Review

சகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு

Print Friendly, PDF & Email

சகுந்தலா வந்தாள்
வா.மு.கோமு
நடுகல் பதிப்பகம்

வா.மு.கோமுவை அறிமுகப்படுத்தியவர் கதிரேசன் சேகர். தெரிந்த எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என பலரும் ஒரு மாதிரி போர் அடித்துப்போக சரவணன் சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், வா.மு.கோமு என்று காட்டினார் கதிரேசன் சேகர். அனைவரும் யதார்த்த எழுத்து. பாசாங்குகள் அற்ற வர்ணனைகள் இல்லாத எழுத்துக்கள். எழுத்தாளர்களுக்கே உரிய வாழ்வியல் வியாக்கியான விளக்கங்கள் மட்டும் அவ்வபொழுது எட்டிப்பார்ப்பதுண்டு. முற்கால புத்தகங்களின் வர்ணனைகளை தாண்டுவதுபோல இவைகளையும் தாண்டிவிடுவதுண்டு. நேரமும், தேவையற்ற ideological குழப்பங்களும் மிச்சம்.

சகுந்தலா வந்தாள் ஒரு நாவல். மொத்தம் நான்கே மைய கதாபாத்திரங்கள் கொண்ட நாவல். முதலில் கல்பனா. தந்தை பக்கத்துக்கு வீட்டுக்காரியுடன் ஓடிப்போக, தாய் இன்னொருவனை அப்பவாக்கி கூட்டி வருகிறாள். தாயை சுகித்துக் கொண்டிருப்பவன், கல்பனா பூப்படைந்த பின்பு அவளையும் சுகித்துவிட்டு தலைமறைவாகிறான். தாய் கொஞ்ச நாள் அழுதுவிட்டு கல்பனாவை இன்னொரு தாயிடம் ஒப்படைக்கிறாள். அங்கு புதிய தாயின் தயவில் தினம் பல கணவர்களையும் காதலர்களையும் காண்கிறாள் கல்பனா. இரண்டாவது ஜான். பூப்படையும் முன்பிருந்தே கல்பனாவை காதலிக்கிறான். ஆனால் பயம். பூப்படைந்தபின் கல்பனா மாயமாக, அவளின் நினைவில் சேலைகள் வாங்கி பீரோவில் அடுக்கி அழகு பார்த்து வாழ்கிறான். கல்பனாவின் மீதான தெய்வீக காதலுக்காக பட்டினியோட இருக்க முடியுமா? ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் காசை பெண்களிடம் செலவழிக்கிறான், அவர்களில் கல்பனாவைத் தேடி. ஒரு முறை கல்பனாவே கிடைத்துப்போக, இவன் ஆடிப்போகிறான். காதலின் பெயரால் கல்பனாவை இல்லற வாழ்வில் சிறைப்படுத்த முயல அவள் உதறிப் போகிறாள். அதற்காக காமமும் காதலும் இன்றி இருக்கமுடியுமா ஜானால்? மூன்றாவது கதாபாத்திரம் சகுந்தலா தேடி போகிறாள். சகுந்தலா ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் சாதாரண பெண். ஜானுக்கு அம்சமாக தெரிகிறான். பேசி பேசி, போன் நம்பர் வாங்கி, SMS செய்து, ஒரு நாள் finally மேட்டர் முடித்து அவளை தன் வாழ்வில் பிணைத்துக்கொள்கிறான். இந்த சகுந்தலா ஏற்கனவே ஒருவனை காதலித்து, மணம் முடித்து, கிராமத்தில் வாழ்ந்து, பிள்ளை பெற்று நகரத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வை வாழத்தெரிந்தவள் என்று அறியாமல். நான்காவது, சகுந்தலாவின் மாமன் கமலக்கண்ணன். இவர்தான் நமக்கு அன்றாடம் காணக்கிடைக்கும் பொதுஜன கதாபாத்திரம். சொந்தத்துக்காக சகுந்தலா இழுத்த இழுப்புக்கு ஓடி தன் குடும்ப வாழ்கையே நாசமாக்கிக்கொள்ளும் யதார்த்த கதாபாத்திரம். இந்த நான்கு மைய கதாபாத்திரங்கள் சுற்றியே கதையும் சம்பவங்களும் ஓடுகின்றன.

பாலியல் பிரதானம். ஆனால், சினிமாவில் பிரபல இயக்குனர்கள் வைக்கும் கற்பழிப்பு காட்சிகள் போன்றல்ல. யதார்த்த பாலியல். காசு கொடுத்து பெறும் பாலியல். கெஞ்சி கூத்தாடி பெறும் பாலியல். உடல் பசிக்கு உணவு எப்படி கிடைத்தால் என்ன? ஆனால், அதையும் தாண்டி சுயநலம் மிக பிரதானம். எனக்கென்னமோ, அதை ஒட்டியே நாவல் ஓடுகிறது. கூமுட்டைத்தனமாக பேசி ஜான் காதல் செய்ய, கல்பனா தன் வாழ்க்கை தேடி அவனை உதறிப் போகிறாள். இல்லற வாழ்வில் துணி துவைத்து, பாத்திரம் விளக்கி உண்டு உறங்குவதே அவளுக்கு பயமாக இருக்கிறது. ஜானுக்கும் சுயநலம். கல்பனா மீதான காதல் கூடாத போது வசதியாக சகுந்தலா மீது காதல் பொங்குகிறது. பின்ன, முதல் காதலையே நினைத்து அழுதுகொண்டிருக்கவா முடியும். அது சரி, நாம மட்டும் முதல் காதல் நினைவில் கல்யாணம் மற்றும் காதல் பண்ணாமலா இருக்கோம். சகுந்தலா இன்னும் பக்கா சுயநலம். ஜானிடமும் கமலக்கண்ணனிடமும் தரக்கூடியதை தந்து, அது காதலோ பாசமோ, தனக்கு தேவையானதை பெற்றுக்கொள்கிறார். கமலக்கண்ணன் தான் பாவம். சுயநலமுடன் வாழ முயற்சித்து அதில் அட்டகாசமாக தோற்றுப்போகிறார். இந்த நாவலில், ஆண்கள் இருவரும் பாலியல் தேடி அலைகின்றனர். ஜானுக்கு கிடைத்துவிடுகிறது. காசு கொடுக்கவும் காதல் பேசி மயக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அதனால், ஒருமாதிரி பிழைத்துவிடுகிறான். கமலக்கண்ணன் தான் பாவம். மனைவியிடம் காமம் பெறவே முக்குகிறான். சகுந்தலா தந்திருக்கலாம். ஆனால், கமலக்கண்ணனுக்கு சகுந்தலாவிடம் பாலியல் கொள்ள பயம். கடைசி வரை மொட்டைபையனாகவே முடிந்து தோற்றும் போகிறான். கல்பனாவோ சகுந்தலாவோ அல்லது கமலக்கண்ணின் மனைவியோ ஆகட்டும். அவர்கள் தங்கள் பாலியல் தேவை கொண்டோ அல்லது பாலியலை முன்னிறுத்தியோ வெற்றி பெறுகின்றனர். சகுந்தலா இதில் மாஸ்டர்.

My verdict: ஒரு முறை படிக்கலாம்

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.