Article

ஸ்கூப்

Print Friendly, PDF & Email

ஸ்கூப்
குல்தீப் நய்யார்
மதுரை பிரஸ்

scoop-kuldip-nayar-front-coverபல ஆண்டுகள் கழித்து அன்று February 11, 2015 அப்படி வெளியில் சென்றோம் என்று சொல்லலாம். நான், அம்மா, அப்பா, தம்பி வேதராமன் மற்றும் தங்கை சுபா. வேறு யாரும் இல்லை. சசி குழந்தைகள் ஊரில் இல்லை. சுபாவின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். வேதரமனுக்கு கல்யாணமே ஆகவில்லை. அதனால், அது ஒரு முழுமையான ஸ்பெஷல் குடும்ப சந்திப்பு. சென்னை Phoenix Mallக்கு சென்றோம். அனைவருக்கும் வாசிப்பு ஆர்வம் இருந்ததால், ஒரு புத்தக கடையில் ஒருமனதாக நுழைந்தோம். அப்பா அம்மாவுக்கு எதாவது புத்தகம் எடுக்கலாம் என்றபோது அம்மா சுஜாதாவின் ‘மீண்டும் ஜீனோ‘ எடுத்துக்கொண்டார். (இதன் முதல் பாகமான ‘என் இனிய இயந்திரா‘வை முன்னரே உடுமலை‘யில் இருந்து வாங்கித் தந்திருந்தேன்.) ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் கைவசம் பிரதி இல்லாததாலும், படித்து பல ஆண்டுகள் ஆகியிருந்ததாலும் அம்மா அதை எடுத்துக்கொண்டார். அப்பாவுக்கு தான் அவருக்கு பிடித்தமான புத்தகத்தை தேட வேண்டியிருந்தது. பொழுதுபோக்கு மற்றும் புனைவை அப்பா அவ்வளவாக விரும்பவில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் வரலாற்று புத்தகங்களான ‘எனது இந்தியா’ மற்றும் ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை சொன்னபோது எஸ்.ரா. ஒரே சோகம் இழையோட எழுதுவார் என்று கூறி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. குல்தீப் நய்யாரின் ‘ஸ்கூப்’ கண்டபோது உடனே எடுத்துக்கொண்டார். ‘ஸ்கூப்’ பற்றி யாரோ சொல்லி கேட்டிருந்ததாலும், புத்தத்தை புரட்டியபோது ஏற்பட்ட ஆர்வத்தாலும் அதையே எடுத்துக்கொண்டோம். அடுத்த முறை ஊருக்கு சென்ற போது அப்பாவும் அம்மாவும் புத்தகங்களை படித்து முடித்து இரண்டையும் என்னிடமே தந்துவிட்டனர்.

scoop-maduraipress-k-muralitharan

கே.முரளிதரன்

‘ஸ்கூப்’ படிக்க படிக்க அத்தனை அட்டகாசமாக இருந்தது. தலைப்புக்கேற்றார் போல ஒவ்வொரு செய்தியும் அத்தனை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. சுவை குன்றாது ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. தமிழாக்கம் செய்த கே.முரளிதரன்‘க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘ஸ்கூப்’தான் முரளிதரனின் முதல் புத்தக தமிழாக்கம் என்று அறியும்போது அவரை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. இவரின் இந்தியா டுடே, NDTV-Hindu மற்றும் புதிய தலைமுறை அனுபவங்கள் நிச்சயமாக கைகொடுத்திருக்கும். தனது மதுரை பிரஸ்  மூலம் இதுவரை ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார், மூன்று ஆங்கிலம் to தமிழ் மொழிபெயர்ப்பு உட்பட. மேலும், துப்பறியும் நாவல் மற்றும் குழந்தைகளுக்கான படைப்புகளை தமிழில் வெளியிடுவதில் ஆர்வமாக உள்ளார். விருப்பவுடையவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் [email protected]

scoop-kuldip-nayar

குல்தீப் நய்யார்

குல்தீப் நய்யார் பற்றி நீங்கள் தேடினாலே அவ்வளவு கிடைக்கும். அவரது ஆங்கில கட்டுரைகளை மேலும் படிக்க அவரது வலைப்பக்கத்துக்கு செல்லலாம். Kuldip Nayar – Journalist & Columnist

‘ஸ்கூப்’ படிக்க தொடங்கிய வேகத்தில் ஆர்வத்தால் உள்ளிழுக்கப்பட்டு சரசரவென முடித்து விட்டேன். சொன்ன விஷயம் தாண்டி அற்புதமான மொழிபெயர்ப்பும் முக்கிய காரணம். இந்த புத்தகத்தை விமர்சனம் செய்வதைவிட இதில் உள்ள பல சுவையான செய்திகளில் சிலவற்றை இங்கு சொல்லி, மேலும் பலரை இந்த புத்தகம் படிக்க தூண்டுவதே இந்த பதிவின் காரணம்.

My verdict: நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்.

பிகு: இதில் பல பகுதிகளை டைப் செய்து உதவிய சசி’க்கு நன்றி.

scoop-kuldip-nayar-back-cover

மகாத்மா காந்தி மரணம்

ஜனவரி 30, 1948 அன்று நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது நய்யார் எழுதிய ரிப்போர்ட் இது:

A Sikh priest reciting scriptures by the body of Mahatma Gandhiji lying in State.

மகாத்மா காந்தி (PC: The Hindu Archives)

மகாத்மா காந்தி என்று அழைக்கப்பட்ட மனிதர் தற்போது உயிருடன் இல்லை. நாதுராம் கோட்ஸே என்ற இந்து வெறியன் அவரைக் கொன்றுவிட்டான். அதற்கு மேலும் அவன் ஒரு காரியத்தை செய்திருக்கிறான். மதத்தின் பெயரால் வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட முயற்சித்திருக்கிறான்.

கோட்ஸே தனி ஆளில்லை. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைக் குலைக்கும் ஒரு சதியே அவனுக்குப் பின்னால் இருப்பதாக அரசு நினைக்கிறது. கோட்ஸேவின் பின்னணியில் இந்து மகாசபை இருப்பதாகத் தெரிகிறது. வழக்கத்தைவிடச் சற்று தாமதமாக சுமார் நான்கு மணியளவில் தன அறையிலிருந்து பிரார்த்தனை மைதானத்துக்கு கிளம்பினார் காந்தி. பாதி வழியில் கோட்ஸே அவரை மூன்று முறை சுட்டான். ஹே ராம் என்ற வார்த்தைகளை உச்சரித்தபடி காந்தி கீழே விழுந்தார்.’

இந்தியா தாக்கப்பட்டால்

1945ஆம் ஆண்டு.

நய்யார் லாகூரில் இருந்த சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நேரம். முகமது அலி ஜின்னா அந்த கல்லூரிக்கு உரையாற்ற வந்திருந்தார். அப்பொழுது ஜின்னாவிடம் நய்யார் இரண்டு கேள்விகள் கேட்கிறார்.

Mohandas Karamchand Gandhi (1869 - 1948) leaves the home of Muhammad Ali Jinnah (1876 - 1948, left), founder of the Muslim League, en route to the Viceroy's Lodge in Delhi, 24th November 1939. (Photo by Kulwant Roy/Topical Press Agency/Hulton Archive/Getty Images)

மகாத்மா காந்தி & முகமது அலி ஜின்னா (PC: Hulton Archive)

கேள்வி ஒன்று: இந்துக்களும் முஸ்லிம்களுக்கும் இடையில் சில வருடங்களாகவே வெறுப்பு விதைக்கப்பட்டு வரும் நிலையில், பிரிட்டிஷ்காரர்கள் சென்றவுடம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகமாட்டார்களா?

ஜின்னா அப்படி நினைக்கவில்லை. வகுப்புக் கலவரம் ஏற்படும் என்று கூட நினைக்கவில்லை. “இரண்டு தேசங்களையும் இணைக்கும் விஷயம் எதுவுமே இல்லை. ஆனால், அவர்கள் பிரிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்; எந்த மோதலும் இருக்காது” என்று ஜின்னா கூறினார்.

தேசப் பிரிவினையின் போதும் பின்பும் இப்பொழுதும் நடப்பதை பற்றி சொல்லவேண்டியதில்லை உங்களுக்கு.

கேள்வி இரண்டு: ஒரு மூன்றாவது நாடு இந்தியாவைத் தாக்கினால் பாகிஸ்தான் என்ன செய்யும்?

“பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும்” என்று எந்தத் தயக்கமும் இன்றி பதலளித்தார் ஜின்னா. “எங்களுடைய வீரர்கள் எதிரியைத் தோற்கடிக்க உங்களுடன் போராடுவார்கள்” என்றார்.

1962இல் சீனா இந்தியாவைத் தாக்கியபோது அம்மாதிரி ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது இராணுவ ஆட்சியாளராக இருந்தவர் முகமது அயூப் கான். இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என் பாகிஸ்தானிற்குள் குரல்கள் எழுந்தன.

அந்த நேரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியிருந்தால், நாங்கள் தில்லிவரை சென்றிருப்போம் என்று ஜுல்ஃபிகர் அலி புட்டோ நைய்யாரிடம் ஒரு முறை சொன்னார். இந்தியாவுக்கு சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் அந்த நேரத்தில் நடவடிக்கையில் இறங்கவில்லை என்று அயூப் கான் விளக்கினார். அமெரிக்காவும் பிரிட்டனும் வற்புறுத்தியதன் பேரில்தான் அப்படி செய்யவில்லையாமே என்று நய்யார் கேட்க, “இல்லை. நான் இந்தியாவை முதுகில் குத்த விரும்பவில்லை. நான் செய்தது சரிதானா என்ற குழப்பம் இன்னுமும் எனக்கிருக்கிறது” என்று மறுத்தார் அயூப்.

டார்ஜீலிங் யாருக்கு

இந்திய விடுதலையின்போது இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. எல்லைக்கோடு வரையறுக்கப்பட ஜஸ்டிஸ் சிரில் ரெட்க்ளிப் தலைமையல் எல்லை கமிஷன் அமைக்கப்பட்டது.

Post Card of a Coolie Woman - Darjeeling

கூலிப் பெண், டார்ஜீலிங் (PC: www.oldindianphotos.in )

எல்லை கமிஷனில் நான்கு உறுப்பினர்கள் இருந்தார்கள். மெஹர் சந்த் மஹாஜன், தேஜா சிங் ஆகிய இருவரும் இந்தியர்கள். தீன் முகமது, முகமது முனீர் என்ற இருவரும் பாகிஸ்தானியர்கள். அவர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றியவர்கள். இந்திய உறுப்பினர்கள் இந்தியாவுக்கு சார்பாகவும், பாகிஸ்தான் உறுப்பினர்கள் பாகிஸ்தானுக்கு சார்பாகவும் பிரிந்து நின்றதால் உண்மையில் ரெட்கிளிப்தான் யாருக்கு எந்த பகுதி வர வேண்டும் என்பாதை முடிவுசெய்தார்.

எல்லை கமிஷனில் இருந்த உறுப்பினர்கள் விஷயத்தில் ரெட்ச்ளிப்பிற்கு அதிருப்திதான். தாங்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கு ஆதரவாக விஷயங்களை முன்வைத்ததை தவிர அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. இருதரப்பும் முடிந்தளவு தங்கள் நாட்டிற்கு அதிக நிலப்பரப்பை பெற முயற்சி செய்தார்கள். ஒரு இஸ்லாமிய உறுப்பினர் ரெட்ச்ளிப்பை தனியாக சந்தித்து, டார்ஜீலிங்கை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “ஒவ்வொரு கோடை காலத்திலும் எனது குடும்பம் டார்ஜீலிங் செல்வது வழக்கம். அந்த இடம் இந்தியாவுக்கு போய்விட்டால் எங்களுக்கு சிரமமாகிவிடும்” என்றாராம் அவர்.

இந்தியாவின் பொது மொழி

Govind Ballabh Pant and Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு மற்றும் கோவிந்த வல்லப பந்த் (PC: www.thetimes.co.uk )

இந்தியை முதன்மை மொழியாகவும் ஆங்கிலத்தைத் துணை மொழியாகவும் மாற்றுவதற்கு அன்றைய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் தலைமையிலான நாடாளுமன்றக் குழு தயார் செய்த அறிக்கை, பந்த்தின் குருவான பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிடிக்கவில்லை. ஆங்கிலம் புழங்கும் சூழலில் வளர்ந்த நேருவுக்கு ‘துணை’ (subsidiary) என்ற வார்த்தை ஆங்கிலத்திற்கு பயன்பட்டிருப்பது கொதிப்பை தந்தது. அகராதிகள் திரட்டப்பட்டன. ‘துணை’ என்பதற்கு பதிலாக ‘கூடுதல்’ (additional) என்ற வார்த்தை பயன்படுத்தப்படலாம் என்றும் உணரப்பட்டது.

துணை, கூடுதல் என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் என்று நேருவுக்கு எழுதினார் பந்த். மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சென்னை அரசின் அறிக்கையில் கூட ‘துணை’ என்கிற வார்த்தை பயன்படுதப்ப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார் பந்த். “ஆங்கிலம் துணை மொழியாகத் தொடர்வதற்கான வழிவகைகள் செய்யப்படுமானால் 1965இல் இந்தி முதன்மை அரசு மொழியாக அங்கீகரிக்கப்படலாம்” என்றது சென்னை அரசின் அறிக்கை.

ஆனால், பந்த்தின் வாதத்தை நேரு ஏற்றுக்கொள்ளவில்லை. தொலைபேசியில் பேசிய நேரு பந்த்திடம் மிகவும் கோபப்பட்டார். அந்தத் தொலைபேசி உரையாடலுக்கு பிறகு பந்த் மிகவும் புண்பட்டிருந்தார். நேரு என்ன சொன்னார் என்று பந்த் சொல்லவில்லை. ஆனால் நய்யாரிடம் இவ்வாறு வருத்தப்பட்டார் “இந்தி இனி எப்போதும் இந்தியாவின் போது மொழியாக இருக்கவே முடியாது. நீ பார்க்கப்போகிறாய். அந்த நாள் வருவதற்குள் நான் இறந்து போயிருப்பேன். பண்டிட்ஜி (நேரு) நிலைமையை மோசமாக்கிவிட்டார்.”

மாமனிதர்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடந்ததை ஜூல்பிகர் அலி புட்டோ மறுக்கவில்லை. 1965ஆம் ஆண்டு இந்தோ-பாக் யுத்தத்தைப் பற்றிய வருத்தமும் அவருக்கு இல்லை. ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய ரானுவம் தயாராகும் விதத்தைப் பார்த்துத்தான் தான் யுத்தத்தைத் துவங்கியதாக வாதித்தார் புட்டோ. பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறதென்றால், அது 1965இல்தான் என்று புட்டோ கருதினார்.

புனிதப் போருக்காக முஜாஹிதீன்கள் தேவை என பாகிஸ்தானின் அதிபர் அறிக்கை விடுத்திருந்தார். பாகிஸ்தான் அரசே ஜிகாதிகளின் படையை உருவாக்கி, பயங்கரவாதிகளைப் பயற்சியளிப்பது என்பது பாகிஸ்தானின் சரித்திரத்தில் அப்பொழுதுதான் ஆரம்பமானது.

Lal Bahadur Shastri

லாகூர் பகுதியில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  October 18, 1965 (PC: Photo Division)

ஜம்மு-காஷ்மீர் முழுக்கப் பல இடங்களில் ஊடுரவல் நிகழ்ந்தது. தாங்கள் ‘விடுதலை பெற்றுத்தர’ வந்திருக்கும் மக்களிடமிருந்து இயல்பாக பெரும் ஆதரவு கிடைக்கும் என்று பாகிஸ்தானியர்கள் நம்பினார்கள். ஆனால் உள்ளுர் மக்கள் அவர்களோடு ஒட்டவில்லை. ஊடுருவல் நடவடிக்கை பிசுபிசுத்தது. ஊடுருவல்காரர்களை போர் நிறுத்தக் கோட்டை தாண்டிச் சென்று விரட்டவேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள். தேவைப்பட்டால் அப்படிச் செய்யப்படும் என்று மக்களவையில் ஒய்.பி.சவாண் உறுதியளித்தார் (23 ஆகஸ்ட் 1965).

சில நாட்களுக்குப் பிறகு அந்தத் தேவை ஏற்பட்டது. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று இந்தியப் படைகள் ஊரி செக்டாரில் ஊடுருவல்காரர்கள் குவிவதைத் தடுக்க போர் நிறுத்தக் கோட்டைக் கடந்தன.

போர் நிறுத்தக் கோட்டையும் சர்வதேச எல்லையில் ஒரு பகுதியையும் கடந்து, செப்டம்பர் 1ஆம் தேதி அக்னுர்-ஜம்மு பகுதியில் பெரும் தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனதை இது மாற்றியது. இரண்டு நாட்களுக்கு பிறகு, செப்டம்பர் 3ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் செல்லும்படி இந்தியப் படைகளுக்கு உத்தரவிட்டார் சாஸ்திரி.

“பாகிஸ்தானுக்குள் முன்னேறிச் செல்லும்படி நான் சொன்னபோது, சௌதிரியும் (இந்திய படைகளின் தலைமைத் தளபதி) பிறரும் சற்று அதிர்ந்துபோனார்கள்” என்று போர் முடிந்தபிறகு நய்யாரிடம் சொன்னார் சாஸ்திரி.

“மிகக் குள்ளமான மனிதர் எடுத்த மிக உயர்ந்த முடிவை ராணுவம் ஒருபோதும் மறக்காது” என்று ஹர்பக்ஷ் சிங் மற்றொரு சந்தர்பத்தில் நய்யாரிடம் சொன்னார்.

சாஸ்திரியின் உயரம் வெறும் ஐந்து அடிதான்!!!

அதிநவீன எமன்

1965ஆம் ஆண்டு இந்தோ-பாக் யுத்தம்.

சர்வதேச எல்லையில் போர் நடந்தாலும், உண்மையான சண்டை கேம் கறண் செக்டாரில்தான் நடந்தது. அந்த இடத்தில் பாகிஸ்தானியப் படைகள் அமிர்தசரஸிற்கு அருகில் ஜந்தியால் குருவில் உள்ள கிராண்ட் ட்ரங்க் சாலையைத் துண்டிக்க திட்டமிட்டிருந்தன. ஆனால் அந்த திட்டத்தை தவிடுபோடியாக்கியிருந்தது இந்திய ராணுவம்.

Patton tank Khem Karan

சாலையை விட்டு இறங்கி, பாகிஸ்தானிய வீரர்களால் கைவிடப்பட்ட ஒரு பேட்டன் டாங்கி, 1965 (PC: www.bharat-rakshak.com)

கேம் கரண் செக்டாரின் நிலப்பகுதி இந்தியாவுக்கு மிகவும் உதவியது. அங்கு, பாகிஸ்தானிய டாங்கிகள் வரிசையாக நின்று இந்தியாவைத் தாக்க வேண்டியிருந்தது. நதி ஒருபுறமும் வாய்க்கால் மற்றொரு புறமும் ரயில்வே லைன் இன்னொரு புறமும் இந்தியப் படைகளுக்கு அரணாக விளங்கியது. தவிர, அமெரிக்கா வழங்கியிருந்த அதிநவீன பேட்டன் டாங்கிகளை (M47 வகை) இயக்குவது சாதாரண பாகிஸ்தானிய வீரர்களுக்கு சாமானியமான காரியமாக இல்லை. கம்ப்யூட்டரில் அடிக்கடி தவறு ஏற்பட்டது. தவறான தகவல்கள் கம்ப்யூட்டருக்கு தரப்பட்டன. அதைவைத்து, இந்திய வீரர்களை குறிபார்த்து சுடுவது இயலாத காரியமாக இருந்தது. எளிய குழப்பமில்லாத டாங்கிகள் இருந்திருந்தால் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களை வீழ்த்தியிருக்கக்கூடும். இதைக் கேட்க விசித்திரமாக இருக்கலாம். ஆனால், பேட்டன் டாங்கிகளின் அதிநவீன தொழில் நுட்பமே பாகிஸ்தானியர்களுக்கு எமனாக முடிந்தது.

பிற்சேற்கை: இந்த பதிவை படித்துவிட்டு முகநூலில் நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி சொன்னது – ‘பேட்டன் பீரங்கியின் பின் பக்கதிலிருந்த ஒரு சிறு கட்டுமானத் தவறே, அவ்வகை பீரங்கிகள் செயலிழக்க காரணம். அதை கண்டுபிடித்தது ஒரு இந்திய சிப்பாய். அதை வைத்து வியூகம் வகுத்து சுமார் 30 பீரங்கிகள் வரை அப்போரில் நமது படைகள் தகர்த்து எறிந்தன. அப்போர்க்குப் பிறகு அதன் தயாரிப்பு நாடான அமெரிக்கா அந்த ரக பீரங்கிகள் அனைத்தையும் திரும்ப பெற்றது.’

புத்தக ராயல்டி

Indira Gandhi with Congressmen at her office in Parliament House in 1966. The Indira era consolidated power at the Centre

காங்கிரஸாருடன் இந்திரா காந்தி, 1966 (PC: Raghu Rai)

எமெர்ஜன்சி பிரகடணம் செய்த, பல கடினமான முடிவுகளை எடுத்த, இந்தியாவின் முதல் பெண் பிரதமராய் இருந்த, தன்னை பிரதமர் இருக்கையில் அமர்த்திய காமராஜரையே பின்னொரு நாளில் யாரென்று கேட்ட இந்திரா காந்தி ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தே விலகும் நிலையில் இருந்தார் என்றால் நம்ப முடியுமா?

1964 வாக்கில் இந்தியாவின் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்த இந்திரா காந்தி, அமெரிக்க நெருக்குதலால், தான் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று நினைத்தார். அந்த சமயத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த தினேஷ் சிங்கிடம், பிரிட்டனில் செட்டிலாவது பற்றியும் அங்கிருக்கும் விலைவாசி பற்றியும்கூடக் கேட்டாராம். தன் தந்தை நேரு எழுதிய புத்தகங்களிலிருந்து கிடைக்கும் ராயல்டியை வைத்தே வாழ்க்கையை நடத்த நினைத்திருந்தாராம் இந்திரா காந்தி!

காங்கிரஸ் தோல்வி

சுதந்திரத்திற்கு பின் நடந்த அந்த நாலாவது பொதுத் தேர்தல் முடிவுகள் காங்கிரசை அதிரச் செய்தன. 520 உறுப்பினர்கள் கொண்ட மக்களவைத் தொகுதியல் 281 இடங்களையே காங்கிரஸ் கைப்பற்ற முடிந்தது. ஏற்கனவே இருந்த இடங்களில் 83 இடங்களை இழந்தது காங்கிரஸ். அதேபோல, நாட்டிலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதியளவையே காங்கிரசால் வெல்ல முடிந்தது. அதாவது மொத்தமிருந்த 3483 தொகுதிகளில் வெறும் 1688 தொகுதிகளையே கைப்பற்றியது காங்கிரஸ்.

Election Results 1967. At the election information centre in New Delhi, 1967. The Posts and Telegraphs Department opened similar centres in several cities in the country.

தேர்தல் தகவல் மையம், டெல்லி 1967. இதே போன்ற பல மையங்களை நாடு முழுவதும் அமைத்தது அன்றைய தபால் தந்தி துறை. (PC: www.frontline.in)

உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களிலும் தில்லி, மணிப்பூர் ஆகிய மத்திய ஆட்சிப் பிரதேசங்களிலும் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.

நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாக, வெளிப்படையாகவே இந்து தேசம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த ஜனசங்கம் இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. வலதுசாரி சுதந்திரா கட்சி குஜராத்திலும் ஒரிசாவிலும் வெற்றிபெற்றது.

ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் தவிர்த்த எல்லா மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களை வென்றது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. வடநாட்டினரின் ‘ஆதிக்கத்தை’ எதிர்த்து குரல் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரசை படுதோல்வியடையச் செய்தது. 234 இடங்களில் 49 இடங்களையே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது.

அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையும் அதைவிட மோசமாக அதைச் செயல்படுத்தியதும்தான் இந்தத் தோல்விக்கு காரணம் என்று தேர்தல் தோல்வியை ஆராய்ந்த பெருந்தலைகள் சொன்னார்கள்.

ஜெயில் அனுபவம்

தன் ஜெயில் அனுபவம் பற்றி குல்தீப் நய்யார் எழுதியிருக்கிறார்:

jail india AFP

கைதிகளுடன் பேசும் உறவினர்கள் (PC: www.firstpost.com AFP)

‘பிரதமர் இந்திரா காந்தி உங்கள் உடல்நலம் பற்றி விசாரித்தார்’ என்று சொன்னார் தில்லியின் துணை கமிஷனர். இந்த உரையாடல் தில்லிக்கு வெளியில் அமைந்திருக்கும் திஹார் சிறையில் நடந்து. 1975ஆம் வருடத்தின் பிற்பகுதி அது. நெருக்கடி நிலை காலகட்டம். நான் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

நானும் இந்திரா காந்தியும் நீண்ட கால நண்பர்கள். ஒருமுறை அவர் தன் தலைமுடியைச் சின்னதாக வெட்டிக் கொண்டபோது, அந்தப் புதிய தலையலங்காரம் தனக்கு நன்றாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். அந்த அளவுக்கு நங்கள் நண்பர்கள்.

துணை கமிஷனர் என்னைச் சந்தித்த அந்த நேரத்தில் நான் சிறைக்கு வந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருந்தது. நான் சௌகரியமாக இருக்கிறேனா என்று கேட்டார் அவர். அந்த சிறையில் அதிகப்படியான ஆட்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலை சுத்தமில்லாமல் இருப்பதாகவும் சொன்னேன் நான். அந்தச் சிறையின் கொள்ளளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான அளவு ஆட்கள் அங்கே அடைக்கப்பட்டிருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார் அவர். ஒரு எதிர்ப்புப் போராட்டத்திற்காக அந்தச் சிறையில் முன்பு அடைக்கப்பட்டிருந்த அகாலிகள் சிறையில் இருந்த கழிப்பறைக் குழாய்களை எல்லாம் உடைத்துவிட்டிருந்தார்கள்.

என் நலத்தைப் பற்றி விசாரித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும்படி துணை கமிஷனரிடம் சொன்னேன். எனக்கு அங்கே வழங்கப்பட்ட சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால் என் எடை பத்து கிலோ குறைந்துவிட்டது. அங்கே ஏகப்பட்ட ஈக்கள். எங்களுக்கு முக்கிய உணவாக வழங்கப்பட்ட பருப்புக் குழம்பில்தான் அவை நீச்சல் பழகின என்பதும் எனக்கு உணவு பிடிக்காமல் போனதற்கு மிக முக்கியமான காரணம். நான் விடுதலையான பிறகு, சிறைச்சாலை மிக அசுத்தமாகவும் சகிக்க முடியாததாகவும் இருப்பதாக உள்துறை இணை அமைச்சரிடம் சொன்னேன். அவர் சொன்ன பதில் இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது; “உங்களை ஒன்றும் ஐந்து நட்சத்திர அசோகா ஓட்டலுக்கு அனுப்பவில்லை.”

நெருக்கடி நிலையின் முடிவு

Investigative Journalism என்றால் என்ன தெரியுமா? ஒரு முக்கிய புள்ளியை ஏதாவது ஆசை காட்டி தூண்டிவிட்டு, அதை யாரும் அறியாமல் இரகசிய கேமரா மூலம் படம் பிடித்து TRP எற்றுவதல்ல. (நித்யானந்தாவை படம் பிடித்து வெகுஜன செய்தியில் போட்டதெல்லாம் பத்திரிக்கை அக்கிரமம்.)

indian express emergency proclaimed

நெருக்கடி நிலை பிரகடனம் (PC: www.indianexpress.com)

இந்திரா காந்தி கொண்டுவந்திருந்த நெருக்கடி நிலை (அல்லது சிம்பிளா சொன்னா, எமெர்ஜென்சி) நிலவிக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1976 நவம்பரில் அரசியல் அரங்கில் காட்சிகள் வேகமாக சுழல ஆரம்பித்தன. தில்லியில் ஒரு விழாவில் இருந்து நய்யார் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பஞ்சாபைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் அவர் தோளில் தட்டி, நெருக்கடி நிலை விலக்கப்படவிருக்கிறது என்று கிசுகிசுத்தார். அந்த அதிகாரி உளவுத் துறையை சேர்ந்தவர் என்பதை பார்த்தவுடனே யூகித்துவிட்டார் நய்யார். ‘ரா’வைச் (RAW- Research and Analysis Wing) சேர்ந்தவராகக்கூட இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு (25 ஜூன் 1975) பதினெட்டு மாதங்கள் நிறைவடைந்திருந்தன. ஆரம்பத்தில் இருந்ததைவிட அச்சம் பெருமளவு குறைந்திருந்தது. ஆயினும் பத்திரிகைகள் தொடர்ந்து தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. ஏகப்பட்ட வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. அதனால் அந்த காவல்துறை அதிகாரி தந்த தகவல் உண்மைதானா என்று உறுதிசெய்துகொள்ள விரும்பினார் நய்யார். நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்படுவது மாதிரியான விவகாரங்களில் உறுதிசெய்து கொள்ளாமல் எழுதிவிட முடியாது. அவை அப்பொழுது வேலை பார்த்துக் கொண்டிருந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்கனவே செயலிழந்து கிடந்தது. நெருக்கடி நிலை பற்றிய தவறான செய்தியை வெளியிட்டால், சஞ்சய் காந்தி அதை வைத்தே நாளிதழை இழுத்து மூடிவிடுவார்.

தனக்கு கிடைத்த தகவல் சரிதானா என்று பரிசோதிக்கும் வேலையை கமல்நாத்திடம் ஆரம்பிக்க நினைத்தார் நய்யார். கமல்நாத் சஞ்சய் காந்திக்கு மிக நெருக்கமானவர். அவருக்கு கிட்டத்தட்ட எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும். எக்ஸ்பிரஸ் போர்டில் கமல்நாத்தும் ஒருவர். போர்டு கூட்டங்களில் கமல்நாத் கலந்துகொள்ள வரும்போது அவருடன் நய்யாருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. கிடைத்த செய்தியை உறுதிப் படுத்த கமல்நாத்தின் வீட்டிற்கு காலை ஏழு மணிக்கே சென்றார் நய்யார். தனக்கு பரிமாறப்பட்ட தேநீரை நய்யார் குடித்து முடிப்பதற்குள் கமல்நாத் அவரது படுக்கையறையிலிருந்து வெளியில் வந்தார். நைய்யாரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். யோசிப்பதற்குள், சஞ்சய் காந்தி எந்தத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்று தடாலடியாக ஒரு கேள்வியைக் கேட்டார் நய்யார். கமல்நாத் சற்று அசந்துதான் போனார். “யார் உங்களுக்கு சொன்னது?” என்று கேட்டார். நய்யார் எதுவும் பதில் சொல்வதற்குள், “எதுவும் இன்னும் முடிவாகவில்லை” என்றார்.

“யார் உங்களுக்குச் சொன்னது?” என்ற கேள்வியிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டார் கமல்நாத். சஞ்சய் காந்தி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, தேர்தல் விரைவில் வரவிருக்கிறது என்பது புரிந்துபோனது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் நேரடியாகவே எழுதினார். தேர்தலில் பங்குகொள்ள வசதியாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் எழுதினார். இந்தியன் எக்ஸ்பிரஸின் எல்லாப் பதிப்புகளிலும் பெரிய எழுத்துகளில் தலைப்புச் செய்தாக அது வெளியானது. செய்தியை படித்த மூத்த தணிக்கை அதிகாரி டி’பென்னா, நய்யாருக்கு அதிகாலையிலேயே போன் செய்து, அந்த செய்தி உண்மையெனில் அது தனக்குத் தெரிந்திருக்குமென்று சொன்னார். மறுபடியும் போன் செய்து, நய்யார் மீண்டும் கைது செய்யப்படக்கூடும் என்ற அரசின் எச்சரிக்கையை நைய்யாரிடம் சொன்னார். அப்போதைய செய்தித்துறை அமைச்சர் வி.சி.சுக்லா நய்யார் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகவும், நைய்யாரை சிறைக்கு அனுப்பவேண்டும் என்று சொன்னதாகவும் பென்னா தெரிவித்தார். பயமில்லை, சிறை செல்ல தயாராகவே இருக்கிறேன் என்றார் நய்யார்.

ஆனால், நய்யாருக்கோ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கோ எதுவும் நேரவில்லை. நைய்யாரின் கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அணுகுண்டின் தந்தை

செய்திகளை சேகரிக்க மட்டும் பத்திரிக்கையாளர்கள் இருக்கவில்லை. சமயத்தில் ஒரு செய்தியை சூசகமாக கடத்தவும் பத்திரிக்கையாளர்கள் தேசங்களால் பயன்படுத்தப்பட்டனர். குல்தீப் நய்யார் அவ்வாறு பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டார். ஆனால், நய்யார் அதிலும் திறமையானவர். கடத்தச் சொல்லப்பட்ட செய்தியை தாண்டியும் மேலான செய்தியை கறந்து விட்டார். இதோ, அவரே சொல்லும் சம்பவம்.

27 ஜனவரி 1987.

முஸ்லிம் இதழின் எடிட்டரான முஷாஹித் ஹுசைன் சையத் என்னை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தார். (முஸ்லிம் இதழ் இப்பொழுது நின்றுவிட்டாலும், முஷாஹித் இன்றும் பாகிஸ்தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது தளம் www.mushahidhussain.com). அவரது கல்யாணத்திற்காக நான் இவ்வளவு தூரம் பயணம் செய்து இஸ்லாமபாத்திற்கு வந்ததில் அவர் ரொம்பவும் நெகிழ்ந்து போயிருந்தார். என்னை மகிழ்வுடன் தழுவிக்கொண்ட முஷாஹித் என் காதருகே வந்து, “டாக்டர் ஏ.க்யூ.கான் உங்களை இன்று சந்திப்பார்” என்று சொன்னார். பாகிஸ்தான் அணுகுண்டின் தந்தையான டாக்டர் அப்துல் காதிர் கானை நீண்ட நாட்களாகத் துரத்திக்கொண்டிருந்த எனக்கு, இதைவிடச் சிறந்த பரிசை முஷாஹித் எனக்கு அளித்திருக்கவே முடியாது.

இஸ்லாமபாத்திற்கு வெளியே ஓரிடத்தில் வசித்துவந்தார் அப்துல் காதிர் கான். அவர் மாளிகைக்குள் நுழையும் வழி மிகக் சாதாரணமாகத்தான் இருத்தது. யாரும் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. என்னுடையப் பெயரைக்கூடக் கேட்கவில்லை. சோதனைக் கூட மிகக் குறைவாக இருந்தது. அவர்கள் முஷாஹிதை வரவேற்று அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. தேசத்தின் மிக முக்கியமான விஞ்ஞானியைப் பார்க்கவரும் ஒரு இந்தியரை எந்தவித சோதனை கருவிக்குள்ளும் நுழையச் செய்யவில்லை.

எங்களை வரவேற்க கான் வராண்டவிலேயே காத்திருந்தார். “நான் உங்கள் ரசிகன். பாகிஸ்தான் இதழ்களில் நீங்கள் எழுதுவதை நான் தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன்” என்று சொன்னார் கான். நான் அவருக்கு நன்றி சொன்னபடியே அவரை உற்றுக் கவனித்தேன். அவர் மிகத் திருப்தியான மனிதராகக் காட்சியளித்தார். 1974ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அணு ஆயுத சோதனை நடத்தியதிலிருந்து, கானும் ஒரு அணுகுண்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ, பாகிஸ்தான் தானும் ஒரு அணுகுண்டைப் பெறப் புல்லைகூட தின்னும் என்று சொல்லியிருந்தார். பாகிஸ்தானில் எல்லோருடைய பார்வையும் கான் மீது குவிந்திருந்தது. இந்தியாவுக்குச் சமமான அந்தஸ்தை பாகிஸ்தானுக்குப் பெற்றுத்தரக்கூடிய ஒரு நபராகவே எல்லோரும் அவரைப் பார்த்தார்கள். அவருக்கு வயது 51. நான் எதிர்பார்த்திருந்ததைவிட அவரது முகம் வயதான தோற்றம் கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த கனமான ஃப்ரேமுடன் கூடிய மூக்கக் கண்ணாடி, அவரது தோற்றத்திற்கு ஒரு நியாயவான் பிம்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

“பாகிஸ்தானிலேயே மிக முக்கியமான மனிதர் நீங்கள் தான்” என்று அவரிடம் சொன்னபோது அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். நான் அவரைப் பேட்டியெடுப்பதன் நோக்கத்தை அவரிடம் சொன்னேன். உண்மையான ஏ.க்யூ.கானை வெளிக்கொணர்வதும் அவரது சாதனைகள், அவரது போராட்டம், அவரது குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதும்தான் என் நோக்கம் என்று சொன்னேன். நாங்கள் மிகக் குறைந்த நேரமே உரையாடினோம். ‘நான்’ என்ற வார்த்தை அவரது பேச்சில் அடிக்கடி தென்பட்டது. நான் அவரைப் பற்றிப் புகழ்ச்சியாக ஏதாவது சொன்னாலோ, அவரது சாதனைகளைப் பற்றிப் பேசினாலோ அவரது முகம் பிரகாசமானது. அவர் ஒரு ஈகோயிஸ்ட் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தச் சொல்லுக்குச் சரியாகப் பொருந்தினார் அவர். அவருக்கு இருக்கும் தகுதிகளைப் பாராட்டிப் பேசினேன். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இயிற்பியலிலும் உலோகவியலும் டாக்டர் பட்டம் பெற்றிருப்பவர் அவர் மட்டும்தான் என்று சொன்னேன். அவர் திருப்தியடைந்தவராகக் காட்சியளித்தார். டச்சு நாட்டின் அணு உலை ஒன்றிலிருந்து தகவல்களைக் ‘திருடியதற்காக’ அந்நாட்டு நீதிமன்றங்களில் அலைய வேண்டியிருந்ததைப் பற்றிப் போகிற போக்கில் எதோ சொல்ல, கடும் எரிச்சலடைந்தார் கான். உரத்த குரலில் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். நீதிமன்றம் தன்னை விடுவித்துவிட்டது என்றார்.

Abdul Qadeer Khan Chagai Hills nuclear test

பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளுடன் அப்துல் காதிர் கான் (தொப்பி இல்லாமல்), ச்சாகை மலையின் பின்னணியில் புழுதி பறக்க ஒரு அணு வெடிப்பு சோதனைக்கு பின்பு. (PC: www.millat.com)

பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருக்கிறதா என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிறுவுவதை நோக்கியே என் பேட்டியை நகர்த்திச் சென்றேன். அம்மாதிரி கேள்விகள் எல்லாவற்றையும் அவர் தவிர்த்துவிட்டார். நான் குறிப்பாக ஏதாவது கேட்டால், கேட்காததுபோல இருந்து விட்டார். அவர் ஒரு ஈகோயிஸ்ட் என்பதால், அவரைத் துண்டி விட்டு, என் பொறியில் விழ வைக்கலாம் என்று நினைத்தேன். ஒரு கதையை அவிழ்த்துவிட்டேன். பாகிஸ்தானுக்கு வரும் போது இந்திய அணுகுண்டின் தந்தையான டாக்டர் ஹோமி சேத்னாவைச் சந்தித்ததாக சொன்னேன். “அணுகுண்டு செய்யும் அளவுக்கு ஆட்களோ, தேவையான பொருட்களோ பாகிஸ்தானில் கிடையாது; ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்” என்று அவர் கேட்டதாக சொன்னேன். கான் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார். “எங்களிடம் இருக்கிறது; எங்களிடம் இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லுங்கள்” என்று மேஜையேக் குத்திக்கொண்டே சொன்னார்.

இப்படி கான் வெளிப்படையாகச் சொன்னதைப் பார்த்ததும் முஷாஹித் அதிர்ந்துபோய்விட்டார். அப்படிச் சொல்லிக் கொள்வது எளிதுதான்; ஆனால், அதை நிரூபிக்க வேண்டுமே என்று கேட்டேன். அணுகுண்டு வைத்திருப்பதை நிரூபிக்கும் வகையில் சோதனை எதையும் பாகிஸ்தான் அதுவரை நடத்தயிருக்கவில்லை. “எங்கள் சோதனைச் சாலையில் ஏற்கனவே நாங்கள் சோதித்துப் பார்த்துவிட்டோம். சிமுலேட்டரின் உதவியுடன் மாதிரி விமானங்கள் பறப்பதை நீங்கள் கேள்விப் பட்டதில்லையா? அதை வெடிக்கச் செய்துதான் அதன் சக்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நுண்ணிய, மேம்பட்டகருவிகளின் உதவியுடன் ஆய்வுச்சாலையிலேயே வெடிப்பின் சக்தியை அறியமுடியும். அதன் முடிவு எங்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கிறது” என்றார் கான்.

எதைச் சொல்லக் கூடாதோ, அதைச் சொல்லிவிட்டார் கான். முஷாஹிதின் முகத்தைப் பார்த்தாலே அது தெரிந்தது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினால் போதுமானது என்று அவரிடம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லையைத் தாண்டி அவர் சொல்லிவிட்டார். என் வேலை முடிந்தது. பாகிஸ்தான் தான் அணுகுண்டைச் செய்ததா என அறிய விரும்பினேன் நான். அதை உறுதி செய்தார் கான். இப்போது தான் ஏதோ அதிகாரத்தில் இருப்பது போல பேசத் துவக்கினார் கான். “கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் செய்ததுபோல எங்களை முட்டுச் சந்தில் தள்ளினால் நாங்கள் அணுகுண்டைப் பயன்படுத்துவோம்” என்று எச்சரித்தார் கான். வழக்கமான யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அணுகுண்டைப் பயன்படுத்தத் தயங்காது என்பதுதான் அவர் தெரிவிக்க விரும்பிய செய்தி. (பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் முஷர்ரஃபும் இதையே சொன்னார்.) அந்தச் சந்திப்பு வெறும் அரைமணி நேரமே நீடித்தது. ஆனால், தெரிய வேண்டிய எல்லாமே தெரிந்துவிட்டது.

இந்தியாவுக்கு சமிக்ஞை கொடுப்பதற்காகவே கானுடன் பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதா என்று முஷாஹிதிடம் அப்போது கேட்டேன். “ஆம், அப்படித்தான்” என்று சொன்னார் முஷாஹித்.

ஸ்கூப் நியூஸ்

நாமெல்லாம் ஒரு செய்தியை வெளிநாட்டுக்காரன் சொன்னா நம்பி ஏத்துப்போம். இப்பன்னு இல்ல, அப்பவே அப்படித்தான். தன் செய்தி மிக முக்கியமான ஸ்கூப் என்று அறிந்தும் நய்யார் கூட அந்த செய்தியை ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் வெளியிட பிரயத்தனப்பட்டார். இதோ, கீழே இதை அவரே எழுதியிருக்கிறார்.

ஏ.க்யூ.கானைப் பேட்டியெடுத்ததற்கு அடுத்த நாள் தங்களிடம் அணுகுண்டு இருப்பதாக கான் சொன்ன செய்தி என்னுடைய ஸ்கூப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கராச்சியில் டான் (Dawn) பத்திரிகையின் மூத்த அதிகாரியான  ஹமீத் ஹரூனைச் (Hameed Haroon) சந்தித்து அந்தப் பேட்டியை வெளியிட முடியுமா என்று கேட்டேன். “எங்களை விட்டுவிடுங்கள்” என்று தெறித்து ஓடினார் அவர்.

லண்டனிலிருந்து வெளிவரும் வாரப் பத்திரிகையான தி அப்சர்வர் இதழின் ஷ்யாம் பாட்டியா (Shyam Bhatia) என்னிடம் போனில் பேசினார். நான் கானைப் பேட்டியெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது அவரால் நம்ப முடியவில்லை. முழுப் பேட்டியையும் தெரிந்தகொள்ள விரும்பினார் அவர். என்னுடைய போன் டேப் செய்யப்படுக்கிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அது என்ன விபரம் என்று முழுவதுமாக அவரிடம் சோல்லவில்லை. கானின் பேட்டியை அவர்களது இதழில் வெளியிட விருப்பம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, அந்தப் பேட்டியில் என்ன இருக்கிறது என்பதை வைத்துத்தான் அதை முடிவு செய்ய முடியும் என்றும், ஆனாலும் விசாரித்துச் சொல்வதாகவும் சொன்னார். பின்பு நான் லாகூரில் இருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரே அழைத்து என் பேட்டியை வெளியிட விருப்பம் தெரிவித்தார்.

தி அப்சர்வர் தகவல்களின் துல்லியத்தில் மிகக் கவனமாக இருக்கும் ஒரு பத்திரிகை. நான் என் கட்டுரையை அனுப்பிய பிறகு, நான் பேட்டியின்போது எடுத்துக்கொண்ட குறிப்புகளையும் அனுப்பச் சொன்னார்கள். நான் குறிப்பு எடுக்கவோ, பேட்டியை பதிவுசெய்யவோ அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன். எனவே பேட்டி முடிந்து நான் ஹோட்டல் அறைக்கு திரும்பியவுடன் நான் ஞாபகத்திலிருந்து எழுதிய காகிதங்களை மட்டும் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.

பேட்டி தொடர்பாக தி அப்சர்வர் அலுவலகத்திலிருந்து தொடர்ந்து என்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட வண்ணம் இருந்தார்கள். தி அப்சர்வர் எச்சரிக்கையாக இருந்ததற்குக் காரணம் இருந்தது. முஷாஹித் ஹுசைன் சொன்னதைப் போல, அங்கே நான் கானைப் பேட்டியெடுக்கச் செல்லவில்லை. முஷாஹித் தன் திருமண அழைப்பிதழை ஏ.க்யூ.கானிடம் கொடுக்கச் சென்றபோது நானும் கூடச் சென்றேன், அவ்வளவுதான். தி அப்சர்வர் ஒன்றுக்கு இரண்டு முறை இதை உறுதிசெய்துகொள்ள விரும்பியது. ஏனெனில் ஒரு அமெரிக்கச் செய்தித் தாளுக்கும் இதே போன்ற ஒரு செய்தி கிடைத்ததாகவும், ஆனால் அந்தப் பேட்டி உண்மையானது தானா என்ற சந்தேகத்தில் அந்த அமெரிக்க நாளிதழ் அதைப் பிரசுரிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் உலவிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அப்படி ஒரு செய்தியைக் கொடுத்தது யார் என்று எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக நான் கொடுக்கவில்லை.

அந்தப் பேட்டி ஒரு வெளிநாட்டு நாளிதழில்தான் வர வேண்டும் என்று நான் விரும்பியதற்கு காரணம் இருந்தது. இம்மாதிரி சங்கதிகள் ஒரு வெளிநாட்டு மீடியாவில் வெளிவந்தால்தான் இந்தியா போன்ற நாடுகளில் அது உண்மையான செய்தி என்று நினைப்பார்கள். இங்கிலாந்து நாட்டு மீடியா என்றால் ரொம்ப உத்தமம்.

அந்தப் பேட்டியை வெளியிட தி அப்சர்வரை ஒப்புக் கொள்ளச்செய்ய கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. தி அப்சர்வரில் அந்தப் பேட்டி வெளியான தினத்தன்று நம் நாட்டு நாளிதழ்களில் பட்ஜெட் பற்றிய செய்திகள் வெளியாகிருந்தன. மோசமான நேரத்தில் இந்தப் பேட்டி வெளியாகித் தொலைக்கப்போகிறது என்று நான் நினைத்தது சரியாகப் போனது. கிட்டத்தட்ட எழுபதிற்கும் மேற்பட்ட நாளிதழ்கள் என் சேவையைப் பயன்படுத்திவந்தன. ஆனால் எதிலும் இந்தச் செய்தி வெளியாகவில்லை.

operation-brasstacks

ப்ராஸ் டாக்ஸ் பயிற்சியில் இந்திய வீரர்கள் (PC: www.indraidu.wordpress.com)

இருந்தும் தி அப்சர்வரில் வெளிவந்ததே எல்லோரது கவனத்தையும் ஈர்க்கப் போதுமானதாக இருந்தது. அதற்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது. சர்ச்சையும் கிளம்பியது. அந்த நேரத்தில் சரியாக பாகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகில் ப்ராஸ் டாக்ஸ் என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையை நடத்திக்கொண்டிருந்தது இந்தியா.

இந்த ஸ்கூப் செய்தியால் பாகிஸ்தானுக்கு எங்கே சிக்கல் வந்தது என்றால், அந்தக் கட்டுரை வெளியான அந்த வாரத்தில் தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. எனக்கு அந்த மசோதாவைப் பற்றித் தெரியாது. அந்த நேரத்தில் அந்தக் கட்டுரை வெளியானது ரொம்பவும் தற்செயலான காரியம்தான்.

இதற்கிடையில் அமெரிக்க செனட்டரான ஜான் கிளென் எனக்கு போன் செய்து, கான் அப்படிச் சொன்னது உண்மைதானா என்று உறுதி செய்துக்கொண்டார். ஆனால் இத்தனை சந்தேகங்களுக்கும் மத்தியில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சீனியர், பாகிஸ்தானிடம் அணுகுண்டு ஏதும் கிடையாது என்று சொல்லி, பாகிஸ்தானுக்கான உதவிகளுக்குப் பாதையைத் திறந்துவைத்தார்.

வங்க விடுதலை

எவ்வளவுதான் சிலாகித்தாலும், போர் ஒரு மிகக் கொடுமையான விஷயம். பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. 1971’இல் பாகிஸ்தானிடம் இருந்து வங்கம் விடுதலை பெற்றபோது நடந்த ஒன்பதே மாதப் போரில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். எட்டு வயது குழந்தையில் இருந்து எழுபத்தியைந்து வயது முதியவர் வரையிலான இரண்டு முதல் நான்கு லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முக்கியமாக ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அறிஞர்கள் கடுமையாக நசுக்கப்பட்டனர். இந்த வன்முறையை அன்று தன் சொந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்த வங்கத்தின் மீது கட்டவிழ்த்து விட்டது பாகிஸ்தான். மேற்கு பாகிஸ்தானிடம் (இன்றைய பாகிஸ்தான்) இருந்து விடுதலை வேண்டிய கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) இழந்து கொஞ்சமல்ல. பல்வேறு அரசியல் காரணங்களாலும் இந்தியா இந்த விடுதலைப் போரில் வங்கத்திற்கு உதவியது.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் (அல்லது இன்றைய பங்களாதேஷின்) டாக்கா நகரை நோக்கி வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படைகள், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்த விடுதலைப் படையினருடன் விரைவிலேயே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. 1971 டிசம்பர் 6’ம் தேதி வங்கதேசத்தை இந்தியா அங்கீகரிக்கும்வரை இந்திய படைகளுக்கும் வங்கதேச விடுதலைப் படையினருக்கும் பொதுவான கூட்டுத் தலைமை ஏதும் உருவாக்கப்படவில்லை. ஃபெனி என்ற மெகா முக்கியமான சாலை-ரயில் சந்திப்புப் பகுதி கைப்பற்றப்பட்டவுடன் இந்தியப் படைகள் மிக வேகமாக முன்னேற ஆரம்பித்தன. பாகிஸ்தானின் ஸ்டாலின் கிராட் என்று வர்ணிக்கப்பட்ட ஜெசூர், இந்திய முற்றுகையைத் தாளாமல் டிசம்பர் 7’ம் தேதி சரணடைந்தது.

முதல் முறையாக இந்தப் போரில்தான் இந்தியா பெருமளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலும், ஆறுகளைத் தாண்டித் துருப்புகளை இறக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. சிலெட் ராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. மேக்னா நதியை இந்தியத் துருப்புகள் டிசம்பர் 11ந் தேதி கடந்து சென்றன. அதே நாளில் ஒரு துணை ராணுவப்படை தாங்கெய்லுக்கு அருகில் தரையிறங்கியது. பாலங்களை நொறுக்கி இந்தியப் படையின் முன்னேற்றத்தைத் தடுப்பது என்ற பாகிஸ்தானின் திட்டம் இப்படித்தான் தவிடுபொடியாக்கப்பட்டது.

உலகம் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போரை உன்னிப்பாகவும் கவலையுடனும் கவனித்துக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் மெதுவான முன்னேற்றம் பற்றி ரஷ்யா கவலை தெரிவித்தது. பாகிஸ்தான் இன்னொரு வியட்நாமாக உருவெடுப்பதை ரஷ்ய அரசு விரும்பவில்லை.

இதற்கிடையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கேட்டு அமெரிக்காவிடம் பதற்றத்துடன் தொங்கிக்கொண்டிருந்தது பாகிஸ்தான். அந்த வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. ஆனால், பாகிஸ்தானின் துறைமுகங்கள் அனைத்தையும் இந்தியா முற்றுகையிட்டிருப்பதால், அவற்றை எப்படி வழங்குவது என்று அமெரிக்கா யோசித்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் வருமானால் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என்ற அமெரிக்காவின் முந்தைய அறிவிப்பிற்கு இது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. உருப்படியான எந்த உதவியும் செய்யவில்லை என்பதால் பாகிஸ்தான் அமெரிக்கா மீது கடும்கோபத்தில் இருந்தது.

சீனாவும் தலையிடும் என்றும் பாகிஸ்தான் நம்பிக்கொண்டிருந்தது. ஆனால், சீனா வெறுமனே மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்ததோடு சரி. வடகிழக்கில் இந்திய-சீன எல்லையில் தன் படையின் சில பிரிவுகளை நிறுத்தியது சீனா. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெய்ஜிங் தங்களைக் கைவிட்டுவிட்டதாக நினைப்பதாக பாகிஸ்தான் செய்தி அனுப்பியது.

இருந்தும் சீனா குறுக்கிடும் என்று பாகிஸ்தான் படையினர் நம்பினார்கள். ஒரு தடவை, டாக்காவுக்கு அருகில் இந்தியா பாராசூட் மூலம் வீரர்களை குதிக்கச் செய்தபோது, அங்கே ஒளிந்துகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மறைவிடத்தைவிட்டு எழுந்துவந்து அவர்களுக்குக் கைகொடுத்து வாழ்த்தினார்கள். தங்களைக் காப்பாற்ற சீனா வீரர்கள் வந்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைத்துவிட்டார்கள். ஆனால், வெளிநாட்டு உதவி ஏதும் தங்களுக்குக் கிடைக்காது என்று தெரிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் உறுதியை இழந்தார்கள்.

அமெரிக்கா இதில் தலையிடுமா, இல்லையா என்று அறிந்துக்கொள்வதற்காக சரணடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு டாக்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திற்கு வந்தார் பாகிஸ்தானின் லெப்டினென்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி. அமெரிக்காவுக்கு அப்படி நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிந்தவுடன் போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது பாகிஸ்தான். பிறகு, இந்திய – முக்தி வாஹினி கூட்டுப் படையினரிடம் நிபந்தனையின்றி சரணடைவதாகச் (டிசம்பர் 15) சொன்னது. நியாஸி இந்திய இராணுவத்திடம் மட்டுமே சரணடைய விரும்பினார்.

bangaledesh-liberation-1971

லெப்டினென்ட் ஜெனரல் ஜகஜீத் சிங் அரோரா பார்க்க சரணடையும் லெப்டினென்ட் ஜெனரல் நியாஸி. வலது ஓரத்தில் புன்சிரிப்போடு நிற்பது ஜெனரல் ஜகோப் (PC: www.archive.thedailystar.net)

சரணடைவது பற்றிய நிபந்தனைகளை விதிக்க, வேண்டுமென்றேதான் யூதரான மேஜர் ஜெனரல் ஜகோபை அனுப்பியது இந்தியா. இந்தியா ஒரு யூதரிடம் பாகிஸ்தானியப் படைகளைச் சரணடையச் செய்தது என்ற பிரச்சாரத்தில் அரேபிய நாடுகள் ஈடுப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் படைகள் கிழக்குப் பிரிவின் ஜிஒசி இன்சார்ஜாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் ஜகஜீத் சிங் அரோரா முன்னிலையில்தான் சரணடைந்தன.

ஒருவழியாக பாகிஸ்தான் படையினர் சரணடைந்தபோது, இந்தியா நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. உலகமும்; குறிப்பாக வங்க மக்கள்.

Prisinors of War (14-229)

வரும்

Simla Negotiations signing (15-232)

வரும்

Srilanka (16-240-245)

வரும்

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.