உபகாரம்பிள்ளை சகாயம்
சகாயம் IAS
மதுரையின் பரபரப்பானதொரு சாலையில் மதிய வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றுகொண்டிருக்கும் மதுரை மாவட்ட கலெக்டர், உபகாரம்பிள்ளை சகாயம், செல்போனில் பேசியபடியே பைக் ஓட்டிச் செல்லும் ஒரு இளைஞரைப் பார்க்கிறார். தன் டிரைவரிடம் சொல்லி அந்த செல்போன் இளைஞரை நிறுத்தி, அங்கேயே உடனடி தண்டனையும் அளிக்கிறார் – 24 மணி நேரத்தில் 10 மரக் கன்றுகளை நட வேண்டும். வித்தியாசமான தண்டனை இல்லை??? ஆனால், சகாயம் வழிமுறை இதுதான்.
“லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” – சகாயத்தின் அலுவலக அறையில், அவரது இருக்கையின் மேல் மின்னிக்கொண்டிருக்கும் வாசகம். அதன்படியே வாழ்ந்தும் வருகிறார். இவரை தங்கள் வழிக்கு கொண்டுவர முயன்ற – 23 ஆண்டுகளில் 24 முறை பணியிடை மாற்றம் – அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கண்டது தோல்வியே. வஞ்சனையில்லாமல் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் சகாயம். இதில், இவரது மேலதிகாரிகளும், இவரின் கீழ் வேலை பார்க்கும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் அடக்கம். “எனக்கு தெரியுங்க. நான் ஒரு அதி பயங்கரமான கொள்கையை எழுதிப்போட்டு அதுக்கு கீழ உட்கார்ந்திருக்கிறேன். இந்த கொள்கை என்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் செய்கிறது,” என்கிறார் சகாயம் “ஆனால் நான் முதலில் இருந்தே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறேன். லஞ்சத்துக்கான எதிர்ப்பு என்பது வாழ்நாளுக்கானது.”
நான்கு வருடங்களுக்கு முன்பு (2009), நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, தானாக முன்வந்து தன் சொத்துக் கணக்கை அறிவித்தார் – வங்கியில் ரூபாய் 7,172 மற்றும் ரூபாய் 9 லட்சத்தில் மதுரையில் ஒரு வீடு. சகாயம் தான் அப்படி தன் சொத்துக் கணக்கை அறிவித்த முதல் IAS அதிகாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு முறை, அவர் மகள் யாழினிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலம் குறைந்த போது, அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க தேவையான ரூபாய் 5,000 கூட அவரிடம் இருக்கவில்லை. கவனிக்க: அப்பொழுது அவர் கோயம்புத்தூர் கலால் (excise) துறையின் துணை கமிஷனராக இருந்தார். 650 மதுபான உரிமம்கள் வழங்கப்படவிருந்தன. ஒவ்வொரு உரிமத்திற்கும் அப்பொழுது கிசுகிசுக்கப்பட்ட விலை ரூபாய் 10,000.
மதுரையில் கலெக்டராக நியமிக்கப்பட்ட போது, மதுரையில் வந்திறங்கியவுடன் சகாயம் தன் வேலையைத் தொடங்கிவிட்டார். மதுரையின் முக்கிய பேருந்து நிலையமான ‘மாட்டுத்தாவணி’ சந்தைக்கடை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. சுற்றி எங்கு பார்த்தாலும் கடைகள். பயணிகள் நிற்கக்கூட இடமிருக்கவில்லை. ஒரு போலீஸ் சாவடி கூட ஒரு சின்ன கடையாக மாற்றப்பட்டிருந்தது. உள்ளூர் அரசியல் புள்ளிகள் மற்றும் போலீஸ் துணையோடு ஒரு அட்டகாசமான சாம்ராஜ்யம் அமைக்கப் பட்டிருந்தது. பார்த்தார் சகாயம். விதிகளின்படி எது சரியோ, சட்டத்தின் துணை கொண்டு, அவற்றை செயல்படுத்தி மொத்த மாட்டுத்தாவணியை மீட்டெடுத்து பயணிகளுக்கு கொடுத்தார். இடையில் சிக்கி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை கடைகாரர்களின் கதி? “தப்பு என்பது தப்பு தாங்க,” சொல்கிறார் சகாயம் “ஆனால், அவர்கள் மறுவாழ்விற்கு முடிந்தவரையில் நாங்கள் உதவுவோம்.” டாக்ஸி டிரைவரும், சகாயத்தின் விசிறிகளில் ஒருவரான நாகேஷ்வவரன் கூறுகையில், “அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுங்க. இதுவரைக்கும் யார்கிட்டயும் ஒரு பத்து பைசா வாங்கினதில்ல. சினிமால வர்ற ஹீரோ மாதிரி ரொம்ப நேர்மையான கலெக்டருங்க.”
சகாயத்தின் முதுகலைப் பட்டம் சமூகப் பணி சார்ந்தது. ஒரு சிறந்த நிர்வாகியாக விளங்க அவருக்கு இந்த படிப்பு உதவியது. விதிகளை விரல் நுனியில் வைத்திருந்தவர் அதை யாருக்கு எதிராகவும் பயன்படுத்தத் தயங்குவதேயில்லை, தப்பு செய்தவர் எவ்வளவு பெரிய புள்ளியாக இருப்பினும். அதனால், சகாயத்தின் வாழ்க்கை ஒரு போர்க்களமாகவே காட்சியளிக்கும்.
காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த போது, மணல் கொள்ளை கும்பலுடன் மல்லுக்கு நின்றார். பாலாற்றில் மிக அதிகமாக மணல் அள்ளப்பட்டதால், அந்தப் பகுதியே வெள்ள அபாயத்தில் இருந்தது. பாலாற்றுப் படுகையில் மணல் எடுப்பதற்கு உடனடியாக தடை விதித்தார். மணல் கொள்ளையர்கள், அடியாட்களைக் கொண்டு சகாயத்தை தாக்கினர். ஆனால் அவர் அசைந்து கொடுக்கவில்லை. தடையை விலக்க மறுத்து விட்டார். மற்றொரு நிகழ்வில், அசுத்தமான ஒரு குளிர்பான பாட்டில் அவருக்கு காண்பிக்கப்பட்ட போது, அவர் சற்றும் யோசிக்காமல் அந்த பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின் கிளையை பூட்டி சீல் வைத்தார். சென்னையிலும் இப்படித்தான், ஒரு பெரும் உணவகத்துடன் போராடி, அரசுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலத்தை மீட்டார்.
2011 மதுரை தேர்தலை மேற்பார்வையிட தேர்தல் ஆணையம் சகாயத்தை தேர்ந்தெடுத்தபோது யாருக்கும் அவ்வளவு பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. கோயில் நகரமாம் மதுரையில் தேர்தல் விளையாட்டுகளுக்கு ஈடு கொடுக்க சகாயம் நியமிக்கப்பட்டார். அவர் கல்லூரிகளில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்போக, அதை தடுத்து நிறுத்த அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் இரண்டு முறை மனு தாக்கல் செய்தன. சகாயம் ‘எமெர்ஜென்சி’ போன்றதொரு அசாதாரண நிலையை தேர்தலின் போது ஏற்படுத்தி விட்டார் என்று புகார் எழுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. ஒருபுறம் சகாயத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆனால், மறுபுறம், தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி’யிடம் பாராட்டுப் பத்திரம் பெற்றார் சகாயம்.
சகாயத்தின் மனைவி விமலா, அவருக்கு எப்பொழுதும் உறுதுணையாகவே இருந்து வந்திருக்கிறார். இருப்பினும் தேர்தலின் போது நடந்த சில சம்பவங்கள் அவரை சற்று கலக்கியிருக்கின்றன. “அவர் எப்பொழுதும் சொல்வார் – நாம் செய்வது சரியென்றால் யாரும் நம்மை காயப் படுத்த முடியாது,” தைரியமாகத்தான் சொல்கிறார் விமலா “இருந்தாலும் சமயத்தில் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது.”
மற்றவரை ஏவாமல், தானே இறங்கி வேலை செய்யும் நேரடி அணுகுமுறையே சகாயதுக்கு பிடிக்கும். அவர் திங்கள் கிழமை ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருந்த காலத்தில் யாரும் அவரை தங்கள் புகாருடன் சந்திக்க முடியும். ஆய்வுக் கூட்டங்களுக்காக மாவட்டதில் சுற்றி வருகையில் திடீரென்று எதாவது பள்ளி பேருந்தை நிறுத்தி ஏறி விடுவார். அல்லது எதாவது ஒரு பள்ளியில் நுழைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கி விடுவார். ஏதாவது மாணவர், தான் ஒரு IPS அல்லது IAS அதிகாரியாக விருப்பம் கொண்டிருப்பதாக அவரிடம் தெரிவித்தால், “நான் நேர்மையா இருப்பேன்னு நீங்க இப்ப சொல்றது பெரிசில்ல. இதேபோல வாழ்நாள் முழுக்க யாருக்கும் பயப்படாம, லஞ்சம் வாங்காம இருப்பீங்களா?” என்று உறுதிமொழி வாங்கிக் கொள்வார்.
ஒரு முறை, ஒரு கிராமம் வழியாக பயணிக்கையில், 92 வயது மூதாட்டி அரிசி புடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். தன் வாயிற்றுப் பசிக்காக தான் இன்னும் உழைத்துக் கொண்டிருப்பதாக கூறினார் அந்த மூதாட்டி. உடனடியாக ரூபாய் 1,000 முதியோருக்கான ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். மற்றொரு முறை 60 வயது மூதாட்டி ஒருவர் முதியோருக்கான ஓய்வூதியத்தை அவரிடம் விண்ணப்பித்தபோது, “அதெல்லாம் செஞ்சிடலாம் பாட்டி. உங்க ஓய்வூதியத்துக்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். ஆனா, உங்களை கவனிச்சுக்காததுக்காக உங்க மகனைத் தூக்கி ஜெயில்’ல போடுவேன். பரவாயில்லியா?” புன்னகையுடன் கிண்டலாகக் கேட்டார் சகாயம். சொல்லப்போனால், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது அவர் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்.
“இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்ற மகாத்மா காந்தியின் வாக்கை நான் மனதார நம்புகிறேன்,” என்று சொல்லும் சகாயத்தின் மற்றொரு ரோல் மாடல் – சுபாஷ் சந்திர போஸ். கலெக்டராக இருந்த சமயங்களில் சகாயம் பலமுறை கிராமப் பள்ளிகளில் இரவைக் கழித்திருக்கிறார். கிராம நிவாகம் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறார். பல கிராம நிர்வாக அதிகாரிகள் (VAO) தங்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் எங்கோ நகரத்தில் வசிப்பதைக் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தார். நாமக்கல்லில், கிராம நிர்வாக அதிகாரிகள் இணைந்து அவருக்கு பணியிடைமாற்றம் வாங்கிக் கொடுத்தனர். ஆனால், அவருக்கு ஆதரவாக 5,000 கிராம மக்கள், திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோர் வீதியில் இறங்கி போராடி அந்த உத்தரவை வாபஸ் பெற வைத்தனர். ஒரு அதிகாரிக்காக மக்கள் போராடியது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே புதிது.
ஒரு விவசாயி தந்தையின் ஐந்தாவது மகனாக மார்ச் 22, 1964 இல், தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்தார். பஞ்சாயத்து பள்ளியில் தனது கல்வியை தமிழ் வழி தொடங்கினார். பின் 7 கிலோமீட்டர் நடந்து சென்று எல்லைப்பட்டியின் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தனது இளங்கலை பட்டத்தை புதுக்கோட்டை எச்.எச்.தி ராஜாஸ் கல்லூரியில் பெற்றார். பின் சென்னை லோயலா கல்லூரியில் சமூகம் தொடர்பாக முதுகலைப் பட்டம் பெற்றார். அதோடு நில்லாமல், சென்னையின் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்வு பெற்றார். ஆனால் IAS’ஆக தேர்வாக முடியவில்லை. அதனால் அவர் TNPSC தேர்வு எழுதி IAS அதிகாரியாக தேர்வானார். 1991’இல் ஊட்டியின் துணைக் கோட்ட நீதிபதியாக அவரது அரசு வேலை நியமிக்கப்பட்டார்.
இளம் பிராயத்திலேயே, இவருக்கு நேர்மையை ஊட்டி வளர்த்தவர் இவர் தாயார். சகாயம், “என் மனதில் ஆழமாக பதிந்த சம்பவம் இது. அப்பொழுது, எங்கள் வீட்டருகில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் அளவில் மாந்தோப்பு இருந்தது. ஒருமுறை, எல்லா குழந்தைகளைப் போல நானும் அந்த தோப்பில் இருந்து மாம்பழங்களை என் வீட்டுக்கு கொண்டு சென்றபோது, என் அம்மா என்னிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். அத்தனை மாம்பழங்களையும் வீதியில் வீசி எறிய வைத்தார். எது உன்னுடையதில்லையோ அதில் உனக்கு உரிமை இல்லை என்று அதட்டினார். நான் மட்டுமல்ல, எல்லா குழந்தைகளும் மாம்பழங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர் என்று நான் வாதித்த போது, எல்லோரும் செய்வதாலேயே ஒரு தவறான செயல் சரியாகிவிடாது என்று ஆணித்தரமாக அறிவுறுத்தினார். அதை நான் இன்றுவரை மறக்கவில்லை.”
இதோ, சகாயத்தின் மகள் யாழினியும் கலெக்டராக விரும்புகிறார். அவள் தன் தம்பி அருண் உடனான ஒரு வாக்குவாதத்தின் இடையில் தன் அப்பாவிடம் கேட்கிறாள், “ஏம்பா. இவன் உங்க புள்ளதானா? பொய் எல்லாம் சொல்றாம்பா”.
மிக அரிதாக எடுத்துக்கொண்ட விடுமுறையின் போது ஹிமாச்சல் பிரதேஷ்’இன் குல்லு’வில் சுற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் அறிந்திராத ஒருவர் அவர்களின் தந்தையை அணுகி, “ஸார், நீங்கள் IAS ஆபீஸர் திரு. சகாயம் தானே?” குழந்தைகள் இருவரின் முகங்களிலும் பூத்த அத்தனை ரம்மியமான புன்னகை வெகு நேரம் நீடித்திருந்தது. அந்தப் புன்னகை, பெருமையால் உருவானது.
சகாயம் என்ற ஆளுமைக்காக நான் பெருமைப்படுகிறேன்.