புத்தகங்கள்
![]() |
| என் குட்டி நூலகம் |
இங்கு நான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். ஒரு Extemporeதான்.
சுஜாதா. மிக சட்டென்று நினைவுக்கு வரும் எழுத்தாளர். வெகு காலத்துக்கு முன்பு படித்த புத்தகம் ‘என் இனிய இயந்திரா’. பள்ளி நாட்களில் புத்தகங்கள் படிக்கும் பெற்றோர்களால் அறிமுகப்படுத்தப் பட்டு நான் படித்த ஒரு கதை. அதைத் தொடர்ந்து ‘மீண்டும் ஜினோ’வும் படித்தேன். ‘பூக்குட்டி’ படித்திருக்கிறேன். பாட்டி சொன்ன கதைகள் (தாத்தா மற்றும் பாட்டி கதை சொல்லி வளர்ந்த லக்கி மேன் நான்), இராமாயணம், மகாபாரதம் தாண்டி கதைகள் என்று படிக்க ஆரம்பித்தது சுஜாதா என்றுதான் நினைக்கிறேன். சுவாரசியமாக, அவர் படித்த கல்லூரியில் (MIT எனப்படும் Madras Institute of Technology) நானும் படிக்க நேர்ந்தது. கல்லூரியில் படித்தபோது அவரது ‘ஏன்? எதற்கு? எப்படி?’ படித்தேன். தொடர்ந்து ‘கற்றதும் பெற்றதும்’. கதை இல்லை என்றாலும் அறிவியலை கதை போல சொல்லியவர். எந்த விஷயத்தையும் கதையாக சொல்லும் அவர் எழுத்து. பின் அவரது பிற புத்தகங்களையும் படிக்க நேர்ந்தது. ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ மற்றும் அவரது ‘மர்மக் கதைகள்’ தொகுப்பு. ‘ஆ’ என்ற அவரது தொடர் கதையும் படித்திருக்கிறேன். ‘சிலப்பதிகாரம்-ஒரு எளிய அறிமுகம்’ வீட்டில் ரொம்ப காலமாக இருக்கிறது. படிக்க வேண்டும்.
பள்ளி நாட்களில் இது போக வேதாரண்யம் மற்றும் மதுரையில் இருந்த போது அந்தந்த ஊரின் நூலகங்களில் பல புத்தகங்களை படித்திருக்கிறேன். ‘பசு’ என்று ஒரு சிறுகதை படித்து அழுததாக ஞாபகம். வேதரண்யத்தில் இருந்த போது ஹோமரின் ‘இலியட்’ படித்தேன். மகாபாரதம் போல பல கிளைக்கதைகளுடன் அட்டகாசமாக இருந்தது. மற்றுமொரு அட்டகாசமான புத்தகம் ஜூல்ஸ் வெர்னே எழுதிய ‘2000 Thousand Leagues Under the Sea’ என்பதன் தமிழாக்கமான ‘ஆழ்கடலில் ஒரு அற்புத பயணம்’. அதற்கு பிறகு அவரின் மற்றும் இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்தேன் – Around the World in Eighty Days மற்றும் Journey to the Center of the Earth.
குமுதம் என்று நினைக்கிறேன். பிரபலங்களிடம் அவர்களுக்கு பிடித்த கதைகளைக் கேட்டிருந்தார்கள். ‘கிரேசி’ மோகனிடம் அவருக்கு பிடித்த சோகக் கதை கேட்டிருந்தார்கள். அவர் சொன்னது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’. அதை எழுதியது ஜெயகாந்தன் என்று அப்பொழுது தெரியாது. படித்துவிட்டு வெகு நேரம் அழுது கொண்டிருந்தேன். ஜெயகாந்தனின் கதை அது ஒன்றுதான் படித்ததாக நினைவு. ஆனால் நான் படித்த கதைகளிலேயே உருக்கமான கதை அது தான்.
கல்லூரியில் சேர்ந்த போது என் தோழர்கள் சரவண பிரபுவும், சாமி என்ற செந்தில் குமாரும் எனக்கு அறிமுகப் படுத்தியது பாலகுமாரன். மிக அதிகமாக படித்தேன். முக்கியமாக புராணக் கதைகள். ஔவையார், கிருஷ்ணன், அர்ஜுனன் பற்றிய கதைகள் எல்லாம் விரும்பி படித்தேன். பல்சுவை நாவலில் வந்த அவரது பல கதைகளும் படித்தேன். இப்பொழுதும் கிட்டத்தட்ட 50 புத்தகங்கள் என் நூலகத்தில் உள்ளது. அனைத்திற்கும் மேலாக, அவரின் ‘உடையார்’ என்னை மிகவும் பாதித்தது. சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய கதை. மிகப்பெரிய தொகுப்பெனினும் வெகு ஆர்வமாக படித்தேன். சோழனோடு அதில் வாழ்ந்தேன். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் அளவிற்கு உடையாரும் என்னை ஆக்கிரமித்தது.
சிறு வயதில் இருந்தே விகடன் படிக்கிறேன். அதில் வரும் சிறுகதைகள் விரும்பி படிப்பேன். மதன் அறிமுகமானார். ‘ஹாய் மதன்’ தொகுப்பு என்னிடம் இருந்தது. ‘மனிதனுக்குள் மிருகம்’ புத்தகமும் உண்டு. ஆனால், அவர் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்னை மிகவும் ஈர்த்தது. மொகாலயர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளத் தூண்டியது. மிக அட்டகாசமான புத்தகம். வரலாறை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.
ஜாம் நகரில் ரிலையன்ஸ்’இல் சேர்ந்த போது அங்கு டவுன்ஷிப்’இல் ஒரு அட்டகாசமான நூலகம் இருந்தது. சாண்டில்யனின் பல புத்தகங்களை (ஒரு இருவது இருக்கும்) அங்கு படித்தேன். முக்கியமாக ‘யவன ராணி’ மற்றும் ‘கடல் புறா’.
சூரத்தில் வந்து சேர்ந்த போது தமிழ் புத்தகங்கள் கிடைக்காது. அப்பொழுது இணையத்தில் விகடன் பிரசுரம் போய் புத்தகங்கள் வாங்கி படித்தேன். பாலாவின் ‘இவன் தான் பாலா’. பிரகாஷ் ராஜின் ‘சொல்லாததும் உண்மை’. வடிவேலுவின் ‘வடிவடி வேலு வெடி வேலு’. சேரனின் ‘டூரிங் டாக்கிஸ்’. இந்த எழுத்துக்கள் அனைத்தும் இலகுவாக Blog போல இருந்தது. ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ மற்றும் வாலியின் ‘அவதார புருஷன்’ படித்தேன். தபு சங்கர் கவிதைகள் படித்தேன். என் நூலகத்தில் பல விகடன் பிரசுரங்கள் இருக்கும். விகடன் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகமானார். ‘துணையெழுத்து’ போன்ற தொகுப்புகள் படித்தேன். கதைகள் படித்ததில்லை. எஸ்.ரா. எழுத்தில் ஓடும் ஓர் மென்சோகம் எனக்கு கொஞ்சம் சங்கடப் படுத்தியது. இப்பொழுது அவரின் ‘உப பாண்டவம்’ வாங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் படிக்க முடியவில்லை. ‘சோற்றுக்கணக்கு’ பாதிப்பால் ஜெயமோகனிடம் ஈர்க்கப்பட்டு ‘அறம்’ தொகுப்பு வாங்கிப் படித்தேன். ஆனால் என்னவோ அவ்வளவாக அதில் இருந்த பாதி கதைகள் என்னை ஈர்க்கவில்லை. இந்த சமயத்தில் சாரு நிவேதிதா புத்தகங்கள் அறிமுகம் ஆனது. அவரது எழுத்து கொண்டாட்டமாக இருந்தது. முக்கியமாக ‘ராஸ லீலா’ மற்றும் ‘எக்சைல்’. பின் அவரது ‘கோணல் பக்கங்கள்’, அவரது பல நூல்கள் மற்றும் தொகுப்புகள் படிக்கிறேன்.
இது போக பல குட்டிக் குட்டி புத்தகங்கள் படித்திருக்கிறேன். பிடல் காஸ்ட்ரோ, சே குவாரா, அம்பானி, மிட்டல், தெரேஸா, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., பாரதிதாசன், வ.வு.சி, நாகேஷ், மண்டேலா, பற்றியவை. ஆனால், கவனம், இவை கதைகள் அல்ல.
முகநூல் வந்த பிறகு இன்னும் என்ன என்ன படிக்கவில்லை என்று தெரிகிறது. பிரவின் குமார் குறிப்பிட்டிருக்கும் நாஞ்சில் நாடன், அழகிய பெரியவன், கோணங்கி, சாந்தா டீச்சர், ஆதாவன், தஞ்சை பிரகாஷ், கோபி கிருஷ்ணா, சு.ரா., கு.அழகிரிசாமி, அ.முத்துலிங்கம், மனோஜ், வண்ணதாசன், வா.மு. கோமு, கி.ரா., புதுமைப் பித்தன், அசோகமித்ரன் மற்றும் எந்த எழுத்தையும் நான் படிக்கவே இல்லை. இப்பொழுதாவது வாய்ப்பு கிடைத்ததே. அவரிடம் இருந்தது கேட்டு வாங்கி படிக்க வேண்டும். (சாரு புத்தகங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் எழுத்துகளையும் படிக்க வேண்டும்.)
எவ்வளவு தெரியவில்லை என்று தெரிந்து கொள்வதிலேயே பாதி வாழ்க்கை கடந்து விடுகிறது.





