கமிஷனருக்குக் கடிதம்
கமிஷனருக்குக் கடிதம்
-சுஜாதா
கிழக்குப் பதிப்பகம்
‘கமிஷனருக்குக் கடிதம்’ என்று தலைப்பைப் பார்த்தபோதே ஒரு மாதிரி யூகித்திருக்க வேண்டும். சுஜாதா என்ற சொல்லைப் பார்த்து ஏமாந்து விட்டேன்.
மும்பையில் இருந்து மதுரைக்கு இரயிலில் போய், அந்திருந்து எமனேஸ்வரம் சென்று தம்பி ரமேஷ் கல்யாணத்தை சிறப்பித்துவிட்டு அப்பா அம்மாவுடன் சென்னை திரும்பி வந்திருந்தேன். அடுத்த நாள் காலைதான் மும்பைக்கு விமானம். அப்பா அம்மாவுடன் ஊர் சுற்ற கிளம்பியது புத்தக கடையில் முடிந்தது. குல்தீப் நய்யார் எழுதிய ‘ஸ்கூப்’ புத்தகத்தை அப்பா வாங்கிக்கொண்டார். சுஜாதா எழுதிய ‘கமிஷனருக்குக் கடிதம்’ புத்தகத்தை அம்மா எடுத்துக் கொண்டார். இந்த இரண்டு புத்தகங்களுமே நான் படித்திராத காரணத்தால், அவர்கள் படித்த பிறகு வாங்கிப் படித்துக்கொள்ளலாம் என்று கூறி நான் வேறு எந்த புத்தகமும் வாங்கிக்கொள்ளவில்லை.
ஒரு மாதம் கழித்து அம்மா மும்பை வந்தபொழுது ‘கமிஷனருக்குக் கடிதம்’ படிக்கக் கிடைத்தது. சிறிய புத்தகம். அதிக பக்கங்கள் இல்லை. சுஜாதா என்பதால் ஒரு ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. போலீசில் புதிதாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி சேருகின்றார். அவரது அனுபவங்கள் தான் கதை. பொதுவாக சுஜாதா என்றால் சில விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். இதில் அப்படி எனக்கு தோன்றிய (ஞாபகம் இருக்கும்) ஒரே வாக்கியம் ‘அங்கிள்கள் ஆரோக்கியத்திற்காக நடந்து கொண்டிருந்தார்கள் (பையில் சிகரெட்டோடு)‘. அவ்வளவுதான். மற்றபடி மொத்தமாகவே ஒரு அலுப்பான புத்தகம்.
சமுதாயத்தை திருத்தும் நோக்கோடு ஒரு பெண் போலீஸ் வேளையில் சேருகிறார். வேலையில் சேர்ந்த நாளில் இருந்தே விவாகரத்தான அவரது உயரதிகாரிக்கு அந்த பெண் போலீஸ் அதிகாரி மீது ஒரு ‘இது’ ஏற்பட்டுவிடுகிறது. அவர் மட்டுமில்லாமல், கல்யாணமாகாத ஒரு சக அதிகாரிக்கும் அந்த பெண் போலீஸ் மீது ஒரு ‘அது’ ஏற்பட்டுவிடுகிறது. அதெல்லாம் போகட்டும். போலீஸ் லேப்’க்கு போனால் அங்கிருக்கும் ஒரு கல்யாணமான பணியாளருக்கும் இந்த பெண் போலீஸ் மீது ஒரு ‘ஏதோவொண்ணு’ ஏற்பட்டுவிடுகிறது. மூவரும் தங்களின் வேலை திறமையை இந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு வெளிச்சம் பொட்டு காண்பிக்க சிந்து கிடைக்கும் இடங்களிலெல்லாம் சந்து பாடுகிறார்கள். ஏன்யா, போலீஸ் அதிகாரிகள் இவ்வளவு காய்ந்து போயா இருப்பார்கள்?
அது போகட்டும். போலீஸ் சம்பந்தமான கதை என்பதால் ஏதாவது சுவாரசியமாக கேஸ், அது தொடர்பான அசத்தும் விசாரணை, அட்டகாசமான திருப்பங்கள் என்று எதாவது இருந்தால் தானே காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிப்பவருக்கு ஒரு நிம்மதி வரும். அதுவும் இல்லை. லேப்’இல் இருக்கும் அதிகாரி சிலபல அறிவியல் உபகரணங்களின் பெயர்களை உதிர்க்கிறார். சில வழிமுறைகளை சொல்கிறார். அவ்வளவுதான்.
சமுதாயத்தில் திருத்த எவ்வளவோ இருக்க, ஒரு விலைமாதுவின் வாழ்கையை சீரமைக்க முனைகிறார் இந்த பெண் போலீஸ் அதிகாரி. அது நடந்த மாதிரி தெரியவில்லை. விவாகரத்தான உயரதிகாரியை அவர் மனைவியோடு சேர்த்து வைத்து, பின் வேலையை இராஜினாமா செய்துவிட்டு, சக போலீஸ் அதிகாரியின் காதலை ஏற்றுக்கொள்வதோடு கதை முடிகிறது. இதுவா இந்த பெண் போலீஸ் கதாபாத்திரத்தின் குறிக்கோள்? இல்லை, எனக்குதான் இந்த கதையில் பொதிந்திருக்கும் குறியீடு / உள்ளர்த்தங்கள் புரியவில்லையா? அல்லது, நான் இப்படிப்பட்ட கதையை படிக்கும் அளவிற்கு ஒரு தேர்ந்த இலக்கியவாதியாக வளரவில்லையா? என்னமோ போடா மாதவா?
Verdict: படிக்கக் கூடத் தேவையில்லை
(பிகு: இந்த கதையை ராஜேஷ்குமார் எழுதியிருந்தால், ஒரு பல்ப் பிக்ஷன் என்ற புரிதலோடு படித்திருப்பேன். கதையும் பிடித்திருந்திருக்கலாம். பட், எழுதியது சுஜாதா என்பதால் நெருடுகிறது)
பிற விமர்சனங்கள்: