Review

கடலும் கிழவனும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

Print Friendly, PDF & Email

கடலும் கிழவனும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: எம். சிவசுப்பிரமணியன்)
காலச்சுவடு பதிப்பகம்

கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே மீன்ஒரு மீன்பிடி கிழவன். சின்ன படகை கொண்ட அதிர்ஷ்டமற்ற கிழவன். கிட்டத்தட்ட எண்பது நாட்கள் கடலில் தூண்டில் போட்டும் எந்த மீனும் அடையாத கிழவன். மீண்டும் கடலுக்கு கிளம்புகின்றான், நம்பிக்கையோடு. மீன் பிடிப்பதற்கான அவன் போராட்டம். உடலளவிலும் மனதளவிலும் சந்திக்கும் சவால்கள். தாண்டிவரும் தடைகள். கொள்ளும் போராட்டங்கள். மன உறுதி. மீன்பிடி திறமைகள். எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் என செல்கிறது கதை. மீன் பிடிப்பது பற்றி எனக்கு தெரியாததால் பல விஷயங்கள் அனுமானித்து படிக்க வேண்டியிருந்தது. ஆயினும் அதையெல்லாம் தாண்டி கிழவனின் மன உறுதி இந்த கதையை சிறப்பாக்குகிறது. ஒரு செயலில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி அதற்கான முயற்சியே பிரதானம் என்று உணர்த்துகிறது. பயன் தாண்டிய அனுபவம் முன்னிறுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் படித்திருந்தால், மீன்பிடி பற்றி தெரிந்து படித்திருந்தால் இன்னும் சிறப்பான ஒரு வாசிப்பு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். மிக சிறிய (நூறே பக்கம்) புத்தகம். ஆனால் மிக மெதுவாகவே படித்து முடிக்க முடிந்தது.

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். (எம். சிவசுப்பிரமணியன்) 1929இல் கன்னியாகுமரி மாவட்டதில் திருப்பதிசாரம் என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளி இறுதிவரை படித்த இவர் அரசு அலுவலகத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து 1987இல் ஓய்வு பெற்றார். இலக்கிய ஆர்வலரான இவர் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பைப் பெற்றிருந்தார். படைப்பாளிகளின் நாவல்களை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பிழை திருத்திச் செம்மப்பைடுத்துவதில் ஆர்வம்மொண்டவர். ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலிருந்து பல நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். ‘அமைதியான ஒரு மாலைப் பொழுதில்’, ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’, ‘விடியலை நோக்கி’, ‘ஜானு’, ‘அன்டன் செக்கோவ் சிறுகதைகள்’, ‘ஆதியில் பெண் இருந்தாள்’ போன்றவை இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த பிற நூல்கள்.

வாசிப்பு தாண்டி இப்புத்தகத்தில் கவனிக்க தகுந்த மற்றொரு அம்சம் இப்புத்தகத்தில் நிறைந்த கோட்டோவியங்கள். The Old Man and the Sea நாவலை வெளியிட்ட Jonathan Cape பதிப்பகத்தார், நாவலுக்கான சித்திரங்கள் வரையும் பணியை Raymond Sheppard மற்றும் C.F.Tunnicliffe என்ற இரண்டு ஓவியர்களிடம் ஒப்படைத்தனர். யாருடைய சித்திரங்கள் நன்றாக வந்திருக்கிறதோ அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால், அவர்கள் இருவரின் கோட்டோவியங்களும் மிகச் சிறப்பாக இருக்கவே, அவை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த மொழிபெயர்ப்பிலும் மேற்படி இரு ஓவியர்களின் கோட்டோவியங்கள் இடம்பெறுகின்றன.

கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே மீன்

மொத்த 1000 பவுண்ட்’இல் சுமார் 500 பவுண்ட் சுறா தின்றது போக மிச்சம் இருக்கும் மார்லின்’உடன் எர்னெஸ்ட் ஹெமிங்வே, பஹாமாஸ், 1935.

ஜோ டி’குருஸ் (R. N. Joe D’Cruz) இப்புத்தகத்தில் வரும் மீன்களின் ஆங்கில பெயர்களுக்கு இணையான தமிழ்ப் பெயர்களை தந்து மேருகேற்றியுள்ளார். உதரணத்திற்கு சில கிழே உள்ளன:

 • கடமா – Squid
 • சொரி – Jelly fish
 • இறால் – Shrimp
 • பெருந்தலை ஆமை – Loggerhead
 • மத்தி – Sardine
 • ஈட்டி மீன் – Marlin
 • ஓங்கில் – Dolphin
 • சிறிய ஓங்கில் – Purpoise
 • சூரை – Tuna
 • திருக்கை மீன் – Portuguese man-of-war
 • தட்டை மூக்கன் – Broad bill

சொல்லப்போனால் இந்த தமிழ் மீன் பெயர்களே கதைக்கு சற்று அந்நிய உணர்வை எனக்கு ஏற்படுத்தி விட்டது.

ஆனால், அத்தனையும் தாண்டி இது ஒரு உண்மை அனுபவம் என்று தெரியும் போது ஒரு பிரமிப்பு ஏற்படவே செய்கிறது.

Verdict: ஒரு முறை படிக்கலாம்

கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே மீன்

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.