ஆப்பீஸ்-2-கண்டேன் ஜாம்நகர்
ஆப்பீஸ்
கண்டேன் ஜாம்நகர்
முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.
பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள். பணத்தை ஜாம்நகர் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் போட்டிருந்தது. பெரிய கம்பெனி. கரெக்டா தந்துருவாங்க. இருந்தாலும் கையில இருந்த காசுக்கு, ஒரு தடவை போன் பண்ணி கேட்டுட்டு டிக்கெட் போடலாம்’னு மனித வளத் துறை அதிகாரிக்கு போன் செய்தேன். உங்க கம்பனி தேர்ந்தெடுத்த என்ஜினீயர் என்று அவரை நம்பவைக்கவே பத்து நிமிடம் ஆனது. அதிகாரி பெண்ணாய் இருந்திருந்தால் ஒருவேளை அவரை நம்ப வைக்க எனக்கு இன்னும் கொஞ்சம் இலகுவாய் இருந்திருக்கலாம். ஆங், சொல்ல மறந்துட்டேனே, அந்த கால B.Tech. இந்த கால M.Tech + MBA + PhD’க்கு சமானம். சரி, அதை விடுங்க. அதிகாரிக்கு போன் செய்தேனா, பத்து நிமிடம் நா உங்க ஆளு ஸார் என்று விளக்கிய பிறகு, “அதுக்கென்ன இப்ப?” என்ற தொனியில் கேட்டார். “இல்ல ஸார், இருபதாம் தேதி வரச்சொல்லி போட்டு இருந்தீங்களே, அதான் எந்த நேரத்துக்கு வந்து சேருற மாதிரி இரயில் புக் பண்ணட்டும் ஸார்?” என்று கேட்டேன். “அதுலதான் ஒரு சின்ன திருத்தம்” என்றார். எனக்கு பக்கென்றது.
இதுக்கு முன்னாடி தேர்வு செய்துவிட்டு ‘அப்புறமா கூப்பிடுறோம்’ என்று சொன்ன Yokogawa கடைசிவரை கூப்பிடவேயில்லை. அட, இன்னிக்குவரைக்கும் கூப்பிடலீங்க. நம்பிக்கை நிறுவனமும் இந்த மாதிரி ஏதாவது பண்ணிடுமோ? பழைய பெட்ரோல் பங்க் வேலையை வேற இதை நம்பி விட்டுட்டேனே என்று பயந்தே போனேன். பின், அவரே தொடர்ந்தார், “ஏப்ரல் ஒன்றாம் தேதி இங்க இருக்குற மாதிரி வாங்க”. அது முட்டாள்கள் தினமாச்சே என்ற சிந்தனையை தாண்டி வேறொன்று என்னை கலக்கியது. அதுவரை எங்கே தங்குவது. பத்து நாட்கள் மும்பையில் தங்குவது என்பது ஒரு சாகசம். கையில் இருந்த காசை வைத்து அதற்குமேல் அந்த சின்ன ஹோட்டலில் தங்க முடியாது. இரண்டொரு நாளில் காலி செய்தாக வேண்டும். மும்பையில் ஒரு வருடம் தங்கி வேலை தேடிய அக்கா வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கா கோடை விடுமுறைக்கோ அல்லது ஏதோ விசேஷத்திற்கோ ஊருக்கு போய் விட்டிருந்தார். அத்தானும் ஊரில் இல்லை. பெட்ரோல் பங்க்’ல் வேலை செய்த போது தங்கியிருந்த அந்தேரி-மரோல் வீட்டு நண்பர்கள் வேறு அப்போது ஊரில் இல்லை. அதிகாரியிடமே கேட்டேன், “ஸார். நான் ஜாம்நகர் வந்துடறேன். தயவு செய்து தங்கமட்டும் இடம் தாருங்கள். இங்கு மும்பையில் எனக்கு தங்க எந்த வசதியும் இல்லை. என்னால் பழைய கம்பெனி இருக்கும் கோவா’க்கு திரும்ப போக முடியாது. இருக்கும் காசுக்கும் நேரத்துக்கும் என்னால் சென்னை போயும் வர முடியாது. எனக்கு இந்த பத்து நாள் மட்டும் அங்கு ஜாம்நகர் கம்பெனி விடுதி இருந்தால் தாருங்கள்”. அவருக்கு ஏதோ அவசரம் போல, “ஒன்றாம் தேதி வாருங்கள்”, என்று கூறி படக்கென்று போனை வைத்துவிட்டார்.
வேலைக்கு கூப்பிடுவாங்களா மாட்டாங்களா என்ற பயம் தாண்டி, இந்த பத்து நாட்கள் எங்கே தங்குவது என்ற பயம் பூதாகரமாய் என் முன் நின்றது. பெருநகரங்களில் தங்குவதுதான் மிகப் பெரிய சிக்கல். ஆனால், கடவுள் ஒரு மாதிரி நல்லவர். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், வேறு வழியே இல்லாத போது நமக்கு உதவுவார். பெட்ரோல் பங்க்’இல் வேலைபார்த்தபோது அங்கு ஒரு பியூன் இருந்தார். ஜாதவ் காக்கா அல்லது ஜாதவ் அண்ணாச்சி என்று வைத்துக்கொள்வோம். கம்பனி’க்கு வரும் காசோலையை வங்கியில் போடுவது அவர் வேலை. சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் சொச்சம். அதில் தன் செலவு போக சேமித்து எங்கோ உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் மனைவிக்கும் இரண்டு மகன்களுக்கும் அனுப்புவார். ஐம்பது வயது இருக்கும். நாற்பது கிலோ எடையில் எழுபது வயது முதியவர் போல் தெரிவார். முதலாளியிடம் ஒரு நூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றித்தருமாறு இரண்டு ஆண்டுகளாய் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் சம்பந்தமின்றி எதிர்பட்டார். “என்னப்பா. உங்க வீட்ல பிரச்சனை’ன்னு நம்ம கோவா பசங்க சொன்னாங்க. நீ இங்க இருக்க?” என்று அக்கறையாய் கேட்டார். வேலை கிடைத்த விஷயத்தை சொன்னேன். முதலாளியிடம் சொல்லவேண்டாம், நானே நேரம் வரும்போது சொல்லிக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டேன். பின் தாங்கும் கஷ்டத்தையும் பேச்சு வாக்கில் அவரிடம் பகிர்ந்தேன். அவர் மறுபேச்சு பேசவிடாமல் போய்ஸர்’ல் (Boisar) இருக்கும் தன் அறைக்கு அழைத்துத் சென்றுவிட்டார். அடுத்த ஆறேழு நாட்கள் அங்குதான் வாசம். கிளம்பும் போது நன்றியை தவிர வேறெதுவும் ஏற்கவில்ல. அப்பொழுதெல்லாம் மொபைல் இல்லை. இரண்டொரு வருடம் கழித்து பொய்ஸர் திரும்ப சென்ற போது அவரை பற்றிய தடயமும் இல்லை. அவரை இன்றுவரை மறுபடி பார்க்கவில்லை.
மும்பையில் இருந்து கிளம்பி ஒருவழியாய் இரயில் ஏறிவிட்டேன். நீண்ட பயணத்தின் முடிவில் ஜாம்நகர் வந்தடைந்தேன். இரயில் விட்டு வெளியே வந்து பார்த்தபோது வெறிக்கும் வெயிலினூடே என்னைப்போல் இன்னும் சிலர் நின்றிருந்தார்கள். நவகிரகம் போல் ஆளுக்கொரு திசை பார்த்துக்கொண்டு. நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து ஒரு பேருந்து வந்திருந்தது. அனைவரும் பேசாமல், அறிமுகம் செய்துகொள்ளாமல் வண்டியில் ஏறினோம். புதிய ஆட்களிடம் பேச கூச்சமா அல்லது நம்பிக்கை போன்றதொரு பெரு நிறுவனத்தில் வேலை கிடைத்த திமிரா என்று தெரியவில்லை. அமைதியாகவே பயணித்தோம். முப்பது முப்பைந்து கிலோமீட்டர் பயண முடிவில் மோடிகாவ்டி எனும் இடம் வந்தடைந்தோம். மனித வள அதிகாரிகள் வரவேற்று எங்கள் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு எங்களை தனித்தனி விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். விஸ்தாரமான இரண்டு படுக்கை அறைகளும் கொண்ட வீடு. ஒவ்வொரு வீட்டிலும் இருவர் தங்கவைக்கப்பட்டனர். எனது அறை நண்பன் கபில். மராத்திக்காரன். நல்லவனாகவே தெரிந்தான். பழக வேண்டும். எல்லோரிடமும் பழகவேண்டும். முக்கியமாக பெண்களிடம் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று குறித்துக்கொண்டேன். அன்று முழுவதும் மேலும் மேலும் ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
இந்தியாவின் கச்சா எண்ணை சுத்தரிப்பு நகரமான ஜாம்நகர் வந்தடைந்து விட்டேன். என் கனவு நிறுவனமான நம்பிக்கையிலேயே நான் இனி கருவியியல் பொறியாளன். சந்தோஷமாக நிம்மதியாக உணர்ந்தேன்.
அதுக்கும் வந்தது ஆப்பு.
Great narration☺
நன்றி அண்ணா… இதோ இன்றோ நாளையோ அடுத்த பகுதி வந்துவிடும்… நீங்கள் உண்டு… பெட்ரோல் பங்க் முதலாளியிடம் நீங்கள் தூது போனதை எழுத வேண்டும்…