Experience

சினிமா பிரபலங்கள்

Print Friendly, PDF & Email
“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker

and… I’m no Joker…

03-May-2013
(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல )

சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு வேலை குறைவதில் சசிக்கு சொந்தோஷம். அங்கு ஒரு சின்ன பொம்மை விளையாட்டு வீடு இருப்பதால் குழந்தைகளுக்கு அங்கு விளையாடும் சொந்தோஷம். கொஞ்சமே அழகான மும்பை மற்றும் புணே பெண்கள் வந்து போவதால் எனக்கும் பொழுது போய்விடும். அன்று அப்படித்தான் அங்கே முதல் மாடியில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெரும் உருவம் எங்களை தாண்டி சென்றது.

சசி என்னைப் பார்த்து, “அது சமீரா ரெட்டி மாதிரி இல்லே?”

நான், “ச்சே… இருக்காதும்மா… இருந்தா, என்கிட்டே பேசாம போவாங்களா… இது வேற யாரோவாக இருக்கும்…”

சசி, “ஆமா… பெரிய இவரு… அவங்க வெளிய வந்தவுடனே கூப்பிட்டு பேசுங்க… இப்ப பாத்ரூம் போயிருக்காங்க…”

நான், “பாத்ரூமா??? அங்கிருந்து வெளியே வர்றவங்களை நிப்பாட்டி பேசுறது நல்லவா இருக்கும்??? ஏதும் கோவிச்சிக்கிட்டு அடியக்கிடியப் போட்டா நான் தாங்கமாட்டேன் ஆமா…”

சசி, “அட… கூப்பிட்டு பேசுங்க… நான் அவங்களோட போட்டோ எடுத்துக்கணும்…”

சிறிது நேரம் பேசாமல் சொர்க்கவாசல் திறப்புவிழாவுக்கு காத்திருக்கும் பக்தர்களைப் போல் காத்துக்கொண்டிருந்தோம்.

“வர்றா… வர்றா…”, சசி பதறிக்கொண்டிருக்க, கதவைத் திறந்து வந்த அந்த பெரிய உருவம் ‘வாம்மா மின்னல்’ போல எங்களை மீண்டும் கடந்து படியிறங்கிச் சென்றது.  வெள்ளை முழுக்கை சட்டை. தொப்பைக்கு மேல் ஏற்றிக் கட்டிய கருநீல கால்சராய். பெல்ட் கூட இல்லை. முகத்தை மறைக்கும் தலைவிரி கோலம்.

நான் பேயைப் பார்த்ததுபோல் உட்கார்ந்திருந்தேன். “போச்சே… போச்சே…” என்று சசி புலம்பிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் பிரமை தெளிந்த நான், “அவங்க சமீரா ரெட்டி போலவே இருந்தாங்கல்ல???”

சமீரா ரெட்டி

சசி, “போலவேவா??? அது சமீரா ரெட்டிதான்… நான்தான் அப்பலேர்ந்து கத்திக்கிட்டிருக்கேன்ல… நீங்க மொகத்த பார்க்கல???”

நான், “நானா??? யாருமே முகத்தை பார்க்கலைன்னு நினைக்கிறேன்…” சற்று நிதானித்து, சசி முறைப்பதை கண்டு, நான் சொன்ன சொற்களின் வீரியம் புரிந்து, “அதான் முகம் பூரா முடி மூடியிருந்துச்சே??? சரி பரவாயில்ல விடு… சமீரா ரெட்டிய பார்தோம்னு Facebookலே போடு…”

சசி வழக்கமான கோபத்தோடு, “போட்டோ எடுத்துக்கலேன்னா யாரும் நம்ப மாட்டாங்க…”

இனி என் பதில் எதுவும் எடுபடப் போவதில்லை. குழந்தைகள் விளையாடி முடியும் வரை, வாங்கிய பர்கர்கள் தீரும் வரை உட்கார்ந்திருந்துவிட்டு வந்தோம்.

உண்மையில் சொல்லப் போனால், சமீரா ரெட்டி நேரில் ஒன்றும் அழகாகவே இல்லை. குண்டு அல்ல, ஆனாலும் பெருத்த சரீரம் – ஒரு அடியாளைப் போல. படத்தில் தான் அழகாக தெரிகிறார். திரைப்படங்களில் ஏதோ விக்டாலாச்சாரியா வேலை செய்துதான் எல்லா ஹீரோயின்களை (maybe ஹீரோக்களையும்) அழகாக காட்டுகிறார்கள் போல.

நான் சிலபல சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னமோ அவர்களிடம் பேசவேண்டும் என்றோ, கையெழுத்து வாங்கவேண்டும் என்றோ, சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்றோ தோன்றியதே இல்லை. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் என்பதால் எனக்கு அவர்களைப் பார்க்கும் போது எந்தவித பிரமிப்பும் ஏற்படுவதில்லை. சில நண்பர்கள் அக்கறையுடன் என்னை ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்டை பார்க்கச் சொன்னார்கள். எனக்கு சைக்கியாட்ரிஸ்ட் என்றால் மாத்ருபூதம் மட்டுமே நினைவுக்கு வந்து தொலைத்ததார். அப்படியே போய்ப் பார்த்திருந்தாலும் எங்கள் விவாதம் மொத்தமாக திசைமாறிப் போய்விடும் அபாயம் இருப்பதால் நான் போகவில்லை. வேறு யாரையும் நான் சென்று பார்க்கவில்லை.

எனக்கும் சினிமா பிரபலங்களுக்குமான சில கணங்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளேன்.

பிரதாப் போத்தன்

என் பெரியப்பா மகள்கள் ஜீவிதா மற்றும் ராஷ்மிகாவின் சென்னை வீட்டிற்கு என்னுடைய பால்ய வயதில் இரண்டொரு முறை சென்றிருக்கிறேன். அவர்கள் அப்பா L&Tயில் பெரிய உத்தியோகத்தில் அப்போது இருந்தார், இப்பொழுதும் இருக்கிறார். அவர்கள் அப்பொழுது தங்கியிருந்த ஏரியா பணக்காரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இருந்த ஏரியா. அவர்கள் இருந்த வீட்டின் எதிர்வீட்டில் வி.கே.ராமசாமி இருந்தார். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. மற்றொரு பிரபலமும் அந்த வளாகத்தில் இருந்தார். அவர் பிரதாப் போத்தன். மாடியில் இருந்துகொண்டு தூரத்தில் தோட்டத்தில் திரியும் அவரைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஐந்து நிமிடத்திற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் விளையாடப் போய்விடுவோம்.

பின் பள்ளி, இறுதி பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு, கல்லூரி, வேலை என்று பொழுது பிஸியாக ஓடிவிட்டது. நடுவில் இரண்டு மூன்று முறை பூனைக்கு மணி கட்டி CAT பரீட்சை கூட எழுதியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

ரா. பார்த்திபன்

ரிலையன்ஸில் சேர்ந்த பிறகுதான் எனக்கு வாழ்வில் முதல் முதலாக விமானத்தில் செல்லும் வாய்ப்பு வந்தது. அப்பொழுது வடஇந்தியாவின் பெட்ரோல் பம்ப்களை நிறுவும் பொறுப்பில் இருந்ததால் வாரம் மூன்று நான்கு முறை பறப்பேன். மிக சல்லிசு விலையில் கேப்டன் கோபிநாத் (இது நீங்கள் நினைக்கும் ‘கேப்டன்’னோ, ‘கோட்டு’ கோபியோ அல்ல; வேறு ஒரே ஆள்) ஏர் டெக்கான் என்று ஒரு விமான சேவை நடத்திக் கொண்டிருந்தார். அவரால் மத்திய வர்கத்தினர்களுக்கும் முதல் முதலாக விமானம் இலகுவாக சாத்தியப்பட்டது. விமானத்தில் முதலில் ஏறி கடைசியாக இறங்க தள்ளுமுள்ளே நடக்கும் – குடுக்குற காசுக்கு அதிக நேரம் விமான சேவை அனுபவிக்கிறார்களாம். அவ்வாறு ஒரு முறை சென்றபோது வழக்கம் போல விமானம் நின்றவுடன் நான் இறங்கி ரன்வேயில் ஷட்டல் பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மற்றவர்கள் வழக்கம்போல தங்கள் பைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள், அல்லது அந்த சாக்கில் உள்ளேயே விமான சேவையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாக நான் தனியாகத்தான் நிற்பேன். அன்று என்னுடன் வேறு ஒருவரும் நின்றிருந்தார். கவனித்த போது அது ‘கிறுக்கல்கள்’ ரா.பார்த்திபன் என்று தோன்றியது. திரும்பி மெல்லிதாக சிரித்துவைத்தேன். அவரும் சிரித்தார். நாங்கள் மட்டும் தனியாகவே நின்றிருந்தோம். பேசியிருந்தால் பேசியிருப்பார் என்றே தோன்றியது. ஆனாலும் என்னமோ பேசத் தோன்றவில்லை. அது ரா.பார்த்திபன் தானா என்பதில் எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்தது. காரணம் இரண்டு. ஒன்று – சினிமாக்காரர்கள் ரொம்ப கெத்தாக இருப்பார்கள்; பதில் சிரிப்பெல்லாம் தரமாட்டார்கள் என்று அப்போது நம்பினேன். இரண்டு – சினிமாக்கார்கள் என்றால் அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு பொதுமக்கள் கூட்டம் இருக்கும் என்றும் நம்பினேன்.

அமிதாப் பச்சன்

பொதுமக்கள் சூழ, ஆனால் கெத்தாக இல்லாமல், நான் பார்த்த ஒரு நட்சத்திரம் அமிதாப் பச்சன். மும்பை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக ஒரே சத்தமாக இருக்கும். ஏதாவதொரு பிரபலம் வந்தால் சத்தம் அடங்கி அனைவரும் குசுகுசுவென்று பேசும் சத்தம் மட்டும் கேட்கும். அன்று நான் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். திடீரென்று விமான நிலையம் மிகவும் அமைதியாகிவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் எழுந்து போய்விட்டிருந்தனர். ஒரு வேளை என்னை விட்டுவிட்டு விமானத்தை கிளப்பி விட்டார்களோ என்று பயந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். பத்து அடி தள்ளி ஒரு சிறு கூட்டமும் நடுவில் ஒரு தலையும் தெரிந்தது. அவர் தலை குனிந்து ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தவர் – ரஜினிக்கு அடுத்தபடியான இந்தியாவின் சூப்பர் ஸ்டார் – அமிதாப் பச்சன். மிக உயரமாக இருந்தார். தூய வெள்ளையில் பைஜாமா குர்தா அணிந்திருந்தார். சூழ்ந்திருந்த கூட்டத்தில் இருந்து அவர் தலை தனியே மேலே தெரிந்தது. வழக்கம் போல நான் அவரிடமும் கையெழுத்து வாங்கவோ, பேசவோ, போட்டோ எடுத்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை. மேலும் அப்பொழுது அவர் ஐஸ்வர்யாவின் மாமனாராகவும் ஆகியிருக்கவில்லை. விமானம் புறப்படும் அறிவிப்பு வந்ததால் நான் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டேன். விமான அதிகாரிகள் தங்கள் பயணிகளை அந்தக் கூட்டத்தில் இருந்து தேடித்தேடி இழுத்து விமானத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்துக்கொண்டிருந்த கடைசி நொடி வரை அமிதாப் பச்சன் பொறுமையாக, எரிந்து விழாமல், முகம் சுளிக்காமல் அனைவருக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார். மற்றபடி யாரும் அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்கியதாகவோ, தங்கள் குழந்தையைக் கொடுத்து பேர் வைக்கச் சொன்னதாகவோ தெரியவில்லை. அந்தளவுக்கு பரவாயில்லை.

சல்மான் கான்

மிக அலட்டலாக பார்த்தது சல்மான் கான். அப்பொழுது ரிலையன்ஸ் PTA3 தொழிற்கூடத்தை சூரத் நகரின் ஹஜிராவில் கட்டிக்கொண்டிருந்தது. நான் அப்பொழுது அதன் இன்ஸ்ட்ருமெண்ட் இன்சார்ஜ்’ஆக இருந்தேன். அது சம்பந்தப்பட்ட ஒரு பயிற்சிக்காக நானும் ராஜ்பாபு என்ற மற்றொரு பொறியாளரும் பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்தோம். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்தபோது மிக ஆடம்பரமான உடையுடன் குள்ளமாக, அகலமாக, கண்ணாடி அணிந்து, தனது மெய்க்காப்பாளருடன் நுழைந்து வெகு  அட்டகாசமாக அலட்டலாக நிலையத்தின் உள்ளே எங்களைக் கடந்து சென்றவர் சல்மான் கான். யாருக்கும் அவரை நெருங்கக்கூட தோணியிருக்காது. அவ்வளவு ஆடம்பரம் பார்த்தால் நானும் கொஞ்சம் ஒதுங்கி விடுவேன். ராஜ்பாபு மட்டும் பஞ்சுமிட்டாயை பார்த்த குழந்தையைப் போல , “கார்த்தி… கார்த்தி… அங்கே பாருங்க ‘ஹம் ஆப்கே ஹை’  போய்க்கிட்டிருக்காரு…” என்று என்னை உலுப்பிக் கொண்டிருந்தார். நான் அங்கே மும்பை விமான நிலையத்தில் சுற்றி இருக்கும் அத்தனை அழகான பெண்களை பார்ப்பேனா அல்லது அந்த சல்மானைப் பார்ப்பேனா. (இடைச்செருகல் – அமிதாப் பச்சனைப் போல இவரும் ஐஸ்வர்யாவுடன் சம்பந்தப்பட்டவர்தான்.)

இதற்கிடையில், நட்ராஜ் அண்ணா ஒருமுறை விமான நிலையத்தில் ‘மச்சான்’ நமீதாவைப் பார்த்ததாக சொன்னார். ஆனால் விவரமாக சொன்னதில்லை. “நமீதா…” என்று ஆரம்பித்து இரண்டொரு உளறலான வரிகளுக்கு பிறகு கற்பனையில் ஆழ்ந்து விடுவார். அவரிடம் மேலதிகத் தகவல் உருவ முடிந்தால் இந்த பதிவை மேம்படுத்துகிறேன்.

நமீதா

(ஹப்பாடா… போகிற போக்கில் நமீதா படத்தையும் சேர்த்தாச்சு… ‘ஏய்’ மற்றும் ‘எங்கள் அண்ணா’ காலத்தில் இந்த சூரத் பொண்ணு அத்தனை அழகு…)

விஜய் + சத்யன்

இதெல்லாம் போக மும்பையில் இரண்டு பிரபலத்தை ஒருசேர சந்தித்திருக்கிறேன். அப்பொழுது சசி பிரசவத்திற்காக சென்னை சென்றிருந்தார். சசியின் அக்கா குடும்பத்தை மும்பை தர்ஷனுக்காக வண்டியில் அமரவைத்து சுற்றிக்கொண்டிருந்தேன். மதியம் மெரைன் டிரைவ் வந்தபோது ஒரு இடத்தில் கூட்டம் இருந்தது. இறங்கி பார்த்த போது சின்ன ஷூட்டிங். பார்த்தால் நமது ‘அணில்’ விஜய்யும் ‘சிம்மக் குரலோன்’ சத்யனும் நின்றுகொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி தெரியாத வடநாட்டு மக்கள் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தமிழ் மக்கள் வழக்கம் போல விஜய் சேஷ்டைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். விஜய் என்னவோ சின்சியராகத்தான் தன வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த தமிழ்நாட்டு செக்ரூட்டிகள் “சலோ… சலோ… ஜருகண்டி… ஜருகண்டி…” என்று மக்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தனர். நாங்கள் வண்டியுடன் வேறு இருந்ததால் சீக்கிரமே நகரவேண்டியதாகி விட்டது. படத்தில் மட்டுமல்ல, நேரிலும் விஜய் நடிப்பதை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. எனினும் நாங்கள் பார்த்த அந்த ஒரு காட்சி ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்றிருந்தது. படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சசியிடம் சொல்லி வெறுப்பேற்றுவேன், “ஹ்ம்ம்… இந்த காட்சியை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்…”

படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் ஒரு சினிமா பிரபலத்திடம் பார்த்து பேசி பழகியிருக்கிறேன். அவர் என்னுடைய கல்லூரி சீனியர் – பகவதி பெருமாள். ‘NKPK நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ். நடிகர் என்பதை விட இயக்குனர் என்று அழைக்கப் படுவதில் தான் அவருக்கு சந்தோஷம் என்பது என் எண்ணம். கல்லூரி காலத்தில் என்னை விட ஒரு வருடம் மூத்தவர். Production department. கல்லூரியில் இருக்கும் போதே சினிமாதான் தன் துறை என்று அறிவித்து விட்டிருந்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சீனியர் என்ற முறையில் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகுகிறார். வெறும் தொலைபேசி தொடர்புதான் என்றாலும் சகஜமாக அவருடன் தொடர்பு கொள்ள முடியும். சமயத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறோம். இப்பொழுது ஒரு பட இயக்கத்தில் இறங்கியிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பக்ஸ்

இது தவிர குரோம்பேட்டை MITயில் நான் படித்த போது பல சினிமா பிரபலங்களைப் பல்வேறு கல்லூரி விழாக்களில் பார்த்திருக்கிறேன். பட்டியல் படுத்தவே முடியாதபடி அது மிக நீளம். ஆனால் அவை என்னுடனான தனிப்பட்ட முயற்சி அல்லாததால் அவற்றை தொகுக்கவில்லை. மேலும் கல்லூரிக் காலத்தில் மேடையில் இருந்த சினிமா பிரபலத்தை விட கீழே இருந்த கல்லூரி தேவதைகளே அழகாய் தெரிந்த காலம். என்றாவது ஒரு நாள் மீண்டும் எல்லாரையும் சந்திக்கும் காலம் வரலாம். கனியும் வரை காத்திருப்பேன்.

Karthik Nilagiri

Related posts

6 Comment's

    1. நன்றி பாஸ்… 🙂

  1. //மேலும் கல்லூரிக் காலத்தில் மேடையில் இருந்த சினிமா பிரபலத்தை விட கீழே இருந்த கல்லூரி தேவதைகளே அழகாய் தெரிந்த காலம். என்றாவது ஒரு நாள் மீண்டும் எல்லாரையும் சந்திக்கும் காலம் வரலாம். கனியும் வரை காத்திருப்பேன்.//
    boss,touchinga irundhudhu kadasi vari

    1. கல்லூரி நண்பர் நண்பிகளை மிஸ் பண்ணாதவங்க யாரு பாஸ் இருக்காங்க… பிரித்த காலமே அனைவரையும் ஒரு நாள் ஒருங்கிணைக்கும்… 🙂

  2. Natarajan V says:

    கொஞ்சம் லேட்டு தான்… நமீதாவ பார்த்த அந்த வரலாற்று நிகழ்வ இப்ப பதிவு செய்ய முடியுமா 🙂

    1. ‘மச்சான்’ நமீதாவை நான் பார்த்ததில்லை அண்ணா… நீங்கள் பார்த்திருந்தால், அதை கோர்வையாக சொன்னால், இங்கே எழுதி விடலாம்…

Leave a Reply

Your email address will not be published.