Moon

நிலவைத் தேடி – GO (0005)

Print Friendly, PDF & Email

(இதற்கு முன்…)

ஜூன் 12, 1969. மதியம் 12:30.

ஏவல் ஆணைக்குக் காத்திருக்கும் ராக்கெட்

அப்போலோ 11 – சாட்டர்ன் V ஏவுதளத்தில் நிலை கொண்டு 23 நாட்கள் ஆகிவிட்டிருந்தது.

அப்போலோவின் திட்ட இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ் (Lt. Gen. Samuel C. Phillips), வாஷிங்டன் D.C.’யில் அமைந்துள்ள நாசா’வின் தலைமையகத்தில் ஒரு உயர்மட்ட சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு டஜன் நிர்வாகிகள் அந்த அறையில் குழுமியிருந்தனர். மேலும், நாடெங்கிலுமிருந்து இரண்டு டஜன் நிர்வாகிகள் டெலிபோன் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். மட்டுமல்லாது, பல முக்கிய பெரிய நிறுவனங்களின் (McDonnell Douglas, GE, AC Electronics, MIT, IBM, Boeing, Martin Marietta, North Americal Rockwell, Philco-Ford, Chrysler, United Aircraft, மற்றும் Grumman) பிரதிநிதிகள் நடக்கவிருந்த உரையாடலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இந்த சந்திப்பில் இரண்டு கேள்விகள் விவாதிக்கப்பட இருந்தது: ஜூலை மாதத்தில் அப்போலோ 11 விண்ணில் செலுத்தப்படுமா? அவ்வாறு செலுத்தப்பட்டால், அது நிலவில் மனிதனை இறக்க முயற்சிக்குமா?

இது ஒரு மிக முக்கியமான விவாதம். ஏனெனில் ஏவப்படும் நாளன்று வானம் மேகமூட்டமில்லாமல் இருக்க வேண்டும். நிலவு நமக்கு அருகில் இருக்க வேண்டும். வானிலை, தட்பவெப்பம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அனைவரும் தாயாராக இருக்க வேண்டும். அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு சாதகமான நிலையில் இருக்க வேண்டும். முக்கியமாக, நாள் நட்சத்திரம் நன்றாக இருக்க வேண்டும். எல்லாம் தயாரான பின்பு இந்த கடைசி கட்டத்தில் சொதப்பிவிடக் கூடாதல்லவா.

ஜெனரல் ஸாம் பிலிப்ஸ், “முதலில் ஹண்ட்ஸ்வில்லே’வில் (Huntsville) இருக்கும் லீ ஜேம்ஸ் (Lee James) ராக்கெட்’இன் தயார் நிலை பற்றிக் கூறட்டும். இரண்டாவதாக, ராக்கெட்’இன் பாகங்கள் பற்றியும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதைப் பற்றியும் ஜார்ஜ் லோ (George Low) கூறட்டும். மூன்றாவதாக கேப்’இல் (Cape) இருக்கும் ரோக்கோ பெட்ரோன் (Rocco Petrone) ராக்கெட் ஏவல் பணிகள் எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைப் பற்றியும், பின் ஜீன் க்ரான்ஸ் (Gene Kranz) பயணத்தின் தயார் நிலை பற்றியும், இறுதியாக கேப்’இல் (Cape) இருக்கும் டேக் ஸ்லேய்டன் (Deke Slayton) நமது விண்வெளி வீரர்கள் பற்றியும் அவர்களது பயற்சி பற்றியும் கூறட்டும்.”

சாட்டர்ன் V மேலாளர் லீ ஜேம்ஸ், “இன்று காலை எட்டு மணிக்கு நாங்கள் ஒவ்வொரு குழுவாக சந்தித்து பேசினோம். முந்திய பயணங்களில் கிடைத்த அனுபவங்களால் நாம் ஒரு நல்ல நிலையிலேயே இருப்பதாக உணர்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஜூலை தேதி எங்களுக்கு ஓகே. ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டால் தான் ஏதாவது ஒன்றிரண்டு பிரச்சனைகள் புதிதாக முளைக்கலாம்.”

மனித வெண்வெளி திட்ட மேலாளர் ஜார்ஜ் லோ, “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதே மாதிரி இருந்து விட்டால் எங்களுக்கு சந்தோஷமே. நாங்கள் இதுவரை ஏகப்பட்ட மீட்டிங் நடத்திவிட்டோம். இருந்தும் அப்போலோ 10’இல் ஏற்பட்ட அத்தனை முரண்பாடுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. CSM மற்றும் LM (Command/Service Module மற்றும் Lunar Module) ஆகியவற்றின் தயார்நிலையைப் பொருத்தவரையில், அப்போலோ 10 ஏவப்படுவதற்கு 1 மாதத்திற்கு மும்பு நாம் இருந்த நிலையைவிட இப்பொழுது அப்போலோ 11’க்கு நல்ல நிலையில் இருக்கிறோம். முந்தைய அப்போலோ 10 முயற்சியில், LM’ஐ நிலவில் இறக்கிய போது அதன் வெப்ப பாதுகாப்பான்கள் (thermal protection) உரிக்கப்பட்டதல்லவா, அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக காரணம் பிடிபடவில்லை. இருந்தும் அடுத்த மாதம் அப்போலோ 11’ஐ விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.”

பிலிப்ஸ், “இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து என்ன தோன்றுகிறது?”

லோ, “புதிதாக ஒன்றும் இல்லை. இருக்கும் அத்தனை தகவல்களையும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம். வயரிங்’இல் ஏற்பட்ட குழப்பமோ அல்லது ஒரு சிறு தவறோ காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கிறோம்.”

நடந்தது இதுதான். அப்போலோ 10’இல் வெண்வெளி வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போலோ 11 கொண்டு மனிதனை நிலவில் இறக்குவதற்காக முன்னோடிப் பயற்சி அது. நிலவை விட்டு லூனார் மாட்யூல் (LM) மேல் எழும்பும் போது சட்டென்று நிலை தவறிவிட்டது. அனைவரும் டென்ஷன் ஆகிவிட்டனர். எந்தளவுக்கென்றால், அப்போலோ 10’இன் LM விமானி ஜீன் ஸெர்னான் (Gene Cernan) சட்டென்று படபடத்து, “ங்கோxxx… ங்கோம்xxx…” என்று வாய்விட்டு கத்தியே விட்டார். நாசா மற்றும் க்ரம்மான் பொறியாளர்கள் நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் செலவழித்தும் எதனால் இப்படி LM நிலை தடுமாறியது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

லோ, “லூனார் ரிசீவிங் லெபோரேட்டரி (Lular Receiving Laboratory – LRL) கூட ஒருவழியாக தயாராகி விட்டதாக அறிகிறேன். வீரர்களின் பயிற்சியும் திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.” நிலவில் இருந்து கொண்டுவரப்படும் கல், பாறை, தூசு முதலியவை நம் சுற்றுச் சூழலை பாதிக்கலாம் என்ற அச்சம் இருந்ததால், அதை முதலில் இந்த லூனார் ரிசீவிங் லெபோரேட்டரி’யில் வைத்து சோதித்து பின் பாதுகாப்பாக வைக்கத் திட்டம். நிர்வாகக் குளறுபடியால், இது பயணத்தின் முன் தயாராகிவிடுமா என்ற பயம் இருந்தது. ஒரு வழியாக முடித்து விட்டார்கள்.

நிலவில் இறங்கவேண்டிய இடத்தை சுட்டிக் காட்டும் ரோக்கோ பெட்ரோன்

பெட்ரோன், “ஜார்ஜ் லோ மற்றும் லீ ஜேம்ஸ் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் உள்ளது. சொல்லப்போனால் ஒரு நாலரை நாள் உபரியாகவே உள்ளது, எங்களை நாங்கள் மேலும் தயார் படுத்திக்கொள்ள.”

தரைக் கட்டுப்பாட்டின் இயக்குனர் க்ரிஸ் க்ராப்ட் (Chris Kraft) வர முடியாத காரணத்தால், அவருக்கு பதிலாக வந்திருந்த ஜீன் க்ரான்ஸ், “நாங்களும் தயாராகவே உள்ளோம். நாளை நாம் மூன்று வீரர்களுடன் தொலைபேசி வழியாக உரையாடப் போகிறோம். இதுவரை மூன்று வீரர்களையும் இணைத்து ஒன்றாக பயிற்சியளிக்க முடியவில்லை என்பது எங்களுக்குள்ள ஒரு சின்ன வருத்தம். இருந்தாலும் வரும் ஜூலை பயணத்திற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.”

பிலிப்ஸ், “குறிப்பிட்டு சொல்லும்படி வேறு எதுவும் இருக்கிறதா?”

க்ரான்ஸ், “அப்படி எதுவும் இல்லை. அத்தனையும் மேலும் ஒருமுறை சரி பார்க்க திட்டம். இந்த லூனார் மாட்யூலையும்  ஒரு முறை மீண்டும் இயக்கி பார்த்துவிட ஆசைப்படுகிறோம்.”

டேக் ஸ்லேய்டன், “எங்கள் நிலைமையும் ஓரளவுக்கு மற்றவர்களைப் போலத்தான். பதினாறாம் தேதி வரை பயற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. CSM-LM பயற்சியில்  கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் ஒரு நூறு மணி நேரம் கிடைத்தால் நல்லது. ஆனால் அதில் பாதி தான் கிடைக்கும் போல. பரவாயில்லை, அதை வைத்து கூட சமாளித்துக் கொள்வோம். இந்த LLTV (Lunar Landing Training Vehicle – நிலவில் இறங்குவதை உருவகப் படுத்தி பயற்சி பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எந்திரம்) பயற்சி பாக்கியிருக்கிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong) சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் இந்த LLTV’யில் பயற்சி எடுத்துக்கொள்வார். முடிந்தால் செவ்வாயும் மற்றும் அடுத்த வார இறுதியிலும். அப்படி பயற்சியளிக்க முடியாவிட்டாலும் ஓகே தான். ஏனெனில் நீல் இதை ஏற்கனவே இயக்கியிருக்கிறார். அகவே, இந்த பயற்சியை நாம் தாண்டி சென்றுவிடலாம். இந்த பயற்சி தேவையானதே தவிர, அத்தியாவிசயமானது அல்ல. மேலும், பயற்சிகளை இருபத்தியோராம் தேதி வார இறுதியுடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம். கடைசி நாள் வரை ஆர்ம்ஸ்ட்ராங்’ஐ பயற்சியில் கட்டிவைக்க விரும்பவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், மற்ற குழுக்களும் அவருடன், ராக்கெட் கிளம்பும்முன் கலந்தாலோசிக்க விரும்புகிறார்கள். அது ஞாயமும் கூட. அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.”

ஆலோசனைகளின் ஊடே பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வீரர்கள்

பிலிப்ஸ், “வீரர்களின் தன்னம்பிக்கை மிக முக்கியம். அவர்களுக்கு நாம் முடிந்தவரை அத்தனை சாத்தியங்களிலும் பயற்சியளித்து விட்டோம் என்று கருதுகிறேன். ஆனாலும், நிலவில் அசாதாரண நேரங்களில் அவர்களின் வேகமான, சமயோசித முடிவுகள்தான் கைகொடுக்கப்போகிறது.”

ஸ்லேடன், “பயற்சியில், வீரர்களின் நிலை அப்போலோ 8’இன் போது இருந்ததைப் போல உள்ளது. அப்போலோ 9’இல் இருந்த பயற்சியை விட ஓகே. ஆனால் அப்போலோ 10 அளவிற்கு இல்லை. இருப்பினும், வீரர்களுக்கு போதிய பயற்சி அளிக்கப் பட்டுள்ளது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.”

பயற்சிக்கு தயாராகும் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்
(முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்கள்)

ஆனால் உண்மையில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் தங்களுக்கு போதிய அளவு பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கருதினர். ஆனால் அதை ஸ்லேடனிடம் கூற பயந்தனர். ஆல்ட்ரின் புவியியல் சார்ந்த பயற்சிகளில் இன்னும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்று ஸ்லேடன் விரும்பினார். உண்மையில், ஆல்ட்ரின் புவியியலை வெறுத்தார், – “எனக்கு பிடிக்காத ஒரு பாடம் புவியியல் – ஒருவேளை, அதனால்தான் அவர்கள் என்னை நிலவில் இறங்க அனுமதிக்கவில்லை போல.”

பிலிப்ஸ், “சரி, இந்த நமது ஜூலை மாத பயணத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைப்பதில் ஏதும் பயன் ஏற்படுமா?”

ஸ்லேடன், “நாம் மேலும் கொஞ்சம் பயற்சி பெறுவோம். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் மாதம் தள்ளி வைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இருந்துவிடப் போவதில்லை என்றே தோன்றுகிறது.”

பின் பிலிப்ஸ் ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வந்தார். அதுவரை பேசாத நிர்வாகிகளை பிடித்து தங்கள் கருத்துகளை கூறச் சொன்னார். அனைவரும் ஜூலை மாத ஏவலுக்கு தயாராக இருப்பதாகக் கூறி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஒரே ஒரு நிர்வாகி மட்டும், “எனக்கு இப்பொழுதும் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.”

லெப்டினன்ட் ஜெனரல்
ஸாமுவேல் ஸி. பிலிப்ஸ்

பிலிப்ஸ் சிரித்தார். “உங்களுக்கு இப்பொழுது தானே? நான் இங்கு வந்ததிலிருந்து, சுமார் ஐந்தரை வருடமாகவே, சங்கடமாகவே உணர்ந்து வருகிறேன்.”

வெளியில் இருந்து இந்த உரையாடல்களைப் பார்க்கும் யாருக்கும் இவர்கள் இன்னும் தயாராகவில்லை என்றே தோன்றும். ஆனால், நாசா ஆட்களைப் பொறுத்த வரையில் வேலை எப்போதும் போல அட்டகாசமாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். அன்று, அந்த அறையில் ஒன்றரை மணி நேரத்துக்கு அப்போலோ 11’இன் கடைசி கட்ட திட்டங்களையும் ஏற்பாடுகளையும் பற்றி பலவாறாக விவாதித்தனர். முடிவில், ஜெனரல் பிலிப்ஸ் தன் முடிவைச் சொன்னார்:

“GO”

Karthik Nilagiri

Related posts