ஆப்பீஸ்-1-நம்பிக்கை
ஆப்பீஸ்
நம்பிக்கை
முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.
கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது.
இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் தவிர்த்து இந்த நிறுவனத்திற்காகவே காத்திருந்தேன். நம்பிக்கை அந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வராதபோது வேலையின்றி கல்லூரி விட்டு வெளியே வந்து ஒரு வருடம் வேலை தேடினேன். வேலை தேட ஆரம்பிச்சப்ப ரொம்ப கெத்தா Yokogawa-Bangalore, DRDO-New Delhi, HAL-Bangalore, ONGC-Chennai, ISRO(PRL)-Ahmedabad, CEDTI-Aizawl போன்ற பெரிய நிறுவனங்களிலேயே தேடிக்கொண்டிருந்தேன். நேர்முகத் தேர்வு வரை சென்று உதைபட்டு திரும்பி வருவேன். இதற்காக இந்தியா முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்ததுதான் மிச்சம். ஒரு கட்டத்தில் பெரிய மற்றும் அரசு நிறுவனங்களில் நுழையும் கஷ்டத்தை அறிந்து சிறு நிறுவனங்களில் வேலை தேட ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு பத்து கம்பெனிக்காவது resume அனுப்பவேண்டும் என்பது டார்கெட். மண்ணை வாரி இறைவது போல விண்ணப்பங்களை நான் அள்ளித் தெளிக்க, இரண்டு கம்பெனியில் வாய்ப்பு வந்தது. ஒன்று எடைக்கருவி தயாரிக்கும் கம்பெனி. மளிகைக் கடைகளில் இதன் தயாரிப்புகளைப் பார்த்திருக்கலாம். இரண்டு வருட பணி நீங்கா ஒப்பந்தம் (bond) மற்றும் விஞ்ஞானி பதவி. உங்களுக்கே சிரிப்பா இருக்குல்ல, ஆனா அவங்க அவ்ளோ சீரியஸாத்தான் அந்த பதவியை தந்தாங்க. மற்றொன்று ஒரு பெட்ரோல் பங்க்’ல். பிதுக்கப்பட்ட இயற்கை வாயு (CNG) அமுக்கான்களை (compressor) பராமரிக்கும் பணி. கருவியியல் பொறியாளர் பதவி. இரண்டு இடத்திலும் மாதம் ஐந்தாயிரம் சம்பளம். வருமான வரி பிடிப்பீங்களா என்று இரண்டு இடத்திலும் சந்தேகம் கேட்டு இரண்டு இடத்திலும் அசிங்கப்பட்டேன். ஆனாலும், நம்பிக்கை நிறுவனத்தில் சேர பிதுக்கப்பட்ட இயற்கை வாயுவே சிறந்த வழியென்று தோன்றியதால் பெட்ரோல் பங்க்கிலேயே வேலைக்கு சேர்ந்தேன்.
பெட்ரோல் பங்க்கில் வேலை சேர்ந்த எட்டு மாதத்தில் நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆயிரக்கணக்கானோர் தகுதித் தேர்வு எழுதினோம். அதைப்போன்ற ஒரு எளிமையான போட்டித் தேர்வை நான் எழுதியதில்லை. அதில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டேன். நூற்றுக் கணக்கானவர்களில் ஒருவனாய் அந்த நேர்முகத் தேர்வை எதிர்கொண்டேன். அதுவரை நான் எதிர்கொண்ட நேர்முகத் தேர்வில் பொதுவாக ஏழு எட்டு பேர் தேர்வுக் குழுவில் இருப்பார்கள். குறைந்தபட்சம் நான்கு பேர். இங்கு ஒரே ஒருவர். ஒரே ஒரு கேள்வி. முந்தைய நிறுவனத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய். கதை அளந்து முடித்தேன். வேறு எந்த கேள்வியும் இல்லை. மூன்றே நிமிடத்தில் அறையை விட்டு வெளியே வந்திருந்தேன். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. கனவு நிறுவன வாய்ப்பு தகர்ந்ததாய் உணர்ந்தேன். ‘உள்ளே என்ன கேள்வி கேட்டார்கள்’ குருப் கரட்டாண்டிகளை தவிர்த்து வெளியே வந்தேன். முக்கு கடையில் வழக்கம் போல இரண்டு கட்டிங் ச்சாய். தொலையட்டும், இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று கிளம்பிவிட்டேன். இரண்டொரு நாளில் பெட்ரோல் பங்க் முதலாளி, “கோவா போகிறாயா, அங்க இருக்குற தொழிற்சாலைக்கு ஒரு ஆள் தேவை. போகிறாயா?” என்று கேட்டார். எப்படியும் வேலை கிடைக்காது என்ற நம்பிக்கையில், கோவா போயாவது சுற்றி வருவோம் என்று மும்பை இருப்பை காலி செய்து கிளம்பி விட்டேன்.
கோவாவில் பலதரப்பட்ட அனுபவங்கள். அதை தனியே எழுதலாம். இப்ப மேட்டருக்கு வருவோம். கோவா போய் சேர்ந்த இரண்டே மாதத்தில் மும்பை நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. நம்பிக்கை நிறுவனத்தில் இருந்து என் மும்பை முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகவும், அது பணி நியமன கடிதம் எனவும் சொன்னார்கள். கோவாவில் இருந்து வீட்டு பிரச்சனை என்று சொல்லி இருப்பதை அப்படியே போட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். சிலபல உடைகள், சில உள்ளாடைகள் மற்றும் ஒரு பெட்டி collateral damage.
பணி நியமன கடிதம் பார்த்தேன். நல்ல ஆங்கிலம். காகிதம் மற்றும் பிரிண்ட் தான் சுமார். அதில் போட்டிருந்தபடி மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். ஏதேதோ டெஸ்ட் செய்தபிறகு மருத்துவர், “உங்களுக்கு பேச்சுக் குழாயில் பிரச்சனை இருக்கு. பத்து பனிரெண்டு வருடத்தில் நீங்கள் மொத்தமாக பேசும் திறனை இழந்து விடலாம். அதிகபட்சம் பதினைந்து வருடம். பெட்டர் இப்பொழுதிலிருந்தே சைகை மொழி கற்றுக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். போகிறீர்களா? பீஸ் கம்மிதான்” என்றார். யோவ் போய்யா, நான் கம்பெனி சேர்வதற்கான வழக்கமான பரிசோதனைக்குதான் வந்திருக்கிறேன் என்றபோது, தீர்க்கமாக என்னை பார்த்தவர் மீண்டும் பரிசோதனை செய்து திருத்தி எழுதிக் கொடுத்தார். இதோ கிட்டதட்ட பதினாலு வருடம் வருடம் ஆகிவிட்டது. இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இது பலிக்காதா என்ற நப்பாசை என் சகதர்மினிக்கு இருப்பதாக என் மச்சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, இனி பேச்சு போனாலும் எனக்கு கவலை இல்லை. மருத்துவ பரிசோதனை, நிரப்பப்பட்ட படிவங்கள், என் புகைப்படங்கள், சான்றிதழ்கள், நகல்கள் என்று அத்தனையும் திரட்டி தயாராக வைத்தேன். பிறகு அவர்களுக்கு போன் செய்து, “நான் தயார் ஸார். எப்ப வரட்டும்? லெட்டர்’ல போட்டுருக்குறபடி 20ஆம் அங்கே வந்துரட்ட்டா?” என்று கேட்டால், “இருப்பா. ஒரு சின்ன திருத்தம்” என்று குண்டு தூக்கிப் போட்டார் அந்த மனித வளத் துறை அதிகாரி.
அதை அடுத்த வாரம் சொல்றேன்.
1 Comment