இத்தனை வருடப் பணியில் குமார் மிகவும் மாறிவிட்டிருந்தார். சொல்லப் போனால் கேப்டனும் வால்டரும் கூட மாறிவிட்டிருந்தார்கள்.

குமார், “யோவ் ஏட்டு… அந்த பைலைக் கொண்டாயா…”

ஏட்டு ஒரு எக்கோ சவுண்டு கொடுத்தார், “ஸார்… ஒரு போன் பேசிக்கிட்டிருக்கேன்… பத்து நிமிஷத்துலே வர்றேன் ஸார்…”

ஏட்டும், குமாரைப் போலவே ‘நேர்மையான நல்ல’ தேர்வில் பக்காவாக பணம் கட்டி வந்தவர். ரொம்ப அதட்ட முடியாது. அவருக்கும் பெரிய ஆட்கள்  எல்லாம் தெரியும்.

சலிப்பாக, அங்கு சுவரோரமாக குத்தவைத்து உட்கார்ந்திருந்த ஒரு டீனேஜ் பொடியனை அழைத்தார், “டேய்… அந்த டாக்குமெண்ட் ரூமுக்கு போய் ‘கேஸ் 286/2013 – தலையில்லா முண்டம்’ன்னு ஒரு பைல் இருக்கும்… அதை எடுத்துட்டு வா…”

பொடியன், “வேண்டாங்க… ஸார் என்னைய இங்கேயே உட்காரச் சொல்லிட்டு போயிருக்கார்…”

குமார், “யார்ரா???”

பொடியன், “அதோ… வெளிய போன் பேசுறாரே… அந்த ஸார்தான்…”

குமார், “டேய் மூதேவி… அவன் வெறும் ஏட்டு… நான் இன்ஸ்பெக்டர் சொல்றேன்… போடா… போய் எடுத்தா…”

அவன் பயந்து போய் அந்த பைலை எடுத்து வந்தான்.

பொடியன், “இந்தாங்க ஸார்… இப்போ என்னை விட்டுடறீங்களா ஸார்… ரெண்டு மணி நேரமா உட்கார்ந்திருக்கேன்…”

குமார், “என்ன கேஸு???”

பொடியன், “டீசிங் கேஸ்… பழி வாங்குறதுக்கு பண்ணிட்டாங்க ஸார்…”

குமார், “பொண்ணு வீட்டுக்காரங்களா??? எந்த ஏரியா???”

பொடியன், “இல்லே ஸார்… பையன்… என்னோட கொஞ்சம் சண்டையா போச்சு… அதான் என்னை மாட்டி விட்டுதான்… ஏதோ புதுசா இ.பி.கோ. 377’ன்னு வந்துருக்காமே… அதுலே மாட்டி விட்டுதான்…”

குமார், “கருமம் டா… FIR போட்டுருக்கா???”

பொடியன், “இல்லே ஸார்… சும்மா உட்கார வைச்சிருக்காங்க…”

குமார், “அட சீ… ஓட்ரா…”

குமாருக்கு வெறுப்பாக இருந்தது. நியூஸ்ல எந்த புது  இ.பி.கோ. பத்தி படிச்சாலும் அதுலே ரெண்டு கேஸ் போட்டுடறாங்க.

பொடியனை விரட்டி விட்டு பைலை தூசி தட்டி திறந்தபோது ஏட்டு உள்ளே வந்தார், “என்னா ஸார்… அந்த பையனை அப்படியே வுட்டீங்க… கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்… பணக்காரப்  பையன்…”

குமார், “யோவ்… போய்யா… ரௌடிய பிடிக்கச் சொன்னா எப்பப் பாரு சின்னப் பசங்களையே பிடிச்சி வந்துக்கிட்டு… போ… அப்படியே டீ  சொல்லிட்டுப் போ…”

அது கேஸா  இல்லே கொசுவர்த்தி சுருளா என்று குமாருக்கு எரிச்சலாக இருந்தது. எத்தனை சிக்கல் மற்றும் குழப்பங்கள். முன்னையெல்லாம் பனிஷ்மெண்ட்டுன்னா தண்ணியில்லா காட்டுக்கு மாத்துவாங்க. இப்பதான் டாஸ்மாக் வந்துடுச்சே. அதனாலே இந்த மாதிரி கேஸ் கொடுத்து டார்ச்சர் பண்றாங்க. ஒரே ஆறுதல், இந்த கேஸுக்கு அந்த அழகு தேவதை அனிதாவும் அலைகிறாள். ஒரு குரூப் ஸ்டடி போட்டுறவேண்டியதுதான்னு முடிவு செய்தார் இன்ஸ்பெக்டர் குமார்.

ஏட்டு டீ கொண்டுவந்து வைத்தார். “இத்தோட உங்க கணக்குலே 435 டீ ஆகிடுச்சு…”

குமார், “யோவ்… எனக்கு டீயே வேணாம்யா… எதாச்சும் லாக்கப்ல இருக்குற எவனுக்காச்சும் கொடு போ…”

ஏட்டு, “கோவிச்சிக்காதிங்க ஸார்… சும்மா ஜாலிக்கு சொன்னேன்…”

ஆமா, நீ என் மச்சான் பாரு, என்று எண்ணிய குமார், “அதானே… 421 டீ  தான் ஆகியிருக்கு… இதையும் சேர்த்து 422…”

டீயைக் குடித்தபடி பைலை மீண்டும் படித்தார். இன்னுமொருமுறையும் மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

ஒரு வண்டி விபத்து. இரண்டு உடல் – ஒரு பெண்மணி மற்றும் ஒரு சின்ன பொண்ணு. வண்டி ஓட்டிட்டு வந்தவனை காணலை. அடிபட்ட ஒரு தோட்டத் தொழிலாளி முருகன் என்பவனும் காணலை. முதலாளி கணேசலிங்கம் ரொம்பத் தான் கொழையுராறு. ஏதாவது தொடர்பு இவருக்கும் இருக்கலாம்.

அனிதாவின் நினைவு வந்தது குமாருக்கு. சேலை கட்டினாலும், ஜீன்ஸ் போட்டாலும், டீ ஷர்ட் போட்டாலும், ஸ்கர்ட் போட்டாலும், லெக்கிங்ஸ் போட்டாலும், ஷார்ட்ஸ் போட்டாலும், சுடிதார் போட்டாலும் அழகா தெரியிற பொண்ணு. இது இல்லாமலும் அழகாய் தெரிகிறாளா என்று ஒரு முறை பார்த்து விட வேண்டும். அவளை வேணும்னா போன் போட்டு கூப்பிட்டு கேஸ் பத்தி அவளுக்கு ஏதும் தெரியுமான்னு விசாரிக்கலாம். என்ன, அவள் அந்த கௌதம் பயலோட வரக்கூடாது.

மிச்ச டீயை மடக்கென்று குடித்துவிட்டு, அனிதா பற்றிய கற்பனைகளோடு அவளுக்கு போன் போட்டார். ‘Switched Off’ என்றே வந்தது. யோசனையோடு ‘தி வாட்ச்’ பத்திரிக்கையின் ஆசிரியர் சாரனாதனுக்கு போன் போட்டார்.

சாரநாதன், “தெரியல சார்… நானும் நேத்து காலைலேயிருந்து ட்ரை பண்றேன்… எதும் பிரச்சனையான்னு தெரியல…”, என்றவர் கொசுறாக, “அந்த போட்டோகிராபர், அதான் அவளோட சுத்துவானே, அவனையும் காணலையாம்…”

துணுக்குற்ற இன்ஸ்பெக்டர் குமார், கமிஷ்னருக்கு போன் போட்டார், “ஸார்… ஒரு இன்ஸிடென்ட்… அந்த ரிப்போர்ட்டர் அனிதாவும் காணல ஸார்…”

கமிஷ்னர், “ரொம்ப துடிக்காதீங்க… மொதல்ல அந்த ‘தலையில்லா முண்டம்’ கேஸைப் பாருங்க…”

குமார், “அது சம்பந்தமா தான்…”

கமிஷ்னர், “யோவ் மூடுய்யா… அப்புறம் பேசலாம்…”

குமார் போனை கடுப்புடன் கீழே வைத்து முகத்தை துடைத்துக் கொண்டார். கையில் பார்த்தால் ரத்தம். மூக்கிலிருந்து. “யோவ்… ஏட்டு…”, கத்திக்கொண்டே நினைவிழந்தார்.

அம்புலன்ஸில் இன்ஸ்பெக்டரை குமாரை ஏற்றி அனுப்பிய ஏட்டு, கமிஷ்னருக்கு ஒரு ஸ்மைலி அனுப்பினார் – ” 🙂 ”

—–     —–     —–     —–     —–     —–

அந்தக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தல புராணம் எல்லாம் பெருசா ஒண்ணும் இல்லை. ஒரு முறை பக்கத்து காலேஜ் பெண்கள் சிலர் இங்கே நிம்மதியாக படிக்க வந்து, பையன்கள் அவர்களை காதலித்து கல்யாணம் பண்ணிகொள்ள, அப்படியே இது காதல் கோவிலாக நிலைத்து விட்டது. இத்தனைக்கும் உள்ளே இருப்பது பிரம்மச்சாரி திரு. கணேசன். காதல் என்பதால் கன்னியர் மட்டுமல்ல, கணவன் தன்னைக் காதலிக்க வேண்டுமென்று எண்ணும் கல்யாணமான பெண்களும் கூட வருவார்கள். ஜெகஜோதியாக இருக்கும் அந்த கோவில் வளாகம்.

காதலுக்கு கண் இருக்கோ இல்லையோ, கண்டிப்பாக வயது இல்லை. இந்த கோவிலுக்கு 12 வயது சிறுமியும் வருகிறாள் (அம்மாவோட இல்லேங்க… தனியாத்தான்…), 40 வயது பெண்மணியும் வருகிறார். விதவைகளும், சமயங்களில் திருநங்கைகளும் கூட வருவதுண்டு. பெண்கள் பொதுவாக தங்கள் கணவன்மார்களையோ அல்லது காதலரையோ அழைத்து வருவதில்லை. ஆண்களின் காதல் ததும்பி வேறு பெண்களிடமும் வழிந்து விடலாம் என்ற பயம்தான். காதலுக்குத் தான் கண் இல்லை, காதலனுக்கு இருக்கே, என்ன செய்ய?

அந்தப் பெண் ஒரு ஐந்தரை அடி உயரம் இருப்பாள். கொஞ்சம் பூசினாப் போல தேகம். ஆண்களின் ஆசை அளவுகள் வரையறைக்குள் வரமாட்டாள் என்றாலும் அம்சமான உருவம். குஷ்புவுக்கு கோவில் கட்டினாலும், ஷ்ரேயாவையும் தமன்னாவையும் ஒதுக்காமல் ஏற்றுக்கொண்ட தேசம் தானே இது. நீலப் பாவாடை, நீலச் சட்டை, மஞ்சள் தாவணி. மாநிறமெனினும் உடையின் வர்ணம் அவளை ஒளிரக் காட்டியது. படிய வாரிய ஒற்றைச் சடை. நெற்றியில் சந்தனப் போட்டு. அதில் கொஞ்சம் குங்குமம். குடும்பப்பாங்கான பெண்தான். அழகியல் அம்சம். இவள் எதற்கு இந்த கோவிலை சுற்றுகிறாள் என்று கோவிலுக்கு வந்திருந்த, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆச்சர்யப்பட்டார்கள். மண்டபத்தில் போய் அமர்ந்து அர்ச்சனைக் கூடையில் இருந்த மஞ்சள் வாழைப் பழத்தை எடுத்து லிப்ஸ்டிக் படாமல் சாப்பிட்டாள். ஆண்கள் பெருமூச்சு விட்டனர். பெண்கள் கரித்து கொட்டினர், மனதிற்குள்.

அவள் அருகில் வந்து அமர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு திருமணம் ஆகி, மூன்று வயதில் ஒரு குழந்தை இருந்தது. ஸ்கின் கலர் சுடிதாரில் இருந்தார். கொஞ்சம் இறுக்கம்தான். துப்பட்டா கழுத்தில் ஏறி இருந்தது. சற்றே வாளிப்பான உடல். தோள் வரை இருந்த சுருள் முடியை பாப் கட் மாதிரி ஏதோ செய்து வைத்திருந்தார். கருப்பு மணிகளாலான ஒரு அங்குல பெல்ட் பின்னழகையும் முன்னழகையும் பிரித்ததென்றால், ஒருபக்க தோளில் இருந்து அடுத்தப் பக்க இடுப்பு வரை தொங்கிய சிறிய ஜோல்னாப் பை முன்னழகை பிரித்தது. மொத்தத்தில் கிறங்கடித்தார். தன் குட்டிப் பெண் மண்டபத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதை கொஞ்ச நேரம் கவனித்துக்கொண்டிருந்தார். பின் அருகில் இருந்த ஒரு இளைஞனை அழைத்து, “தம்பி… நான் கொஞ்சம் கண்ணை மூடி மந்திரம் சொல்லணும்… எம் பொண்ணு அங்கே விளையாடுறா… கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா???”

தம்பி, “கண்டிப்பாங்க… நீங்க நிம்மதியா பிரார்த்தனை பண்ணிக்கோங்க… பை தி பை… எனக்கு உங்க தம்பி வயசெல்லாம் இருக்காதுங்க… இப்பத்தான் 28 ஆகுது…”

பெண்மணி, “அப்ப தம்பிதாங்க… எனக்கு முப்பது மேல ஆகிடுச்சு…”

தம்பி, “அப்படியா… பார்த்தா தெரியலீங்க… ஒரு 23 அல்லது 24 இருக்கும்னு நெனைச்சேன்…”, வழிந்தான், “அப்புறம்… உங்க போன் நம்பர் தர்றீங்களா???”

பெண்மணி, “பார்த்தியா…”

தம்பி, “இல்லேங்க… உங்களைக் காணலேன்னா போன் பண்ணிக் கூப்பிடலாம்ல… அதான்…”

பெண்மணி, “நான் எங்கேயும் போக மாட்டேன்… இங்கே தான் இருப்பேன்… எம் பொண்ண பத்திரமா பார்த்துக்கோ… போறப்ப தோணுச்சுன்னா நானே உனக்கு என் நம்பர் தர்றேன்… போதுமா???”

தம்பி, “தேங்க்ஸ்ங்க…”, மேலும் வழிந்து வைத்தான்.

தூரத்தில் இருந்த நண்பர்களுக்கு இரகசியமாக வெற்றிக் குறி காட்டி அந்தக் குட்டிப் பெண்ணை சிரத்தையாக கவனித்துக் கொள்ளச் சென்றான்.

சுடிதார் பெண்மணி அந்த தாவணிப் பெண் பக்கம் திரும்பினார்.

சுடிதார் பெண்மணி, “பெண்ணியம் வாழ்க…”

தாவணிப் பெண், “பெண்ணியம் வாழ்க…”

சுடிதார் பெண்மணி, “என்ன வனிதா, புது உடல் எப்படி இருக்கு???”

வனிதா, “நல்ல இருக்கு சாந்தி… என்ன கொஞ்சம் உடை தான் பழக வேண்டிஇருக்கு… தாவணி எல்லாம் எனக்கு ஒத்து வரலே… நீங்க பரவாயில்லே உங்களுக்கு ஏத்த உடம்பையே தேர்ந்தெடுத்துட்டீங்க…”

சாந்தி, “உடையும் உடலும் முக்கியமில்லை வனிதா… நம் இலட்சியம் தான் முக்கியம்…”

கண்களை ஒரு முறை மூடிய வனிதா, “ஆம்… பெண்ணியம் வாழ்க…”

சாந்தி, “பெண்ணியம் வாழ்க… சரி… இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம்???”

வனிதா, “ஆக்ணல் உன் விமலையும் என் கௌதமையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டான்… கொடுமையாக, உங்கள் மகள் தேன்மொழியைக் கொன்று, அவன் இயக்கத்துக்காக தன் மகளை பலியிட்டதாக விமலை நம்பவைத்து விட்டான்…”

சாந்தி, “இயக்கம் என்ன வேண்டுமானால் செய்யட்டும்… முடிவில் பெண்ணியமே வெல்லும்… இழந்த என் தேன்மொழியை, நான் இந்த கனிமொழியில் காண்கிறேன்…”

வனிதா, “சாந்தி… கனிமொழி தன் தாயின் உடலில் நீ நுழைந்ததை உணரவில்லையா???”

சாந்தி, “குழந்தைதானே… கண்டுபிடிக்கலேன்னு நினைக்கிறேன்… ஆனா ரொம்ப சுட்டி… இங்கு இருந்தால் நாம் பேசுவதை கவனித்து விடலாம்… வாயாடி வேறு… யாரிடமாவது நம்மைப் பற்றி சொல்லிவிடலாம்… அதனால் விளையாட அனுப்பிவிட்டேன்…”

வனிதா, “நல்லது… தொடர்பில் இருப்போம்… இனி மேலே ஆகவேண்டியதைப் பார்ப்போம்… அந்த இன்ஸ்பெக்டர் கேஸை ரொம்பவும் குடைய ஆரம்பித்துவிட்டான்… அவன் ஏட்டு மூலமாக அவன் குடித்த டீயில் மருந்து கலக்க வைத்திருக்கிறேன்…  இரண்டு நாளாக ICUவில் இருக்கிறான்… எந்நேரமும் அவன் கதை முடியலாம்…”

சாந்தி, “போஸ்ட்மார்ட்டமில் சந்தேகம் வராதா???”

வனிதா, “வராது… மருந்து அப்படி… மூளைக் கட்டி சாவு போலவே காண்பிக்கும்…”

சாந்தி, “அந்த ஏட்டு???”

வனிதா, “கவலைப்படாதே… அவனை நான் கவனிச்சிக்கிடறேன்… இப்போதைக்கு போன்தான்… நேரில் அடையாளம் தெரியாது… மேலும் அவன் அந்த கமிஷ்னருக்கு வேலை செய்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறான்…”

சாந்தி, “சரி வனிதா… ரொம்ப நேரம் ஆகிடுச்சு… நாம கிளம்பலாம்… இந்த பசங்க வேற நம்மளையே கவனிச்சிட்டிருக்காங்க…”

வனிதா, “அதுக்கெல்லாம் கவலைப்படாதே… ஒருத்தனுக்கும் நம்ம முகம் ஞாபகம் இருக்காது… எவன் நம்ம மூஞ்சியப் பாக்குறான்???” கலகலவென சிரித்தாள்.

சாந்தி, “இத்தன பிரச்சனைக்கு நடுவுலயும் சிரிக்கிற பாரு…”

வனிதா, “அதான்… அவ்வளவுதான் வாழ்க்கை… பார்க்கலாம்… பெண்ணியம் வாழ்க…”

சாந்தி, “பெண்ணியம் வாழ்க…”

வனிதா சென்ற கொஞ்ச நேரத்தில், சாந்தியும் கிளம்பினாள்.

அந்த தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்த கனிமொழியை அழைத்தாள்.

தம்பி, “என்னங்க… நல்லபடியா மந்திரம் எல்லாம் முடிஞ்சதா…”

சாந்தி, “முடிஞ்சுது… கொழந்தைய பார்த்துக்கிட்டதுக்கு நன்றி…”

தம்பி, “ஏங்க… உங்க போன் நம்பர் கேட்டேனே…”

சாந்தி, “நம்பர் தரலேன்னா கொழந்தைய தர மாட்டீங்களா…”

தம்பி, “நம்பர் தந்தாத்தானேங்க நாளைப்பின்ன பார்த்து பேசிப் பழகி கொழந்தை தர முடியும்…” வெக்கமில்லாமல் அசடு வழிய இளித்தான்.

சாந்திக்கு எரிச்சலாக இருந்தது. பெண்ணியம் வெல்லும் நாள் அதிக தொலைவில் இல்லை. பின் இந்த மாதிரி நாய்களை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம். அது வரை பொறுமை வேண்டும். “தர்றேம்பா… அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவேன்… அப்புறமா வாங்கிக்க…”, சாந்தி ஒரு செயற்கை சிரிப்புடன் சொல்லிவிட்டு, கனிமொழியை தூக்கிக் கொண்டு கார் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

—–     —–     —–     —–     —–     —–

கருப்பு கண்ணாடி கொண்ட சிகப்பு கலர் மாருதி அல்டோ K10.

சாவியைத் திருகி வண்டியை கிளப்பினாள் சாந்தி. சற்று தூரம் சென்ற பிறகு, நிமிர்ந்து உட்கார்ந்தாள் கனிமொழி.

மழலைக் குரலில் கனிமொழி, “நீங்க இரண்டு பேரும் பேசும் போது என்னை எதுக்கு தனியா தள்ளி அனுப்பிச்சிட்டே???”

பவ்வியமான குரலில் சாந்தி, “தாயே… உங்களிடம் இருந்து ஏதும் மறைக்க முடியுமா??? நீங்கள் சர்வமும் அறிந்தவர்கள்… பெண்ணியத்தின் தலைவி… வனிதாவுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னுதான்…”

கனிமொழி, “போகட்டும்…  சில தவறான முடிவு எடுக்கிறீர்கள்… அந்த இன்ஸ்பெக்டரை கொன்றால் பிரச்சனையும் மேலும் சந்தேகங்களும் எழும்… அவனை மாட்டிவிட்டால் மட்டும் போதும்… அவனை நம் பகடையாய் உபயோகிக்க வேண்டும்…”

சாந்தி, “வனிதா இன்ஸ்பெக்டரைக் கொல்ல ஏட்டு மூலம் மருந்து கொடுத்திருப்பதாக சொன்னாளே…”

கனிமொழி, “நான் மாற்றிவிட்டேன்… அவன் சாக மாட்டான்… ICUவில் இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டு வந்துவிடுவான்…”

சாந்தி, “என்ன தாயே சொல்கிறீர்கள்???”

கனிமொழி, “அந்த இன்ஸ்பெக்டர் கொல்லப்படவேண்டியவன் அல்ல… அவனால் நமக்கு காரியம் ஆகவேண்டி இருக்கிறது… ஆனால் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டியவன்… அவன் தன் ஸ்டேஷனில் இருந்த ஒரு பையனை FIR போடவில்லை என்று நினைத்து போகச் சொல்லிவிட்டான்… உண்மையில் அந்த வழக்கில் FIR பதியப்பட்டுவிட்டது… அந்த வழக்கில், துறை அவன் மேல் நடவடிக்கை எடுக்கும்… பொறுத்திருந்து பார்…”

சாந்தி, “தாயே… நீங்கள் சர்வ சக்தி…”

கனிமொழி, “இன்னொன்னு தெரியுமா??? இன்ஸ்பெக்டருக்கு மருந்து கொடுத்த ஏட்டுதான் உன்னிடம் கோவிலில் வழிந்த அந்த ஆசாமி…”

சாந்தி, “அவனால் ஏதும் பிரச்சனை வருமா???”

கனிமொழி, “இனிமேல் வராது…”

தான் வசந்தியாய் இருந்த போது, தன் மகள் தேன்மொழியாய் இருந்த கனிமொழியை, பயம் கலந்த பாசத்தோடு பார்த்தாள் சாந்தி.

சற்று நேரம் அமைதியாக வந்த கனிமொழி, “சாந்தி… அந்த ஆக்ணல், கொன்ற பிறகு அனிதாவின் உடலை என்ன செய்தான் தெரியுமா???”

சாந்தி, “தெரியவில்லையே தாயே…”

கனிமொழி, “சரி… நேரா பார்த்து வண்டிய ஒட்டு…”

—–     —–     —–     —–     —–     —–

நகரின் முன்னணி மருத்துவமனை.

மருத்துவர், “என்ன பிரச்சனைன்னு எங்களால சொல்ல முடியல… பட், இன்ஸ்பெக்டர் ஸார் இப்ப ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டார்… ஒரு வாரம் ICUல எங்க கண்காணிப்பில் இருந்துட்டு பின் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்…”

—–     —–     —–     —–     —–     —–

சிறப்பு வாய்ந்த அந்த கோவிலின் குளம்.

குளத்தில் ஒரு இளைஞனின் உடல் மிதக்க, மக்களிடையே சலசலப்பு.

“ஏதோ ஏட்டுன்னு சொல்றாங்க…”

“காதல் தோல்வியா இருக்குமோ…”

“டேய்… கம்முன்னு இரு… இவன் நம்மளோட வந்தான்னு தெரிஞ்சா நம்மளையும் விசாரிப்பாங்க… பேசாம இரு…”

“உடம்பு இப்படி ஊதிப்போயிடுச்சே… போஸ்ட் மார்ட்டம் பண்ண முடியுமா???”

“போலீசுக்கு சொல்லியாச்சா???”

“மச்சி, இனிமே இந்தக் கோவிலுக்கு பொண்ணுங்க வர்றது குறைஞ்சிடுமாடா…”

ஆம்புலன்ஸ் வந்து அந்த உடலை அள்ளிக் கொண்டு போனது.

—–     —–     —–     —–     —–     —–

(தொடரும்…)

Karthik Nilagiri

Related posts