Review

அராஜகம் 1000

Print Friendly, PDF & Email

ட்விட்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். உங்களுக்கு தெரியும். ஆனால் இதுதான் ட்விட்டர் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை புரியவைத்துவிடும் ஒரு சாமர்த்தியம் நிறைந்த கலை அது. அப்படிப் பார்த்தல் இதன் முன்னோடி நம்ம ‘குறள்’தான். சொல்ல வந்த மாபெரும் கருத்தை ட்விட்டரிலும் பாதியாக, ஏழே வார்த்தைகளுக்குள், கிட்டத்தட்ட 70’ஏ எழுத்துகளுக்குள் சொல்லியவர் வள்ளுவர். ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, குறளை விடக் குட்டியாக ஜப்பானின் ஹைக்கூ கிளம்பியது. சுஜாதா கூட அதைப் பற்றி நிறைய சொல்லி நமக்கு புரியவைத்துப் பார்த்தார். ஆனால் நாம் ஹைக்கூ’வை மிக அசால்ட்டாக புரிந்து கொண்டு அதை ஒரு வழியாக்கிவிட்டோம். பல தமிழ் ஹைக்கூ’கள் ஹையகோ டைப்பாகவே இருந்தன. நல்ல வேளையாக நமது ஆர்வம் அத்தோடு மட்டுப் பட்டுவிட்டது. அதையும் தாண்டி, ஒரு அழகிய தமிழ் மகன் மிக மிக குட்டியாக மூன்று எழுத்தில் கவிதையே சொன்னார். இவையெல்லாம் நிலைக்கவில்லை. ட்விட்டர் மட்டும் சற்று வேரூன்றி நின்று விட்டது.

Free account, Smart phone, நல்ல data plan – ட்விட்டருக்கா பஞ்சம்? நானும் Facebook’ற்கு   வருவதற்கு முன்பு மாங்கு மாங்கு என்று ட்விட்டி இருக்கிறேன். அது ஒரு தனி உலகம். இப்பொழுதும் மாதத்துக்கு ஒருவரேனும் (Facebook பிரபலம் / போராளி) ட்விட்டர் பக்கம் ஒதுங்கி, ஒன்றும் புரியாமல் அலறியடித்து திரும்பி வருவார். ஆனாலும் யாராவது ஒரு பிரபலம் – அமிதாப் பச்சன், ஜஸ்டின் பீபர், த்ரிஷாவின் சாக்லேட், ஒசாமா, பவர் ஸ்டார், கொழந்த, etc. – ட்விட்டரில் இணைந்தவுடன் ஏகப்பட்ட பேர் அவரைத் தொடர்ந்து திக்குமுக்காட வைத்து விடுகிறோம். அதன் நீட்சியாக, நாமும் ட்விட்டரில் இருந்தால் நம்மையும் பலர் தொடர்வார்கள் என்று நம்புகிறோம். ஜப்பான்லே ஜாக்கி சான் கூப்டாகோ, அமெரிக்காலே மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ கணக்காக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சில வருடங்களாக ஒன்றுமே ட்வீட்டாத (என்றுமே உருப்படியாக ட்வீட்டாத) எனக்கே கிட்டத்தட்ட 350 followers. என்னத்தை சொல்ல? இதையெல்லாம் தாண்டி சிலர் ட்விட்டரில் அற்புதமாக எழுதினர். விகடன் கூட ‘வலைபாயுதே’ மூலமாக இரண்டு பக்கங்கள் ஒதுக்கி அவர்களை கௌரவித்தது. (விகடன் தாத்தா, எங்களை மாதிரி Facebook பிரபலங்களின் பதிவுகளுக்கும் வலைபாயுதேவில் கொஞ்சம் இடம் கொடுங்க. அட்லீஸ்ட் ஒரு 33%). சாமானியர்களின் எழுத்தும் கவனிக்கப்படத் தொடங்கியது.

ட்விட்டரில் பதிவுகளை தேடித் படிப்பது எனக்கு வெகு சிரமம். ஒன்றை படித்து உள்வாங்கி புரிந்து கொள்வதற்குள் அது ஓடிப் போயிருக்கும். மேலும், என்னிடம் இணையத்திற்கு மொபைல் மட்டுமே உள்ளது. மடிக்கணினியோ, வேறு உபகரணங்களோ கிடையாது. அதானால் சிறந்த பதிவுகளை புத்தகமாக எதிர்பார்த்தேன். புத்தகமாக கையில் ஏந்திப் படிப்பது ஒரு சுகம். போனில் பேசும் காதலியை விட, நேரில் அருகில் என் முன்னே அமர்ந்திருக்கும் காதலியிடம் பேசுவதைப் போல. பொறுமையாக ஒவ்வொரு ட்வீட்டாக  வாசிக்கலாம். உள்வாங்கிக் கொள்ளலாம். அசை போடலாம். அராத்துவின் ‘அராஜகம் 100’ அப்படிப்பட்ட ட்வீட்களின் தொகுப்பு. மொத்தம் 1000 ட்வீட்ஸ். இந்த புத்தகம் பற்றி விழா எடுத்து, அதை பிரபலமாக்கி, இணையத்தில் முடிந்தளவுக்கு ஓட்டியுமாகிவிட்டது (கடைசியில் த்ரிஷாவை யார் தான் boy friend ஆக்கிக் கொண்டீர்கள்?). அதைத் தாண்டி வந்து ஒவ்வொரு ட்வீட்டாக படித்தால் அது நம் கற்பனையை சிறகடிக்கச் செய்கிறது. பத்து வினாடி யோசித்துவிட்டு பின் அர்த்தம் புரிந்து ஒரு புன்னகை மலர்கிறது. நாட்டு நடப்பு, கருத்து, அரசியல், சினிமா என்று அதிகம் உயிரெடுக்காமல் பொதுவாக வாழ்வியல் பற்றிய ட்வீட்கள். பாதிக்கு மேல் பாலியல் பற்றிய ட்வீட்கள். வாழ்வியலும் அதானே. ஒரு நாவல் போல் ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை படிக்க முடியாது. படிக்கவும் கூடாது. இது டக்கீலா அல்ல; வைன். மிக ரசித்து அனுபவிக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள ட்வீட்டை இங்கு போடுவது நியாயம் அல்ல. ஆனால் ஒரு சாம்பிள் தந்தேயாக வேண்டும். இந்த தொகுப்பில் உள்ள மிகக் குட்டியான ட்வீட் இதோ:

1 / 1 = 1, new baby.

எவ்வளவு அற்புதமெனினும் ஒரு நாவல் போல இதை மறுபடி மறுபடி வாசிக்க முடியாது. ஆனால் இதைப் படித்துவிட்டு Facebook’கிலோ ட்விட்டரிலோ நீங்கள் அராத்துவை தேடித் பிடித்து தொடர்ந்தால் அது தான் அவர் எழுத்தின் வெற்றி.

ஒரு முறை படிக்கலாம்; பட், கட்டாயம் படிக்கவும்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.