Experience

Clash of the Titans

Print Friendly, PDF & Email
விர்ர்ர்ர்ர்….

க்ரீரீரீரீரீச்…

தொடர்ந்து ஒரு மெல்லிய டமார்…

வண்டி இடித்தே விட்டது. இடித்த வண்டியின் எண்ணை பார்த்தேன். மராட்டியில் 100 என்று எழுதி இருந்தது. செத்தோம்டா சாமி. ஏதும் முக்கிய ஆளின் வண்டியாக இருக்கும் என்பது உறுதி. நான் சும்மாவே பயப்படுவேன். இப்போ சொல்லவா வேண்டும். அந்த பெரிய வண்டி – இன்னோவா என்று நினைக்கிறேன், பதட்டத்தில் சரியாக கவனிக்கவில்லை – ஓரம் கட்டி நின்றது. தப்பிக்க நினைத்தால் அது இன்னும் பிரச்சனையை கிளப்பும் என்பதால் நானும் வண்டியை ஓரம் கட்டினேன்.

நாற்சந்தியில் நான் வலது பக்கம் திரும்புவதற்காக வண்டியில் நின்று கொண்டிருந்தேன். வலது பக்கம் ஓர் சிறுவன் பைக் ஒட்டி வந்துகொண்டிருந்தான். அவனை கவனித்துக் கொண்டே, அவனை இடித்துவிடக்கூடாது என்பதற்காக, வண்டியை சற்று முன்னால் எடுத்தேன். இடதுபுறமிருந்து வேகமாக வந்த நம்ம 100ஆம் நம்பர் வண்டியின் பின்புற பம்பரில், என் வண்டியின் முன்புற பம்பர் உரசிவிட்டது. கவனிக்காதது என் தவறெனில், கவனிக்காமலும் வேகமாகவும் வந்தது 100இன் தவறு. அந்த சிறுவனிடம் பைக் கொடுத்து சாலையில் என்னைப் போன்ற ஓட்டுனர்களின் கவனத்தை கலைத்தது அந்த சிறுவனின் பெற்றோர் தப்பு. நல்ல வேளை சிறுவன்; சிறுமியாக இருந்திருந்தால் என் கவனம் இன்னும் சிதறியிருக்கும். தவறு / தப்பு யார் பக்கம் இருந்தாலும், பிரச்சனை இல்லாமல் விஷயத்தை முடிப்பதே என் மனதில் முக்கியமாக ஓடிக்கொண்டிருந்தது.

நான் என் வண்டியை விட்டு இறங்கி அவர்கள் வண்டி நோக்கி சென்றேன். பெரிய வண்டியில் இருந்து இறங்கிய ஓட்டுனருக்கு ஓரு 20-23 வயதிருக்கும். இறங்கி தனது வண்டியில் ஏதும் அடி பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். வண்டியில் இருந்து ஒரு வயதான ஆள் இறங்கினார். பின்னாலேயே நகைகள் பல அணிந்த ஒரு வயதான அம்மாளும். வசதி மற்றும் அதிகாரம் கொண்டவர்கள் என்பது பார்த்த போதே தெரிந்தது. வண்டியில் மேலும் சிலர் இருந்தார்கள். குடும்பமாக ஏதோ விசேஷத்துக்கு போய்க் கொண்டிருந்தார்கள் போல. நான் நேராக அந்த பெரியவரிடம் சென்று, “தப்பு என்னுடையது தான்… மன்னித்து விடுங்கள்… பைக் ஒட்டி வந்த சிறுவனை கவனித்தேன்… உங்களை கவனிக்காமல் இடித்து விட்டேன்…”, என்று 23ஆம் புலிகேசி போல சரணடைந்து விட்டேன்.

“எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். சொன்னேன்.

அருகில் இருந்த கூட்டத்தை பார்த்து, “இந்தப் பையனை யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.

“ஐயா. பொய் சொல்ல மாட்டேன். நான் இங்குதான் இருக்கிறேன்”

“எங்கு வேலை பார்க்கிறாய்?” – “ரிலையன்ஸ்”

“பாதாள்கங்காவா?” – “இல்லை, கன்சொலி. ஹெட் ஆபீஸ்”

“அடையாள அட்டை வைத்திருக்கிறாயா?” – “இல்லை. வெளியில் வரும்போது கொண்டு வரும் பழக்கம் இல்லை”

“வண்டி ஆர்.சி. புத்தகம் இருக்கா?” – “இல்லை. வண்டி நிர்வாகத்தின் பேரில் உள்ளது. நான் ஓட்ட மட்டுமே உரிமையுள்ளவன்”

ஆர்.சி. புத்தகத்தின் நகல் மற்றும் என் அடையாள அட்டையின் நகல் வண்டியில் இருந்தது. அதை கேட்டு வாங்கிக்கொண்டார்.

அருகில், கூடத்தில் முளைத்த ஒரு அல்லக்கை, “லைசென்ஸ் இருக்கா?”. பேசாமல் இருந்தேன். என்னிடம் அசல் இருந்தது. ஆனால், அந்த பெரியவர் லைசென்ஸ் பற்றி கண்டுகொள்ளவில்லை.

பெரியவர் தனது ஓட்டுனரை பார்த்து, “நீயும் பாட்டு கேட்டுட்டே ஒட்டு…” என்று சத்தம் போட்டார்.

நான் மீண்டும் பவ்வியமாக, “நீங்கள் தான் சொல்ல வேண்டும்.”

அவர், “வண்டி சரி செய்ய வேண்டும்”. அவர் வண்டிக்கு பெரிசாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் சரியென்றேன்.

“வண்டியை சரி செய்து பில் அனுப்புகிறேன்.” – “இல்லை ஐயா. எனக்கு செலவு அதிகமானால் சமாளிக்க முடியாது. எனக்கு தெரிந்த இடத்தில் நான் சரி செய்து தருகிறேன்.”

“அப்போ நாளை வந்துவிடு.” – “மன்னிக்கணும் ஐயா. நாளை வேலைக்கு செல்லவேண்டும். நேரில் வருவது கஷ்டம். வண்டி அனுப்பினால் எனக்கு தெரிந்த இடத்தில் சரி செய்யச் சொல்கிறேன்.”

ஓட்டுனர் என் அலைபேசி எண்ணையும், என் வண்டியின் எண்ணையும் குறித்துக் கொண்டான்.

அவர் வண்டியில் சென்று உட்கார்ந்த பின்பும், அவரிடம் சென்று, “தவறு என்னுடையதுதான். நீங்கள் சொன்னபடி செய்து விடலாம்”, அவர் கிளம்பி விட்டார்.

நான் கூட்டத்தில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர் சிவ சேனாவின் மாவட்டத் தலைவர். அவரின் அலைபேசி எண் மக்களிடமே இருந்தது. அருகில் இருந்த ஷுக்லாஜி என்பவர், “தாதா இன்னைக்கு கோபம் இல்லாமல் இருந்தார். அதனால தப்பிச்சிட்டே. இல்லேன்னா….”, என்று டெர்ரர் விட்டார். சற்று தூரத்து முக்கில் தான் காவல் நிலையம் இருக்கிறது. ஆனால் அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்த போலீஸார் கூட யாரும் வரவில்லை. இப்போதைக்கு கூட்டத்தில் இருந்து அடி வாங்காமல் கிளம்பினால் போதும் என்று நான் வந்து விட்டேன்.

எனக்கு பதட்டமாக இருந்தது. கூகுளில் அவர் பெயர் போட்டால் வரிசையாக தேடிக் கொடுக்கிறது. ஸ்பாட்டில் இருந்து கிளம்பி நேராக பிரபாகர் வீட்டுக்கு வந்தேன். அவரிடம் நடந்ததை சொன்னேன். “ஒன்றும் ஆகாது. எதுக்கும் சைஃப்ஹிடம் பேசிவிடுவோம்” என்றார். சைஃப் மரச்சாமான்கள் விற்கும் கடை ஓனர். பிரபாகருக்கு நல்ல பழக்கம். இரண்டு பெரும் சேர்ந்து McDowell சோடா எல்லாம் குடிப்பார்கள். குடும்ப நண்பர்கள்.

தொழில் காரணமாக சிலபல உள்ளூர் பிரபலங்கள் சைஃபுக்குப் பழக்கம். சைஃப் சொன்னார், “ஒண்ணும் ஆகாது தம்பி. இவர் பெரிய ஆளு. கத்துக்குட்டி தான் துள்ளுவானுங்க. இவர் நல்ல மாதிரி. அப்படியே ஏதும் பிரச்சனை ஆச்சுன்னா நமக்கு தெரிஞ்ச ஆள் இருக்காரு. அவர்கிட்டே பேசலாம். அதையும் தாண்டினால், இந்த ஏரியா ACP எனக்கு தெரிஞ்ச ஆளுதான். நல்லவர். அவர்கிட்ட கண்டிப்பா பேசலாம்.”, என்று எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகம் வந்து விட்டேன். அந்த பெரியவரிடம் இருந்தோ அல்லது அவரது ஓட்டுனரிடம் இருந்தோ அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. பிரபாகருக்கு அழைப்பு போட்டு பேசினேன். “இல்லே கார்த்தி, நீயே அவரை அழைத்து பேசிவிடு.” என்றார். மனதை ஒருமுகப்படுத்தி அவரை அழைத்தேன். அவர் எடுக்கவில்லை. இரண்டு நிமிடம் கழித்து அவர் திருப்பி அழைத்தார்.

“ஐயா. நான் கார்த்திக். உங்கள் வண்டியை தெரு முக்கில் இடித்தவன்.”

“ம்ம். சொல்லு.”

“இன்று உங்களிடம் இருந்து அழைப்பு வருமென்று காத்திருந்தேன். நான் எனக்கு தெரிந்த இடத்தில் உங்கள் வண்டியை சரி செய்ய சொல்லி வைத்திருக்கிறேன். நாளை நீங்கள் வண்டியை அனுப்பலாம்.”

“நான் வண்டியை இன்றே சரி செய்ய அனுப்பிவிட்டேன். போ போ.”

“உங்கள் ஓட்டுனர் அழைப்பு எண் கொடுத்தால் அவரிடம் பேசி ஆகவேண்டிய செலவை ஏற்றுக் கொள்கிறேன்.”

“விடு விடு. இனிமேல் பார்த்து ஒட்டு”

“சரி ஐயா.”

“நானும் ரிலையன்ஸில் நிறைய வாங்குவேன். பெரிய நிறுவனம் இல்லே.”

“ஆமாம் ஐயா. இந்த பக்கம் வரும் போது வாருங்கள்.”

அவர் அழைப்பை துண்டித்துவிட்டார். எனக்கு மிக நிம்மதியாக இருந்தது. பிரச்சனை இல்லாமல் முடிந்ததற்காக.

இந்த மொத்த நிகழ்வில், ஒன்று மட்டும் என் மனதை மிக அதிகமாக காயப்படுத்தி விட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடமாக இந்த பகுதியில் இருக்கிறேன். ஆனால், “இந்தப் பையனை யாருக்காவது தெரியுமா?” என்று தாதா கேட்டபோது சுற்றியிருந்த யாருமே கைதூக்கவில்லை.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.