Moon

காலத்தின் கோலம் – A Brief History of Time

Print Friendly, PDF & Email
திடீர் திடீரென்று நமக்கு சில சிந்தனைகள் தோன்றித் தொலைக்கும். அப்படி எனக்கு சில மாதங்களுக்குமுன் தோன்றியது, தமிழுக்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்பது. குறைந்தபட்சம் ஒரு கதையாவது எழுதவேண்டும் என்று மனம் பிறாண்டியது. எழுதலாம் என்று உட்கார்ந்தால் மண்டையில் ஒன்றும் ஓடவில்லை. ஆர்வம் இருப்பினும் அதற்கு தேவையான கற்பனைவளம் நமக்கு லேது. சரி நாமாக எழுத வேண்டாம். வெறும் மொழிபெயர்ப்பாவது என்று முடிவு செய்தேன். காப்பியடிப்பதுதானே என்று ஈசியாக நினைத்துவிட்டேன். சும்மா ஒரு கதையை மொழிபெயர்ப்பதைவிட ஒரு அறிவியல் புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது. உடனே தோன்றியது “A Brief History of Time”. எனக்கு பிடித்த அறிவியல் புத்தகம். முக்கி முனகி ஒரு மூணு பக்கம் மொழிபெயர்த்தேன். நடராஜ் அண்ணாவிடமும் சரவண பிரபுவிடமும் காண்பித்தேன். பரவாயில்லாமல் வந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் பாருங்கள், கொஞ்சம் பீராய்ந்தபோது இந்த நூல் ஏற்னவே நாலு முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுஜாதா அன்றே அந்த மொழிபெயர்ப்பை விகடனில் குறிப்பிட்டுள்ளார். நாம் வேறு எதற்கு அந்த நல்ல புத்தகத்தை மேலும் துன்புருத்தவேண்டும் என்று விட்டுவிட்டேன்.

 
Vikatan Page 1
 
Vikatan Page 2
எச்சரிக்கை: மொழிபெயர்ப்பை சடாரென்று நிறுத்திவிட்டேன். மன்னிக்கவும்.
அபாய எச்சரிக்கை: ஆர்வம் மறுபடி தலை தூக்கித்தொலைத்தால் மறுபடி தொடங்கிவிடலாம்.
 
மொழிபெயர்த்தவரை இங்கே.
காலத்தின் கோலம்
பகுதி 1
பிரபஞ்சப் பார்வை
அவர் ஓர் பெரிய்ய்ய்ய விஞ்ஞானி, பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell) என்று நினைக்கிறேன். பிரபஞ்சம் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். உலகம் சூரியனை சுற்றும் பாதையைப் பற்றியும், சூரியன் பிரபஞ்சத்தின் மையத்தை சுற்றும் பாதையைப் பற்றியும் ஒரே சொற்பொழிவு தான். எல்லாம் ஒரு வழியாக முடிந்த போது ஒரு பாட்டிம்மா எழுந்து, “செல்லாது செல்லாது. நீ சொல்றது எல்லாம் தப்பு. உலகம் தோசைக்கல்லு மாதிரி தட்டையானது. ஒரு பெரிய ஆமைதான் அதை தாங்கி நிக்குது.” என்று ஒரு போடு போட்டார். விஞ்ஞானி ஒரு புன்சிரிப்போடு,“அப்போ அந்த ஆமை எது மேல நிக்குது?”. பாட்டியும் சளைக்காமல், “என்னை மடக்கிட்டதா நெனப்பா? அது இன்னொரு ஆமை மேல நிக்குது. அது இன்னொண்ணு மேல. இப்படியே தான். கடைசி வரைக்கும்.”
இந்த, ‘முடிவில்லா ஆமை கோபுரத்தின் மேலே பிரபஞ்சம்என்ற நம்ம பாட்டிம்மாவின் புரிதலை கிண்டல் செய்யும் முன்யோசியுங்கள் நமக்கு சரியான பதில் தெரியுமா? பிரபஞ்சம் பற்றி நமக்கு என்ன தெரியும்? அது எப்படிப்பட்டதென்று தெரியுமா? எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்று தெரியுமா? பிரபஞ்சத்திற்கு தொடக்கம் உண்டா? உண்டெனில், தொடக்கத்திற்கு முன்பு என்ன நடந்து கொண்டிருந்தது? காலம் என்பது என்ன? அது எப்போதாவது முடிந்து போகுமா? நம்மால் காலத்தில் பின்னோக்கி செல்ல முடியுமா? இத்தனை விதமான குழப்பமான கேள்விகளில், கொஞ்சூண்டு கேள்விகளுக்கு இன்றைய விஞ்ஞானம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் விளக்கம் அளிக்கலாம். அந்த விளக்கங்களும் நமக்கு புரியாமலும், புரிந்தாலும் ஒரு மாதிரி கெக்கிலிபிக்கிலியாக இருக்கலாம். இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்க்கலாம் வாருங்கள்.
இயேசு பிறப்பதற்கு சுமார் 340 வருடங்களுக்கு முன்னால் நம்ம கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் (Aristotle) ஒரு புத்தகம் வெளியிட்டார் – On the Heavens (ஆன் தி ஹெவென்ஸ்). பூமி பந்து மாதிரி கோளம் தான், தொப்பி மாதிரி தட்டையல்ல என்பதற்கு இரண்டு முக்கிய வாதங்களை எடுத்து வைத்தார். முதல் வாதம் சந்திர கிரகணம் சார்ந்தது. சந்திர கிரகணம் ஏற்பட காரணம் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வருவதுதான் என்று உணர்ந்தார். சந்திரனின் மேல் விழும் பூமியின் நிழல் எப்போதும் வட்டமாய் இருப்பதை கண்டார். பூமி பந்து போல் இருந்தால் தான் இது சாத்தியம். பூமி தட்டையாக இருந்தால் சந்திரனின் மேல் விழும் நிழல் நீள்வட்டமாகவோ நீளமாகவோ இருந்திருக்கும். அல்லது ஒவ்வொரு சந்திர கிரகணத்தின் போதும் சூரியன் பூமித் தட்டையின் நேர் கீழே, வட்ட நடுவில் இருக்க வேண்டும். அது சாத்தியமென்று தோன்றவில்லை. இரண்டாவது வாதம் துருவ நட்சத்திரம் சார்ந்தது. துருவ நட்சத்திரம் வடதுருவத்தின் நேர் மேலே உள்ளது. பூமியின் வடக்கு பகுதிகளில் இருந்து பார்த்தால் வானின் மேலே தெரியும் திருவாளர் துருவன், பூமத்திய ரேகையில் இருந்து பார்த்தால் கீழே இறங்கி தொடுவானத்தில் தெரிந்தார். இது போக, ஒரு மூன்றாவது காரணமும் இருந்தது கிரேக்கர்களுக்கு, பூமி பந்து போல என்று நம்புவதற்கு, “அது ஏன்யா, கடலில் தூரத்தில் இருந்து வரும் கப்பலுக்கு முதலில் பாய்மரமும், அப்புறம் கிட்டக்க வரவரவரவரவர அடிப்பாகமும் தெரியுது?”. இதெல்லாம் காரணமாக உலகம் உருண்டைதான் என்று நம்பத் தொடங்கினர். ஒரு கொசுறுத் தகவல் – எகிப்தில் இருந்தும் கிரேக்கத்தில் இருந்தும் திருவாளர் துருவனை கவனித்த அரிஸ்டாட்டில் ஒரு மாதிரி கணக்கு பண்ணி, பூமியின் சுற்றளவு கிட்டத்தட்ட 400,000 stadia (ஸ்டாடியா) என்று அறிவித்தார். ஒரு ஸ்டாடியா எவ்வளவு என்பது நீளம்ன்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் ஒரு ஸ்டாடியா என்பது 200 கஜம் என்று வைத்துக்கொண்டால் அரிஸ்டாட்டிலின் கணக்கு இப்போதைய நவீன விஞ்ஞானம் ஒத்துக்கொண்ட பூமியின் சுற்றளவிற்கு இருமடங்காக உள்ளது. ஏதோ பரவாயில்லாத கணக்கு.
அரிஸ்டாட்டில்  உலகம் நிலையாக நிற்பதாகவும், சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரம் எல்லாம் பூமியை ஓரு வட்டத்தில் சுற்றி வருவதாகவும் நம்பினார். ஏன்? அது என்னமோ தெரியல, பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்புவதும் இந்த வட்டப் பாதை கான்செப்ட்டும் அவருக்கு பிடித்திருந்தது. கி.பி. 2இல் தாலமி (Ptolemy) இந்த நம்பிக்கையை இன்னும் தெளிவாக்கினார். “இந்தப்பா… ஒரு எட்டு கோளம் இருக்கு. அதன் மையத்தில் பூமி இருக்கு. முதல் கோளத்தில் சந்திரன். அடுத்ததில் புதன் (Mercury). பின் வெள்ளி (Venus). நாலாவதில் சூரியன். பின் செவ்வாய் (Mars). பின் வியாழன் (Jupiter). எழாவதில் சனி (Saturn). கடைசி எட்டாவது கோளத்தில் எல்லா நட்சத்திரங்களும் இருக்கு. இதான் நாம பிரபஞ்சம். எதுனா கேள்வி இருக்கா?” என்று மொட்டையடித்து சந்தனமும் பூசினார். நமக்கு அப்போ தெரிந்தது 5 கிரகங்கள் தான். மேலும், தாலமியை எவன் கேள்வி கேக்கப் போறான் அப்போ?

Ptolomy’s Model
கிரகங்கள் எல்லாம் கொஞ்சம் குழப்பமாக வானில் சுற்றும் பாதையை நியாயப்படுத்த,கிரகங்கள் தங்கள் அனுமதிக்கப்பட்ட கோளங்களுக்குள் ஒரு தனி வட்டப் பாதைகளில் பயணிப்பதாக கருதப்பட்டது. நட்சத்திரங்கள் சுற்றினாலும், தங்களது பக்கத்து பங்காளி நட்சத்திரத்திடம் இருந்து ஒரே தூரத்தை கடைபிடித்ததாலும், கடைசி கோளத்தில் நட்சத்திரங்கள் ஒட்டி இருப்பதாகவும் அந்த கோளமே மொத்தமாக சுற்றுவதாகவும் கருதப்பட்டது. கடைசி கோளத்தை தாண்டி என்ன என்பது விளக்கப்படவில்லை. அந்த அளவுக்கு பார்க்க ஒரு தொலைநோக்கியும் இருக்கவில்லை, இன்றைய அரசியல்வாதிகளைப் போல தொலை நோக்கு பார்வை கொண்ட ஆட்களும் அப்பொழுது இல்லை.
தாலமியின் மாடல் நல்லாத்தான் இருந்தது. அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பாதைகளுக்கு எல்லாம் பொருந்தியது. ஆனால் இந்த நிலா தான் படுத்தியது. தாலமியின் இந்தப் பாதைகள் கணக்குப்படி நிலா மாதம் இருமுறை பூமியின் அருகில், கிட்டத்தட்ட பாதி தூரத்தில், வரவேண்டும். அது சரியென்றால் மாதம் இருமுறை மட்டும் நிலா இரு மடங்கு பெரிதாக தெரியவேண்டும். ஆனால் அப்படி தெரியவில்லை. ஒரே அளவில் இருந்தது நம்ம நிலா. இந்த குறைபாடு தாலமிக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும் அவரது மாடல் பொதுவாக (அனைவராலும் அல்ல) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாடலை கிறிஸ்து சபையும் ஏற்றுக்கொண்டது. வேதாங்கம் படி இருந்ததால் சபைக்கு இது வசதியாகப் போய்விட்டது. சொர்க்கமும் நரகமும் நிறுவ, கடைசி கோளத்திற்கு அப்பால், நிறைய இடம் இந்த மாடல் மூலம் கிடைக்கின்றது அல்லவா நம்ம கிறிஸ்து சபைக்கு. அதனால் மாடல் அங்கீகரிக்கப்பட்டது.
1514இல் தாலமியின் மாடலை விட ஒரு எளிய மாடலை நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (Nicholas Copernicus) முன் மொழிந்தார். போலாந்து நாட்டு மத போதகரான அவர், கிறிஸ்து சபைக்கு பயந்து, தனது மாடலை அநாமதேயமாக வெளியிட்டார். அதன்படி சூரியன்தான் நடுவில் உள்ளது. மற்ற கிரகங்கள் எல்லாம் ஒரு வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நூறு வருஷம் அவரையும் அவரது இந்த மாடலையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லே. பின் இரண்டு வானவியலார்கள் ஜெர்மனியின் ஜோஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) மற்றும் இத்தாலியின் கலீலியோ கலீலி (Galileo Galilei) இந்த மாடலை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்தார்கள். கிரகங்களை கவனித்த போது அவைகளின் பாதை வட்டம் இல்லை என்று தெரிந்த போதும், இந்த இருவரும் கோப்பர்நிக்கஸின் மாடலை ஆதரித்தார்கள். இந்நிலையில், 1609இல், அரிஸ்டாட்டில் மற்றும் தாலமியின் கருத்துகளுக்கு மரண அடி விழுந்தது. அடிச்சது நம்ம கலீலியோ. அப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் இரவில் வானை நோட்டம் விட்ட கலீலியோ, பல குட்டி குட்டி நிலாக்கள் வியாழன் கிரகத்தை சுற்றுவதை கண்டார். அதாவது, எல்லா வானியல் பொருட்களும் பூமியை மட்டுமே சுற்றுவதாக சொன்ன அரிஸ்டாட்டில்  மற்றும் தாலமி கருத்து பணால். அதே வேளையில் கெப்ளரும் நம்ம கோப்பர்நிக்கஸின் மாடலை சற்றே மாற்றினார். அதாவது, கிரகங்களின் பாதை வட்டம் அல்ல நீள்வட்டம் என்று. இவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு வானை கவனித்த போது அனைத்து கிரகப் பாதைகளும் அட்டகாசமாக பொருந்தின.
நீள்வட்டப் பாதை என்று சொல்லிவிட்டாலும் கெப்ளருக்கே அதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. பரிட்சையில் ஒரு பதிலை குருட்டாம்போக்கில் அடித்துவிட்டு அது சரியாக அமைந்து மதிப்பெண்ணும் கிடைத்துவிட்ட மாணவன் போலவே சுற்றிக்கொண்டிருந்தார். சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தை அவரால் அறுதியிட்டு நியாயப்படுத்த முடியவில்லை. இதை வெகு காலம் கழித்து சமன்பாடுகளின் மூலம் அற்புதமாக விளக்கியவர் – சர் ஐசக் நியூட்டன் (Sir Issac Newton). இயற்பியலில் மிக முக்கியமான ஒரு பதிப்பான “Philosophiae Naturalis Principia Mathematica”வை நியூட்டன் 1687இல் வெளியிட்டார். இந்த லத்தீன் தலைப்பை தமிழில் மொழிபெயர்த்தால் “இயற்கைத் தத்துவத்திற்கான கணிதக் கோட்பாடுகள்”ன்னு ஒரு மாதிரி வரும். அதிகம் கஷ்டப்படாமல் தாண்டிப் போய் விடலாம். கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த அவரது பதிப்பில், நியூட்டன் ஓரு பொருளானது காலம் மற்றும் வெளியில் எப்படியெல்லாம் சுற்றலாம் என்று அனுமானித்தார். மேலும் அவ்வாறு சுற்றும் பாதையை கணிக்கத் தேவையான கடினமான கணிதத்தையும் உருவாக்கினார். (பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு : உங்க பேராசிரியர் உங்களை கணக்கால் கஷ்டப்படுத்த நியூட்டனும் காரணம் மக்களே) இது தவிர, அண்டத்திற்கும் பொதுவான ஈர்ப்பு விதியையும் வரையறுத்தார். அதன்படி, அண்டத்தில் இரண்டு பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு அவைகளின் நிறையைப் (Mass) பொருத்தும், அவைகளுக்கு இடையேயான அண்மையைப் பொருத்தும் அதிகரிக்கும். மிக அதிக நிறை கொண்ட பூமி, தக்குனூண்டு நிறை உள்ள நம்மை ஈர்க்க (புவியீர்ப்பு) இந்த விதியே காரணம். எந்தவொரு பொருளும் பூமியை நோக்கி விழ இந்த விதியே காரணம். காதல் மட்டுமே இந்த விதிக்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. எந்தப்பக்கமும் ஈர்க்கப்படலாம். ஜாக்கிரதை. (ஆப்பிள் தலையில் விழுந்ததால் தான் நியூட்டனுக்கு ஈர்ப்பு விசை பற்றிய ஞானம் வந்தது என்பது கிட்டத்தட்ட ஒரு கட்டுக்கதை. நியூட்டன் சொன்னது என்னவென்றால், “நான் ஈர்ப்பு விசை பற்றி ஒரு ஞான நிலையில்சிந்தித்தபடி அமர்ந்தேன். அப்போது ஆப்பிள் பழம் விழுந்தது.” கிட்டத்தட்ட இது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி தான்.) மேலும், பூமியை நிலா நீள்வட்டப் பாதையில் சுற்றவும், பூமி மற்றும் ஏனைய கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றவும் ஈர்ப்பே காரணம் என்பதை இந்த அவரது விதி மூலம் நிரூபித்தார்.
இதற்கிடையில், தாலமியின்  எட்டுக் கோளத்தில் அடைபட்டிருந்த பிரபஞ்சம் அதிலிருந்து விடுபட்டு எல்லையற்றதாக விரிந்தது. ஆயினும், கடைசி கோளத்தில் இருந்த நட்சத்திரங்கள் இன்னுமும்கூட நிலையாக இருந்ததால், அவை நமது சூரியனைப் போலவே என்றும், ஆனால் வெகு தொலைவில் இருப்பதாகவும் புரிந்துகொள்ளப்பட்டது.
கெப்ளருக்கு தான் கூறிய நீள்வட்டப் பாதையின் மீது ஒரு சந்தேகம் இருந்ததைப்போலவே, நியூட்டனுக்கும் தன் ஈர்ப்பு விதியின் மீது ஒரு சின்ன குழப்பம் இருந்தது. ஈர்ப்பு விதி சரியெனில், அனைத்து நட்சத்திரங்களும் ஒரு சமயம் இல்லையெனில் மறுசமயம் தங்களுக்குள் ஈர்க்கப்பட்டு முடிவில் ஒரு மையப் பகுதிக்கு ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை. அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் இடத்திலேயே டேரா போட்டு அமர்ந்திருந்தன.
ரிச்சர்ட் பென்ட்லி (Richard Bentley) அந்த காலத்து மற்றுமொரு சிந்தனையாளர். 1683லேயே B.A. பட்டமும் 1683இல் M.A. பட்டமும் (அந்த காலத்து டிகிரி) வாங்கியவர்னா பார்த்துக்கோங்களேன். அவருக்கு 1691இல் நியூட்டன் எழுதிய கடிதத்தில் தன் வாதத்தை முன்வைத்தார், “… … …
(இத்துடன் நின்றுவிட்டது என் உணர்ச்சிவசப்பட்ட மொழிபெயர்ப்பு)

Karthik Nilagiri

Related posts

2 Comment's

  1. arul says:

    அருமையான மொழி பெயற்ப்பு தொடருங்கள்….ம்

    1. மிக்க நன்றி அருள்… ஆர்வத்துடன் ஈடுபட்டது… ஏற்கனவே மொழிபெயர்ப்புகள் இருந்ததால் சில பக்கங்களுடன் நின்னுருச்சு…

Leave a Reply

Your email address will not be published.