Experience

ஆப்பீஸ்-6-பட்டறை

Print Friendly, PDF & Email

ஆப்பீஸ்

பட்டறை

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

5-மொட்டை

மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது என்றவுடன் நான் ஏதோ தலைகீழாக நின்று டைவ் அடித்தது மாதிரி டெர்ரரா எதிர்பார்த்திருப்பீர்கள் போல. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நர்சரி பிள்ளைகள் பள்ளிக்கு போவது போலத்தான் அந்த இரண்டு மாசம் ஜாம்நகர் பயற்சி அரங்கத்தில் சுற்றித் திரிந்தோம். அந்த அரங்கம் தான் எங்கள் பால பட்டறை. ஒண்ணும் பெருசா பண்ணாம, வேளா வேளைக்கு டீ குடிச்சிட்டு, லஞ்ச் சாப்டுட்டு, கேள்விகள் பல கேட்டு, பெரியவா எதாவது சொன்னா ‘வாவ்’ என்று வாய் குவித்து, இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போக அந்த இரண்டு மாத பால பட்டறை சொல்லிக்கொடுத்தது.

காலைல வீட்ல எந்திருச்சு அரக்க பறக்க தயாராகி கிளம்புவோம். கொஞ்சம் தாமதமா போனாலும் pantryல ஆம்லேட் கிடைக்காது. வெறும் ரொட்டிய ஜாம் தடவி அசை போட்டுட்டு வரவேண்டியிருக்கும். எல்லாரும் தயாராகும்போது நாலு பஸ் வந்து நின்றிருக்கும். ‘நம்பிக்கை பச்சை’யில் இருக்கும் வீட்டில் இருந்து எதிரே இருக்கும் தொழிற்சாலையில் இருக்கும் பட்டறைக்கு செல்ல. எந்த பெண் எந்த பேருந்தில் ஏறுகிறாள் என்பதைப் பொறுத்து மக்கள் வெள்ளம் அலை மோதும். ஒரு அழகான பெண் ஏறிய பேருந்தில் இன்னொரு அழகான பெண் பொதுவாக ஏறுவதில்லை. டிசைன் அப்படி. அதனால் இயற்கையாகவே பேருந்தில் கூட்டம் ஒரு மாதிரி கட்டுக்குள் இருந்தது.

அடிக்கிற வெயிலுக்கு கப்புன்னு பட்டறையில் போய் ஒடுங்கிக் கொள்வோம். வழக்கம் போல, முன் வரிசைகளில் எவனும் உட்கார மாட்டான்கள். ராகவன் என்றொரு படிப்பாளி இருந்தான். அவன் முன் வரிசைகளில் வலது ஓரம் உட்காருவான். தமிழ் பூணூலன். கருவியியல் பொறியாளன், என்னைப்போலவே. நிறைய கேள்வி கேட்பான், ‘நண்பன்’ ஸ்ரீவத்ஸன் கணக்காய். நான் இடது பக்கம் உட்கார்ந்திருப்பேன். கேள்வி எதுவும் கேட்கமாட்டேன். எதாவது ஒரு அழகி என் பார்வையில் படும்படி உட்கார்ந்து கொள்வேன். மேடைப் பேச்சாளரை கவனிப்பதே கிடையாது. ஆனால், மேடையில் இருப்பவர் கேள்வி ஏதும் கேட்டல் விடை தெரிந்தவன் போல் கை உயர்த்துவேன். என்னை நிராகரித்து வேறு யாரவது ஒருவரை பிடித்து நோண்டுவார்கள். பதில் என்பதைவிட பதில் சொல்லத்தெரியாத ஒருவரை பிடித்து உயிரெடுக்கும் உளவியல். மொட்டை போட்டது ஒரு பயனாக வேறு அமைந்தது எனக்கு. வட இந்தியாவில் குடும்ப மரணத்தில் மொட்டை போடுவது வழக்கம் போல. அதனால் என் மொட்டை பார்த்து கரிசனம் கொண்டு என்னை பெரிதாக எந்த வாத்தியும் தொந்தரவு செய்வதில்லை. மொட்டையினால் ஆய பயன் அதுமட்டுமல்ல. அதை விட சுவாரஸ்யமான ஒரு உளவியல் நாடகம் அரங்கேறியது. பெண்கள் என்னிடம் சற்று உரிமையோடு பயமின்றி பேச பழக ஆரம்பித்தனர். தென்னிந்தியப் பெண்கள் உரிமையோடு பழகக் காரணம் நான் அப்பொழுது மொட்டை போட்டு சுமாராக தெரிந்ததுதான். அது என்னமோ தெரியல, அழகான ஆண்களை பெண்கள் தூரத்தில் இருந்து ரசிக்கிறார்கள்; பட், சற்று சுமாரான ஆண்களிடம் தைரியமாக உரிமையோடு பழகுகிறார்கள். இது, ஆண்களுக்கும் கொஞ்சம் பொருந்தும். இன்னொருவர் சைட் அடிக்க வாய்ப்புள்ள மிக மிக அழகான பெண்ணை துணையாக கொள்ள ஆண்கள் சற்று யோசிக்கின்றனர். அதே, காதலி அல்லது நண்பி என்றால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ப்ளடி மேல் சாவனிஸ்ட். போகட்டும். வட இந்திய பெண்களும் என்னிடம் அனுதாபத்தோடும் கரிசனத்தோடும் பேசினார். நாசூக்கு கருதி ‘யார் மறைவுக்கு மொட்டை போட்டாய்?’ என்று அவர்களும் கேட்கவில்லை. வலிய வர்ற வாய்ப்பை எதுக்கு விடுவானேன் என்று நானும் என் மொட்டை புராணத்தை சொல்லவில்லை.

நாங்கள் ஒரு எட்டு பேர் இருந்தோம். நான், கபில், ரஞ்சன், சப்யா, அலோக், விஷால், கிரிஷ் மற்றும் ஒருவன் (ச்சே, பேர் சட்டென்று ஞாபகம் வரவில்லை. வந்தவுடன் இதை அப்டேட் செய்யணும்). சம்பந்தா சம்பந்தம் இல்லாத கோஷ்டி. ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் சுமாரான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், சப்யா தவிர. நம்பிக்கை நிறுவனத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவரின் மகன் சப்யா. மற்றொரு ஒற்றுமை அனைவரும் கல்லூரி முடித்து ஒரு வருடம் நாயாய் வேலை தேடி, பின் ஒரு வருடமேனும் ஒரு சின்ன நிறுவனத்தில் கழுதையாய் குப்பை கொட்டியவர்கள். அனைவருக்கும் வீட்டின் கஷ்டம் புரிந்து வேலைக்கு வந்தவர்கள். மேற்கொண்டு படிக்க ஆசை மற்றும் திறமை இருந்தும் போதுமான வசதியின்றி குடும்பத்தை காப்பாற்ற வேலையில் இறங்கியவர்கள். ஓரளவுக்கு எல்லோருமே கொஞ்சம் மனதளவில் முதிர்ச்சியானவர்கள். அவர்களுடனான நட்பு அருமையாய் கழிந்தது. நட்புக்குள் பணம் பார்க்காது செலவு செய்தோம். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் மற்றும் வட இந்தியர்கள் (இதில் அவர்களுக்குள் பிரிவினையே இல்லை) என்று சுற்றியபோது நாங்கள் எட்டுபேர் நண்பர்களாய் சுற்றினோம்.

சூரியன் மறையத் தொடங்கியதும் மீண்டும் அதே நாலு பஸ். ‘நம்பிக்கை பச்சை’ வீட்டில் இறக்கி விடப்படுவோம். மீண்டும் டீ மற்றும் நொறுக்குத்தீனி. பின் எட்டுபேரும் கிளம்பி துண்டு டவுசர் எடுத்துக்கொண்டு நீச்சல் குளத்திற்கு செல்வோம். மிகப்பெரிய சுத்தமான நீச்சல் குளம். எட்டுபேரும் ஆசை தீர ஒரு மணிநேரம் குளிப்போம். ரஞ்சன் மட்டும் நீள்வட்டத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே இருப்பான். நன்றாக பழகிக்கொண்டான். மற்ற ஆறு பேரும் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கும் அண்ணியார்கள் மற்றும் அக்காமார்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் அண்ணியார்கள் மற்றும் அக்காமார்கள் சொல்லிக்கொடுக்கும் குழந்தைகளிடம் நீச்சல் கற்றுக்கொண்டிருப்பேன். நீச்சல் கற்றுக்கொண்டே பேச அருமையான வாய்ப்பு, குழந்தைகளிடம். குளத்தை பராமரிக்க சுபோத் என்ற பெங்காலி பயிற்சியாளர் இருந்தார். அவரை நட்பு கொண்டு குளம் கதவடைக்கும் நேரம் தாண்டியும் சிறிது நேரம் அதிகமாகவே குளத்தை அனுபவித்தோம். இது மாலை ஏழு முதல் எட்டு மணி அல்லது எட்டரை வரை நடக்கும்.

பின் அங்கிருந்து முதல் மாடியில் இருந்த நூலகத்திற்கு செல்வோம். அத்தனை அற்புதமான நூல் சேகரிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, மராட்டி, கன்னடம், ஒரியா, குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கும். கபில் மராட்டி நூல் ஒன்றை எடுத்துக் கொள்வான். விஷால் ஹிந்தி நூல். நான் தமிழ் எடுத்துக்கொள்வேன். மற்றவர்கள் எங்களோடு துணை வருவார்கள். நாளிதழ், சிற்றிதழ் மேய்ந்து கொண்டிருப்பார்கள். சாண்டில்யன், சோ, சுஜாதா, பாலகுமாரன், கல்கி போன்றோரின் நூல்கள் படித்தேன். வேறு பல ஆசிரியர்கள் நூல்கள் இருந்தாலும் எனக்கு அவர்கள் அறிமுகம் இல்லை. ஒன்பது மணிவாக்கில், நூலகம் மூடும் வேளையில் புத்தகத்தை எடுத்தக்கொண்டு உணவருந்த செல்வோம். நீச்சல் தந்த களைப்பில் நான் கிட்டத்தட்ட இரண்டு மீல்ஸ் சாப்பிடுவேன். என் வாழ்வில் மச்சினி வீட்டு விருந்துகளில் கூட இவ்வளவு அதிகம் சாப்பிட்ட ஞாபகம் இல்லை. நீச்சலுக்கு நன்றி.

பின், ‘சென்ட்ரல் பார்க்’ எனப்படும் நடுப் பூங்காவில் அமர்ந்து ஊர்பட்ட கதையளப்போம். பெண்களும் வருவார்கள். நாங்கள் தூரத்தில் இருந்து பார்த்து புன்னகை புரிவதோடு சரி. கொஞ்சம் தள்ளியே இருந்தோம். வட இந்தியப் பெண்கள் ஜீன்ஸ் டீ-ஷர்ட்’ல் வருவார்கள். சமயங்களில் முக்கா பேண்ட் கூட போட்டு வருவார்கள். நம்ம பசங்க காஷுவல் என்று சொல்லி கைலி கட்டி திரிய ஆரம்பிக்க, நம்மூர் பெண்கள் நைட்டியுடன் பார்க்கில் உலா வர துவங்கினர். சேலையிலோ அல்லது பாவாடை தாவணியிலோ ஒருவரையும் பார்க்க முடியாத வருத்தம் இன்று வரை எனக்கு உண்டு. ஊர் உலக நியாயம் பேசி களைத்துப் போய் வீட்டிற்கு படுக்கப் போய்விடுவோம். அடுத்த நாள் அதே சுழற்சி. ஆனாலும் அலுக்காத சுழற்சி.

அரங்கத்தில் நான் கற்றுக் கொண்டதைவிட நீச்சல் குளத்தில், நூலகத்தில், இரவு உணவு மற்றும் பூங்கா சம்பாஷணைகளில் நான் அதிகம் கற்றேன். இவையே எனது பட்டறையாக அமைந்தது.

‘நம்பிக்கை பச்சை’ தாண்டி வெளியேயும் சுற்ற ஆரம்பித்தோம்.

7-சுற்றல்

Karthik Nilagiri

Related posts