புகழோடு தோன்றுக (திருக்குறள்) – கதிர் ராத்
புகழோடு தோன்றுக
–கதிர் ராத்
கலக்கல் ட்ரீம்ஸ்
திருக்குறள். இந்த இரண்டடி சொல்லாத விஷயமே இல்லை எனலாம். அறம், பொருள், இன்பம் என அனைத்தும் உள்ளடக்கியது திருக்குறள். உண்மையில் திருக்குறளை எழுதியது யாரென்று தெரியாது. ஒருவரா அல்லது பலரா என்றுகூட நமக்கு உறுதியாக தெரியாது. ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் பத்து திருக்குறள்கள் எழுதுமாறு பணிக்கப்பட்டிருக்கலாம். இது எனது அனுமானமே. தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கொஞ்சம் அறுதியிட்டு கூறலாம். திருவள்ளுவர் சிலை கூட ஒரு அனுமானமே. ஆனால், content என்று வந்துவிட்டால் திருக்குறளை அடிச்சிக்க ஆளில்லை. இரண்டடி. இரண்டே அடி. அத்தனை விஷயங்கள். உலகப் பொதுமறை என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. இந்த திருக்குறளுக்கு ஏகப்பட்ட பேர் உரை எழுதி இருக்கிறார்கள். உரைநடை, கவிதை, சொற்பொழிவு என ஏகப்பட்ட வகைகளில். கதிர் ராத் எழுதியிருப்பது முற்றிலும் புதிய வகை. போர் அடிக்கத சுவையான வகை. திருக்குறளை ரசித்து வாசிக்கத் தூண்டும் கதை வகை.
கதைகள் வழி வளர்ந்த தலைமுறை நம் தலைமுறை. இந்த கணினி யுகத்திலும் உலகின் ஒவ்வொரு நொடியிலும் எங்காவது கதைகள் பரிமாறிக் கொண்டிருக்கும். கதைகள் வழியே தான் உலகும் சமூகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு விஷயத்தை கதைகள் வழி சொல்லும்போது சுவை கூடி நாம் இன்னும் அந்த விஷயத்தில் ஈடுபாடு கொள்கிறோம். உதாரணமாக, முன்னெல்லாம் வரலாறு எனக்கு அவ்வளவு கடினமாக இருக்கும். ஆனால், கதைவழி மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்த போது முகாலயர்கள் மீது ஆர்வம் கொண்டு மேலும் மேலும் வசிக்க ஆரம்பித்தேன். கதைகள் போல் மனதுக்கு நெருக்கமானது வேறில்லை. அப்படிப்பட்ட கதை வழி திருக்குறளுக்கு உரை தந்திருக்கிறார் நம் கதிர். அழகான ஒரு கதை சொல்லி, அதன் முடிவில் அதனோடு பொருள்படும் திருக்குறளோடு தொடர்பு படுத்தி ஒரு புது வகை உரை தந்திருக்கிறார். சில உரைகளை கதைகளல்லாது கட்டுரைகளாகவும் தந்துள்ளார், ஆயினும், அந்த கட்டுரைகளும் வாழ்க்கையோடு இணைந்த சுவையோடு இருப்பதால் நம்மால் ஆர்வமாக இந்த உரைகளில் ஈடுபட முடிகிறது. கதையாக சொல்லும்போது என்னால் திருக்குறளை எளிதாக என் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல முடிகிறது. கதைகள் சொல்லி குறளை வாசித்தபோது சூர்யாவும் வர்ஷாவும் திருக்குறளை பற்றி மேலும் அறிய தலைப்பட்டார்கள். இதுவே இந்த நூலின் வெற்றியாக கருதுகிறேன்.
முகநூலிலும், கதிரின் தளமான தூவானம் பகுதியிலும் குறள்கள் பற்றிய மேலும் கட்டுரை மற்றும் கதைகளை நீங்கள் தேடி படிக்கலாம். புத்தகதில் ஈகை, புகழ் மற்றும் அருளுடைமை பற்றிய குறள் உரைகள் மட்டுமே உண்டு. அதே சமயம் அவரது தூவானம் தளத்துக்கு சென்றுவிட்டலோ புலால் மறுத்தல், புகழ், பாயிரவியல், நாணுத்துறவு உரைத்தல், துறவறவியல், தவம், கூடாவொழுக்கம், காமத்துப்பால், காதற்சிறப்பு உரைத்தல், களவியல், கற்பியல், ஊடல் உவகை, ஈகை, இல்லறவியல், அறத்துப்பால், அருளுடைமை என பிரித்துக்கட்டி வைத்திருப்பார். அத்தனையும் அற்புதம். காதல் மற்றும் காமம் பற்றிய கதைகள் அத்தனை சுவையாக இருக்கும். அவையெல்லாம் புத்தகதில் வராதது எனது மிகப் பெரிய வருத்தம். சமூக கட்டுப்பாடுகளுக்கு பணிந்து விட்டாரோ என தோன்றுகிறது. அப்படி இல்லையெனில், அந்த கதைகள் மற்றொரு தொகுப்பாக வெளிவர வேண்டும். மேலும், சிரமம் பார்க்காது, நேரம் ஒதுக்கி 1330 குறள்களுக்கும் கதிர் கதை வழி உரைகள் எழுதவேண்டும் என்று எனது ஆசை.
My verdict: ஒரு முறை படிக்கலாம்