திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்… நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக…
மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்… வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன… ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்… ஆதி மனிதன் போல் நடந்தே…
முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி நடக்க வைக்கப்பட்டார்கள்… ஆனால் அப்படி நடந்தவர்கள், தில்லி நகரத்து மக்கள் மட்டுமே என்று கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்… இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் மக்கள் நடந்து தங்கள் விரும்பிய கனவு தேசத்தை அடைந்தார்கள்… அதில் இரு நாட்டு மக்கள் நடந்தார்கள் என்றும் கொள்ளலாம்… ஆனால் இப்பொழுது நடப்பது இந்தியர்கள்… இந்தியர்கள் மட்டுமே...
Corona எனும் கொடும் சுவாசத் தொற்றுநோய் உலகமெங்கும் பரவி மக்களை கொன்று கொண்டிருக்க, நாம் மெதுவாக ஒரு வெளிநாட்டு ஜனாதிபதியை வரவேற்று விழாவெடுத்து கௌரவித்து விட்டு, ஒரு மாநில ஆட்சியை கலைத்து மாற்றி, தலைநகரில் ஒரு மதக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து, சிவராத்திரி கொண்டாடிவிட்டு திடீரென விழித்து ஊரடங்கு அறிவித்தோம்… மக்கள் முடங்கினர்… தொழில்கள் அப்படி அப்படியே நின்றன… இதில் பிரதானமாக பாதிக்கப்பட்டது ஏழைகள்… அன்றாடங்காய்ச்சிகள்… தினக்கூலியான அவர்கள், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, வேலை வாய்ப்பின்றி சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினர்… இரயில், பஸ் போன்ற எந்த வசதியும் இல்லாததால் நடந்தே ஊர் திரும்பத் தொடங்கினர்… இந்தியாவின் மிக சோகமான நடைபயணம் இது… அந்த வலியின் ஆவணமாக இதைக் கொள்ளலாம்…