சென்னையில் ஒரு திருமண நாள்
வடபழனி கோவிலை நோக்கி கூட்டத்தினூடே முன்னேறினோம். வடபழனி முருகன் கோவிலுக்கு நான் வருவது அது தான் முதல் தடவை. வழியில் பலர் திருமணம் முடித்து வந்துகொண்டிருப்பதை கண்டேன். பலரின் வயது 30க்கு மேல் இருக்கலாம். கிட்டத்தட்ட அத்தனை பேரும் பவுடர் பூசியிருந்தார்கள். எனக்கு என்னமோ இந்த மேக்கப் தேவையில்லாததாகப் பட்டது. பலரின் உண்மையான அழகை இந்த மேக்கப்தான் மறைத்திருந்தது. அடிக்கிற வெயிலுக்கு வியர்வை அவர்களை மேலும் கஷ்டப் படுத்தியிருக்கும். சரி, அது அவர்கள் பிரச்சனை. நாங்கள் அவர்கள் அனைவரையும், குறிப்பாக மணப்பெண் தோழிகள், பராக்கு பார்த்துக் கொண்டே கோவில் வாசல் வரை சென்றோம். ரகு எங்கு இருப்பானென்று தெரியவில்லை. சதாவை தொடர்பு கொண்டேன். அவனால் திருமணத்துக்கு வரமுடியவில்லை என்று வருந்தினான். அவன் பாஸுக்கு ஏதோ வேலை வந்து இவனை ரிப்போர்ட் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார். சரவணா பிரபு வந்து கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ரகுவிற்கே போன் செய்தேன். மாப்பிள்ளை அவனே வந்து சேரவில்லை. நாங்கள் தான் சீக்கிரம் வந்திருக்கிறோம். ஒரு ஜூஸ் கடையை தேடி மாதுளம்பழ ஜூஸ் குடித்தோம். ஒரு புதுமண ஜோடி. மாப்பிள்ளை பெண் வீட்டாருக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பெண்ணை விட பெண் வீட்டாரைத்தான் அதிகம் கவனித்துக் கொண்டிருந்தார். பிழைத்துக் கொள்வார். எனக்கென்னவோ அந்த மணப்பெண்ணைவிட மாமியார் அழகாக இருப்பதாக தோன்றியது.
புரோகிதர் மணமக்களை மனையில் உட்கார வைத்தார். திருமணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். ரகுவின் அப்பா ஒரு அனலாக் கேமரா, ஒரு ஸ்நாப் எடுத்து ரோல் சுற்றவேண்டிய மாடல், வைத்து போட்டோ எடுக்க திணறிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் கேமரா வாங்கி மணமக்களை ஒரு பத்து போட்டோ எடுத்தேன். மணமகனின் கால் விரலில் மெட்டி அணிவிக்கப்பட்டது. பின் ஸ்வர்ணா சிரிக்க சிரிக்க, ரகு அவர் காலில் சந்தனம் பூசினான். மனையில் உட்கார்ந்தார்கள். புரோகிதர் ஹோமம் வளர்த்தார். ஒரு கயிறில் மஞ்சள் தடவி மணமக்கள் கைகளில் கட்டினார். மாலை அணிவிக்கச் செய்தார். வேறொரு கயிறில் மஞ்சள் பூசி ஒரு மஞ்சளை கட்டி தாலியாக்கினார். ஒரு தட்டில் தேங்காய் வைத்து அனைவரிடமும் ஆசி வாங்க அனுப்பினார். தாலியை ஆசீர்வதித்து அட்சதைக்காக தட்டில் இருந்த பூவை எடுத்துக் கொண்டனர். நான் எடுக்க தவறியதால் திருமதி மோகனாவிடம் இருந்து கொஞ்சம் அட்சதையை கடன் வாங்கிக்கொண்டேன். சம்பிரதாயங்கள் முடிந்து புரோகிதர் தாலி எடுத்துக் கொடுக்க, கெட்டிமேளம் முழங்க, அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க எங்கள் தோழன் ரகு, எங்கள் தோழி ஸ்வர்ணா கழுத்தில் தாலி கட்டினான்.
ரகு – ஸ்வர்ணா திருமணம் Photo Courtesy: சரவண பிரபு |
திருமணத்துக்கு பின் அக்னியை வலம் வந்தார்கள். பின் முருகனை வழிபடப் சென்றார்கள். மகேஷ் வீட்டுக்கு கிளம்பினான். நானும் பிரபுவும் கிளம்பலாம் என்றபோது சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். அருகில் இருந்த ஆதித்யா ஹோட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ரிசெப்ஷனும் அங்குதான். நாங்கள் அங்கு சென்றோம்.
ஆதித்யாவில் மொத்த ஹால் குளிரூட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் உணவு வைக்கப் பட்டிருந்தது. மறுபுறம் மேடைக்கு எதிரே மேஜை நாற்காலி போடப்பட்டிருந்தது. மேடையில் ரகு மற்றும் ஸ்வர்ணா ஏறி நின்றார்கள். பின்னணியில் இன்னிசை ஒலிக்க வைப்பதற்காக சீ.டீ. பிளேயரை நோண்டிக் கொண்டிருந்தார். அத்தனை தயாரிப்புகளும் அட்டகாசமாக, உண்மையில் சொல்வதானால் ஆடம்பரமாக, இருந்தது. ஜூஸ் கொண்டுவந்தவரிடமிருந்து இரண்டாவது ஜூசை நான் எடுத்த போது, பின்னணி இசை சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. “நல்ல வாயன் சம்பாரிக்க நார வாயன் திங்கிற…” என்று தொடங்கிய பொழுது நான் புரையேறி சிரிக்க ஆரம்பித்தேன். “கணக்கு வழக்கு தெரியாம காசை வாரி இறைக்கிறே…” என்று தொடர்ந்த பொழுது மேடையில் இருந்த ரகு ஸ்வர்ணா கூட சிரிக்க ஆரம்பித்திருந்தனர். ஹோட்டல் ஆள் வந்து நிறுத்துவதற்குள் பாட்டு “காசு… பணம்… துட்டு… மணி மணி…” தாண்டி விட்டிருந்தது. மேலும் அடுத்த பாட்டு வரும்முன் சாப்பிட்டுவிடலாமென்று போய் சூப் மற்றும் ஸ்டார்ட்டர் கொண்டு வந்தோம். அம்மா எனக்காக சமைத்து காத்திருப்பதாக கூறியிருந்ததால் நான் அதிகம் சாப்பிடவில்லை. பிரபு, மோகனா மற்றும் வேதராமன் சாப்பிட்டார்கள். ரகுவின் அக்கா இருமுறையும் அம்மா ஒரு முறையும் வந்து நல்லா சாப்பிடுங்க என்று அன்பு அதட்டல் போட்டுவிட்டு சென்றார்கள். சாப்பிட்டுவிட்டு மேடையில் ரகு மற்றும் ஸ்வர்ணாவை வாயாற வாழ்த்திவிட்டு கிளம்பினோம். மாலை ரிசெப்ஷனுக்கு அழைத்தான். கஷ்டம் தான் என்றாலும், கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். கீழே பேசிவிட்டு பிரபுவும் நானும் திரும்பிவிட்டோம்.
குரோம்பேட்டை கும்மி
வீட்டில் என்னை இறக்கிவிட்ட வேதராமன், ஓணம் விருந்து சாப்பிட அவன் நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டான். நானும் அம்மாவும் சாப்பிட்டுவிட்டு சுபா வீட்டுக்கு கிளம்பினோம். மாப்பிள்ளை மதிய சிரம பரிகாரத்தில் இருந்தார். மாப்பிள்ளையின் பாட்டியிடம் பேசினோம். கொண்டுபோன கேக்கை ஆகாஷ் மற்றும் அகிலேஷ் அடித்து பிடித்து தின்றார்கள். சுபா கொடுத்த மாதுளம் பழத்தை நான் உரிக்க அதே வேகத்தில் ஆகாஷ் சாப்பிட்டான். எனக்கு கொஞ்சம் கூட தரவில்லை. ஞாயிரானாலும், அட்வான்ஸ் டாக்ஸ் சேகரிக்க, அலுவலகம் சென்றிருந்த அப்பா நேராக சுபா வீட்டுக்கு வந்தார். நடராஜ் அண்ணாவும் சுபா வீட்டுக்கு வந்தார். கொஞ்சநேரம் அனைவரும் பேசிவிட்டு டீ குடித்துவிட்டு நான் நடராஜ் அண்ணா வீட்டுக்கு சென்றேன். அண்ணி ஈஷா யோகா மையம் சென்றிருந்தார். மூன்று நாள் முகாம். அண்ணாவின் வீட்டில் உள்ளே நுழைய முடிந்த அளவிற்கு இடம் இருந்தது. அவர் வீட்டில் ஏசி பழுதாகி இருந்ததால் ரிஸ்வான் என்ற இளைஞரும் அவரது தோழரும் சரி செய்ய வந்திருந்தார்கள். நடராஜ் அண்ணா தனது பர்ஸை வீட்டிலோ எங்கேயோ வைத்து மறந்திருந்தார். அதனால் ரிஸ்வானுக்கு கொடுக்க அவரிடம் பணமில்லை. பணம் எடுக்க ATM கார்டும் இல்லே.
நடராஜ், “ரிஸ்வான்… என்கிட்டே பர்ஸ் இல்லே… அதனாலே இப்போ கைலே காசு இல்லே… செக் தரட்டுமா?”
ரிஸ்வான், “செக்கை பேங்க்லே கொடுத்தா காசு கொடுத்துருவாங்களாண்ணா? இல்லே ATMல தரணுமா?”
நடராஜ், “உனக்கு அக்கௌன்ட் இருக்கா?”
ரிஸ்வான், “இருக்கும்ணா… ஸ்கூல் டேஸ்லே பேங்க் போயிருக்கேன்ணா…”
நடராஜ், “பேங்க்லே போய் கையெழுத்து போட்டா கொடுத்துருவாங்க…”
ரிஸ்வான், “எனக்கு கையெழுத்து போட மறந்துருச்சுண்ணா… எனக்கு பதிலா இவன் போடலாமா?” அருகில் இருந்த நண்பனை காண்பித்தான்.
நடராஜ், “உன் பேர்ல செக் கொடுத்து, அவன் கையெழுத்து போட்டா உனக்கு எப்படி காசு தருவாங்க…”
ரிஸ்வான், “பரவாயில்லேண்ணா… அவன்கிட்டே காசு கொடுக்கட்டும்… நான் வாங்கிக்கிர்றேன்…”
ரிஸ்வானின் நண்பனும், “தைரியமா செக் கொடுங்கண்ணா… நான் அவனுக்காக கையெழுத்து போட்டு காசு வாங்கி கொடுத்துர்றேன்…”
பொறுக்க முடியாத நான், “நடராஜ் அண்ணே… நான் இவங்களுக்கு காசு குடுத்துர்றேன்…”
நடராஜ், “உனக்கு ஏம்பா செலவு???”
நான், “நான் ஒண்ணும் ப்ரீயா தரலை… செக்கை எனக்கு கொடுங்க…”
ரிஸ்வானுக்கு எழுதிய செக்கை அப்படியே எனக்கு கொடுத்தார்.
நான் நொந்துபோய், “அண்ணா… நீங்களுமா… இப்போ செக்கை வைத்து கொழப்ப வேண்டாம்… நான் அப்புறமா உங்ககிட்டே வாங்கிக்கிடறேன்…”
பைக்கில் சென்று பணம் எடுத்து நடராஜ் அண்ணாவிடம் கொடுத்தேன். அவர் ரிஸ்வானுக்கு செட்டில் செய்தார். இன்னும் ஒரு மாசத்துக்கு யாரும் என்னிடம் செக் என்ற பேச்சே எடுக்காதீர்கள். இந்த குழப்பமே போதும்.
நடராஜ் அண்ணாவின் அம்மாவும் அப்பாவும் அவர் அண்ணா ரமேஷ் வீட்டில் இருந்தார்கள். அதனால் தாம்பரம் சானடோரியமில் இருந்த ரமேஷ் அண்ணா வீட்டுக்கு போனோம். அனைவரிடமும் பேசினோம். பின் வீட்டுக்கு திரும்பி வந்து நடராஜ் அண்ணாவும் நானும் ஒருமணி நேரம் Feedback Control பற்றி பேசித் தீர்த்தோம். ஒரு கட்டத்தில் நான் எழுந்து நின்று சத்தம் போட்டு பேச ஆரம்பித்தேன். நடராஜ் அண்ணாவும் இன்டர்நெட்டுக்கு போய் வரைபடங்கள் எல்லாம் தேடி எடுத்து வந்தார். அதிலேயே பத்து மணி ஆகிவிட்டிருந்தது. வெளியே போய் சாப்பிடுவதாக ப்ளான். நடராஜ் அண்ணாவும் சாப்பிடவில்லை. ஆனால் எங்களோடு சாப்பிட வரவில்லை. நான் வந்தால், நீ என்னிடமே பேசிக்கொண்டிருப்பாய். அம்மா அப்பாவிடம் பேச முடியாது. அதனால் நீ போய் அவர்களோடு சாப்பிடு என்று, பெருந்தன்மையோடு புரிந்துகொண்டு, அனுப்பி வைத்தார். நான், அம்மா, அப்பா Hysoop ஹோட்டலில் சாப்பிட்டோம். இரவு தூங்கியபோது சென்னையில் ஒரு நாள் வேகமாக ஓடிவிட்டிருந்தது.
சென்னை டூ மும்பை
திங்கள் காலை சீக்கிரமே எழுந்து இட்லி மற்றும் சட்னி பேக் செய்து கொடுத்தார் அம்மா. அப்பா எக்மோரில் வந்து ரயில் ஏற்றிவிட்டார். திரும்பி வரும்போது பயணம் சம்பவம் இல்லாமல் கழிந்தது. என்ன, ஸ்லீப்பர் கன்பார்ம் சீட் என்றாலும் அனைவரும் ஏறி இறங்கினார்கள். குல்பர்கா மற்றும் சோலாபூர் வரை திருவிழாக் கூட்டம் கும்மியடித்தது. ஜெனரல் டிக்கெட் வாங்கிக் கொண்டு கூட ஸ்லீப்பரில் ஏறி இருந்தார்கள். இறங்கச் சொன்ன TTRஇடம் மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள். ஒரு ஆள், “ஏன்யா… சீட் இல்லேன்னா எதுக்குய்யா டிக்கெட் விக்கிறீங்க? எங்க ஊர் தியேட்டர்ல 200 சீட் இருந்தா 200 டிக்கெட் தான் விப்பாங்க… நீங்க ரயிலில் மட்டும் ஏன்யா இருக்குற ஜெனரல் சீட்டுக்கு அதிகமா டிக்கெட்டை விக்கிறீங்க? நான் இங்கே தான் உட்காருவேன்.” மொத்த கூட்டம் அவர் பின்னே இருந்தது. TTR போய் இரண்டு போலீசாரை அழைத்து வந்தார். போலீசிடமும் அந்த ஆள் பயப்படாமல் எகிறினார், “கை வைச்சிருவியா… நீ போலீஸ் வெறும் ஸ்டேட் கவர்ன்மெண்ட்… இந்த ரயில் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்… தொட்டு பாரு… கிழிச்சிருவேன் கிழிச்சு…” போலீஸ் போய்விட்டது. இந்த சினிமாவை பார்த்துவிட்டு என் பெர்த்தில் நான் படுத்துவிட்டேன்.
இரவு தூங்கி செவ்வாய் காலை கல்யாணில் இறங்கினேன். அங்கிருந்து தாணே மாறி பன்வேல் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கொடுத்தனுப்பிய துணிகளை சசியிடம் கொடுத்தேன். கார் பொம்மையை சூர்யாவிடம் கொடுத்தேன். தயாராகி ஆபீஸ் கிளம்பினேன்.
ரகு ஸ்வர்ணா தம்பதி மும்பை வந்தபிறகு அவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க வேண்டும்.
பயணம் சுபம்.
Good one!
Thanks அண்ணா… நீங்கள் எனக்கு ஒரு பெரிய உந்துசக்தி… இந்த https://nvkarthik.com வலைப்பக்கமே உங்கள் தூண்டுதலால் ஏற்பட்டதுதான்…
When ever i read ur fb msg…i thought its a Forwarded one…but its ur Own…nee avlo periya Appatakara…
Really Great Machi….keep it …..HATS OFF for ur Tamil even u r away frm TN in the last 10 yrs
நன்றி லாரான்ஸ் (btw, are you Tharci?)… நான் தான் எழுதுறேன்… நம்பி படிக்கலாம்… ஏதாவது குத்தாங் குறை இருந்தா சொல்லு…
Super da. Saamy nu unna yethukku koopdraanganu theriyatha? Yenakku oru unma therijahanum. Nu solla va? Illai.
ஹாஸ்டல்ல, தினமும் காலையில் மணியாட்டி எல்லோரையும் disturb பண்ணது நல்லாவே ஞாபகம் இருக்கு…
Nice write up
Thanks Mahesh
If everyone wrote like this, the net could be amazing.
Thanks…