Experience

ஆப்பீஸ்-5-மொட்டை

Print Friendly, PDF & Email

ஆப்பீஸ்

மொட்டை

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

4-சோதனை

சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது. ஆளு வேறு புல்க்க்கா இருப்பாப்ல. உண்மையில் சொல்லப்போனால் அவரை போனில் அழைத்து பேசக்கூட பயம். இதில் நான் எங்குட்டு போய் அந்த வாரணக் கடிதத்த கேக்குறது. ‘அதென்னடா நிவாரணக் கடிதம்; நீ வாடா நேர்ல மொதல்ல’ன்னு கிழிச்சு தொங்க விட்ருப்பரு.

எனக்கு மும்பைல தெரிஞ்சவங்க ரொம்ப கம்மி தான். நான் தங்கி வேலை தேடுன என் பெரியம்மா பெண். அவரது கணவர், அதான் என் அத்தான், என் காலேஜ் சீனியர் வேற (Madras Institute of Technology). “நீயே போய் பேசி பாரு. உன் முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு அந்த கடிதம் தந்துருவாறு”ன்னு சொல்லிட்டாரு. நம்ம மூஞ்சி தான் நமக்கு தெரியுமே. ‘இவன் அப்பாவிடா; தைரியமா இன்னும் நாலு மிதி சேர்த்து மிதிக்கலாம்; எவனும் கேக்கமாட்டன்’ அப்டீங்குற உணர்வு தான் என் முகத்தை பார்த்தால் வரும். இன்னொருத்தரு என் பெரியப்பா முறை. அப்பவே L&T (Larsen & Toubro)’வில் துணை-ஜனாதிபதியா (அதாங்க, வைஸ்-ப்ரெசிடென்ட்) இருந்தாரு. ஆனா, அவர் இவ்வளவு தூரம் எறங்கி பண்ணுவாரா, எனக்காக பேசுவாரா என்பதே பெரும் கேள்வியா இருந்தது. வேலை தேடி மும்பை வந்தப்ப அத்தானாச்சும் தங்க இடம் கொடுத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் சோறு போட்டு வளர்தாரு. ஆனா பெரியப்பா பெருசா ஒண்ணும் செய்யல. குறைந்தபட்சம் ஒரு இன்டர்வியூ’க்கு ஏற்பாடு பண்ணி தந்துருக்கலாம். அடிச்சி பிடிச்சி பேசி சமாளிச்சு வேலை வாங்கியிருப்பேன். பண்ணலியே. அப்பப்ப எனக்கு அவங்க வீட்டுக்கு போறப்ப அட்வைஸ் பண்றதோட சரி. அதுல பாருங்க, சொந்த தம்பி பொண்ணுக்கு ஒரு கம்பெனியில் வேலை வாங்கித் தந்திருந்தார். அது வேற விஷயம். எனக்குத் தான் ஒண்ணும் பண்ணல. அதனால, அவர் கிட்டயும் இதை பத்தி பேச தோணல.

எனக்காக பேசக் கூடியவர், என் நிலைமையை எடுத்துச் சொல்லி எனக்காக வாதாடக் கூடியவர் நடராஜ் அண்ணாதான். வேதாரண்யத்தில் நான் ஐந்தாவது படிக்கும் போது அவர் டிப்ளமோ சேர்ந்திருந்தார். எனக்கு காட்பாதர் மாதிரி. என் வாழ்வின் முதல் காதலில் நான் தடுமாறிய போது எனக்கு அருகில் இருந்து என்னை தாங்கி பிடித்தவர் அவர்தான். என் காதலுக்கு மிகவும் அட்வைஸ் செய்து என்னை வழிநடத்தியவர். அந்தக் காதல் புட்டுக்கிச்சு.

நடராஜ் அண்ணாவிடம் போன் பண்ணி பேசினேன். ‘தல’ அஜித் கலைஞரிடம் ‘மெரட்ராங்கையா’ என்று மேடையிலேயே ஒப்பாரி வைத்ததைப்போல போனிலேயே புலம்பித் தீர்த்தேன். அவர் அப்பொழுது நம் இந்திய அரசின் பீச் பந்தோபஸ்து துறையில் இருந்தார். அதாங்க, Coast Guard. அப்பொழுது அவர் ‘Frigates’ எனப்படும் ஒரு சின்ன ஆயுதம் தாங்கி போர்க்கப்பலை சமாளித்துக் கொண்டிருந்தார்.

“என்னடா, ஜாம்நகர் வந்து என் ஸ்டைல்’ல உங்க மனித வளம் கிட்ட பேசவா. சொல்லு! இப்பவே கப்பல கிளப்பிட்டு வரவா? இல்ல சொல்லு, நம்ம ராஜகோபால் தான் துவாரகா’வில் எல்லையில் ரோந்து பாத்துக்கிட்ருக்கான். சொன்னா ஹெலிகாப்டர கிளப்பிட்டு வந்து, டக்குன்னு எனக்கு முன்னாடியே வந்து சேர்ந்துருவான். அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த யூனிபார்ம் கலர், வண்டி கலர் ஆகியவை வேணா சமாதானத்தின் வெள்ளையாய் இருக்கலாம். ஆனா, நாங்க பக்கா டெர்ரர் பாயிஸ். வரட்டுமா?” என்று மெர்சலாய் பேசினார்.

ஆத்தாடி. இவரு மனித வளத்தை போட்டுத் தள்ளிட்டா அப்புறம் எனக்கு வேலையை யார் உறுதி செய்யுறது. “ஐயோ! அதெல்லாம் வேணாம்ணே. அந்த மும்பை பெட்ரோல் பங்க் முதலாளிகிட்ட பேசி ஒரு லெட்டர் வாங்குனா போதும்ணே” என்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன். என் முதல் காதல் வேற கண்ணுல வந்து வந்து போகும்’ல.

எனக்காக ஒரு நாள் லீவ் போட்டு என் அந்த பழைய முதலாளியைப் போய்ப் பார்த்து பேசியிருக்கிறார். அங்க உள்ளே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இன்று வரை சொல்லவில்லை. அன்று மாலை நான் பயிற்சி முடிந்து வந்ததும் நடராஜ் அண்ணாவை போனில் பிடித்தேன்.

“சரியான டுபாகூர் பார்ட்டிப்பா அவன். மனுஷனா அது” என்று தொடங்கி, ஒரு பதினைந்து நிமிடம் தன் உள்ளக்குமுறலை என்னிடம் கொட்டி, “நல்ல வேளை நீ அவன் கிட்டயிருந்தும், அந்த பெட்ரோல் பங்க்’ல் இருந்தும் வெளிய வந்துட்ட” என்று முடித்தார்.

பேச்சு வார்தை பணால் என்று புரிந்தது. இருந்தாலும், “அண்ணே, அந்த லெட்டர் பத்தி ஏதும் பேசினீங்களா?” என்று கேட்டபோது, “வரும் வரும். அண்ணன் நாந்தான் பேசிருக்கேன்ல. வரும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த இரண்டாவது நாள், எங்கள் மதுரை வீட்டிற்கு பங்க் முதலாளியிடம் இருந்து கடிதம் வந்தது.

“டே கார்த்திக். நீ பாட்டுக்கு இங்க மிசினை எல்லாம் ரிப்பேர் பண்றேன்னு சொல்லி தொறந்து போட்டு போயிட்ட. நீ ஆரம்பிச்ச வேலையெல்லாம் பாதியிலேயே நிக்குது. கோவா’ல நீ ரூம்ல விட்டுட்டு போன அழுக்கு துணியால சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்பட்டு Environment நோட்டீஸ் வந்துருக்கு. அங்க ஏதோ பொண்ண கைய புடிச்சு இழுத்தியாமே. அந்த பஞ்சாயத்து நாங்க டீல் பண்ண வேண்டியதா இருக்கு. கிளம்புறதுக்கு முந்துன நாள் ராத்திரி சரக்கடிச்சு வாந்தி எடுத்துருக்கே. அதை கிளீன் பண்ணனும். அந்தோணி பாய் கடைல அக்கௌன்ட் வைச்சி சாப்டுட்டு, செட்டில் பண்ணாம போயிருக்க. இதுக்கெல்லாம் சேர்ந்து நஷ்ட ஈடா, நீ எனக்கு ஒரு லட்ச ரூவா அனுப்பு. உன் நிவாரணக் கடிதம் பத்தி அடுத்து பேசிக்கலாம்” என்ற ரீதியில் மூன்று பக்கத்துக்கு இருந்தது.

புகார் கடிதத்தை படித்த என் தந்தை, “டேய். நீ பாம்பே’ல என்னதான்டா பண்ணிக்கிட்ருந்த?” என்று பதட்டப்பட ஆரம்பிச்சிட்டாரு. முடிவில், “இந்தாடா, இந்த மாதிரி கடிதமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது. இந்த உன் புகார் கடிதம் லீக் ஆச்சுன்னா நம்ம குடும்பத்துல எவனும் சம்பந்தம் பண்ண மாட்டனுங்க. கிழிச்சு குப்பைல போட்டாலும் எவன் கைலயாச்சும் சிக்கிருச்கினா நம்ம குடும்ப, ஏன் நம்ம மதுர மானமே கப்பலேறிடும். நா இத உனக்கே அனுப்புறேன். நீயா ஏதாச்சும் பண்ணி காதும் காதும் வச்ச மாதிரி எந்த எவிடன்ஸும் இல்லாம இதை டிஸ்போஸ் பண்ணிரு” என்று வில்லன் ரேஞ்சுக்கு பக்கா பிளானிங் போட்டார். இன்று வரை அந்த புகார் கடிதம் பத்திரமாக என் கோப்புகளில் உள்ளது. முழுசா படிச்சு பாக்கத்தான் இன்னும் தைரியம் வரல.

முத்தாய்ப்பாக, அப்பா கேட்டார், “ஏண்டா, நடராஜ் அங்க தான இருக்காப்ல. கவர்மெண்ட் ஆபீசர். அவரைப் போய் ஒரு தடவை பேசச் சொல்லேன்.”

“அவர் பேசுனப்புறம்தாம்பா இந்த கடிதம் வந்துருக்கு” என்று சொல்லி போனை வைத்தேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நடராஜ் அண்ணா டெல்லி’க்கு பணிமாற்றம் வாங்கிட்டு போயிட்டார். இன்னும் திரும்பல. பதினைந்து வருடம் ஆகிருச்சு.

இதற்கிடையில், எந்த ரெகார்ட்’டிலும் தன் மதுரை முகவரியை தர வேண்டாம் என்று அப்பா சொல்லிட்டார். அவரும் மதுரை வீட்டை காலி பண்ணிட்டு சென்னை செட்டில் ஆகிட்டார். ரிட்டயர்ட் ஆகி மூணு வருஷம் அச்சு. இன்னும் மதுரை திரும்பல. மும்பையில் இருந்து என் பேருக்கு எந்த கடிதம் வந்தாலும் டெலிவரி செய்ய வேண்டாம் என்று விஸ்வநாதபுரம் தபால் ஆபீஸில் எழுதிக் கொடுத்ததாக செவி வழிச் செய்தி.

ஆக, கடைசி வாய்ப்பும் போச்சு. அங்கே ஜாம்நகரில் மூக்கால் அழுதுகொண்டிருந்த என்னை தோழன் ஸப்யா சமாதானம் செய்தான், “போய் சொல்லிரு மச்சி. லெட்டர் எல்லாம் கிடைக்காது. தர முடியாது’ன்னு சொல்லிரு மச்சி.”

ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்துக் கொண்டேன். திருப்பதி பெருமாளே. இந்த பிரச்சனையில் இருந்து என்னை வெளியே கொண்டு வா. வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன் என்று வேண்டிக்கொண்டேன். திருப்பதி எப்ப வருவேன்னு தெரியாது. அதனால உன்னை நினைத்து இப்பவே இங்கேயே மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்று வேண்டிக்கொண்டு, லோக்கல் சலூன் கடையில் முடி இறக்கிவிட்டேன்.

அடுத்த நாள் மனித வள அதிகாரியை பார்த்த போது, “யெஸ், வாட் டூ யூ வான்ட்?” என்றார். “டேய், நான்தாண்டா” என்று விளக்கி, “நிவாரணக் கடிதம் எல்லாம் கிடைக்காது ஸார். ஒரு பிரச்னையும் வராது. அதுக்கு நான் கியாரண்டி. அப்படி வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் என்னை இங்கு பணியில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லேன்னா சொல்லுங்க, நான் திரும்பி சென்று விடுகிறேன்.” தீர்க்கமாக பார்த்தவர், “சரி, இருந்துத் தொலை” என்று அனுமதித்து விட்டார்.

மொட்டைத் தலையுடன் ஆட்டம் தொடங்கியது.

6-பட்டறை

Karthik Nilagiri

Related posts

4 Comment's

  1. நடராஜன் says:

    மனுசனா அவன்… ஏதோ உன்னை ஆள வச்சு போட்டு தள்ளாம விட்டானேன்னு சந்தோச படு… ??

    1. இன்னைக்கு வரைக்கும் நா அந்தப்பக்கமே போறதில்லியே… மரோல், அந்தேரி, சக்காலா ஆகிய ஏரியாக்களை கவனமாக தவிர்க்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published.