Experience

ஆப்பீஸ்-7-சுற்றல்

Print Friendly, PDF & Email

ஆப்பீஸ்

 சுற்றல்

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

6-பட்டறை

எவ்வளவு கரட்டாண்டியான இடமாக இருந்தாலும் அங்கும் ஏதாவது ஒரு நேரங்கடத்தி இருக்கும்.

ஆப்பீஸ் போய் வந்து, நீச்சலில் குளித்து, அழகி கண்டு களித்து, நூலகத்தில் மூழ்கி, நடுப்பூங்காவில் சுற்றிய போதும் மனம் ஆறவில்லை. எங்கள் எட்டு பேரின் மனம் மேலும் மேலும் ஏதாவதொரு அனுபவம் தேடிக்கொண்டிருண்டது. நடுப்பூங்காவில் உள்ள குளத்து நீரில் கதை பேசியபடியே கைகளால் நீரை அளவளாவிக் கொண்டிருந்தோம். செக்யூரிட்டி வந்து எச்சரித்து விட்டு போனார்.

“ஏங்க?” என்று கேட்டோம்.

பரிவுடம், “பண்ணாதீங்க தம்பிகளா. பாருங்க, இது போட்டல் காடு. பாலைவனம். இங்கு எப்படி இவ்ளோ தண்ணி’ன்னு யோசிக்க மாட்டீங்களா. சுத்திகரிக்கப்பட்ட தண்ணிப்பா இதெல்லாம். இதிலெல்லாம் கைய போடாதீங்க” என்று கோவம் குறைத்து அன்புடன் விளக்கினார்.

“சுத்திகரிக்கப்பட்ட தண்ணின்னா? கடல்லேருந்தா?”

“இல்ல தம்பிங்களா. அதுக்கும் மேல”

“புரியலியே. தெளிவா சொல்லுங்க செக்யூரிட்டி ஆப்பீஸர்”

“அட, இதெல்லாம் டாய்லெட் தண்ணிப்பா. ஆய்த்தண்ணி. சும்மா கைய கைய விட்டு ஆட்டிக்கிட்ருக்காதீங்க”

சட்டென்று நீரில் இருந்து கையை உதறி அடுத்தவர் சட்டையில் துடைத்துக் கொண்டோம். விஷால், மேலும் தெளிவாக, “எங்க டாய்லெட்’ங்களா ஆப்பீஸர்?” என்று கேட்க.

“ஆமா. உங்க டாய்லெட், உங்க பக்கத்து வீட்டு டாய்லெட் மற்றும் இங்கு உள்ள அத்தனை வீட்டு டாய்லெட் நீரும் சுத்திகரிக்கப்பட்டு இங்க வருது. போப்பா” என்று சலிப்புடன் விலகினார்.

ரஞ்சன் மட்டும் தனியே ஓடிப்போய் அந்த செக்யூரிட்டி ஆப்பீஸரிடம் ஏதோ கேட்டு வந்தான். என்னடா கேட்ட என்று நான் இரகசியமாக விசாரித்த போது நீச்சல் குளத்து நீர் பற்றிவிவரம் கேட்டுக்கொண்டதாக சொன்னான். நான் அவனை மேலும் துறுவவில்லை. ஆனால், ரஞ்சன் அதன்பின் நீச்சல் குளத்தில் குளிப்பதை நிறுத்தி விட்டன்.

‘நம்பிக்கை பச்சை’ போர் அடிக்க ஆரம்பித்தது.

சப்யா ஒரு ஐடியா கொண்டு வந்தான்.

“பக்கத்து வீடுகளில் இருக்கும் ஆண்ட்டிகளிடம் சென்று சர்வே எடுக்கலாமா? நீங்க என்ன சோப் உபயோகிக்கிறீங்க? என்ன சேனல் பாப்பீங்க? இந்த மாதிரி மேனேஜ்மெண்ட் சர்வே. கேட்டா, எங்களுக்கு பயிற்சியில் அஸய்ன்மெண்ட் தந்துருக்காங்க என்று சொல்லிரலாம். எட்டாவது பஞ்சபி மற்றும் பதினோராவது தெலுங்கு ஆண்ட்டி வீட்டில் நான் சர்வே எடுக்கிறேன். நீங்களும் உங்களுக்கு பிடிச்ச ஆண்ட்டி வீட்டில் சர்வே எடுங்க” என்று பேப்பர் பேனாவுடன் கிளம்பிவிட்டான்.

அவனை கட்டுப்படுத்தி உக்கார வைப்பதிற்குள் பெரும்பாடாகிவிட்டது. இனி பிள்ளைகள் வீடு தங்காது. எதாச்சும் பண்ணி வேலைக்கே உலை வெச்சிக்குவோம் என்று எங்களுக்கே சுயபயம் வந்துவிட்டது. ‘நம்பிக்கை பச்சை’ தாண்டி வெளியில் சுற்றுவோம் என்று முக்கால் மனதுடன் முடிவு செய்தோம்.

வழக்கம் போல முதலில் தேடியது தின்பதற்கான ஹோட்டல் தான். ‘நம்பிக்கை பச்சை’ இருக்கும் மோடிகாவ்டியில் இருந்து கம்பனி பேருந்தில் ஜாம்நகர் வருவோம். நான் மூச்சுக்கு முந்நூறு தடவை ஜாம்நகர் என்றாலும், ‘நம்பிக்கை பச்சை’ குடில்கள் அமைந்திருந்ததென்னவோ ஜாம்நகரில் இருந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் மோடிகாவ்டியில் தான். அதனால் ஒவ்வொரு முறையும் ஏழு ரூபாய் தந்து கம்பனி பேருந்தில் வரவேண்டும். ஜாம்நகர் வந்து ஹோட்டலில் வயிறார தின்னுவோம். பெரும்பாலும் வெஜ் தான். குஜராத்தில், ஒவ்வொரு ஊரிலும் சில பகுதிகளை தாண்டி நான்-வெஜ் சுதந்திரமாக கிடைப்பதில்லை. அப்பொழுது எங்களுக்கு ஜாம்நகர் சரியாக தெரியாததால் காய்கறி தின்றே திருப்தியடைந்தோம். விஷால் மட்டும் பொறுக்கமாட்டாமல் ஒரு முறை மெனு புத்தகத்தை திருடி கொண்டுவந்துவிட்டான். வெறும் ஒரு பக்க கார்ட் அல்ல அந்த மெனு. A4 அளவில் லேமினேட் செய்யப்பட்ட இருபது பக்கங்கள் கொண்ட பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் அந்த மெனு கார்ட். அந்த மெனு கார்ட்’ல் நான்-வெஜ், சிக்கன், மட்டன், மீன் ஆகியவை விலைப்பட்டியலோடு இருக்கும். ஆனால், ஹோட்டலில் பரிமாற மாட்டார்கள். மெனுவில் போட்டு ஊரையா ஏம்மாத்துகிறாய், உனக்கெல்லாம் மெனு கார்ட் ஒரு கேடா என்று கோவப்பட்டு அதை திருடி கொண்டுவந்து விட்டன். தன் அறையில், மெத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு அடுத்த சில நாட்கள் அந்த நான்-வெஜ் மெனு பார்த்தே திருப்தி பட்டுக்கொண்டிருந்தான் விஷால். ஆர்வம் தாளாத போது நானும் அவ்வப்போது சென்று ஆசைதீர அந்த பட்டியலை பார்த்து மனஷாந்தி அடைவேன்.

இரண்டாவதாக நாங்கள் தேடியது திரையரங்கம். அன்றைய தேதிக்கு ஜாம்நகரில் சற்று ரிச்’சான திரையரங்கம் என்றால் அது ‘மெஹுல்’ தான். மற்ற திரையரங்கள் விட அங்கு குஜ்ஜு பெண்கள் அதிகமாக வருவதாக செவிவழி செய்தியறிந்தோம். வேறு வழியின்றி நாங்கள் அங்கு பார்த்த படம் ‘ஒண்ணரை டன் சிங்க’த்தின் முன்னோடி சன்னி தியோலின் ‘தி ஹீரோ: ஒரு உளவாளியின் காதல் கதை (The Hero: Love Story of a Spy)’. நீட்டாக சவரம் செய்து கொண்டு, கருப்பு கலர் தலைமயிருடன் இந்தியாவில் ப்ரீதி ஜிண்டா’வுடன் ஒரு டூயட் (இங்கே சொடுக்கவும்). பின் பாதியில், பழுப்பு கலர் தலைமயிர் மற்றும் ஆட்டுக் குறுந்தாடியுடன் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு கனடாவில் பிரியங்கா சோப்ரா’வுடன் ஒரு டூயட் (இங்கே சொடுக்கவும்). கிளைமாக்ஸ் வரை பாகிஸ்தானியர்களை தொடர்ச்சியாக நொங்கி நூலெடுத்து, கெட்ட இந்திய துரோகிகளை அழித்து, சதிகளை முறியடித்து, இயற்கை பேரிடர்கள் மீறி சண்டையிட்டு தாய்த் திருநாடாம் ‘பாரத் மாதா கீ ஜே’ இந்தியாவை காப்பாற்றும் ஒரு தேசபக்தி படம். வேறு வழியில்லாமல் இந்த எழவை மூன்று முறை திரையரங்கிலேயே பார்த்தோம். படம் பார்க்க செல்வதோ, படம் பார்ப்பதோ அல்லது அங்கு வாங்கி தின்பதோ சுவாரசியம் இல்லை. மெஹுல்’லில் இருந்து திரும்பி வருவதுதான் ஜாலியான பயணம். போகும்போது கம்பெனி பேருந்தில் சென்றுவிடுவோம். படம் முடிந்து வெளியே வரும்போது மணி பனிரெண்டரை தாண்டிவிடும். ஒருமுறை ‘சக்கடா’ எனப்படும் மீன்பாடி வகை வண்டியில் திரும்பினோம். ஒருமுறை லாரியில் திரும்பினோம். ஒருமுறை முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரமும் நள்ளிரவில் நடந்தே வரத் துணிந்து, ஐந்து கிலோமீட்டர் முடிவதற்குள் நாக்கு தள்ளி சரக்கு லாரி பிடித்து வந்து சேர்ந்தோம்.

நாங்கள் மூன்றாவதாக சென்ற இடம், ஒரு கடற்கரை. அதற்கு பெயர், பெக்டெல் பீச் (Bechtel beach). அதற்கு இந்த பெயர் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. நம்பிக்கை நிறுவனம் ஒரு மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை கட்டியிருக்கிறது அல்லவா. அது காட்டப்படும் போது அதன் கட்டுமானத்தை மேற்பார்வை இட்டு மொத்தமும் வழிநடத்திச் சென்றது ஒரு வெளிநாட்டு நிறுவனம் தான். அப்படி எண்ணை சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது இடையே ஒரு மிகப்பெரும் புயல் கரை கடந்தது. பாதி கட்டப்பட்டிருந்த ஆலை ‘புயலில் சிக்கிய ஆலை’ போல் கிழிந்து தொங்கியது. நம்பிக்கை நிறுவன முதலாளி வெளிநாட்டு நிறுவன மேலாளர்களை அழைத்து பேசினார்.

“புயலுக்கு அப்புறமான ஆலையை பார்த்தீர்களா..?”

“பார்த்தோம். மொத்தமாக நாசமாகி இருக்கிறது. ஒண்ணும் தேறாது”

இதை சொல்ல நீங்க எதுக்கு என்ற மனநிலையில் முதலாளி கேட்டார், “புயலுக்கு முந்தைய நிலையை கொண்டுவர எத்தனை நாளாகும்?”

வெளிநாட்டு மேலாளர்கள், “நாங்க வார விடுமுறையின்றி ரத்தமாய் உழைத்தாலும் இதுவரையானதை திரும்ப நிர்மாணிக்க குறைந்த பட்சம் ஆறு முதல் ஒன்பது மாதம் ஆகும்.”

“உற்பத்தி தள்ளிப்போனால் லாபமும் தள்ளிப்போகுமே”

“அதுக்கு நாம என்ன ஸார் பண்ண முடியும்? புயல் இறைவனின் விதி. நாம் அதன் தீர்ப்பை தலைவணங்கித்தான் ஆகவேண்டும்”

யார்ரா இவன், படிச்ச மேனேஜர் மாதிரியா பேசுறான் என்று வெறுத்தபடி தாடையை சொறிந்தபடி நம் நாட்டு பொறியாளர்களை பார்த்தார்.

“தலைவரே. கெடக்குறானுங்க அவனுங்க. ஒரு மாசம் டைம் கொடுங்க. அதிகாரம் மற்றும் தேவையான பணத்தை தைரியமா கொடுங்க. நாங்க இதை நிமிர்த்திக் காட்டுறோம்,” என்று நம்பிக்கை தந்தனர்.

“சரிடாப்பா. இது நம் சொத்து. நம் உழைப்பு. நாமே இதை மறு நிர்மாணிப்போம். இனி பொறியாளர்கள் நீங்க தான் ராஜா. கிளப்புங்கள். இந்த வெளிநாட்டு மேலாளர்கள் இங்கு வந்து உங்க வேலையை தொந்தரவு செய்யாமல் நான் பார்த்துக்கிறேன்” என்று இந்திய பொறியாளர்களுக்கு முழு சுதந்திரம் தந்தார்.

கிங்கரர்கள் நம் இந்திய பொறியாளர்கள். ஒரு மாதம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. வெறும் இருபத்தெட்டே நாளில் ஆலையை பழையபடி கட்டி நிமிர்த்தினார்.

இதற்கிடையே, வெளிநாட்டு மேலாளர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறை அளித்தார் நம்ம முதலாளி. அந்த மேலாளர்கள் அந்த ஒரு மாதத்தை இந்த கடற்கரையில் கவலையின்றி கழித்தனர். இந்த தொடர் முழுக்க முழுக்க கற்பனை கதை என்பதால் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரை நான் இங்கு சொல்ல முடியாது. ஆனால், அந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கடற்கரை ‘பெக்டெல் பீச்’ என்றழைக்கப்படுகிறது. அந்த கடற்கரைக்கு தான் நாங்கள் மூன்றாவதாக சென்றோம். யாருமற்ற கடற்கரையில் அட்டகாசமாக ஒரு நாள் முழுவதும் கழித்தோம். திரும்பி வரும்போது கிரீஷ்’ன் கைக்கடிகாரம் தொலைந்து விட்டிருந்தது. “டேய். ஆயிரத்தி நானூறு ரூவாடா. போய்த் தேடலாம்டா” என்று கெஞ்ச, திரும்பிப் போய் பார்த்தோம். கடிகாரம் ஒரு கல்லின் மேல் வைத்த இடத்திலேயே இருந்தது. யாருமற்ற வனாந்திரத்தில் அது திரும்ப கிடைத்தது ஆச்சரியமே இல்லை. கைக்கடிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் கிரீஷ் அன்றிரவு எங்களுக்கு அறநூறு ரூபாயில் ட்ரீட் தந்தான்.

நாங்கள் ஊர் சுற்றுவதை பார்த்து திராவிட மன்றும் ஆரிய நண்பர்களும் தம்தம் மாநில தோழமைகளுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். நாங்கள் செல்லும் இடத்திற்கு இவர்கள் அடுத்த நாள் செல்வார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் முன்னோடியாய் திகழ்ந்தது எனக்குப் பெருமை.

பின்பு துவாரகா மற்றும் பேட் துவாரகா ஆகிய பக்தி தளங்களுக்கும் சென்றோம். ஆனால் அங்கு கோவில்கள் பராமரிப்பற்று பணம்கொழிக்கும் இடமாக இருந்தது. சோம்நாத் போகவே இல்லை. மற்ற நட்புக்குழுக்கள் மேற்படி பயணங்கள் மேற்கொள்ள நாங்கள் பழையபடி நீச்சல், நூலகம், சாப்பாடு, அரட்டை என்று செட்டில் ஆனோம்.

சுற்றல் போதும். கொஞ்சம் ஆப்பீஸில் நடந்த அனுபவங்களையும் பார்ப்போம். அப்படியே முதல் விக்கெட் விழுந்த கதையும் பார்ப்போம். அதுவும் எங்கள் நட்பு வட்டத்திலேயே.

8-சம்பவம்

Karthik Nilagiri

Related posts

4 Comment's

  1. V Natarajan says:

    Bechtel… ROFL

    1. அதனாலத்தான் சொல்கிறேன், ”இந்த தொடர் முழுக்க முழுக்க கற்பனை கதை என்பதால் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரை நான் இங்கு சொல்ல முடியாது. ஆனால், அந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கடற்கரை ‘பெக்டெல் பீச்’ என்றழைக்கப்படுகிறது.”

Leave a Reply

Your email address will not be published.