ஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி
ஜல்லிக்கட்டு.
தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சினிமா துறையினர் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஜாதி மத பேதமின்றி மக்கள் இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அத்தனையும் தாண்டி, இந்த எழுச்சி சாத்வீகமான முறையில் நடந்தது. காந்தி வழி நடந்த இந்த எழுச்சி வெற்றியும் தந்தது. அரசு ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றியது. இதோ இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் பெண்கள். என்னை பொறுத்தவரை, பெண்கள் பங்களிப்பின்றி இந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அமைதியாக நடந்ததால் தான் பெண்கள் பங்கேற்றார்கள் என சில நண்பர்கள் கூறினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் பங்கேற்றதால் தான் இந்த போராட்டமே சாத்வீகமான முறையில் நடந்தது. வெற்றியும் அடைந்தது. இந்த வருட ஜல்லிக்கட்டு பெண்களுக்கே சமர்ப்பணம்.
சில போராட்ட கணங்கள் இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன.
மக்கள் எழுச்சி ஓங்குக