Experience

MIT சென்னை கல்லூரி – கவிதை மற்றும் புகைப்படங்கள் (1997-2001)

Print Friendly, PDF & Email
இந்த வாரம் பழைய கல்லூரி நண்பன் சௌந்தர் ராஜனை சந்தித்தேன், அவன் அக்கா வீட்டில். அப்பொழுது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதில் ஒரு கமெண்ட்டாக மற்றொரு கல்லூரி நண்பன் தியாகராஜன், ‘அப்ப இன்னொரு பதிவு எதிர்பார்க்கலாமா’ என்று கேட்டிருந்தான்.

Madras Institute of Technology – சுருக்கமாக MIT – பல நினைவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. சீனியர், ஜூனியர், நட்பு, காதல், கடலை, அடிதடி, தண்ணி, தம், தற்கொலை முயற்சி, வெள்ளிக்கிழமை சிக்கன், பண்டு, லேடீஸ் ஹாஸ்டல், ராதா நகர், பழம், கப்பு, ப்ராக்சி, குமரன் குன்றம், OAT, வெற்றி, ராகேஷ், பரங்கிமலை ஜோதி, MITAFEST, ஸ்பான்சர்ஷிப் மற்றும் பல. அத்தனையும் சேர்த்து பதிவாக போட முடியாது. எனது அனுபவம் மற்றவரிலிருந்து மாறுபடும். அதனால் இங்கு இரண்டு விஷயங்களைப் பதிவிடுகிறேன்.

ஒன்று, எப்போதோ எனக்கு கிடைத்த MIT பற்றிய ஒரு கவிதை. R.V.ரஞ்சன் NPCCயில் இருந்து 2009இல் எனக்கு அனுப்பியிருந்தான். எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆனால் அனைவருக்குமானது. ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் என்னை என் கல்லூரி காலத்துக்கே அழைத்துச் செல்வது.

இரண்டாவது, என்னிடம் இருக்கும் (மோஸ்ட்லி) இன்ஸ்ட்ருமெண்டேஷன் துறை நண்பர்களுடனான சில புகைப்படங்கள். இன்று எங்கெங்கோ பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் இருக்கும் நண்பர்களின் நினைவுகள். காதலுக்கு சற்றும் குறைவில்லாதது கல்லூரி நட்பு.

மேற்கொண்டு படித்து மற்றும் பார்த்து உங்களுக்கு தேவையான நினைவுகளை நீங்களே ஒரு கொசுவர்த்தி சுற்றி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.


நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா!


ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கிளம்பும் போது 
ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான் 
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…

அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ 
அரை குறையா குளிச்சதுண்டு 
பத்து நிமிஷ பந்தயத்துல 
பட படன்னு சாப்டதுண்டு 

பதட்டத்தோட சாப்பிட்டாலும் 
பந்தயத்துல தோத்ததில்ல 
லேட்டா வர்ற நண்பனுக்கு 
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து 
காலேஜ் Gate நெருங்குறப்ப 
‘வெறுப்படிக்குது மச்சான்’ன்னு 
ஒருத்தன் பொலம்பி தொலைச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம 
வேகவேகமா திரும்பிடுவோம் 
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல ‘வெற்றி’ தியேட்டர்ல படம் பாக்க!

‘கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா 
கடங்கார Professor கழுத்தறுப்பான்…
Assignment  எழுதாத பாவத்துக்கு 
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துத்தான் Punishmentன்னா 
H.O.D.ய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காப்பி இந்தப்பக்கம்னா
அத அடிப்பான் காப்பி அந்தப்பக்கம்…
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து 
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் – தவிக்க விட்டதில்ல…
டீக்கடையில் கடன்வச்சி குடிச்சாலும் 
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும் 
மாமா முறையா போட்ட மோதிரமும் 
Fees கட்ட முடியாத நண்பனுக்காக 
அடகு கடை படியேற அழுததில்ல…

சட்டையை மாத்தி போட்டுக்குவோம் 
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னான்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலேன்னாலும் 
பிரிச்சி வச்சி பாத்ததில்ல…
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலென்னாலும் 
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ 
வேதனைய பாத்துப்புட்டோம் 
‘வெட்டி ஆபீஸர்’ன்னு நெஜமாவே 
மாறி மாறி சிரிச்சிக்கிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு 
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ 
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல 
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…
பக்குவமா இத கண்டும் காணாம 
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்குறப்போ 
‘சாப்பாட்ல காரம்டா மச்சான்’ன்னு 
சமாளிச்சி எழுந்து போவம்…

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது 
“Hi da machan… how are you?”ன்னு…

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜ்,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
Personal loan interest,
Housing loan EMI,
Share market சருக்கல்,
Appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம 
‘இன்னைக்காவது பேச மாட்டாளா?’ன்னு 
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க  நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும் 
இன்டர்நெட் இருந்தாலும் 
கம்பெனியில் ஓசி Phone இருந்தாலும் 
கையில Calling Card இருந்தாலும்… 
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல 
நண்பனோட குரல கேக்க… 
நெனைச்சாலும் முடியுறதில்ல 
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும் 
Orkut இருந்தும் Scrap பண்ண முடியாம போனாலும் 
‘Available’ன்னு தெரிஞ்சும் Chat பண்ண முடியாம போனாலும் 
‘ஏண்டா பேசல?’ன்னு கோச்சிக்க தெரியல…
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு 
வரமுடியாம போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும் 
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி 
பால் எடுத்தவரை கூட இருந்து 
சொல்லாம போக வேண்டிய எடத்துல 
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள் 

தேசம் கடந்து போனாலும் 
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும் 
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும் 
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும் 
‘மாமா’ ‘மச்சான்’ மாறாது!
கவிதை இத்தோட முடிஞ்சுது. இதை எழுதுன சீனியர் யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க. அவருக்கு ஒரு சலாம்.
கொஞ்சம் ஹெவியா உணர்ந்தா கீழ இருக்குற படங்கள பாத்து ரிலாக்ஸ் ஆகிக்கோங்க.
ஏதாவது புகைப்படத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் எனக்கு எழுதவும். உடனே நீக்கி விடுகிறேன். எனது மெயில் [email protected] 

If you have any objection in any of the photos below, please mail me. I will remove them immediately. My mail id is [email protected] 
என்னிடம் இருக்கும் புகைப்படங்கள் இவ்வளவுதான். நினைவுகளே நிறைய்ய இருக்கு. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்.

மறுபடியும், ஏதாவது புகைப்படத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் எனக்கு எழுதவும். உடனே நீக்கி விடுகிறேன். எனது மெயில் [email protected] 

Again, if you have any objection in any of the photos above, please mail me. I will remove them immediately. My mail id is [email protected] 

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.