Review

Animal Farm

Print Friendly, PDF & Email

“All are equal; but some are more equal”

யாராவது தன் அமைப்பில் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி என்னிடம் புலம்பும்போது நான் உதிரும் முத்துக்கள் இவை. எப்படி என் மனதில் இது பதிந்தது அல்லது எங்கு படித்தேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனாலும் சொல்லிக்கொண்டிருந்தேன் – “அனைவரும் சமம்; சிலர் சற்று கூடுதலாகவே சமம்”.
சென்ற திங்கட்கிழமை மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று தற்போது அழைக்கப்படும் விக்டோரியா டெர்மினஸ் (VT) சென்றிருந்தேன். அங்கு ரயில்வே ஸ்டேஷன்’இல் இருக்கும் புத்தகக் கடையில் கிட்டத்தட்ட அனைத்து வார இதழ்களும் கிடைக்கும். இந்தியா டுடே, ஜூவி, ஆவி வாங்கிய பிறகு புத்தகங்களின் மேல் கண்கள் அலைந்த போது தென்பட்டது ‘Animal Farm by George Orwell’. தலைப்பும் ஆசிரியரும் யாரோ சொல்லக்கேட்ட அல்லது படித்த மாதிரியே தோன்றியது. கையில் வாங்கிப் பார்த்த போது, அட்டையில் இருந்த வரிகள் என்னைத் தாக்கியது.

ALL ANIMALS ARE EQUAL.
BUT SOME ANIMALS ARE
MORE EQUAL THAN OTHERS.

சத்தம் போடாமல், உள்ளே மேலும் ஆராயாமல், பேரம் பேசாமல் உடனே வாங்கினேன். லோக்கலில் வீட்டுக்கு திரும்பும்போதே பெயரெழுதி படிக்க ஆரம்பித்தேன். 120 பக்கங்களில், 99 ரூபாயில் கைக்கடக்கமான புத்தகம்.

ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) என்ற புனைப்பெயரில் எழுதிய எரிக் ஆர்தர் ப்ளேர் (Eric Arthur Blair) 1903’ஆம் ஆண்டு நம்ம இந்தியாவின் பீஹார்’இல் பிறந்தார். அவர் தந்தை அரசு அலுவலர். அன்றைய பிரிட்டிஷ் அரசு நடத்திய அங்கீகரிக்கப்பட்ட அபின் வர்த்தகத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆர்வெல் தனது ஒரு வயதில் லண்டன் அனுப்பப் பட்டார். பள்ளிப் படிப்பு அங்கேதான். ஆனாலும், அவர் அப்படியொன்றும் பெரிதாக படித்துக் கிழித்துவிடவில்லை. தனது 19’வது வயதில், இந்தியன் இம்பீரியல் போலீஸ்’இல் (Indian Imperial Police) இணைந்து பர்மா (இன்றைய மியான்மார்) சென்றார். ஏற்கனவே அவருக்கு ஏகாதிபத்திய அரசின் மீது ஒரு வெறுப்பு இருக்க, ஐந்தே வருடங்களில் அந்த வேலை அலுத்துவிட்டது. அரசு வேலையை தோளில் கிடக்கும் துண்டென துச்சமாக மதித்து துறந்து, இனிமேல் எழுத்து தான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்து (என்னா துணிச்சல்!!!) 1927’இல் லண்டன் திரும்பி, அங்கிருந்து பாரிஸ் சென்றார். கதை, கட்டுரை என்று என்னென்னவோ எழுதிப் பார்த்தார். ம்ஹ்ம்ம், ஒன்றும் சோபிக்கவில்லை. பின் இந்த ‘ஜார்ஜ் ஆர்வெல்’ என்ற புனைப் பெயரில் எழுத ஆரம்பித்தார். டௌன் அண்ட் ஔட் இன் பாரிஸ் அண்ட் லண்டன் (Down and Out in Paris and London) என்பது அவர் முதல் புத்தகம். இந்த இரு தலைநகரங்களில் நிலவிய ஏழ்மையைப் பற்றிய அனுபவ மற்றும் பயணக் கட்டுரை. அனிமல் பார்ம் (Animal Farm), நைன்டீன் எய்ட்டி-போர் (Nineteen Eighty-Four) மற்றும் ஹோமேஜ் டூ கேடலோனியா (Homage to Catalonia) ஆகியவை அவரது சிறந்த படைப்புகள். 1950’இல் ஆர்வெல் இறந்த போது அவருக்கு வயது வெறும் 46. ஒரு கொசுறுத் தகவல் – இன்று நாம் வெகு பிரபலமாக உபயோகிக்கும் ‘Big Brother’ (பெரியண்ணன் என்று வேறு அதை தமிழாக்கியிருக்கிறோம்) என்ற சொல்லாடலை இவர்தான் தன் படைப்புகளில் முதன் முதலாக பயன்படுத்தினார்.

அனிமல் ஃபார்ம்

115 பக்கங்களில் மிகக் குட்டி, அட்டகாசமான மிக சிம்பிள்’ஆன ஆங்கிலம், விறுவிறுவென்று ஓடும் கதை (வர்ணனைகளா? மூச்!!!), குழப்பமில்லாத ஒரு ஃப்ளோ என்று பல வகைகளில் என்னைக் கட்டிப் போட்டது இந்த அனிமல் ஃபார்ம். மூன்று பிரிட்டிஷ் பதிப்பாளர்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட அமெரிக்க பதிப்பாளர்கள் நிராகரிக்க (அனைவருக்கும் பயம்) கடைசியாக 1945’ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பின் 1954’இலும் 1999’இலும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நம்ம கொல்லும் (Lord of the Rings) மற்றும் ஸீசர் (Planet of the Apes) புகழ் ஆண்டி செர்கிஸ் (Andy Serkis) இயக்கத்தில் ஒரு 3-D படம் வரவிருப்பதாக 2012’இல் அறிவிப்பு வெளியானது. நூறு சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாக இந்த புத்தகத்தை தேர்ந்தேடுத்துள்ளது டைம் பத்திரிகை. மேலும் பல சிறப்புகள் உண்டு. இப்பொழுது கதையைப் பார்க்கலாம்.

ஓபன் பண்ணா, ஒரு அழகிய பச்சைப் பசேல் பண்ணை. அதன் பண்ணையார் ஜோன்ஸ். அவன் பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி, குதிரை, கழுதை, வாத்து, பூனை என்று பல மிருகங்கள். வழக்கமான தமிழ் சினிமா பண்ணையார் போல மிருகங்களின் உழைப்பை சுரண்டி அதில் ஏகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் இந்த ஜோன்ஸ்.

மிஸ்டர் பன்றிக்கு மற்ற டோளர்களிடையே (மற்ற அனிமல்ஸ் / மிருகங்கள்) பெருமதிப்பு இருக்கிறது. அவர் ஒரு நாள் அனைத்து டோளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார். பண்ணை ஜோன்ஸ்’க்கு தெரியாமல் அவன் தூங்கிய பின்னர் தான். “டோளர்களே, I have a dream. நாம் கஷ்டப்பட்டு உழைக்க, இந்த சோம்பேறி மனிதன் சும்மா உட்கார்ந்து உண்பதா? ஐயகோ. இதில் மாற்றம் வேண்டும். நம் உழைப்பு நமக்கே. மனிதன் இல்லாத நமக்கே நமக்கான பண்ணைதான் நம் கனவு. அந்த நன்னாளை எதிர்நோக்குவோம் டோளர்களே. உடல் மண்ணுக்கு. உயிர் பண்ணைக்கு.” என்று உணர்ச்சி பொங்கப் பேசி, ஒரு விடுதலை தீயை விதைத்து, பின் ஒரு நாலு நாள் கழித்து நிம்மதியாக செத்துப் போகிறார்.

பண்ணையின் கொம்பு + குளம்பு கொடி
(கதிர் அரிவாள் + சுத்தியல் போல இல்லை???)

ஒரு மூன்று நான்கு மாதங்கள் கழித்து ஒரு உப்புப் பெறாத விஷயத்திற்காக பண்ணையில் போராட்டம் வெடிக்கிறது. ஜோன்ஸ் பண்ணையை விட்டு துரத்தப் படுகிறான். ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற இருண்டு பன்றிகள் பண்ணையின் பொறுப்பேற்கின்றன. மானோர் ஃபார்ம் (Manor Farm) என்றழைக்கப்பட்ட பண்ணை அனிமல் ஃபார்ம் (Animal Farm) என்ற புது பெயர் பெறுகிறது. டோளர்கள் தங்கள் வெற்றியை, சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். பீஸ்ட்ஸ் ஆஃப் இங்லாண்ட் (Beasts of England) என்ற அவர்களுடைய விடுதலை கீதத்தை பாடுகிறார்கள். தங்களுக்கென ஒரு கொடியை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் கொடியில் கொம்பு மற்றும் கால் குளம்பும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்குமான வேலை, வேலை நேரம், ஓய்வுக்கான வயது வரம்பு (Retirement age), ஓய்வூதியம் என பல விஷயங்கள் நிர்ணயிக்கிறார்கள். அனைத்து விஷயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வோட்டேடுப்பின் மூலமே முடிவெடுக்கப் படுகிறது. மேலும், அனைவருக்குமான ஏழு பண்ணை விதிகள் விதிக்கப் படுகிறது. அவையாவன,

1. இரு கால்களில் நடப்பவை எதிரி
2. நான்கு கால்களில் நடப்பவை, அல்லது இறக்கைகள் கொண்டவை, நண்பன்
3. யாரும் உடை உடுத்தக் கூடாது
4. யாரும் படுக்கையில் படுக்கக் கூடாது
5. யாரும் மது அருந்தக் கூடாது
6. யாரும் மற்றொருவரைக் கொல்லக் கூடாது
7. அனைவரும் சமம்

தங்கள் உழைப்பின் பயனை டோளர்கள் தாங்களே அனுபவிக்கிறார்கள். அனைவரும் தங்களின் அதிகபட்ச உழைப்பை அளிக்கிறார்கள். உற்பத்தியும் அட்டகாசமாக இருக்கிறது. இடையே, ஒரு முறை, தனது இழந்த பண்ணையை மீட்க வரும் ஜோன்ஸ்’ஐ நம் டோளர்கள் அனைவரும் சேர்ந்து விரட்டியடிக்கிறார்கள். அந்த வெற்றியை நம் டோளர்கள் ஆடிப் பாடிக் கொண்டாடுகிறார்கள் – போராட்டத்தின் போது இறந்த ஒரு ஆட்டிற்கு துக்கம் அனுஷ்டித்தும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் நைஸாக தப்பித்தவர்களைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளாமலும்.

காலம் செல்லச் செல்ல, ஒரு ஆட்சிக்கான அனைத்து மாற்றங்களும் அரங்கேறுகின்றன. ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் இருவருக்கிடையே பதவிப் போட்டி நடைபெறுகிறது. ஸ்னோபால் மற்ற டோளர்களுக்கு எழுதப் படிக்க சொல்லித் தருகிறது. அந்த சமயத்தில் நெப்போலியன் நாய்களை வளர்த்து தயார்படுத்தி பழக்கி வைத்திருந்து ஒரு நாள் ஸ்னோபால்’ஐ விரட்டியடித்து தலைமை ஏற்கிறது. பின் பண்ணையில் இன்னும் வேகமாக மாற்றங்கள் வருகின்றன. உழைப்பவை மேலும் உழைக்கின்றன. சொகுசுப் பார்ட்டிகள் மேலும் வசதிகளை அனுபவிக்கின்றன. குதிரை உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து கடைசியில் கசாப்புக்கு விற்கப்படுகிறது. கோழி முட்டைகள் விற்கப்படுகின்றன. மாட்டில் பால் அதன் கன்றிடமிருந்து பறிக்கப்பட்டு பன்றிகள் எடுத்துக் கொள்கின்றன. ஆப்பிள் முதலிய விளைச்சல் பன்றிகளுக்கு செல்கிறது. தலைமை பன்றிகளும், அவர்களைப் பாதுகாக்கும் நாய்களும் பண்ணையில் ஆட்சி செய்கின்றன. மற்ற மிருகங்களின் உழைப்பில் உறிஞ்சி வாழ்கின்றன. அவர்களின் வசதிக்கேற்ப மூன்று விதிகள் மேம்படுத்தப் படுகின்றன.
4. யாரும் படுக்கையில் போர்வையுடன் படுக்கக் கூடாது
5. யாரும் அளவுக்கதிகமாக மது அருந்தக் கூடாது
6. யாரும் காரணமின்றி மற்றொருவரைக் கொல்லக் கூடாது
ஒரு கட்டத்தில் முக்கிய விதியே திருத்தியமைக்கப்படுகிறது.
7. அனைவரும் சமம்; சிலர் சற்று கூடுதலாகவே சமம்
டோளர்களின் கீதம் நிறுத்தப்பட்டு நெப்போலியன் துதிப் பாடல் பாடப் படுகிறது. பழைய கொடி போய் வெறும் பச்சை நிறக் கொடி அமல் படுத்தப்படுகிறது. சிறுக சிறுக தலைமைப் பன்றிகள் மனிதர்களாகவே மாறி, முந்தைய ஜோன்ஸ் ஆட்சியைப் போலவே, மற்ற மிருகங்களையும் பண்ணையையும் நிர்வாகிப்பதாக கதை முடிகிறது.
இந்த கதையைப் படித்து முடித்த போது ஒரு சோகமே நிலவியது. இந்தக் கதையை இன்றைய அரசியலுடனோ அல்லது ஒரு நிறுவனத்துடனோ ஒப்பிடாமல் இருக்கவே முடியவில்லை. யோசித்துப் பாருங்கள். ஒரு கட்சியில் தலைவனுக்கும் தொண்டனுக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது. ஒரு நிறுவன தலைவருக்கும் அதன் கடைநிலை தொழிலாளிக்கான தொடர்பு எப்படி இருக்கிறது. இந்த நாவலில் உள்ள அரசியலை, ஒவ்வொரு மிருகத்தின் ஒவ்வொரு செயலிலும் உள்ள அரசியலை உணராமல் கடந்து போகவே முடியாது. படிக்கும் ஒவ்வொருவரும் தன்னை இந்த கதாப்பாதிரங்களில் ஏதாவது ஒன்றாக உருவகப் படுத்தாமல் இருக்கவும் முடியாது.
படிக்கவும். கண்டிப்பாக படிக்கவும். உங்கள் நூலகத்தில் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் மீண்டும் படிக்கவும்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.