வாளிப்பற்ற உடல்காரி – தனசக்தி
வாளிப்பற்ற உடல்காரி
–தனசக்தி
தாலம் வெளியீடு
தோழி தனசக்தியின் கவிதைத் தொகுப்பு, இந்த வாளிப்பற்ற உடல்காரி. முகநூலில் அறிமுகமாகி குடும்ப நண்பரானவர். அவரிடம் இருந்தே கையெழுத்திட்ட பிரதியை தபாலில் பெற்றுக்கொண்டேன். வாளிப்பற்ற உடல்காரி ஒரு மிகச் சிறிய கவிதைத் தொகுப்பு. ரொம்பவும் கடினமான வார்த்தைகள் இல்லாமல் இலகுவான தமிழில் இருந்தது சந்தோஷம். இந்த தொகுப்பில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. இது ஒரு வசதி. பல நேரங்களில் தலைப்புக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே ஒரு sudoku புதிர் போல் ஆகிவிடுவதுண்டு. தென்றல் போல வாசித்து முடிக்க முடிந்தது.
கவிதைகளில் பியுலா என்ற ஒரு கதாபாத்திரம் அவ்வப்போது வளைய வருகிறது. ‘வாளிப்பான உடல்காரி’ வெளிவந்தபோது தனசக்தி பியுலா என்ற தலைப்பிட்டு பெண் குழந்தைகளின் படங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். அத்தனையும் அவ்வளவு அழகான புகைப்படங்கள். இந்த பதிவின் முடிவில் தனசக்தி முகநூலில் பகிர்ந்த பியுலாக்களின் புகைப்படங்கள் சிலவற்றை தந்துள்ளேன். கவிதைகளில் பியுலா வரும்போதெல்லாம் என்னால் அவளை கவிதையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
பெண்களை பற்றி ஆண்கள் எழுதினால் அழகியல் வெளிப்படும். ஆண்களின் கண்களுக்கு பெரும்பாலும் பெண்ணின் அழகும், சமயத்தில் அன்பும் (mostly தாயன்பு) வெளிப்படும். ஆண்களைப்பற்றி பெண்கள் எழுதும்போது அது வேறு ஒரு அழகியலாக வெளிப்படும் – ஆண்டாள் போல. பெண்கள் பற்றி பெண்கள் எழுதும்போது அது சிலாகிக்கப்படும், அதெல்லாம் ரொம்பவும் rare piece என்பதால். மின்னலே படத்தில் வரும் கவிஞர் தாமரையின் ‘வசீகரா’ போல. அல்லது விசில் படத்தில் வரும் ‘அழகிய அசுரா’ பாடல் போல. இந்த ‘வாளிப்பற்ற உடல்காரி’ வேறொரு வகை. பெண்கள் பற்றி, ஆனால் தேவையற்ற அழகியல் இன்றி, நிதர்சனத்தை எழுதியது போல் இருந்தது. பெண்களை, அவர்கள் அழகை, மேன்மையை, தியாகத்தை தேவையின்றி romantisize செய்யாமல் அப்படியே எழுதியதாக பட்டது. காமம், அழகு, வன்கொடுமை, காலம் தாழ்ந்த திருமணம் பற்றியெல்லாம் இருந்தது.
அப்பாவின் மீது வீசிய நிக்கோடின் மணத்தை விரும்பும் பெண், தன் கணவனின் சாராய நெடியுடனான உடலுறவில் காமம் துறக்கிறாள் ஒரு கவிதையில்.
தேவதைகளை வெண்ணிறத்தவர்களாக சொன்ன கதைமாந்தர்களையும் ஓவியர்களையும் வசைபாடி, கருத்த உதடுகள், வெடிப்பு நிறம்பிய பாதங்கள், வியர்வை மணக்கும் உடல்வாசம், உடல் எடை, பல் வரிசை இவையெல்லாம் கவனித்து ரசிக்கத் தவறியதற்காக கோபம் கொள்கிறாள் ஒரு கவிதையில்.
வாளிப்பற்ற உடல்காரி என்று ஒரு கவிதை தொடங்குகிறது. இந்த தொகுப்பிலேயே ஆகச் சிறந்த கவிதையாக எனக்கு இந்த கவிதையே தோன்றியது. பருத்த இடை, பெருத்த தனங்கள், பழைய சோற்றை அள்ளி தின்னும் பழக்கம், நாள் முழுவதுமான உழைப்பு, தடித்த தோல், தொப்பை வயிறு என இருக்கும் மண்டோதரிகள் மீது நமக்கு காதல் தருகிறது இக்கவிதை.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை சொல்கிறது ஒரு கவிதை. முலையற்ற காம்பு படும் அவஸ்தையும், யோனியற்ற குழந்தையின் குறி எதிர்கொள்ளும் வன்முறையும் சொல்லி அரற்றுகிறது. சொந்தமே சுரண்ட, அவர்களிடமே “நம்ம தாத்தாதானே” என்றும் “நம்ம மாமாதாண்டி” என்றும் சமாதானம் சொல்லி, விகல்பமின்றி, ஆபத்து அறியாது, குழந்தையை அனுப்பும் தாயை சாடுகிறது மற்றொரு கவிதை. தாயிடமும் சொல்ல முடியாமல் தன் போம்மைகளிடம் சொல்லி ஆறுதல் தேடுகிறாள் மற்றொரு பியுலா.
குடும்பத்தை காக்க கடன்பட்டு, சுமையால் தூக்கில் தொங்கும் அப்பத்தா பற்றி ஒரு கவிதை சொல்கிறது. ஏதோ காரணத்தால் இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து அறையில் தூக்கில் தொங்கப் போகும் தாயைப் பற்றி அறியாது விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பற்றி சொல்கிறது மற்றொறு கவிதை.
கடைசி கவிதைகளில் பியுலா ஆசிஃபா’வாக மாறும்போது மனம் இன்னும் கனமாகி விடுகிறது.
My verdict: வந்ததும் ஒருமுறை வாசித்தேன். இடையில் சில நாட்கள் முன்பு வாசித்தேன். இதோ, இப்பொழுது இதை எழுதும் முன் இன்னொரு முறை வாசித்தேன்.