ஆப்பீஸ்-4-சோதனை
ஆப்பீஸ்
சோதனை
முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.
ஒரு மாத தூக்கம் போச்சுன்னா அதுக்கு காரணம் நிவாரணக் கடிதம் எடுத்து வர மனித வள அதிகாரி என்னை நிர்பந்தப்படுத்தியது மட்டும் அல்ல.
சேர்ந்த 192 பேரும் ஜாம்நகரில் எங்கள் பயற்சியைத் தொடங்க துடித்துக் கொண்டிருந்தனர். களத்தில் இறங்கி ஏதாவது ஒன்றை கழற்றி தூக்கியெறிந்து ரிப்பேர் செய்ய கைகள் பரபரத்துக் கொண்டிருந்தது. நிர்வாகம் தெளிவாக இருந்தது. இவர்களை இப்படியே விட்டால் எண்ணை சுத்திகரிப்பு ஆலை கிஷ்கந்தை ஆகிவிடும் என்று அறிந்திருந்தது. அதனால் வகுப்பறை பயிற்சிகளைத் தொடங்கியது. ஆனால் கிட்டத்தட்ட இருநூறு இளைஞர்களை எங்கு அடைத்து பயற்சி கொடுக்க? அதனால் எங்கள் பயற்சி ஒரு மிகப்பெரிய அரங்கத்தில் தொடங்கியது. பல தரப்பட்ட பயற்சிகள், பழம் பெருமைகள் பேசப்பட்டன. முன்னாடி உட்கார்ந்தால் ஏதும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. ஆனால், முதல் வரிசை ரொம்ப ரிஸ்க். இரண்டாவது வரிசையில் அமர்வேன். யாரவது கேள்வி கேட்டால் கையை உயர்த்துவேன். பதில் தெரியும் என்று என்னை சீண்ட மாட்டார்கள். தப்பித்து விடுவேன். இந்த இருநூறு பேரில் கிட்டத்தட்ட முப்பது பெண்கள். அது தான் தூக்கம் தொலைய முக்கிய காரணம். இன்ஜினியரிங் படித்த போதே எனக்கு பெண் நண்பர்கள் இருந்தார்கள் என்றாலும், இங்கு என்னிடம் ஒரு maturity இருந்தது. அல்லது, அப்படி தோன்றியது. ஒரு தோழமையுடன் பழக ஒரு வாய்ப்பாக இருந்தது. தமிழ்ப் பெண்களுடன் நட்பு உடனே ஏற்பட்டது. பஞ்சாபி பதுமைகளும் கேரளத்துப் பைங்கிளிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு ஹிந்தி தெரிந்தது எனக்கு வசதி. நம்மூர் பசங்க அண்ணா, கலைஞர் பேச்சை கேட்டு ஹிந்தி படிக்காதது எனக்கு வசதியானது. தேவையான அளவு கடலை போட்டேன். பரவசத்தில் தூக்கம் தொலைந்து போனது.
இரண்டாவது காரணம் ‘நம்பிக்கை பச்சை’யில் இருந்த அண்ணியார்கள். நாங்கள் இருநூறு பேரும் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்திருந்தது. படித்து உழைத்து இந்த நம்பிக்கை நிறுவனத்தில் இணைந்து ஏகத்துக்கு சம்பாதிக்குக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் தங்கள் தங்கள் ஊரில் இருந்து தங்கள் ஜாதியில் இருந்து அழகான அண்ணிமார்களை திருமணம் செய்து வந்திருந்தனர். அந்த பாலைவனத்தில் அவர்கள் சோலையாக தோன்றினார்கள். அவர்களாலும் தூக்கம் போச்சு.
இருங்க, சோதனை’ன்னு சொல்லிட்டு எங்கெங்கோ தாவிட்டேன். நாம் நம் புள்ளிக்கு திரும்ப வருவோம்.
மனித வள அதிகாரி நிவாரண கடிதம் கேட்டு சோதனை செய்தார் என்றால், மற்றொரு சோதனை மருத்துவ அதிகாரிகளால் வந்தது. அரங்கத்தில் முன்னால் உட்கார்ந்திருந்த ரவீந்தரையும், அவளின் வெண் சங்கு கழுத்தையும், பொன்னிற குதிரைவால் கொண்டையையும் மிக கவனமாக ரசித்துக் கொண்டிருந்த பொழுது மருத்துவ அதிகாரி வந்தார். நான்கு பேரை வாசித்தார். நான், மினி, ராம்கண்ணன் மற்றுமொரு வடக்கத்திய நண்பன் – ராஜேஷ் என்று வைத்துக் கொள்ளலாம். வகுப்பு முடிந்த பின்பு மாலை மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு கூறிச் சென்றார். எனக்கு அங்கு அரங்கத்திலேயே தூக்கம் போய்விட்டது. அதன்பின் மாலைவரை ஒரு சொட்டு தூக்கம் இல்லை. நடத்தப்படும் பாடத்திலோ ரவீந்தரின் பாக்கவோ கவனம் செல்லவில்லை. மாலை மருத்துவ அதிகாரியை நாங்கள் பார்க்க சென்றபோது அவர் வேறு வேலை நிமித்தம் கிளம்பி விட்டிருந்தார். அடுத்த நாள் மாலை பார்க்க முடியும். அன்று இரவு தூக்கம் தொலைந்தது. சோதனை என்று சொல்லி என்ன விசாரிக்கப் போகிறார்களோ? ஒருவேளை என் தொண்டை பேச்சு பிரச்னை கண்டுபிடித்து விட்டார்களோ? அடுத்த நாள் அரங்கிலும் தூக்கம் கிஞ்சித்தும் இல்லை. மாலை சென்றோம். ராம்கண்ணன் பார்வை குறைபாடு இருப்பதாகவும், அவர் அதை சரி படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர் கிட்டதாட்ட முப்பதாயிரம் செலவில் LASIK அறுவை சிகிச்சை மூலம் தன் பார்வை திறனை சரிப் படுத்திக் கொள்வதாக உறுதி கூறினான். எனக்கு நான் பயந்த படி ஒன்றும் இல்லை. எடை குறைவு. 64 கிலோ இருந்திருக்க வேண்டும், என் 5 அடி 8 அங்குல உயரத்திற்கு. ஆனால் 47 கிலோ தான் இருந்தேன். Highly underweight. ஒழுங்காக சத்தான சாப்பாட்டை சாப்பிட்டு, ஜிம் போய் உடல் எடையை ஏற்றிக்கொள்வேன் என்று நான் உறுதி கூறினேன். ஏற்றுக் கொள்ளப்பட்டது. பணியில் தொடர அனுமதிக்கப்பட்டேன். எனக்கு பின்னால் வந்த மினி, பேருக்கு ஏற்றாற்போல் இருந்தார். என் உயரத்தில் இருந்துகொண்டு மொத்தமாகவே 40 கிலோ தான் இருந்தார். அவருக்கும் அதே அறிவுரை. ஆனால் ராஜேஷ் தான் பாவம். மருத்துவ அதிகாரி அவரை பணியில் இருந்து நிராகரித்து விட்டார். எடை பிரச்சனை இல்லை. ராஜேஷுக்கு ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்களே இருந்தன. விரல்கள் ஓட்டிப் போயிருந்தன. IITயில் M.Tech. படித்துக்கொண்டிருந்தவன். அந்த காலத்தில், 2003யில், ஒன்றரை வருடம் என்று நினைக்கிறேன். முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குமுன்பு நம்பிக்கை கம்பெனி வாய்ப்பு வர, படிப்பை விட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறான். நேர்முகத் தேர்வின்போதே இந்த குறைபாடை சொல்லியிருக்கிறான். அந்த அதிகாரி பரவாயில்லை என்று சொல்ல, படிப்பை விட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறான். இப்பொழுது வேலை மறுக்கப்படுகிறது. வெறுத்துப் போய்விட்டான். படிப்பும் போய்விட்டதே என்று கவலைப்பட்டான். ஆனால், நம்பிக்கை நிறுவன அதிகாரிகள் அவன் IIT பேராசிரியரிடம் பேசி படிப்பை தொடர ஆவன செய்தனர். நிறுவனம் மீது ஒரு ஓரத்தில் நம்பிக்கை துளிர்விட்டது.
எனக்கான மற்றொரு சோதனை அப்படியே இருந்தது. நிவாரண கடிதம் தொடர்பான பிரச்சனை. பழைய பெட்ரோல் பங்க் முதலாளியிடம் இருந்து நிவாரண கடிதம் கொண்டு வா, அப்பொழுதுதான் நம்பிக்கை நிறுவனத்தில் தொடர முடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் மனித வள அதிகாரி. அது கிடைக்காது என்று சொல்லிகொண்டிருந்தேன் நான். நீயே ஒரு நிவாரணக் கடிதம் டைப் அடித்து தந்துவிடு என்று நண்பர்கள் சிலர் சொன்னதை நான் முற்றாக மறுத்துவிட்டேன். நல்லதோ கேட்டதோ எது வேண்டுமானாலும் நடக்கட்டும். தப்பான வழியில் செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த கொள்கையால் இன்றுவரை சில விஷயங்களை இழந்துள்ளேன் (தட், பாத்தியா நா எவ்ளோ நல்லவன் மொமென்ட்). நம்பிக்கை நிறுவனத்துக்கு என்ன பயம் என்றால், சட்டப்படி ஒரு ஆள் இரண்டு இடத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கக்கூடாது. பழைய முதலாளி வந்து ‘என் தொழிலாளியை இங்கு நீ எப்படி வேலைக்கு சேர்த்தாய்?’ என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம் நம்பிக்கை நிறுவனத்திற்கு இருந்தது. அப்படியெல்லாம் தேடி வர மாட்டார் என்பது என் வாதம். மேலும், பழைய கம்பெனியில் வேலை நியமன கடிதத்தில் இவ்வாறு ஒரு பாயிண்ட் உண்டு – ‘சேர்ந்த ஒரு வருடத்தில் பரஸ்பரம் எந்த அறிவிப்புமின்றி விலகலாம்’ என்ற ஷரத்து. அவர்களும் என்னை தூக்கலாம். நானும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வரலாம். அதன்படி பார்த்தால், நான் பெட்ரோல் பங்க்’ல் வேலைக்கு சேர்ந்து பத்து மாதமே ஆகியிருந்தது. சட்டப்படியும் பழைய முதலாளி என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதெல்லாம் அந்த மனித வள அதிகாரி கேட்பதாய் இல்லை. சந்தைக்கு போணும்; ஆத்தா வையும்; காசு கொடு கணக்காய் ‘நிவாரண கடிதம் கொண்டுவா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னடா இது. என் கனவு நிறுவனத்தில் ஆசைப்பட்டு சேர்ந்த எனக்கு சோதனை மேல் சோதனை. ஆற்றாமை இரவு முழுவதும் கண்ணீராய் கரைந்தது. உண்மையிலேயே திருப்பி அனுப்பப்படுவேனோ என்று பயந்தேன். வீட்டு தோழன் கபில் என்னை எவ்வளோ ஆறுதல் படுத்தினான். எனக்குத்தான் பயம் தொலையவில்லை. தூக்கமற்ற நீண்ட இரவுகள் அவை. கடைசியில் பழைய முதலாளியிடமே போய் பணி நிவாரண கடிதம் கேட்டு பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், விடுமுறை எடுத்து நேரில் போய் கேட்க பயம். நேரில் போய் கேட்டால் பழைய முதலாளி ‘ஏண்டா ஓடிப்போனே?’ என்று சட்டையை பிடித்து உலுக்குவாரோ என்ற பயம். முக்கியமான இரண்டாவது பயம், எங்கே நான் ஜாம்நகர் விட்டு வெளியேறி மும்பை சென்றால் மறுபடி உள்ளே விடமாட்டர்களோ என்ற அல்ப மரண பயம்தான்.
இந்த இடத்தில் தான் இந்த கதையில் என் அண்ணா நடராஜ் உள்ளே வருகிறார்.
பிகு: நடராஜ் அண்ணா பற்றி முன்பே மற்றொரு பதிவில் சொல்லியிருக்கிறேன் (சென்னையில் ஒரு திருமண நாள் – குரோம்பேட்டை கும்மி).
2 Comment's