Experience

ஆப்பீஸ்-3-நிவாரணக் கடிதம்

Print Friendly, PDF & Email

ஆப்பீஸ்

நிவாரணக் கடிதம்

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

2-கண்டேன் ஜாம்நகர்

கிட்டத்தட்ட மொத்தம் 192 பேர் என்று ஞாபகம். என்னைப் போலவே மனித வள அதிகாரியிடம் பொறுப்பாக விசாரித்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து இணைந்தவர்கள் ஒரு 160 பேர் இருப்பார்கள். பணி நியமனக் கடிதம் தாமதமாகக் கிடைக்கப்பெற்று, ஊரெல்லாம் சுத்தி, தட்டித் தடுமாறி தேடி வாரம் பத்து நாள் தாமதமாக வந்து சேர்ந்தவர்கள் ஒரு 10 பேர் இருப்பார்கள். ஒரு பெண் கிட்டத்தட்ட இருபது நாள் கழித்து வந்து சேர்ந்தாள். இவ்வளவு தாமதமாக வந்தவரை கம்பெனி ஏற்றுக் கொண்டதில் எனக்கு எந்தவித வருத்தமோ கோபமோ இல்லை. ஏனென்றால் நான் ஜாம்நகர் ‘நம்பிக்கை பச்சை’ குடியிருப்பு நீச்சல் குளத்தில் களமாடியபோது, ‘அக்னி நட்சத்திர’ நிரோஷாவாய் குளத்தில் கரை கண்டவள் அவள் மட்டுமே. டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாப் தேவதை அவள் என்பது மேலதிக (மற்றும் கீழதிக + இடைமெலி) தகவல். ஒரு இருபது பேர் நிறுவனம் முதலில் அறிவுறுத்தியபடி மார்ச் இருபதாம் தேதியே வந்து சேர்ந்துவிட்டிருந்தனர். நான் விசாரித்து கெஞ்சிக் கேட்டபோதும் வந்து சேர்ந்துகொள்ள அனுமதிக்காத நிர்வாகம், அந்த இருபது பேர் மார்ச் இருபதாம் தேதி வந்து நின்றபோது எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அவர்களை இருபதாம் தேதியிலேயே பணியிலமர்த்தி பத்து நாள் சம்பளம் வேறு தந்தது. கார்பரேட் மீதான முதல் முத்திரை இப்படி அமைந்தது. இவை இப்படிதான் இயங்கும் என்று பொட்டில் அறைந்து சொன்னது.

அனைவரும் அவரவர்க்கு அளிக்கப்பட வீட்டில் தஞ்சமடைந்தோம். என் வீட்டு தோழன் கபில் என்ற மராத்திக்காரன். நல்லவன். அமைதியான ஆனால் உறுதியான பையன். இந்த 192 பேரில் கிட்டத்தட்ட ஒரு 90 பேர் தமிழர்கள். ஒரு 50 பேர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா முதலிய தென்னாட்டவர்கள். மீதம் 50 பேர் மட்டுமே வடக்கத்தியவர்கள். தமிழ்நாடு ஊரெல்லாம் பொறியியல் கல்லூரி ஆரம்பிச்சது வீணாப் போகல. வீட்டு தோழனை தேர்ந்தெடுக்கும் போது தங்கள் மொழிக்காரனை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார்கள். பெண்கள் இதில் விதிவிலக்கு. வேற்று மொழிப் பெண்களை வீட்டுத்தோழியாக தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியதாக எனக்குப் பட்டது. அது என் கண்ணுக்குப் பட்ட ஒரு தோற்றப்பிழையாகவும் இருக்கலாம். பெண்களை அவ்வளவாக நான் கவனிப்பவனில்லை பாருங்கள். அப்புறம், சில ஆண்கள் பெண்களை வீட்டுத் தோழியாகவும், சில பெண்கள் ஆண்களை வீட்டுத் தோழனாகவும் தேர்வு செய்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், நிறுவனம் மிக கவனமாக அதை தவிர்த்துவிட்டது. அந்த காலத்திலேயே எங்கள் மீது கலாச்சார காவல் வன்முறை இவ்வாறு கட்டவிழ்த்துவிடப்பட்டது.

நிவாரணக் கடிதம் relieving letter மனித வள அதிகாரி பணி நியமனக் கடிதம் offer appointment தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா surname குடும்ப பெயர்ஒரு நல்ல நாளில் நிறுவனத்துக்கு செல்ல ஆரம்பித்தோம். எங்களை அடையாளப்படுத்தும் பணி ஆரம்பமானது. சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஒரு எட்டு இலக்க எண் தந்தார்கள். அதுதான் எங்கள் அடையாளமாக மாறியது. இரண்டாவது அடையாளம் மின்னஞ்சல். இது இரண்டுமற்று நாங்கள் சுயமற்றவர்கள். சம்பிரதாய அறிமுகம் நடந்தது. பெண்கள் அறிமுகம் செய்துகொண்ட போது அவர்கள் பெயர்களை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு சிறிது நேரத்திலேயே அவர்களை நினைவில் செதுக்கி பெயர்களை மறந்தோம். பின் ஒரு பேப்பர் கட்டு தந்தார்கள். எப்படியும் ஐம்பது தாள்கள் இருக்கும். ஏதோ வழிகாட்டியாக இருக்கும் என்று நினைத்து திறந்தால், அது மொத்தமாக படிவங்கள். பெயர், படிப்பு, தகுதி, அனுபவம், எடை, உயரம், வீட்டு முகவரி, பெற்றோர் தகவல்கள் என அனைத்தயும் அறியும் ஒரு தந்திரம். நிரப்ப ஆரம்பித்தோம், எங்கே எதை எப்படி நிரப்ப வேண்டுமென்றே தெரியாமல். பெண் தோழிகளுடன் கடலை போட பலருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தமிழர்களுக்கு ஒரு வினோத பிரச்சனை. அவர்கள் ஸர்நேம் எனப்படும் குடும்ப பெயர் என்ற இடத்தில் என்ன எழுதவேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். பெரியார் செய்த செயலால் பலர் வெறும் பெயர் கொண்டிருந்தனர், ஜாதி பெயர் இணைக்காமல். வட இந்தியா எங்கள் ஜாதி பெயரை, குடும்பப் பெயர் என்றும் சொல்லலாம், தோண்டி எடுத்தது. அதுநாள் வரை இனிஷியல் பயன்படுத்திக்கொண்டிருந்த நான் அப்பொழுதுதான் கார்த்திக் என்பதன் பின் ‘நீலகிரி’ சேர்த்துக் கொண்டேன். இப்பொழுது என் அடையாளம் ‘கார்த்திக் நீலகிரி’. அப்படி அந்தப் படிவங்களை நிரப்பும்போது நான் உளறிக்கொட்டிய உண்மை ஒரு மாதத்திற்கு மேல் என் உயிரெடுத்தது.

படிவம் நிரப்பும் போது ‘முன்னனுபவம்’ என்ற கட்டத்தில் பெட்ரோல் பங்க் அனுபவம் பற்றி எழுதிவிட்டேன். பத்து மாத அனுபவம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது அனுபவத்தில் கணக்கெடுத்துக்கொள்ளப்பட்டால் என் பதவி உயர்வு சீக்கிரம் பரிசீலிக்கப்பட்டு அதி விரைவிலேயே ஒரு உயரதிகாரி ஆகிவிடுவேன் என்ற நப்பாசை. ஆனால், ஐம்பது தாள் படிவத்தில் அந்த என் அறிவிப்பை மட்டும் சரியாகப் பிடித்தார் மனித வள அதிகாரி.

“முன்அனுபவம் இருக்கு போல?”

நான் பெருமையுடன், “ஆமா ஸார்”

“எங்க?”

“மும்பையில். ஒரு பெட்ரோல் பங்க்’ல்”

“எத்தனை வருட அனுபவம் இருக்கும்?”

“வருடம் எல்லாம் இல்ல ஸார். பத்து மாதம் மட்டுமே. படிவத்தில் குறிப்பிட்டுருப்பேனே”

“ம்ம் ம்ம். அதைப் பார்த்துத் தான் கேட்கிறேன்”

“ஆனால், அந்த பத்து மாதத்தில் நிறைய கற்றேன். பல வருடத்திற்கான அனுபவம் படித்தேன்”

“சரி, பழைய நிறுவனத்தில் இருந்து ஏதும் நிவாரணக் கடிதம் தந்தார்களா? ஐ மீன் ரிலீவிங் லெட்டர்?”

“ஆஃபர் லெட்டர் இருக்கு. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் இருக்கு. இரண்டும் இணைத்திருக்கிறேனே ஸார்”

“அதெல்லாம் சரி, நிவாரணக் கடிதம் இருக்கா?”

நான் திருதிருவென முழித்தேன். நான் தான் பழைய பெட்ரோல் பங்க்’ல் இருந்து ஓடிவந்தவன் ஆயிற்றே. தடுமாறிக் கூறினேன், “இருக்காதுன்னு நினைக்கிறேன் ஸார்”

“அதில்லாம இங்க சேர்த்துக்க முடியாது கார்த்திக். நீங்கள் திரும்பிப் போக வேண்டியிருக்கும்”

எனக்கு படபடப்பாகியது, “அந்த அனுபவம் வேண்டுமானால் எடுத்து விடுங்களேன். எப்படியும் நான் இங்கு பயிற்சி பெறப் போகிறேனே. அந்த அனுபவம் எனக்கு வேண்டாமே”

“அது முடியாது தம்பி. நீ படிவத்தில் குறிப்பிட்டது உண்மை. அதை மாற்றுவது தவறு. நீ நிவாரணக் கடிதம் பெற்று வா”

“என்ன ஸார். வேறு வழி இல்லியா?”

“இங்கே பணியில் சேர வேண்டுமெனில் நிவாரணக் கடிதம் கொண்டுவா” என்று எனக்கு ஆப்பு வைத்துவிட்டு அவர் அடுத்த படிவத்தை பார்க்க சென்றுவிட்டார்.

என்னடா இது. இப்படி பயம் காட்டுறாங்க. சரி எப்படியாவது அந்த நிவாரணக் கடிதம் பெற்றுவிடுவோம் என்று எண்ணினேன்.

அடுத்த ஒரு மாத தூக்கம் போச்சு.

4-சோதனை

Karthik Nilagiri

Related posts

6 Comment's

  1. Natarajan says:

    Lively humor laced narration…. Waiting for 4th episode

    1. நன்றி அண்ணா… விடாம தொடர்ந்து எழுதணும்… ஆனாலும், கோர்வையாக போவது கொஞ்சம் bore அடித்து விடலாம்… தாவி தாவி அங்கிங்க எழுத ஆசை… தொடர்ச்சி புரியாமல் போய்விடக்கூடாது என்ற பயமும் இருக்கு…

  2. sankaranarayanan says:

    nivaranam na, puyal, vella nivaranam mattum thaan kelvi pattirukkom, relieving nu vera oru twist irukka?

    1. எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்… விடக்கூடாது… முடிஞ்சளவுக்கு நாமளும் தமிழை வளக்கணும்’ல…

Leave a Reply

Your email address will not be published.