நிலவைத் தேடி – க்ராலர் (0002)
May 20, 1969
|  | 
| அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர் மே 1969 | 
AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’ என்றும் சொல்லாமென்றாலும் நம் வசதிக்காக ராக்கெட் என்றே சொல்லுவோம். முப்பது மாடி உயரத்தில் (363 அடி) கருப்பு வெள்ளை நிறத்தில் நம் ராக்கெட், ஏவூர்தி கட்டுமானக் கட்டடத்தில் (Vehicle Assembly Building – VAB) இருந்து ஏவுதளத்துக்கு செல்வதை நத்தைக்கு கூட ஒப்பிட முடியாது. அத்தனை பொறுமை. அதன் நகர்தலை நாம் கண்களால் பார்க்க முடியாது. ஓரிடத்தில் தெரியும் ராக்கெட் சில மணி நேரத்துக்கு பிறகு பார்த்தால் வேறொரு இடத்தில் தெரியும். அவ்வளவுதான். வேகமாக செல்லவே உருவாக்கப்பட்ட ராக்கெட்டை அத்தனை மெதுவாக கொண்டு செல்வது க்ராலர் (Crawler) என்ற உலகின் மிகப்பெரிய தரைவழி வாகனம். ஆறு மில்லியன் பவுண்ட், அதாவது கிட்டத்தட்ட 500 வளர்ந்த ஆப்பிரிக்க யானைகளின் எடை கொண்ட இந்த க்ராலரை இயக்க மட்டுமே 11 தேர்ந்த ஆட்கள் தேவை. இந்த க்ராலரின் ஒரே வேலை, ராக்கெட் மற்றும் அதை செலுத்த உதவும் இரும்பாலான கட்டுமானத்தை (மொத்தம் 12 மில்லியன் பவுண்ட்) VABயில் இருந்து ஏவுதளத்துக்கு கொண்டு செல்வதுதான்.
க்ராலர் பற்றி அறியும்முன் இந்த VAB பற்றிய ஒரு கொசுறு செய்தி. 525 அடி உயர கூரையுடைய VABயின் கொள்ளளவு 129 மில்லியன் கன அடி. ராக்கெட் கொண்டுசெல்வதற்கான அந்த இரண்டு கதவுகள் ஒவ்வொன்றும் 45 மாடி உயரம். VABயின் 10,000 டன் AC மட்டும் வேலை செய்யாவிட்டால் உள்ளேயே கூரையில் மேகங்கள் சேர்ந்து, நம்புங்கள், மழையே பெய்யும்.
|  | 
| VABயில் இருந்து ராக்கெட்டை வெளியே கொண்டுவரும் க்ராலர் | 
ராக்கெட்டை கொண்டுசெல்வதற்கு என்று மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த க்ராலரை ஒரு கட்டுமான அற்புதம் என்றே சொல்லவேண்டும். க்ராலரைப் பற்றி கென்னடியின் ராக்கெட் ஏவல் நடவடிக்கைகளின் இயக்குனர் ரோக்கோ பெட்ரோன் (Rocco Petrone) கூறுகையில், “பலதரப்பட்ட விவாதங்களுக்கு பிறகு யாரோ ஒருவர் தந்த சின்ன ஐடியா, கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு இந்த பிரமாண்ட க்ராலராக வளர்ந்துவிட்டது. க்ராலரை நாங்கள் இங்கு நாசாவில் நாகரீகமாக ‘ட்ரான்ஸ்போர்ட்டர்’ (Transporter) என்போம். ஓஹியோவின் மாரியான் பவர் ஷவல் கம்பெனிதான் (Marion Power Shovel Company) வரைபடங்களில் இருந்த இந்த எந்திரத்தை எங்கள் முன்னே உருவாக்கி, 41 அடி உயரத்தில், 3 ஆயிரம் டன் எடையில் பிரமாண்டமாக நிறுத்தியது. எட்டு கால்களைக் கொண்ட இதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் தளம், ஒரு பேஸ் பால் மைதானத்தை விடப் பெரியது. இந்த தளத்தின் மேல்தான் அப்போலோ-சாட்டர்ன் V மற்றும் அதை ஏவும் கட்டுமானம் இரண்டையும் அமர வைத்து (மொத்தம் 6 ஆயிரம் டன் எடை) VABயில் இருந்து ஏவுதளம் வரை ஒய்யாரமாக மணிக்கு ஒரு மைல் வேகத்தில் அழைத்துச் செல்லப்படும். 3 ஆயிரம் டன் எடைகொண்ட க்ராலர், தன் மீது 6 ஆயிரம் டன் எடை கொண்ட அப்போலோ-சாட்டர்ன் V மற்றும் கட்டுமானங்களை சுமந்து கொண்டு, மொத்தமாக 9 ஆயிரம் டன் எடை உருவமாக ஆடி அசைந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும். அந்தக் காட்சி, சாட்சாத் அந்த பரந்தாமனே இரும்புரு கொண்டு நடந்து வருவது போல் இருக்கும்.”
|  | 
| க்ராலர் | 
நியூ மெக்சிகோவில் இருந்து V2 வகை ராக்கெட்கள் செலுத்தப்பட்ட வரை இந்த க்ராலர்கள் தேவைப்படவில்லை. அங்கு நல்ல வெயிலுடன் கூடிய வானிலை நிலவியதால் ராக்கெட்டின் கட்டுமானம் ஏவுதளத்திலேயே நடந்தது. ஆனால் இங்கு, காற்றில் ஈரப்பதமும் சமயங்களில் புயலும் அடிக்கக் கூடிய ஃப்ளோரிடாவில், ஒரு பாதுகாப்பான இடத்தில் (VAB) ராக்கெட்டை கட்டி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லும் தேவை ஏற்பட்டது. அப்பொழுது தான் இந்த க்ராலர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.
VABயில் இருக்கும் ராக்கெட்டை அலாக்காக தூக்கி ஏவுதளம் நோக்கி செல்லும்போது ராக்கெட் சாய்ந்துவிடாதிருக்க க்ராலரின் தளம் எப்போதும் சமமாக இருக்க வேண்டும். அதற்காக, தளத்தை பல்வேறு இடங்களில் மேலும் கீழும் அசைக்க 16 ஹைட்ராலிக் லீவர்கள் உண்டு. இவை போகும் வழியில் ராக்கெட் குடை சாய்ந்து விடாமல் இருக்க உதவுகின்றது. ஏவுதளம் சற்று மேடான இடத்தில் இருப்பதால் அதன் 3 டிகிரி சாய்வுப் பாதையிலும் செல்லும்போது ராக்கெட்டை நேராக வைத்திருக்கிறது இந்த லீவர்கள். இத்தனை பெரிய வாகனமெனினும் மிக துல்லியமாக இயங்கக்கூடியது இந்த க்ராலர்.
|  | 
| Hans and Franz 2010 | 
ஹான்ஸ் (Hans) மற்றும் ஃப்ரான்ஸ் (Franz) என்று அழைக்கப்பட்ட இரண்டு க்ராலர்கள் 1965இல் தருவிக்கப்பட்டன. அப்போது அதன் விலை ஒவ்வொன்றும் 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஹான்ஸ் மற்றும் ஃப்ரான்ஸ் பெயரில் ஒரு கார்டூன் பலசாலி ஜோடி இருந்ததால் நம் இரண்டு க்ராலர்களுக்கு இந்த பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை ஓரு 6000 கிலோமீட்டர்கள் இவை பயணித்திருக்கலாம். ஒவ்வோரு க்ராலரிலும் இரண்டு 2750-hp டீஸல் என்ஜின்கள் உண்டு. இதன் மைலேஜ் கேட்டால் உங்களுக்கு மயக்கம் வந்துவிடும். வெறும் 3.38 மீட்டர் / லிட்டர் (டாடா இண்டிகாவின் மைலேஜ் 22000 மீட்டர் / லிட்டர்). அதாவது ஒரு கிலோமீட்டர் ஓட கிட்டத்தட்ட 296 லிட்டர் டீசல் தேவைப்படும். இதன் டீஸல் டாங்கியின் கொள்ளவு மட்டுமே 19000 லிட்டர். வேகம் அதிகபட்சம் 2 mph. அதுவும் இதன் மேல் ராக்கெட் ஏற்றிவிட்டால் வேகம் 1 mph ஆகிவிடும். கொஞ்சம் ஸ்லோதான். இது பயணம் செய்யப் போடப்பட்ட ரோடு கூட ஸ்பெஷல்தான். இந்த கனத்தை தாங்கக்கூடிய, அதே சமயம் நெருப்புப் பொறி வராத (ராக்கெட்டின் எரிவாயுவுக்கு நெருப்பு ஆகாது பாருங்க) ஒரு ரோடு போடப்பட்டது. மனிதனின் நிலவுப் பயணத்தின் தொடக்கம் இந்த க்ராலர் பயணம் தான். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இதன் தேவை மாறவில்லை. 2017இல் வரவிருக்கும் மேலும் கனமான ராக்கெட்களுக்காக (Space Launch System) இதன் எடை தாங்கும் திறன் 12 மில்லியன் பவுண்ட்டில் இருந்து 18 மில்லியன் பவுண்ட்டாக அதிகப்படுத்தப்படுகிறது. அதற்காக என்ஜின், ஹைட்ராலிக் லீவர், ப்ரேக், கம்ப்யூட்டர் ஆகியவை மேம்படுத்தப் படுகின்றன. இப்போதைக்கு இதற்கு ஓய்வு கிடைக்கப் போவது இல்லை.
சொல்ல மறந்துட்டேனே. இவை ஒரு சினிமா பிரபலமும் கூட. இந்த க்ராலர் ‘Apollo 13’ (1995) மற்றும் ‘Transformers: Dark of the Moon’ (2011) ஆகிய படங்களிலும் தலைகாட்டியிருக்கிறது. அடுத்த முறை படம் பார்க்கும் பொது கவனித்து பாருங்கள்.
 
                                





 
                                     
                                     
                                     
                                     
                                    
2 Comment's