மின்னல் தேவதைகள்
மின்னல் தேவதைகள் திடீரென்று தோன்றுவார்கள்… அது அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக்கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்…
கிரிக்கெட்டில் ஆர்வமில்லை… ஆஃபீஸ் கிளம்பிவிட்டேன்…
வீட்டு முக்கில் ஷேர் ஆட்டோவில் நான் ஏறிக்கொள்ள, ஒரு இருநூறு அடி தள்ளி அந்தப் பெண் ஏறிக்கொண்டாள்…
மஞ்சள் கலரில் சிம்பிள் சேலை, ஒரு இரண்டு இன்ச் ஜரிகை வைத்து… தோளைத் தாண்டி தவளும் பாப்… பர்ப்பிள் ரவிக்கை… அதே கலரில் கட் ஷூ… தாமரை வடிவ டாலர் மார்பில் படர, கழுத்தில் ஒரேயொரு மெல்லிய செயின்… பருவற்ற முகம்… ரோமமற்ற கைகள்… அதன் இருமங்கிலும் நாலைந்து ரப்பர் வளவிகள்… வலது சுண்டு விரலில் வெண் கல் மோதிரம்…
ஆட்டோ அதற்குள் கிளம்பி ஒரு பதினைந்து அடி பயணித்திருந்தது…
அவளின் அனைத்தும் மீறி ஒரு அற்புத வாசம் வர, என்னையும் மீறி கண்கள் மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சை உள்ளிழுத்தேன்…
கண் திறந்த போது என்னை கவனித்துக் கொண்டிருந்தாள்…
புன்னகையுடன், “Axe…” என்றாள்…
பதில் புன்னகையுடன், “Hmm… Very nice… Ok…” என்று உறளி வைத்தேன்…
பிறகு ஆட்டோவில் இருந்து இறங்கும் வரை, நாகரீகம் கருதி (well, maybe சங்கோஜம் / பயம்) அவள் பக்கம் திரும்பவேயில்லை… வேறு எந்த பயணியும் ஏறாததால் நாங்கள் இருவர் மட்டுமே பயணித்தோம்…
ஒரேயொருமுறை அவள் பக்கம் அகஸ்மாத்தாக திரும்பியபோது, காற்றில் விலகும் இடுப்புச் சேலையை இடது கையால் பிடித்துக்கொண்டு அலையெனப் பறக்கும் கூந்தலை வலது கையால் அதட்டிக் கொண்டிருந்தாள்… வலதுபுறம் திரும்பி அவள் என்னைப் பார்க்க, நான் கண்கள் விலக்கி வெளியே பார்க்கத்தொடங்கினேன்… புன்னகைத்திருந்திருக்கலாம்…
ஸ்டேஷன் வந்தவுடன் அவள் ஆட்டோவின் இடது புறம் இறங்கி பத்து ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் தாள் கொடுத்துவிட்டு மீதி சில்லரைக்கு காத்திருக்க, நான் வலதுபுறம் இறங்கி டிரைவரிடம் குனிந்து பத்து ரூபாய் தாள் நீட்டினேன்… டிரைவரைத் தாண்டி அந்தப் பக்கம் அவள் தெரிந்தாள்… தலை தெரியவில்லை… சேலையை நீவிவிட்டு சரிசெய்து கொண்டிருந்தாள்…
பணம் தந்துவிட்டு நிமிர்ந்த போது புலன்கள் மீறி அவளைப் பார்த்து புன்னகைத்தேன்… சினேகத்துடன் பதில் புன்னகை சிந்தியவள் பின் சட்டென்று திரும்பி கூட்டத்தில் கரைந்தே போனாள்…
ச்சே… அவள் பெயரை மட்டுமாவது கேட்டிருந்திருக்கலாம்… பெண் புத்தியல்ல… ஆண் புத்தியே பின் புத்தி…
பின் குறிப்பு:
அந்தப் பெண் மறுநாளும் வந்தாளா என்று ஆர்வமுடன் பலர் கேட்டனர்… அவர்களுக்கு என் பதில் ஒன்று தான்…
“இவர்கள் மின்னல் தேவதைகள்… மறுமுறை பார்க்க முடியாது…”