சீனாவில், தியனன்மென் சதுக்கத்தில் நடக்கும் மாணவர் புரட்சியை ஒடுக்க இராணுவத்தின் பீரங்கிப் படை அணிவகுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவர் அந்த அணிவகுப்பை எதிர்த்து நிற்கிறார். பீரங்கியை ஓட்டும் ராணுவ வீரர்களிடம் பொறுமையாக, பதட்டமில்லாமல் விவாதம் புரிகிறார், அல்லது விளக்க முற்படுகிறார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் யார், அவர் பெயர் என்ன, இப்பொழுது எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்று இதுவரை நமக்குத் தெரியாது. அவரை டேங்க் மேன் (Tank Man), அதாவது பீரங்கி மனிதன், என்றே இந்த உலகம் அறிந்து வைத்திருக்கிறது.
ஜூன் 5, 1989
சீன அரசாங்கத்தை எதிர்த்து மாணவர்கள் பெய்ஜிங்’இல் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் கூடி போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை அரசாங்கம் இரும்புப் கரம் கொண்டு ஜூன் 4, 1989’இல் அடக்கியது. அதற்கு அடுத்த நாள் (ஜூன் 5, 1989) சாங்’ஆன் சாலையின் வழியே அரசின் இராணுவ பீரங்கிகள் தியனன்மென் சதுக்கத்தில் நுழையத் தொடங்கியது. அப்பொழுது ஒரு ஒல்லியான மனிதர் அந்த அகலமான சாலையின் குறுக்கே எங்கிருந்தோ தோன்றுகிறார். நேரே சென்று அணிவகுத்து வந்த பீரங்கி வரிசையின் எதிரே நிற்கிறார். வெள்ளைச் சட்டை. கருப்பு பேண்ட். இரண்டு கைகளிலும் இருண்டு ஷாப்பிங் பை. செய்வதறியாது பீரங்கி நிற்கிறது. நம்மவர் பீரங்கியை நோக்கி தன் கையை ஆட்டி ஏதோ சைகை செய்கிறார். பதிலுக்கு பீரங்கி நம்மவரை சுற்றிவளைத்து செல்லத் தலைப்படுகிறது. நம்மவரும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பீரங்கியில் பாதையில் சென்று அதை வழிமறிக்கிறார். அவரது இந்த அஹிம்சைப் போராட்டத்துக்கு முன்னால் பீரங்கிகள் தடுமாறுகின்றன. கடைசியில் பீரங்கியின் என்ஜின் அணைக்கப்படுகிறது. தொடர்ந்து, பின்னால் வரும் பீரங்கி மற்றும் கவச வாகனங்களின் என்ஜின்களும் அணைக்கப்படுகிறது. இரு தரப்பும் ஒன்றும் செய்யாத் தோன்றாமல் நிற்க, அங்கு ஒரு செய்வதறியாத அமைதி நிலவுகிறது.
பீரங்கிகளை நிறுத்திய பிறகு நம்மவர் அதன் மேல் ஏறுகிறார். உள்ளே இருக்கும் வீரர்களுடன் பேச முயற்சிக்கிறார். துப்பாக்கி துருத்திக்கொண்டிருக்கும் இடைவெளியில் தன் குரலை உள்ளே கொண்டு செல்ல முயற்சிக்கிறார். தனக்கான உரையாடலை முடித்தபின் பீரங்கியில் இருந்து கீழே இறங்குகிறார். பீரங்கி கதவைத் திறந்து வெளியே தன் தலையை மட்டும் காட்டுகிறார் அதன் தளபதி. பீரங்கிகள் உயிர் பெற்று உறுமத் தொடங்குகின்றன. முன்னேறத் தலைப்படும்போது, பீரங்கியை விட்டு ஒன்றிரண்டு மீட்டர் தள்ளி நின்ற நம்மவர் மீண்டும் அணிவகுப்பின் முன்னே பாய்ந்து நிற்கிறார். மீண்டும் அனைத்தும் ஸ்தம்பிக்கிறது. அப்பொழுது, கூட்டத்தில் இருந்து தோன்றும் இரண்டு பேர் நம்மவரை பிடித்து இழுத்துக் கொண்டு மீண்டும் கூட்டத்தில் கரைகின்றனர். பீரங்கிகள் முன்னேறிச் செல்கின்றன.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு இவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கும் நம்மவரை இழுத்துச் சென்ற இருவர் யார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. அவர்கள் PSB (Public Security Bureau)’வை சேர்ந்தவர்கள் என்று ‘நியூஸ்வீக்‘இன் சார்லி கோல் கருதுகிறார். இல்லை, அவர்கள் கூடியிருந்த, நாம்மவர் மீது அக்கறை கொண்ட, பொது மக்கள் என்று ‘தி க்ளோப் அண்ட் மெயில்‘இன் ஜேன் வாங் கருதுகிறார். ஆனால் நம்மவரைப் பற்றி யாருக்குமே எதுவும் தெரியவில்லை. எனினும், 1998 ஏப்ரலில் ‘டைம்‘ இந்த நூற்றாண்டின் முக்கிய 100 மனிதர்களை பட்டியலிட்டபோது அதில் ஒருவராக நம்மவரையும் இணைத்திருந்தது.
அடக்குமுறைக்கு எதிரான வரலாற்றில் நம்மவர் ‘பீரங்கி மனிதர்’ என்று நிலைத்துவிட்டார்.
இந்த சம்பவத்தைப்பற்றி தேடிப் படித்தபோது ஒரு புகைப்படத் தொகுப்பு கிடைத்தது (மூலம் / Source). அதிலிருந்த புகைப்படங்களையே இங்கு கொடுத்திருக்கிறேன். அந்த புகைப்படங்கள் ஒரு நீண்ட கதை சொல்கின்றன. உண்மை, உணர்ச்சி, வலி, ஒற்றுமை, எழுச்சி, போராட்டம், அடக்குமுறை எனப் பலவித உணர்வுகள் மேலோங்குகின்றன. இதோ அந்தப் புகைப்படங்கள் தொடருகின்றன.
|
படம் 1: ஜூன் 5, 1989 – முன்னேறி வரும் பீரங்கிகளை தனியொரு மனிதராக நம்மவர் வழிமறித்து நிற்கிறார். அவருடைய ஒரே கோரிக்கை அப்பொழுது நடந்துகொண்டிருந்த வன்முறை நிற்க வேண்டுமென்பதுதான். பார்வையாளர்களில் இருவர் வந்து அவரை தள்ளிக்கொண்டு செல்ல, பீரங்கிகள் முன்னேறிச் சென்றன. இதுவரை யாரென்று தெரியாதவர் ‘Tank Man’ என்றே உலக மக்களால் அடையாளம் காணப்படுகிறார். |
|
படம் 2: பெய்ஜிங்’இன் தியனன்மென்’இல் ஏப்ரல் 22, 1989 அன்று கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்கு மேல் கூடியிருந்தனர். மேலும் குவிந்து கொண்டிருந்தனர். அதில் கோஷம் போட்டுக்கொண்டு வரும் மாணவர் ஒருவரைத்தான் படத்தில் காண்கிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி’யின் தலைவரும் சீர்திருத்தவாதியுமான ஹு யாவ்பாங் (Hu Yaobang)’இன் இறுதி அஞ்சலிக்காக அவர்கள் கூடியிருந்தனர். இறுதி அஞ்சலி கூட்டத்தின் போது ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் ஏற்படலாம் என்று கருதி சீன அரசாங்கம் இந்த இறுதி அஞ்சலி கூட்டத்தையே தடை செய்திருந்தது. அதையும் மீறி மாணவர்கள் தியனன்மென் சதுக்கத்தில் கூடிக்கொண்டிருந்தனர். |
|
படம் 3: மே 4,1989 – அரசாங்கத்தில் மாற்றம் வலியுறுத்தி பெய்ஜிங்’இன் தியனன்மென் சதுக்கத்தை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள். |
|
படம் 4: மே 18, 1989 – ஜனநாயகத்தை ஆதரித்தும் சீன அரசாங்கத்திற்கு எதிராகவும், தியனன்மென் சதுக்கத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள். |
|
படம் 5: மே 17, 1989 – உண்ணாவிரதப் போராட்டத்தின் நாலாவது நாளில், போராளி ஒருவருக்கு களப் பணியிலிருக்கும் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கிறார்கள். |
|
படம் 6: மே 17, 1989 – ஒரு முழு வண்டியையே மறைக்கும் அளவிற்கு தியனன்மென் சதுக்கத்தில், ஜனநாயகத்தை வலியுறுத்தி கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பேரணி. |
|
படம் 7: மே 19, 1989 – தியனன்மென் சதுக்கத்தில் கூடி போராடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உற்சாகமாக கோஷமிட்டபடி செல்லும் பெய்ஜிங் இளசுகள். |
|
படம் 8: மே 18, 1989 – உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள தியனன்மென் சதுக்கத்தை நோக்கி படையெடுப்பவர்களை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்கள். |
|
படம் 9: மே 19, 1989 – பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து அணிவகுப்பு நடத்தும் பெய்ஜிங் காவல் துறையினர். அரசியல் மறுமலர்ச்சி வேண்டி நடக்கும் மாணவர்களது போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருந்தது. |
|
படம் 10: மே 20, 1989 – சீன பிரதமர் லி பெங் (Li Peng) மார்ஷியல் லா (Martial Law) எனும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தியனன்மென் சதுக்கத்தை நோக்கி முன்னேறிய இராணுவ வண்டியை நிறுத்தி தங்கள் முஷ்டியை உயர்த்தியும் வெற்றிகுறியும் காட்டும் போராட்ட ஆதரவாளர்கள். |
|
படம் 11: மே 20, 1989 – தியனன்மென் சதுக்கத்தை நோக்கி செல்லும் இராணுவ வீரனிடம் தன் மகனை கொடுத்து அறிமுகப்படுத்தும் ஒரு பெண்மணி. பொதுமக்கள் இராணுவத்தை சூழ்ந்து சதுக்கத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க முயன்றனர். அவர்களால் குறைந்தபட்சம் தாமதப்படுத்தவே முடிந்தது. |
|
படம் 12: மே 22, 1989 – “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சதுக்கத்தை காலி செய்யுங்கள்”, என்ற ரீதியிலான துண்டுப் பிரசுரங்களை தியனன்மென் சதுக்கத்தில் கூடி போராடும் மாணவர்கள் மீது தூவும் சீன இராணுவ ஹெலிகாப்ட்டர். |
|
படம் 13: மே 23, 1989 – மா சே துங் படத்தின் மீது பெயிண்ட் எறியப்பட்டதால் படத்தை பாதுகாக்கவேண்டி திரை கொண்டு மூடுகிறார்கள். |
|
படம் 14: மே 28, 1989 – போராளிகளின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் பேச, சுற்றி அமர்ந்து கேட்கும் பெய்ஜிங் பல்கலைக் கழக மாணவர்கள். அவர்களின் இரண்டு வாரமாக சதுக்கத்தில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். |
|
படம் 15: மே 30, 1989 – “ஜனநாயகத்தின் தேவதை” என்ற இந்த 10 அடி உயர சிலையை ஒரு கலைக் கல்லூரி மாணவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். சீன அரசாங்கத்தை எதிர்த்தும், ஜனநாயகத்தை வேண்டியும் இந்த சிலை மாணவர்களால் தியனன்மென் சதுக்கத்தில் நிர்மாணிக்கப் பட்டது. இதை உருவாக்கிய மாணவர்கள் முழங்கியது, “இன்று, இந்த மக்களின் சதுக்கத்தில், மக்களின் தேவதை உயர்ந்து நின்று உலகுக்கு ஒன்றை அறிவிக்கின்றாள்: ஜனநாயகத்தை பற்றிய விழிப்புணர்வை சீன மக்கள் கொண்டுவிட்டனர். ஒரு புது யுகம் பிறக்கப் போகிறது.” |
|
படம் 16: மே 30, 1989 – பெய்ஜிங் போலீஸ் தலைமையகத்தின் முன்னே குவிந்திருக்கும் மாணவர்களிடம், “உங்கள் போராட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசர நிலை சட்டங்களுக்கு எதிரானது” என்று விவாதிக்கும் ஒரு மப்டி போலீஸ்காரர். |
|
படம் 17: மே 30, 1989 – “ஜனநாயகத்தின் தேவதை” சிலையை தியனன்மென் சதுக்கத்தில் நிர்மாணித்து அதற்கு பினிஷிங் டச்-அப் தரும் மாணவர்கள். |
|
படம் 18: ஜூன் 2, 1989 – ‘பெய்ஜிங் டெய்லி’ என்ற தினசரி மாணவர்கள் போராட்டத்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. மாணவர்கள் அந்தப் பிரதிகளை பத்திரிகை அலுவலகத்தின் முன்னே எரிக்கின்றனர். |
|
படம் 19: மே 31, 1989 – தியனன்மென் சதுக்கத்தில் போராடும் மாணவர்களிடம் தன் கருத்தை பகிர்ந்து வாதாடும் ஒரு பெரியவர். |
|
படம் 20: ஜூன் 3, 1989 – பெய்ஜிங்’இல் குவிந்திருக்கும் இராணுவ வீரர்களை திரும்பிப் போகச் சொல்லி முழக்கமிடும் ஒரு மாணவர். |
|
படம் 21: ஜூன் 3, 1989 – மாணவர்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே சிக்கிக் கொண்ட ஒரு இளம்பெண். |
|
படம் 22: ஜூன் 3, 1989 – பின்வாங்கி ஓடும் போலீஸாரை துரத்த முனையும் கூட்டத்தை தடுத்துக் கட்டுப் படுத்தும் மாணவர்கள். அன்று காலை மாணவர்கள் மீது இராணுவம் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் மாணவர்கள் கொதித்துப் போயிருந்தனர். |
|
படம் 23: ஜூன் 3, 1989 – களைத்துப் போன இராணுவ வீரர்களை போராட்டக் களத்தில் இருந்து தள்ளி அப்புறப் படுத்தும் மாணவர்கள். |
|
படம் 24: ஜூன் 3, 1989 – ராணுவம் முன்னேறுவதை தடுக்கும் விதமாக ஒரு பேருந்தை நிறுத்தியிருக்கும் பெய்ஜிங் பொதுமக்கள். |
|
படம் 25: ஜூன் 4, 1989 – மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கெதிரான மோதலின்போது, தியனன்மென் சதுக்கத்தில் உள்ள தடையை தாண்டிச் செல்லும் இராணுவத்தினர். காலை 6 மணிக்குள் சதுக்கத்தை க்ளியர் செய்து விடவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. |
|
படம் 26: ஜூன் 4, 1989 – போராட்டத்தின் போது மாணவர்கள் கொளுத்திய ஒரு இராணுவ கவச வண்டி. |
|
படம் 27: ஜூன் 4, 1989 – சிதைந்த சைக்கிள்களின் இடையே சிதறிக் கிடக்கும் பொதுமக்களின் சடலங்கள். |
|
படம் 28: ஜூன் 4, 1989 – தியனன்மென் சதுக்கத்தில், மாணவர்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் காயமடைந்த ஒரு பெண்ணை வண்டியில் வைத்து அப்புறப்படுத்தும் மாணவர்கள். |
|
படம் 29: ஜூன் 4, 1989 – ஒரு கவச வண்டியை மாணவர்களிடையே செலுத்தி பலர் காயமடைய மற்றும் மரணமடைய காரணமாக இருந்த அந்த வண்டி டிரைவரை மாணவர்கள் இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றனர். அந்த கவச வண்டியும் கொளுத்தப் பட்டது. |
|
படம் 30: ஜூன் 4, 1989 – தியனன்மென் சதுக்கத்தில் பிடிபட்ட ஒரு பீரங்கி டிரைவரை தர்ம அடியில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் மாணவர்கள். |
|
படம் 31: ஜூன் 4, 1989 – கற்களையும் கொண்டு போராடி இராணுவ கவச வண்டியைக் கைப்பற்றி அதன் மேல் ஏறி நிற்கும் பொதுமக்கள். விடியற்காலையில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இராணுவத்துக்கும் மாணவர்களுக்குமிடையே மூண்ட வன்முறை, ஒரே இரவில் பல நூறு உயிர்களை பலி கொண்டிருந்தது. |
|
படம் 32: ஜூன் 4, 1989 – தியனன்மென் சதுக்கத்தில் காயம்பட்ட ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளரை பத்திரமாக அப்புறப்படுத்தும் மாணவர்கள். |
|
படம் 33: ஜூன் 4, 1989 – மதியம் போல இராணுவம் தியனன்மென் சதுக்கத்தின் வெளியே கூடியிருந்த கூட்டத்தின் மீது பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. காயமடைந்தவர்களை அள்ளிப்போட்டுக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரையும் பொதுமக்கள். |
|
படம் 34: ஜூன் 1989 – சீன இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விலங்கிட்டு அழைத்துச்செல்லப்படும் இளைஞர். போலீஸும் இராணுவமும் ஏப்ரல்-ஜூன் புரட்சியில் ஈடுபட்டவர்களை தேடித் தேடி கைது செய்தது. |
|
படம் 35: ஜூன் 5, 1989 – தியனன்மென் சதுக்கத்தில் இராணுவத்தின் பீரங்கி வரிசை நுழைய, மூன்று பேர் அடித்துப் பிடித்து ஓடுகின்றனர். கவனியுங்கள். ஒருவர் மட்டும் அசையாமல் பீரங்கியின் வழியில் நிற்கிறார். பலர் இந்த நிகழ்வை புகைப்படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் இந்தப் போராட்டத்தின் அடையாளமாகிப் போனது. |
|
படம் 36: ஜூன் 5, 1989 – இதோ. இராணுவ அடக்குமுறையை எதிர்த்து தனியொரு மனிதர். |
|
படம் 37: ஜூன் 5, 1989 – திங்கள் காலை. முந்தைய இரவில் இராணுவம் நடைத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர். |
|
படம் 38: ஜூன் 5, 1989 – மேலும் இராணுவ வீரர்களை ஏற்றி வரும் இராணுவ வண்டி. அதற்கு முந்தைய இரவில்தான் பல போராளிகள் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர். |
|
படம் 39: ஜூன் 5, 1989 – ஒரு இராணுவ வீரர் துப்பாக்கி காட்டி மிரட்ட, பொதுமக்கள் பயந்து ஓடுகின்றனர். இராணுவம் முக்கிய இடங்களில் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தது. |
|
படம் 40: இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டின்போது தன்வீட்டில் வந்து விழுந்ததை ஒருவர் காண்பிக்கிறார். இவர் வீடு தியனன்மென் சதுக்கத்தின் மேற்கு பகுதியில் இருந்தது. |
|
படம் 41: தியனன்மென் சதுக்கத்தில் ஜூன் 5, 1989’இல் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் புகைப்படத்தை காண்பிக்கும் சீன பொதுமக்கள். |
|
படம் 42: ஜூன் 5, 1989 – இராணுவ பீரங்கிக்கு பயந்து பாலத்தின் கீழே ஒளிந்திருக்கும் ஜோடி. |
|
படம் 43: ஜூன் 4, 1989 – இராணுவ வீர்கள் தியனன்மென் சதுக்கத்தில் நுழைவதை தடுக்க, இருபதுக்கும் மேற்பட்ட இராணுவ வண்டிகளை கொளுத்தி சாலையில் தடையை ஏற்படுத்தியிருந்தனர் மாணவ போராட்டக்கார்கள். அதை பெய்ஜிங் பொதுமக்கள் பார்வையிடுகின்றனர். மூலையில் இருக்கும் கருப்பு டீ-ஷர்ட் போட்டோ எடுக்க ஒரு ஓவர்கோட் போஸ் கொடுப்பதை கவனியுங்கள். |
|
படம் 44: ஜூன் 13, 1989 – பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் பீரங்கிப் படையை பார்த்தபடியே சைக்கிளில் வேலைக்கு செல்லும் மக்கள். |
|
படம் 45: ஜூன் 4, 2012 – பல வருடங்கள் கழித்தும், பாதுகாப்பு கருதி தியனன்மென் சதுக்கத்துக்கு வடக்கே அணிவகுப்பு நடத்தும் துணை இராணுவப் படையினர். |
|
படம் 46: ஜூன் 4, 2012 – தியனன்மென் சதுக்கத்தில் கூடியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் காவல் துறையினர். கம்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை கவனியுங்கள். |
|
படம் 47: ஜூன் 4, 2012 – ஒரு சுற்றுலா பயணி எடுத்த புகைப்படத்தை சோதிக்கும் போலீஸ் அதிகாரி. |
|
படம் 48: மே 28, 2012 – தியனன்மென் சதுக்க போராட்டத்தில் 1989இல் உயிரிழந்த தன் மகனின் புகைப்படத்துடன் ஒரு தாய். |
|
படம் 49: ஜூன் 4, 2012 – பெய்ஜிங்’இன் தியனன்மென் சதுக்க போராட்டத்தின் நினைவாக ஹாங்காங்’இன் விக்டோரியா பார்க்’இல் கூடியிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள். |
|
படம் 50: ஜூன் 4, 2012 – போராட்டத்தையும் அதில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூறும் இளைய தலைமுறையினர். |
நம்மக்காக போராடி தம் வாழ்க்கையையும் உயிரையும் இழந்தவர்களுக்காக நாம் செலுத்தக்கூடிய மரியாதை ஒன்று மட்டுமே.
அவர்களை மறக்காதிருத்தல்