நிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)
டிசம்பர் 23, 1968.
அப்போலோ 8 விண்கலம் நிலவை சுற்றிவர பயணப்பட்டிருந்தது. அதில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர் – ஃப்ரான்க் போர்மன் (Frank Borman), ஜிம் லோவெல் (Jim Lovell) மற்றும் பில் ஆண்டெர்ஸ் (Bill Anders). புவியை விட்டுச் சென்று, நிலவைச் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாக மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்த முதல் விண்கலம் இது.
பல மாதங்கள் வீரர்களுக்கு பயற்சியளித்து, அவர்களை விண்வெளி பயணத்துக்கு தயார்படுத்துகிறது நாசா. ஆனால், முழுதும் தயாரான பின்பு டெங்கு, மலேரியா, மெட்ராஸ்-ஐ, சிக்குன்-குனியா, எபோலா, ஜலதோஷம், மூட்டு பிடிப்பு, கை கால் குடைச்சல் என்று ஏதாவது வந்து தொலைந்தால் அந்த ஒரு வீரருக்காக பயணத்தை நிறுத்த முடியுமா? அதனால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மாற்று வீரர் தயாராகிக் கொண்டிருப்பார் – Backup. அப்படி, அப்போலோ 8’இன் முதன்மை வீரர் போர்மன்’க்காக நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’கும், மற்ற வீரர்களுக்காக பஸ் ஆல்ட்ரின்’னும் தயாராகிக்கொண்டிருந்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில், டேக் ஸ்லேய்டன் சில கேள்விகளை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் முன் வைத்தார்.
ஸ்லேய்டன், “அப்போலோ 11’இன் முதன்மை வீரராக தலைமையேற்று நடத்த விருப்பமா?”
ஆர்ம்ஸ்ட்ராங், “யெஸ். ஓகே”
ஸ்லேய்டன், “ஹ்ம்ம். சரி. அப்புறம், மற்றொரு கேள்வி. இந்த அப்போலோ 11 பயணத்தில் பஸ் ஆல்ட்ரின்’ஐ இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?”
ஆர்ம்ஸ்ட்ராங், “ஆம்”
ஸ்லேய்டன், “நல்லது. அப்படியெனில், மூன்றாவது வீரராக யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்? லூனார் மாட்யூல்’க்காக ஃப்ரெட் ஹெய்ஸ்’ஆ (Fred Haise)? அல்லது, கமாண்ட் மாட்யூல்’க்காக மைக்கேல் காலின்ஸ்’ஆ?”
சற்றே சிக்கலானதொரு தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு மைக்கேல் காலின்ஸ்’க்கு அப்பொழுதுதான் மருத்துவர்கள் மீண்டும் பறக்க அனுமதி அளித்திருந்தனர். அவரிடம் சென்று ஆர்ம்ஸ்ட்ராங் கலந்தாலோசித்தார். பின் காலின்ஸ்’ஐ அப்போலோ 11 பயணத்தில் இணைத்துக் கொள்ள தனக்கு விருப்பமென ஸ்லேய்டன்’னிடம் ஆர்ம்ஸ்ட்ராங் தெரிவித்தார். அதன்படி, அப்போலோ 11’இன் தலைமை வீரராக ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பார், அவருடன் லூனார் மாட்யூல்’இல் பஸ் ஆல்ட்ரின் இருப்பார், கமாண்ட் மாட்யூல்’ஐ செலுத்தும் வீரராக மைக்கேல் காலின்ஸ் இருப்பார் என்று உறுதி செய்தது நாசா.
ஆர்ம்ஸ்ட்ராங் – காலின்ஸ் – ஆல்ட்ரின் |
ஒரு நிலாப் பயணத்துக்காக தேர்ந்தெடுக்கப் பட்டதில் மூவருக்குமே மகிழ்ச்சி என்றாலும், இதுதான் அந்த பிரத்யேக – நிலவில் இறங்கும் – பயணமாக அமையுமென்று அப்பொழுது அவர்களுக்கே நம்பிக்கையில்லை. தங்கள் கைகளையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள் (காலின்ஸ்’இன் கை, சைபால் தடவவேண்டிய நிலைக்கு போய்விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்).
ஆர்ம்ஸ்ட்ராங்:
“நிலவில் இறக்கப்படவிருக்கும் முதல் காலமாக அப்போலோ 11’ஐ பரிசீலிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை. இதுவரை, லூனார் மாட்யூல்’ஐ பறக்க வைத்துப் பார்க்கவில்லை. நிலாப் பரப்பு (கவனிக்க: நிலப்பரப்பு அல்ல) பற்றி நாங்கள் இன்னும் முழுதாக அறியவில்லை… பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து லூனார் மற்றும் கமாண்ட் மாட்யூல் உடன் ஒரே சமயத்திலும், தடங்கலின்றியும் தொடர்பு கொள்ள முடியுமா என்று உறுதிபடுத்தப்படவில்லை… ரேடார்’இன் வீச்சு அங்கு எப்படி இருக்கும் அல்லது ஒழுங்காக வேலை செய்யுமா என்று சோதித்துப் பார்க்கவில்லை…”
காலின்ஸ் கூட முழு நம்பிக்கையோடு இருந்தார் என்று சொல்ல முடியாது. முதல் மனிதனை நிலவில் இறக்குவதற்கான சாத்தியங்கள் அப்போலோ 10, 11 மற்றும் 12 விண்கலங்களுக்கு முறையே 10, 50 மற்றும் 40 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவே கருதினார்.
இத்தனைக்கும் நடுவில் ஒரே ஒரு கேள்வி ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது – யார் முதலில் நிலவில் காலடி வைப்பது? இது ஒரு மிக முக்கியமான கேள்வி. ஏனெனில், நிலவில் முதலில் கால் வைப்பவர் சரித்திரத்தில் இடம்பெறப் போகிறவர். அதனால், இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் இருந்துகொண்டே இருந்தது. இறுதி முடிவை நாசா’தான் எடுக்குமென்றாலும், இருவரும் இதைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் விவாதிக்கத் தவறவில்லை. சொல்லப்போனால், நிலவில் முதலில் கால் பதிக்கப் போவது என்பது மிகவும் குழப்பமாகவே கையாளப்பட்டது. பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல, நாசா அதிகாரிகளும் இந்த விஷயத்தில் மக்களைப் போட்டு குழப்பிக்கொண்டேதான் இருந்தார்கள்.
பிப்ரவரி 27, 1969 இல் ஒரு பத்திரிகை செய்தி கசிந்தது: “தற்போதைய பயணத் திட்டத்தின்படி, லூனார் மாட்யூல் நிலவில் இறங்கியவுடன் ஆல்ட்ரின் ஏணி மூலமாக கீழிறங்குவார். இறங்கியவுடன் லூனார் மாட்யூல் சேதமில்லாமல் இருக்கிறதா என்று சோதினை செய்து உறுதி செய்வார். பின், உபகரணங்களை இறக்கி நிலவில் வைப்பார். சுமார் 45 நிமிடங்கள் கழித்து, பயணத்தின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெளியில் வந்து இறங்கி ஆல்ட்ரின் உடன் இணைந்து கொள்வார். பயணத்தின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் இறங்கி வரலாற்றில் இடம்பெறுவார் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆல்ட்ரின் முதலில் இறங்கி ‘நிலவின் முதல் மனிதன்’ பட்டத்தை தட்டிச் செல்லப்போகிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஹூஸ்டனில் இருந்து சன் செய்திகளுக்காக சரோஜ் நாராயண் ஸ்வாமி.“
இந்த செய்தியையும் நாம் குறை சொல்ல முடியாது. அறியாத புது நிலத்தில் கப்பலின் கேப்டன் இறங்குவதில்லை என்பது ஒரு கடற்படை சம்பிரதாயம். எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று மற்றவர்கள் இறங்கி உறுதி செய்த பின்னை கேப்டன் இறங்குவார். இந்த இடத்தில் நாசா’வின் முன்னோடி நாகா (NACA-National Advisory Committee for Aeronautics) மற்றும் அமெரிக்க கடற்படை (USN-United States Navy) ஆகிய இரண்டும் ஆதிகாலத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதை அறிக. அந்த காரணத்தால், நாசாவிலும் இந்த கடற்படை பழக்கம் பின்பற்றப்பட்டு இருக்கலாம். அதனால் இந்த செய்தி கசிந்த போது பலரும் அதை நம்பவே செய்தனர்.
இது இப்படி இருக்கையில், மார்ச் 1969’இல் மனித விண்வெளி திட்டத்தின் இணை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் மில்லர் (George Mueller) சில நிருபர்களிடம் ‘ஆல்ட்ரின் தான் முதலில் நிலவில் இறங்குவார்’ என்று பேட்டியளித்தார். அதே நேரத்தில், ‘பயணத்தின் முதன்மை அதிகாரி என்பதால் ஆர்ம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் இறங்குவார்’ என்று தான் நம்புவதாக ஆல்ட்ரின்’இடம் டேக் ஸ்லேய்டன் கூறினார்.
ஆர்ம்ஸ்ட்ராங் அமைதி காத்தார். தனக்கு வாய்ப்பு வந்தால் வரட்டும், நானாக போய் அடம் பிடித்து அழ மாட்டேன் என்ற மனநிலையில் இருந்தார் அவர். நெருங்கிய நண்பர்கள் மத்தியில் சன்னமாக விவாதித்திருக்கலாம். ஆனால் பெரிதாக வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. அதே சமயம், நிலவில் தான் தான் முதல் மனிதனாக இறங்கி வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதில் ஆல்ட்ரின் மிகவும் ஆவலாக இருந்தார். அதை பகிரங்கமாக வெளிக்காட்டவும் தயங்கவில்லை. இருந்தாலும் ஆர்ம்ஸ்ட்ராங் தான் பாஸ், அவர் எடுக்கும் முடிவே இறுதி என்பதை அறிந்தே இருந்தார் ஆல்ட்ரின்.
ஒரு கட்டதில் யார் முதலில் நிலவில் இறங்குவது என்று நாசா அதிகாரிகளும் அமர்ந்து விவாதிக்க ஆரம்பித்தனர். க்ரிஸ் க்ராப்ட் (Chris Kraft), டேக் ஸ்லேய்டன் (Deke Slayton), ஜார்ஜ் லோ (George Low) என பலரும் பயணத்தின் தலைவரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ஐ முதலில் நிலவில் இறங்குவதே சரியென்று அபிப்பிராயம் கொண்டிருந்தனர். மேலும் லூனார் மாட்யூலின் வடிவமைப்பையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். லூனார் மாட்யூலில் இருந்து கமாண்டர் (ஆர்ம்ஸ்ட்ராங்) தான் இலகுவாக முதலில் வெளியார முடியும். லூனார் மாட்யூலின் பைலட் (ஆல்ட்ரின்) முதலில் வெளியேற வேண்டுமானால் அவர் கமாண்டர் மேல் கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வெளியேற வேண்டும். டிசைன் அப்பிடி. அதனால், ஏப்ரல் 1969 வாக்கில், ஆர்ம்ஸ்ட்ராங் தான் முதலில் லூனார் மாட்யூலில் இருந்து வெளியில் வந்து நிலவில் காலடி வைப்பார் என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத முடிவாகி இருந்தது.
கீழ்க்கண்ட சம்பவம் நடந்ததா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் பலரும் இதை ஒரு கதையாக அறிந்திருந்தனர்.
ஒரு பயிற்சியின் போது நடந்த சம்பாஷனை:
“ஓகே. நிலவில் லூனார் மாட்யூல்’ஐ இறக்கியவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
ஆர்ம்ஸ்ட்ராங், “நான் இதை செய்வேன், நாங்கள் அதை சோதிப்போம்” என்று வேலைகளை பட்டியலிட்டார்.
“ஓகே. ஆல்ட்ரின், நீங்கள் என்ன செய்வீர்கள்?”
ஆல்ட்ரின், “ஆர்ம்ஸ்ட்ராங் அனைத்தையும் முடித்தவுடன், நான் கதவை திறந்து வெளியேறுவேன்.” சொல்லிவிட்டு சைலென்ட்டாகிவிட்டார்.
சற்று நேரம் மயான நிசப்தம்.
மெதுவாக ஆல்ட்ரின் பக்கம் திருபினார் ஆர்ம்ஸ்ட்ராங், “ஆல்ட்ரின், நான் தான் முதலில் வெளியேறுவேன்.”
கதம். கதம்.
ஆர்ம்ஸ்ட்ராங் தான் பயணத் தலைவர் மற்றும் பாஸ். அவர் முடிவே இறுதி.
என்ன தான் ஆசை இருந்தாலும், இந்த சம்பவத்திற்கு பிறகு ஆல்ட்ரின் தான் முதலில் நிலவில் இறங்கப் போவதில்லை என்று மனதளவில் ஏற்றுக் கொண்டுவிட்டதாவே தெரிகிறது.
நிலவில் காலடி வைக்கும் முதல் மனிதன் – நீல் ஆர்ம்ஸ்ட்ராங் |
இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தின் மீது இணைந்து ஒரே நேரத்தில் முதல் காலடி வைத்த எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) மற்றும் டென்சிங் நார்கே (Tenzing Norgay) போல ஆர்ம்ஸ்ட்ராங்’கும் ஆல்ட்ரின்’உம் இணைந்து ஒரே நேரத்தில் நிலவில் இறங்கியிருந்தால் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் அப்போலோ 11 பயணத்தின் பிறகு நிம்மதியாக இருந்திருக்கும்.
1 Comment