கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...

ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்

Print Friendly, PDF & Email

டிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு.

ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா.

ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மீட்டிங்கில் சந்தித்து விடுவோம். மீட்டிங் நாட்களில் டீ பிரேக், லஞ்ச் நேரங்களில் ஓடி வந்து ஒட்டிக் கொள்வாள். சற்றே அதிக இடைவெளி விழுந்து விட்டால் ‘டீ குடிக்கலாம் வர்றீங்களா… பேமெண்ட் என்னுது…’ என்று என்னை கடத்திப் போய் விடுவாள். பல முறை வீட்டுக்கு அழைத்து விட்டேன். இதோ அதோ என்று ஓடி விட்டது காலம்.

இன்று மாலை டீ குடிக்க அழைத்தவள், மிக அமைதியாகவே இருந்தாள். அந்த அவளின் பிராண்ட் சிரிப்பு இல்லவே இல்லை.

“நா ரிசைன் பண்ணிட்டேன்…”

“வாவ்… நல்ல விஷயம்… எந்த கம்பெனி போற நிமி..?”

“இல்ல… ஆஸ்திரேலியா போறேன்…”

“அங்க வேலையா..?”

“இல்ல…”

“அப்ப… அப்பா அங்க வேலை மாத்திக்கிட்டிருக்காரா..?”

“இல்ல… நா மட்டும் போறேன்…”

“என்னாச்சு..?”

“எனக்கு கல்யாணம்… அவன் அங்க இருக்கான்…”

“டபிள் வாவ்… அற்புதமான விஷயம்… வெரி குட் வெரி குட்…”

தீர்க்கமாய் ஒரு இரண்டு நிமிடம் பார்த்தவள், “பசங்க என்னைக்குமே பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே மாட்டீங்கடா…”

இந்த முறை நான் அதிர்ந்து போய் அவளையே ஒரு ஐந்து நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தேன், “நிமி… வாட் இஸ் திஸ்..? லூஸு…”

தலை குனிந்தவாறே, “நீங்க எல்லாம் கவிதை எழுதத்தான்டா லாயக்கு… பொண்ணுங்க மனசைப் பத்தி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது… இடியட்ஸ்…”

நிலைகுலைந்து போயிருந்தேன், “நிமி… டென்ஷனாக்காத… ப்ளீஸ்… நீ என்னை பயமுறுத்துற… ப்ளீஸ்… இங்க பாரு…”

inception april fool

சட்டென்று நிமிர்ந்து வெடித்து சிரித்தவள், “யோவ்… ஆசைதான்யா ஒனக்கு… ஏப்ரல் ஃபூல்… ஏப்ரல் ஃபூல்… ஏப்ரல் ஃபூல்…”

“ஹப்பாடா… லூஸு லூஸு… அப்ப ரிசைன் பண்ணலியா…”

“ரிசைனும் கல்யாணமும் உண்மை… எனக்கு இன்னைக்கு லாஸ்ட் டே… இதான் நம்ம லாஸ்ட் மீட்… அதனால இந்த தடவை நீ பில் பே பண்ணிடு…”

சொல்லிவிட்டு சட்டென்று எழுந்து ஓடியேவிட்டாள்…

என் பார்வையில் இருந்து அவள் முக்கில் திரும்பி மறைந்த போது, அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டது போல இருந்தது…

பிரமையாக இருக்கலாம்…

நிஜமாகவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *