(இதற்கு முன்…)

May 20, 1969

நண்பகல் 12:30
ஃப்ளோரிடா கிழக்கு கடற்கரை
அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர்
மே 1969

AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’ என்றும் சொல்லாமென்றாலும்  நம் வசதிக்காக ராக்கெட் என்றே சொல்லுவோம். முப்பது மாடி உயரத்தில் (363 அடி) கருப்பு வெள்ளை நிறத்தில் நம் ராக்கெட், ஏவூர்தி கட்டுமானக் கட்டடத்தில் (Vehicle Assembly Building – VAB) இருந்து ஏவுதளத்துக்கு செல்வதை நத்தைக்கு கூட ஒப்பிட முடியாது. அத்தனை பொறுமை. அதன் நகர்தலை நாம் கண்களால் பார்க்க முடியாது. ஓரிடத்தில் தெரியும் ராக்கெட் சில மணி நேரத்துக்கு பிறகு பார்த்தால் வேறொரு இடத்தில் தெரியும். அவ்வளவுதான். வேகமாக செல்லவே உருவாக்கப்பட்ட ராக்கெட்டை அத்தனை மெதுவாக கொண்டு செல்வது க்ராலர் (Crawler) என்ற உலகின் மிகப்பெரிய தரைவழி வாகனம். ஆறு மில்லியன் பவுண்ட், அதாவது கிட்டத்தட்ட 500 வளர்ந்த ஆப்பிரிக்க யானைகளின் எடை கொண்ட இந்த க்ராலரை இயக்க மட்டுமே 11 தேர்ந்த ஆட்கள் தேவை. இந்த க்ராலரின் ஒரே வேலை, ராக்கெட் மற்றும் அதை செலுத்த உதவும் இரும்பாலான கட்டுமானத்தை (மொத்தம் 12 மில்லியன் பவுண்ட்) VABயில் இருந்து ஏவுதளத்துக்கு கொண்டு செல்வதுதான்.

க்ராலர் பற்றி அறியும்முன் இந்த VAB பற்றிய ஒரு கொசுறு செய்தி. 525 அடி உயர கூரையுடைய VABயின் கொள்ளளவு 129 மில்லியன் கன அடி. ராக்கெட் கொண்டுசெல்வதற்கான அந்த இரண்டு கதவுகள் ஒவ்வொன்றும் 45 மாடி உயரம். VABயின்  10,000 டன் AC மட்டும் வேலை செய்யாவிட்டால் உள்ளேயே கூரையில் மேகங்கள் சேர்ந்து, நம்புங்கள், மழையே  பெய்யும்.

VABயில் இருந்து ராக்கெட்டை வெளியே கொண்டுவரும் க்ராலர்

ராக்கெட்டை கொண்டுசெல்வதற்கு என்று மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த க்ராலரை ஒரு கட்டுமான அற்புதம் என்றே சொல்லவேண்டும். க்ராலரைப் பற்றி கென்னடியின் ராக்கெட் ஏவல் நடவடிக்கைகளின் இயக்குனர் ரோக்கோ  பெட்ரோன் (Rocco Petrone) கூறுகையில், “பலதரப்பட்ட விவாதங்களுக்கு பிறகு யாரோ ஒருவர் தந்த சின்ன ஐடியா, கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு இந்த பிரமாண்ட க்ராலராக வளர்ந்துவிட்டது. க்ராலரை நாங்கள் இங்கு நாசாவில் நாகரீகமாக ‘ட்ரான்ஸ்போர்ட்டர்’ (Transporter) என்போம். ஓஹியோவின் மாரியான் பவர் ஷவல் கம்பெனிதான் (Marion Power Shovel Company) வரைபடங்களில் இருந்த இந்த எந்திரத்தை எங்கள் முன்னே உருவாக்கி, 41 அடி உயரத்தில், 3 ஆயிரம் டன் எடையில் பிரமாண்டமாக நிறுத்தியது. எட்டு கால்களைக் கொண்ட இதன் மேல் அமைக்கப்பட்டிருக்கும் தளம், ஒரு பேஸ் பால் மைதானத்தை விடப் பெரியது. இந்த தளத்தின் மேல்தான் அப்போலோ-சாட்டர்ன் V மற்றும் அதை ஏவும் கட்டுமானம் இரண்டையும் அமர வைத்து (மொத்தம் 6 ஆயிரம் டன் எடை) VABயில் இருந்து ஏவுதளம் வரை ஒய்யாரமாக மணிக்கு ஒரு மைல் வேகத்தில் அழைத்துச் செல்லப்படும். 3 ஆயிரம் டன் எடைகொண்ட க்ராலர், தன் மீது 6 ஆயிரம் டன் எடை கொண்ட அப்போலோ-சாட்டர்ன் V மற்றும் கட்டுமானங்களை சுமந்து கொண்டு, மொத்தமாக 9 ஆயிரம் டன் எடை உருவமாக ஆடி அசைந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும். அந்தக் காட்சி, சாட்சாத் அந்த பரந்தாமனே இரும்புரு கொண்டு நடந்து வருவது போல் இருக்கும்.”

க்ராலர்

நியூ மெக்சிகோவில் இருந்து V2 வகை ராக்கெட்கள் செலுத்தப்பட்ட வரை இந்த  க்ராலர்கள் தேவைப்படவில்லை. அங்கு நல்ல வெயிலுடன் கூடிய வானிலை நிலவியதால் ராக்கெட்டின் கட்டுமானம் ஏவுதளத்திலேயே நடந்தது. ஆனால் இங்கு, காற்றில் ஈரப்பதமும் சமயங்களில் புயலும் அடிக்கக் கூடிய ஃப்ளோரிடாவில், ஒரு பாதுகாப்பான இடத்தில் (VAB) ராக்கெட்டை கட்டி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லும் தேவை ஏற்பட்டது. அப்பொழுது தான் இந்த க்ராலர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.

VABயில் இருக்கும் ராக்கெட்டை அலாக்காக தூக்கி ஏவுதளம் நோக்கி செல்லும்போது ராக்கெட் சாய்ந்துவிடாதிருக்க க்ராலரின் தளம் எப்போதும் சமமாக இருக்க வேண்டும். அதற்காக, தளத்தை பல்வேறு இடங்களில் மேலும் கீழும் அசைக்க 16 ஹைட்ராலிக் லீவர்கள் உண்டு. இவை போகும் வழியில் ராக்கெட் குடை சாய்ந்து விடாமல் இருக்க உதவுகின்றது. ஏவுதளம் சற்று மேடான இடத்தில் இருப்பதால் அதன் 3 டிகிரி சாய்வுப் பாதையிலும் செல்லும்போது ராக்கெட்டை நேராக வைத்திருக்கிறது இந்த லீவர்கள். இத்தனை பெரிய வாகனமெனினும் மிக துல்லியமாக இயங்கக்கூடியது இந்த க்ராலர்.

Hans and Franz
2010

ஹான்ஸ் (Hans) மற்றும் ஃப்ரான்ஸ் (Franz) என்று அழைக்கப்பட்ட இரண்டு க்ராலர்கள் 1965இல் தருவிக்கப்பட்டன. அப்போது அதன் விலை ஒவ்வொன்றும் 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஹான்ஸ் மற்றும் ஃப்ரான்ஸ் பெயரில் ஒரு கார்டூன் பலசாலி ஜோடி இருந்ததால் நம் இரண்டு க்ராலர்களுக்கு இந்த பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை ஓரு 6000 கிலோமீட்டர்கள் இவை பயணித்திருக்கலாம். ஒவ்வோரு க்ராலரிலும் இரண்டு 2750-hp டீஸல் என்ஜின்கள் உண்டு. இதன் மைலேஜ் கேட்டால் உங்களுக்கு மயக்கம் வந்துவிடும். வெறும் 3.38  மீட்டர் / லிட்டர் (டாடா இண்டிகாவின் மைலேஜ் 22000 மீட்டர் / லிட்டர்). அதாவது ஒரு கிலோமீட்டர் ஓட கிட்டத்தட்ட 296 லிட்டர் டீசல் தேவைப்படும். இதன் டீஸல் டாங்கியின் கொள்ளவு மட்டுமே 19000 லிட்டர். வேகம் அதிகபட்சம் 2 mph. அதுவும் இதன் மேல் ராக்கெட் ஏற்றிவிட்டால் வேகம் 1 mph ஆகிவிடும். கொஞ்சம் ஸ்லோதான். இது பயணம் செய்யப் போடப்பட்ட ரோடு கூட ஸ்பெஷல்தான். இந்த கனத்தை தாங்கக்கூடிய, அதே சமயம் நெருப்புப் பொறி வராத (ராக்கெட்டின் எரிவாயுவுக்கு நெருப்பு ஆகாது பாருங்க) ஒரு ரோடு போடப்பட்டது. மனிதனின் நிலவுப் பயணத்தின் தொடக்கம் இந்த க்ராலர் பயணம் தான். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இதன் தேவை மாறவில்லை. 2017இல் வரவிருக்கும் மேலும் கனமான ராக்கெட்களுக்காக (Space Launch System) இதன் எடை தாங்கும் திறன் 12 மில்லியன் பவுண்ட்டில் இருந்து 18 மில்லியன் பவுண்ட்டாக அதிகப்படுத்தப்படுகிறது. அதற்காக என்ஜின், ஹைட்ராலிக் லீவர், ப்ரேக், கம்ப்யூட்டர் ஆகியவை மேம்படுத்தப் படுகின்றன. இப்போதைக்கு இதற்கு ஓய்வு கிடைக்கப் போவது இல்லை.

சொல்ல மறந்துட்டேனே. இவை ஒரு சினிமா பிரபலமும் கூட. இந்த க்ராலர் ‘Apollo 13’ (1995) மற்றும் ‘Transformers: Dark of the Moon’ (2011) ஆகிய படங்களிலும் தலைகாட்டியிருக்கிறது. அடுத்த முறை படம் பார்க்கும் பொது கவனித்து பாருங்கள்.

அழைப்பு

ரகுராம் அலைபேசியில் அழைத்து சொன்னபோது மறுக்கமுடியாது. மும்பையில் இருக்கும் ஒரே MIT கல்லூரித் தோழன். Batchmate. மற்றும் முக்கியமாக மதுரைக்காரன். திருமணம் சென்னையில் என்றாலும் கண்டிப்பாக வருவதாக கூறினேன்.

அந்த காலத்தில் நல்லவர்கள் இருந்தார்கள். விழாவை சிறப்பிக்க அழைத்தால் டிக்கெட்டும் எடுத்துக் கொடுப்பார்கள். ரகு அத்தனை நல்லவனில்லை போலும். அல்லது விவரம் போதவில்லை. பத்திரிகை மட்டும் வைத்தான். அவனை குறை சொல்ல முடியாது. கடந்த நாலைந்து வருடங்களாக இதுதான் ட்ரெண்ட் போல. என் மாமனார் வீட்டிலும் வாயார அழைப்பார்கள். விருந்தும் வைப்பார்கள். ஆனால் வழிப்பயணம் தரமாட்டார்கள். போனால் போகட்டும் என்று நானே டிக்கெட் எடுத்தேன். பொதுவாக ப்ளேனில் செல்லும் நான், இந்த முறை ஒரு அனுபவத்துக்காக இரயிலில் பதிவு செய்தேன். வரும்போது confirm. போகும் பொது waiting 59. ஸ்லீப்பர் தான்.

 மும்பை டூ சென்னை

ஆபீஸ் முடிந்து வெள்ளி இரவு சென்னை எக்ஸ்ப்ரஸில் கிளம்பினேன். சீக்கிரமே தாதர் ஸ்டேஷனுக்கு போய்விட்டதால் ஒரு சாம்பார் இட்லியும் ஒரு ப்ரெஷ் லைம் சோடாவும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். சசி கொடுத்திருந்த, நமது பரம்பரை பாரம்பரியமான, இரண்டு புளியோதரை பொட்டலங்கள் அப்படியே இருந்தன.

இரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருந்தது. இரண்டு பிளாட்ஃபார்மையும் பார்வையிட்டேன். சுத்தமாக வைத்திருந்தார்கள். குட். விகடன், குமுதம் வாங்கிக் கொண்டேன். அதற்குள் சார்ட் ஒட்டிவிட்டார்கள். எனக்கு RAC. உட்கார்ந்துட்டு போய்விடலாம். மேலும் சார்ட் பார்க்கத்தெரியாத சிலருக்கு பார்த்து அவர்கள் சீட் நம்பர் சொன்னேன். மிக மிடுக்காக உடுத்தியிருந்த சிலருக்கும் RAC/WL சார்ட் பார்க்கத் தெரியவில்லை. இந்தளவுக்குத் தான் மக்களை நமது கல்வித் திட்டம் தயார்படுத்தியிருக்கிறது.

ஒரு பெரியவர், பரக்கத் என்ற 40 வயது பெண்மணியின் டிக்கெட் நிலை பற்றி கேட்டார். பரக்கத் தனியாக போவதால் அவரை நான் அழைத்து செல்வதாக கூறினேன். என் கம்பார்ட்மெண்ட்டுக்கு அடுத்து தான் அவர் சீட் இருந்தது. அரபு நாட்டில் இருந்து வருகிறார். தமிழ் மற்றும் அரபி தவிர விஷயம் எதுவும் தெரியவில்லை. கையில் பை ஒன்றும் இல்லை. பைகள் அத்தனையும் விமானம் மூலம் சென்னை வந்துவிடுமாம். ஒரு சிட்டை காண்பித்தால் கொடுத்து விடுவார்களாம். அவருக்கு இருக்கை காண்பித்து அமரவைத்தேன். நான் சென்று என் இடத்தில் அமர்ந்துகொண்டேன்.

நான் என் இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் வழக்கம் போல அரக்கப் பறக்க ஒரு குடும்பம் வந்தது. அப்பா, அம்மா, அண்ணா, இன்னொரு அண்ணா மற்றும் ஒரு இளம் பெண். அவர்கள் டிக்கெட்டுடன் பல மூட்டைகளில் சாப்பாடு, தீனி மற்றும் நொறுக்குத் தீனி கொண்டு வந்திருந்தார்கள். பாவம். சென்னையில் ஹோட்டலே இல்லை என்று யாரோ அவர்களிடம் சொல்லியிருப்பார்கள் போல. எதை தின்பது, எதை விடுப்பது என்று தெரியாமல் வழிநெடுக தின்றுகொண்டே வந்துகொண்டிருந்தார்கள். சப்பாத்தி, குடிநீர், Dairy Milk Silk சாக்லேட், பொரிகடலை, வெங்காயம், பச்சை மிளகாய், பிழிந்துவிட எலுமிச்சை, ஊறுகாய் தொடங்கி கத்தி, கரண்டி, தொப்பி, டிக்கெட், துணிமணி வரை அத்தனையும் கொண்டு வந்திருந்தார்கள். அதற்காக இரயிலில் தின்பண்டங்களை கூவி விற்றவர்கள் வயிற்றிலும் அடிக்கவில்லை. அவர்களிடமும் வாங்கி சாப்பிட்டார்கள். இவர்களிடம் இருந்து உணவைக் காக்கவேண்டியாவது ‘உணவு பாதுகாப்பு மசோதா’ சீக்கிரம் அமலுக்கு வரணும். என்னுடைய முகநூலில் அவர்களைப்பற்றி அன்றைய தினம் (13-September-2013) பலவாறு புலம்பி பதிவிட்டிருக்கிறேன். அந்த 38 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்காக அத்தனையும் பொறுத்துக்கொண்டேன்.

இடையில், அலுவலக நண்பர் சுகுமாறன் ‘ஹாய்! ஹாய்!! ஹாய்!!!’ என்றபடி வந்துவிட்டார். அவருக்கு இரயில்வே நிர்வாகம் எனது பெட்டியிலே இடம் ஒதுக்கியிருந்தது. ஆபீஸில் பேசியது போக இங்கும் increment வராதது பற்றி புலம்பி தீர்த்தோம். அவர் சபரிமலை சென்று கொண்டிருந்தார். மூன்று நாள் விடுமுறையில் சுருக்கி இருந்தார் பயணத்தை. எக்ஸ்பிரஸ் இருமுடி மற்றும் இன்ஸ்டன்ட் தரிசனம். அவர் வழிபாட்டுக்கு பயந்தாவது ஐயப்பன் எங்கள் எல்லோருக்கும் increment அருளட்டும்.

சுகுமாறனுடைய நண்பர் ஒருவரும் அதே பெட்டியில் சென்னை போய்க்கொண்டிருந்தார். சுகுமாறன் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை. அவர் மகளுக்கு நிச்சயதார்தமாம். அதற்காக தன் குடும்பத்துடன் சென்னை போகிறார். எதற்கு ரிஸ்கு என்று என்னை ஒதுக்கியிருக்கலாம். தன் குடும்பத்திடமோ அல்லது தன் இரண்டு பெண்களிடமோ அறிமுகப்படுத்தவே இல்லை. எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாகப் போய்விட்டது. என் பத்து நிமிடப் பேச்சிலா அந்த நிச்சயதார்த்தப் பெண் மயங்கி, முடிவு செய்த மாப்பிள்ளையை விட்டு, என்னோடு ஓடிவந்துவிடப் போகிறார்? தொலையட்டும். பை தி பை, ஒவ்வொரு ‘அவா இவா’ குடும்பத்திலும் ஒரு காயத்திரி இருக்கிறார். அவரும் மிக அழகாக இருந்து தொலைக்கிறார். அன்றைய என் முகனூலில் குறிப்பிட்டிருந்த அந்த F22 இந்தப் பெண்தான். நிச்சயதார்த்தப் பெண்ணின் தங்கை. அழகாயிருந்து, அழகாயிருக்கிறோம் என்று தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பது ஒரு மாபெரும் அழகு. Innocence is Bliss. இந்த RAC ரயில் பயணம் அந்த தேவதைக்கு அர்ப்பணம்.

அடுத்த நாள், சனிக்கிழமை காலை, மெதுவாக எழுந்து டீ, காபி, சூப் குடித்த பிறகு பையில் தேடினால் டூத் பிரஷை காணோம். கொண்டு வரவில்லை போல. வாய் மட்டும் கொப்பளித்தேன். பரக்கத் என்ன செய்கிறார் என்று பார்க்கப் போனேன். பாவம் அவர் எந்த உணவும் கொண்டு வரவில்லை. வெளியில் வாங்கி சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது என்பதால் அமைதியாக அயர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தார். முதலில் ஒரு காபி வாங்கிக் கொடுத்தேன். முந்திய இரவு ஒரு மணியளவில் யாரோ சென்னை வந்துவிட்டது என்று சொல்ல ரயிலில் இருந்து இறங்கியிருக்கிறார். அங்கிருந்த போலீஸ் விசாரிக்க, அந்த இடம் சென்னை இல்லை என்று உணர்ந்து மறுபடி ரயில் ஏறி அமர்ந்திருக்கிறார். சென்னை கடைசி ஸ்டாப். நடுவில் இறங்க வேண்டாம் என்று கூறினேன். என்னிடம் இருந்த இரண்டு புளியோதரை பொட்டலங்களையும் அவருக்கு கொடுத்து சாப்பிடச் சொன்னேன். கொஞ்சம் யோசித்தார். பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்து பாட்டிம்மாதான், “சாப்பிடும்மா… புள்ள குடுக்குதுல்ல…” என்று பொட்டலங்களை வாங்கி வைத்தார். ஹ்ம்ம். நம் நகரத்து மக்களிடம்தான் நம்பிக்கை குறைந்து விட்டது. பொட்டலத்தை பிரித்து சாப்பிட்ட பரக்கத், “வீட்டுக்காரி சமைச்சதாய்யா… நால்லா இருக்குன்னு சொல்லுய்யா கண்ணுகிட்டே…”

அந்த நாள் முழுவதும் ஜன்னலோடு பின்னோடும் இயற்கையைக் கண்டும், பெட்டிக்குள் உணவைப் பிரித்து மேய்ந்த அந்த குடும்பத்தை கண்டும், எல்லையில்லா அழகி F22வைக் கண்டும் பொழுது ஓடியது. விகடன் மற்றும் குமுதம் படித்து முடிந்தது. சென்னையில் இறங்கினால், வேதராமன் தவிர அத்தனை பேரும் வரவேற்க வந்திருந்தார்கள். அப்பா, அம்மா, சுபா, மாப்பிள்ளை, ஆகாஷ் மற்றும் அகிலேஷ். குரோம்பேட்டை வந்து MITயை ஏக்கத்துடன் தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுத்துவிட்டேன்.

வடபழனி முருகன் கோவில்

ஞாயிறு காலை பத்தரை மணிக்குதான் திருமணம். நானும் வேதராமனும் ஒன்பது மணிக்கு தயாராகிவிட்டோம். அன்றைய என் கிருஷ்ணன் அவன்தான். புறப்படும் நேரத்தில் நடராஜ் அண்ணா வந்தார். அவருடைய கார் எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். கூட்ட நெரிசலுக்கு பயந்து பைக்கிலேயே செல்வதாக முடிவெடுத்து கிளம்பிவிட்டோம். நேரமாகிவிட்டதால் அண்ணாவுடன் அதிகம் பேசமுடியவில்லை. வேதராமனின் யமஹா R15 எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். ஹெல்மட் போட்டால் கூலிங் கிளாஸ் போடமுடியாதென்பதால் நான் வண்டி ஓட்டவில்லை. ஜம்மென்று பின்னாடி உட்கார்ந்துவிட்டேன். வழியில் கிண்டியை கவனித்தேன். முன்னாடி அங்கு ரோடு இருந்தது. இப்பொழுது அங்கு பல அடுக்கு மேம்பாலம் மட்டுமே உள்ளது. கரணம் தப்பினால் ரூட் மாறி போக வாய்ப்புண்டு. பத்து மணியளவில் கோவிலை அடைந்தபொழுது கூட்டம் அள்ளிக் கொண்டிருந்தது. கூடியிருந்த பக்தர்களைவிட அதிக வாகனங்கள் இருந்தது ஒரு டிவைன் மற்றும் ஆட்டோமொபைல் மிராகிள். ஒரு ஓரத்தில் வண்டியை பார்க் செய்தோம்.

வடபழனி கோவிலை நோக்கி கூட்டத்தினூடே முன்னேறினோம். வடபழனி முருகன் கோவிலுக்கு நான் வருவது அது தான் முதல் தடவை. வழியில் பலர் திருமணம் முடித்து வந்துகொண்டிருப்பதை கண்டேன். பலரின் வயது 30க்கு மேல் இருக்கலாம். கிட்டத்தட்ட அத்தனை பேரும் பவுடர் பூசியிருந்தார்கள். எனக்கு என்னமோ இந்த மேக்கப் தேவையில்லாததாகப் பட்டது. பலரின் உண்மையான அழகை இந்த மேக்கப்தான் மறைத்திருந்தது. அடிக்கிற வெயிலுக்கு வியர்வை அவர்களை மேலும் கஷ்டப் படுத்தியிருக்கும். சரி, அது அவர்கள் பிரச்சனை. நாங்கள் அவர்கள் அனைவரையும், குறிப்பாக மணப்பெண் தோழிகள், பராக்கு பார்த்துக் கொண்டே கோவில் வாசல் வரை சென்றோம். ரகு எங்கு இருப்பானென்று தெரியவில்லை. சதாவை தொடர்பு கொண்டேன். அவனால் திருமணத்துக்கு வரமுடியவில்லை என்று வருந்தினான். அவன் பாஸுக்கு ஏதோ வேலை வந்து இவனை ரிப்போர்ட் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார். சரவணா பிரபு வந்து கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ரகுவிற்கே போன் செய்தேன். மாப்பிள்ளை அவனே வந்து சேரவில்லை. நாங்கள் தான் சீக்கிரம் வந்திருக்கிறோம். ஒரு ஜூஸ் கடையை தேடி மாதுளம்பழ ஜூஸ் குடித்தோம். ஒரு புதுமண ஜோடி. மாப்பிள்ளை பெண் வீட்டாருக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பெண்ணை விட பெண் வீட்டாரைத்தான் அதிகம் கவனித்துக் கொண்டிருந்தார். பிழைத்துக் கொள்வார். எனக்கென்னவோ அந்த மணப்பெண்ணைவிட மாமியார் அழகாக இருப்பதாக தோன்றியது.

கோவிலுக்குள் நுழைந்து இடப்பக்கம் இருந்த விநாயகர் சன்னதிக்கு பின் ரகு மற்றும் ஸ்வர்ணா மற்றும் அவர்கள் குடும்பத்தார் இருந்தார்கள். ரகு கைகுலுக்கி கட்டிக்கொண்டான். ரகுவின் அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள். அதனால் அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். ரகுவின் மதுரை காட்டுப்பிள்ளையார் கோவில் வீட்டுக்கு நான் சென்றிருப்பதால் அவன் அக்காவும் அம்மாவும் கூட என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். என்னை பத்து வருடம் கழித்து பார்க்கிறார்கள். இருந்தும் நினைவு வைத்து அடையாளம் கண்டு கொண்டது, ஒரு இன்பியல் சம்பவம். மற்றொரு கல்லூரி நண்பன் மகேஷ் நின்று கொண்டிருந்தான். சந்தோஷமாக “ச்ச்சாமி…” என்று அழைத்து கை குலுக்கி கட்டிக்கொண்டான். என்னை ‘சாமி’ என்று, ஏனென்று தெரியவில்லை, அழைக்கும் ஒரே நண்பன். மிகப்பெரிய மனசுக்காரன். எனக்கும் அவனுக்குமான ஒரு ஸ்பெஷல் உறவு தெரிந்தவர்கள் மொத்தம் மூன்று பேர்தான். மகேஷையும் சேர்த்தால் நாலு பேராக இருக்கலாம். நன்றாக உடம்பு வைத்திருந்தான். இதற்கிடையில், கோவிலுக்குள் எதோவொரு கொடிமரத்துக்கடியில் நின்றிருந்த சரவண பிரபு மற்றும் அவன் மனைவி மோகனா வந்தார்கள். அவர்களை பார்த்தும் இரண்டு வருடத்துக்குமேல் இருக்கும். என் மகன் சூர்யா அவர்கள் வீட்டில்தான் மூன்று வயதுவரை வளர்ந்தான். சசியிடம் போனில் பேசினார்கள். சூர்யா பற்றி விசாரித்தார்கள். சூர்யா வர்ஷாவின் போட்டோவை பார்த்து சந்தோஷப்பட்டார்கள். மணப்பெண், மற்றும் கல்லூரி தோழி, ஸ்வர்ணாவை பார்த்து பேசினோம். கோவிலில் தொடர்ந்து திருமணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டிருந்தன. ரகு மற்றும் ஸ்வர்ணா முறை வந்து கொண்டிருந்தது. அவர்களின் பெற்றோர்கள் அவர்களை தயார்படுத்த அழைத்துச் சென்றார்கள். கல்லூரி நண்பர்கள் பலரும் மாலை ரிசெப்ஷன் வருவதாக இருந்தார்கள். அதனால் திருமணத்துக்கு வந்திருந்த MITians சரவண பிரபு, மகேஷ் மற்றும் நான்.

புரோகிதர் மணமக்களை மனையில் உட்கார வைத்தார். திருமணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். ரகுவின் அப்பா ஒரு அனலாக் கேமரா, ஒரு ஸ்நாப் எடுத்து ரோல் சுற்றவேண்டிய மாடல், வைத்து போட்டோ எடுக்க திணறிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் கேமரா வாங்கி மணமக்களை ஒரு பத்து போட்டோ எடுத்தேன். மணமகனின் கால் விரலில் மெட்டி அணிவிக்கப்பட்டது. பின் ஸ்வர்ணா சிரிக்க சிரிக்க, ரகு அவர் காலில் சந்தனம் பூசினான். மனையில் உட்கார்ந்தார்கள். புரோகிதர் ஹோமம் வளர்த்தார். ஒரு கயிறில் மஞ்சள் தடவி மணமக்கள் கைகளில் கட்டினார். மாலை அணிவிக்கச் செய்தார். வேறொரு கயிறில் மஞ்சள் பூசி ஒரு மஞ்சளை கட்டி தாலியாக்கினார். ஒரு தட்டில் தேங்காய் வைத்து அனைவரிடமும் ஆசி வாங்க அனுப்பினார். தாலியை ஆசீர்வதித்து அட்சதைக்காக தட்டில் இருந்த பூவை எடுத்துக் கொண்டனர். நான் எடுக்க தவறியதால் திருமதி மோகனாவிடம் இருந்து கொஞ்சம் அட்சதையை கடன் வாங்கிக்கொண்டேன். சம்பிரதாயங்கள் முடிந்து புரோகிதர் தாலி எடுத்துக் கொடுக்க, கெட்டிமேளம் முழங்க, அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க எங்கள் தோழன் ரகு, எங்கள் தோழி ஸ்வர்ணா கழுத்தில் தாலி கட்டினான்.

தாலி கட்டிய கணத்தில் நான் கவனித்தது – ரகு முகத்தில் நிம்மதிப் புன்னகை; ஸ்வர்ணா கண்களில் சந்தோஷக் கண்ணீர்.

ரகு – ஸ்வர்ணா திருமணம்
Photo Courtesy: சரவண பிரபு 


திருமணத்துக்கு பின் அக்னியை வலம் வந்தார்கள். பின் முருகனை வழிபடப் சென்றார்கள். மகேஷ் வீட்டுக்கு கிளம்பினான். நானும் பிரபுவும் கிளம்பலாம் என்றபோது சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். அருகில் இருந்த ஆதித்யா ஹோட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ரிசெப்ஷனும் அங்குதான். நாங்கள் அங்கு சென்றோம்.

ஆதித்யாவில் மொத்த ஹால் குளிரூட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் உணவு வைக்கப் பட்டிருந்தது. மறுபுறம் மேடைக்கு எதிரே மேஜை நாற்காலி போடப்பட்டிருந்தது. மேடையில் ரகு மற்றும் ஸ்வர்ணா ஏறி நின்றார்கள். பின்னணியில் இன்னிசை ஒலிக்க வைப்பதற்காக சீ.டீ. பிளேயரை நோண்டிக் கொண்டிருந்தார். அத்தனை தயாரிப்புகளும் அட்டகாசமாக, உண்மையில் சொல்வதானால் ஆடம்பரமாக, இருந்தது. ஜூஸ் கொண்டுவந்தவரிடமிருந்து இரண்டாவது ஜூசை நான் எடுத்த போது, பின்னணி இசை சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. நல்ல வாயன் சம்பாரிக்க நார வாயன் திங்கிற…” என்று தொடங்கிய பொழுது நான் புரையேறி சிரிக்க ஆரம்பித்தேன். “கணக்கு வழக்கு தெரியாம காசை வாரி இறைக்கிறே…” என்று தொடர்ந்த பொழுது மேடையில் இருந்த ரகு ஸ்வர்ணா கூட சிரிக்க ஆரம்பித்திருந்தனர். ஹோட்டல் ஆள் வந்து நிறுத்துவதற்குள் பாட்டு “காசு… பணம்… துட்டு… மணி மணி…” தாண்டி விட்டிருந்தது. மேலும் அடுத்த பாட்டு வரும்முன் சாப்பிட்டுவிடலாமென்று போய் சூப் மற்றும் ஸ்டார்ட்டர் கொண்டு வந்தோம். அம்மா எனக்காக சமைத்து காத்திருப்பதாக கூறியிருந்ததால் நான் அதிகம் சாப்பிடவில்லை. பிரபு, மோகனா மற்றும் வேதராமன் சாப்பிட்டார்கள். ரகுவின் அக்கா இருமுறையும் அம்மா ஒரு முறையும் வந்து நல்லா சாப்பிடுங்க என்று அன்பு அதட்டல் போட்டுவிட்டு சென்றார்கள். சாப்பிட்டுவிட்டு மேடையில் ரகு மற்றும் ஸ்வர்ணாவை வாயாற வாழ்த்திவிட்டு கிளம்பினோம். மாலை ரிசெப்ஷனுக்கு அழைத்தான். கஷ்டம் தான் என்றாலும், கண்டிப்பாக வருகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். கீழே பேசிவிட்டு பிரபுவும் நானும் திரும்பிவிட்டோம்.

குரோம்பேட்டை கும்மி

வீட்டில் என்னை இறக்கிவிட்ட வேதராமன், ஓணம் விருந்து சாப்பிட அவன் நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டான். நானும் அம்மாவும் சாப்பிட்டுவிட்டு சுபா வீட்டுக்கு கிளம்பினோம். மாப்பிள்ளை மதிய சிரம பரிகாரத்தில் இருந்தார். மாப்பிள்ளையின் பாட்டியிடம் பேசினோம். கொண்டுபோன கேக்கை ஆகாஷ் மற்றும் அகிலேஷ் அடித்து பிடித்து தின்றார்கள். சுபா கொடுத்த மாதுளம் பழத்தை நான் உரிக்க அதே வேகத்தில் ஆகாஷ் சாப்பிட்டான். எனக்கு கொஞ்சம் கூட தரவில்லை. ஞாயிரானாலும், அட்வான்ஸ் டாக்ஸ் சேகரிக்க, அலுவலகம் சென்றிருந்த அப்பா நேராக சுபா வீட்டுக்கு வந்தார். நடராஜ் அண்ணாவும் சுபா வீட்டுக்கு வந்தார். கொஞ்சநேரம் அனைவரும் பேசிவிட்டு டீ குடித்துவிட்டு நான் நடராஜ் அண்ணா வீட்டுக்கு சென்றேன். அண்ணி ஈஷா யோகா மையம் சென்றிருந்தார். மூன்று நாள் முகாம். அண்ணாவின் வீட்டில் உள்ளே நுழைய முடிந்த அளவிற்கு இடம் இருந்தது. அவர் வீட்டில் ஏசி பழுதாகி இருந்ததால் ரிஸ்வான் என்ற இளைஞரும் அவரது தோழரும் சரி செய்ய வந்திருந்தார்கள். நடராஜ் அண்ணா தனது பர்ஸை வீட்டிலோ எங்கேயோ வைத்து மறந்திருந்தார். அதனால் ரிஸ்வானுக்கு கொடுக்க அவரிடம் பணமில்லை. பணம் எடுக்க ATM கார்டும் இல்லே.

நடராஜ், “ரிஸ்வான்… என்கிட்டே பர்ஸ் இல்லே… அதனாலே இப்போ கைலே காசு இல்லே… செக் தரட்டுமா?”

ரிஸ்வான், “செக்கை பேங்க்லே கொடுத்தா காசு கொடுத்துருவாங்களாண்ணா? இல்லே ATMல தரணுமா?”

நடராஜ், “உனக்கு அக்கௌன்ட் இருக்கா?”

ரிஸ்வான், “இருக்கும்ணா… ஸ்கூல் டேஸ்லே பேங்க் போயிருக்கேன்ணா…”

நடராஜ், “பேங்க்லே போய் கையெழுத்து போட்டா கொடுத்துருவாங்க…”

ரிஸ்வான், “எனக்கு கையெழுத்து போட மறந்துருச்சுண்ணா… எனக்கு பதிலா இவன் போடலாமா?” அருகில் இருந்த நண்பனை காண்பித்தான்.

நடராஜ், “உன் பேர்ல செக் கொடுத்து, அவன் கையெழுத்து போட்டா உனக்கு எப்படி காசு தருவாங்க…”

ரிஸ்வான், “பரவாயில்லேண்ணா… அவன்கிட்டே காசு கொடுக்கட்டும்… நான் வாங்கிக்கிர்றேன்…”

ரிஸ்வானின்  நண்பனும், “தைரியமா செக் கொடுங்கண்ணா… நான் அவனுக்காக கையெழுத்து போட்டு காசு வாங்கி கொடுத்துர்றேன்…”

பொறுக்க முடியாத நான், “நடராஜ் அண்ணே… நான் இவங்களுக்கு காசு குடுத்துர்றேன்…”

நடராஜ், “உனக்கு ஏம்பா செலவு???”

நான், “நான் ஒண்ணும் ப்ரீயா தரலை… செக்கை எனக்கு கொடுங்க…”

ரிஸ்வானுக்கு எழுதிய செக்கை அப்படியே எனக்கு கொடுத்தார்.

நான் நொந்துபோய், “அண்ணா… நீங்களுமா… இப்போ செக்கை வைத்து கொழப்ப வேண்டாம்… நான் அப்புறமா உங்ககிட்டே வாங்கிக்கிடறேன்…”


பைக்கில் சென்று பணம் எடுத்து நடராஜ் அண்ணாவிடம் கொடுத்தேன். அவர் ரிஸ்வானுக்கு செட்டில் செய்தார். இன்னும் ஒரு மாசத்துக்கு யாரும் என்னிடம் செக் என்ற பேச்சே எடுக்காதீர்கள். இந்த குழப்பமே போதும்.

நடராஜ் அண்ணாவின் அம்மாவும் அப்பாவும் அவர் அண்ணா ரமேஷ் வீட்டில் இருந்தார்கள். அதனால் தாம்பரம் சானடோரியமில் இருந்த ரமேஷ் அண்ணா வீட்டுக்கு போனோம். அனைவரிடமும் பேசினோம். பின் வீட்டுக்கு திரும்பி வந்து நடராஜ் அண்ணாவும் நானும் ஒருமணி நேரம் Feedback Control பற்றி பேசித் தீர்த்தோம். ஒரு கட்டத்தில் நான் எழுந்து நின்று சத்தம் போட்டு பேச ஆரம்பித்தேன். நடராஜ் அண்ணாவும் இன்டர்நெட்டுக்கு போய் வரைபடங்கள் எல்லாம் தேடி எடுத்து வந்தார். அதிலேயே பத்து மணி ஆகிவிட்டிருந்தது. வெளியே போய் சாப்பிடுவதாக ப்ளான். நடராஜ் அண்ணாவும் சாப்பிடவில்லை. ஆனால் எங்களோடு சாப்பிட வரவில்லை. நான் வந்தால், நீ என்னிடமே பேசிக்கொண்டிருப்பாய். அம்மா அப்பாவிடம் பேச முடியாது. அதனால் நீ போய்  அவர்களோடு சாப்பிடு என்று, பெருந்தன்மையோடு புரிந்துகொண்டு, அனுப்பி வைத்தார். நான், அம்மா, அப்பா Hysoop ஹோட்டலில் சாப்பிட்டோம். இரவு தூங்கியபோது சென்னையில் ஒரு நாள் வேகமாக ஓடிவிட்டிருந்தது.

சென்னை டூ மும்பை

திங்கள் காலை சீக்கிரமே எழுந்து இட்லி மற்றும் சட்னி பேக் செய்து கொடுத்தார் அம்மா. அப்பா எக்மோரில் வந்து ரயில் ஏற்றிவிட்டார். திரும்பி வரும்போது பயணம் சம்பவம் இல்லாமல் கழிந்தது. என்ன, ஸ்லீப்பர் கன்பார்ம் சீட் என்றாலும் அனைவரும் ஏறி இறங்கினார்கள். குல்பர்கா மற்றும் சோலாபூர் வரை திருவிழாக் கூட்டம் கும்மியடித்தது. ஜெனரல் டிக்கெட் வாங்கிக் கொண்டு கூட ஸ்லீப்பரில் ஏறி இருந்தார்கள். இறங்கச் சொன்ன TTRஇடம் மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள். ஒரு ஆள், “ஏன்யா… சீட் இல்லேன்னா எதுக்குய்யா டிக்கெட் விக்கிறீங்க? எங்க ஊர் தியேட்டர்ல 200 சீட் இருந்தா 200 டிக்கெட் தான் விப்பாங்க… நீங்க ரயிலில் மட்டும் ஏன்யா இருக்குற ஜெனரல் சீட்டுக்கு அதிகமா டிக்கெட்டை விக்கிறீங்க? நான் இங்கே தான் உட்காருவேன்.” மொத்த கூட்டம் அவர் பின்னே இருந்தது. TTR போய் இரண்டு போலீசாரை அழைத்து வந்தார். போலீசிடமும் அந்த ஆள் பயப்படாமல் எகிறினார், “கை வைச்சிருவியா… நீ போலீஸ் வெறும் ஸ்டேட் கவர்ன்மெண்ட்… இந்த ரயில் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்… தொட்டு பாரு… கிழிச்சிருவேன் கிழிச்சு…” போலீஸ் போய்விட்டது. இந்த சினிமாவை பார்த்துவிட்டு என் பெர்த்தில் நான் படுத்துவிட்டேன்.

இரவு தூங்கி செவ்வாய் காலை கல்யாணில் இறங்கினேன். அங்கிருந்து தாணே மாறி பன்வேல் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கொடுத்தனுப்பிய துணிகளை சசியிடம் கொடுத்தேன். கார் பொம்மையை சூர்யாவிடம் கொடுத்தேன். தயாராகி ஆபீஸ் கிளம்பினேன்.

ரகு ஸ்வர்ணா தம்பதி மும்பை வந்தபிறகு அவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க வேண்டும்.

பயணம் சுபம்.

(இதற்கு முன்…)


Ad astra per aspera…

கென்னெடி  விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது
அப்போலோ 1 – நினைவஞ்சலி
ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக? நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். அத்தனை படைப்புக்கும் ஏதோ ஒரு காரணம். அனால், தஞ்சை பெரியகோவில்? எதற்காக ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோவிலை கட்டினான்? பெரும் பொருட்செலவும், கடின உழைப்பும், நீண்ட காலமும் எடுத்துக்கொண்ட ஒரு படைப்பை சோழன் எதற்காக மேற்கொண்டான்? சரியப்பா, ஒரு அரசனாக கோவில் கட்ட முடிவெடுத்து விட்டான். அவன் சொல்லே முடிவு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசாங்கம் இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய முயற்சியில் எதற்க்காக இறங்க வேண்டும்? அதுவும் அமெரிக்கா போன்றதொரு தேசம்?
1969இல், அப்போலோ 11 மனிதனை நிலவில் இறக்கிய சில மாதங்களுக்கு பிறகு ரோஹ்ட்  ஐலேண்ட் (Rhode Island)இன் அமைச்சர் ஜான் பாஸ்டோர் (John  O. Pastore) ஆராய்ச்சியகமான பெர்மிலாப் (Fermilab)இன் இயக்குனர் ராபர்ட் வில்சன் (Robert R. Wilson)னுடன் விவாதித்துக்கொண்டிருந்தார். அரசாங்கம் எதற்கு 250 மில்லியன் (25 கோடி) அமெரிக்க டாலர்களைக் கொட்டி டேவட்றான் துகள் முடுக்கி (Tevatron Particle Accelerator)யை நிர்மாணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். மொத்த அமைச்சகமும் இவர்கள் விவாதத்தை ஆர்வமுடன் கவனித்துக்கொண்டிருந்தது.

ஜான்: சொல்லுங்கள். எதற்கு நம் அரசு இத்தனை செலவு செய்யவேண்டும்? இந்த துகள் முடுக்கி நம் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துமா?

வில்சன்: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.

ஜான்: எந்த விதத்திலும் இல்லையா?

வில்சன்: இல்லை. எந்த விதத்திலும் இல்லை.

ஜான்: நாட்டின் பாதுகாப்பிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமா இல்லை?

வில்சன்: ஹ்ம்ம்… இப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இந்த துகள் முடுக்கி நம் நாட்டின் பாதுகாப்பை எந்த விதத்திலும் மேம்படுத்தாது. அனால், நம் நாட்டை பாதுகாக்க நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக்கும். நாம் நமது நாட்டைப் பாதுகாக்க நமக்கு காரிணிகளாக விளங்கும் நமது பாரம்பரியம், நமது ஓவியர்கள், நமது சிற்பிகள் மற்றும் நமது கலைஞர்கள் போல, இந்த துகள் முடுக்கியும் ஒரு முக்கிய காரிணியாக இருக்கும்.

நிலாப் பயணமும் அத்தகையதே.

(தொடர்ந்து…)
நிலா…
சொல்லும் போதே எவ்வளவு ரம்மியமாக உள்ளது பாருங்கள். நம் உலகை சுற்றும் கோள் நிலா மட்டுமே. அதுவும் தன் ஒருபக்க முகத்தை மட்டுமே காட்டி சுற்றிவரும் நிலா மட்டும் இல்லையேல் நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரிந்திருக்காது, பல குழந்தைகள் சரியாக சோறு தின்றிருக்காது, பலர் தன் காதலி / காதலனை கற்பனையில் கண்டிருக்க முடியாது, இவ்வளவு ஏன், அவ்வளவு பெரிய கடலில் அலைகளே ஏற்பட்டிருக்க முடியாது. சூரியனுக்கு அடுத்து வானில் நாம் காணக்கிடைத்த பிரகாசமான கோள் நம் நிலா.
நிலவு – வட துருவத்திலிருந்து
இத்தனை அழகான நிலாவை பற்றி கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டாலும் இப்பொழுதுதான் ‘சந்திராயன்’ மூலம் அதைத் தொடப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, 1969இல், நிலவில் மனிதனை இறக்கி விட்டது நம் பெரியண்ணன் அமெரிக்கா. அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இன்று அத்தனை விஞ்ஞான வசதிகள் கொண்டு செவ்வாயில் (Mars) காலடி வைக்க முயற்சி எடுக்கிறோம் என்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால் அந்த நிலா முயற்சிக் காலத்தில் அத்தனையும் முதல் முதலாக செய்து பார்க்கப்பட்டது. அத்தனையும் புது கண்டுபிடிப்புகளே. நிலவுக்கு மனிதன் சென்றானா அல்லது அது வெறும் அமெரிக்கா தன் பலத்தைக் காட்ட ஜோடிக்கப்பட்ட கதை என்று ஒரு விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. அது நமக்கு தேவையில்லை. நாம் நிலவுக்கு சென்ற, செல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகளைப்பற்றி பார்ப்போம். அந்த நிலவைத்தொடும் முயற்சி ஒரு அட்டகாசமான பயணம். மனிதனை நிலவுக்கு அழைத்துச் சென்ற ‘அப்போலோ 11 (Apollo)‘இன்  உருவாக்கம் கிட்டத்தட்ட 4 லட்சம் மனிதர்களின் ஊன் உறக்கமற்ற உழைப்பைக் கொண்டுள்ளது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong) என்ற அந்த ஒரு மனிதனின் நிலவின் மீதான முதல் காலடி இத்தனை மக்களின் உழைப்பை கொண்டுள்ளது. நமது இந்த கட்டுரைத் தொடர் இந்த முயற்சிகளின் தொகுப்பு. நமது தொடர் பயணிக்கப்போவது…

நிலவைத் தேடி…

(தொடர்ந்து…)

முன்குறிப்பு:

நண்பர்களே… ஒரு முக்கியமான விஷயம்… நிலவைப் பற்றியும் அதற்கான பயணத்தைப் பற்றியும் நான் தேடித் தேடி படித்து இந்த கட்டுரைகளை ஆர்வமுடன் எழுத முழு முதற் காரணம் – க்ரேய்க் நெல்சன் (Craig Nelson) எழுதிய ராக்கெட் மென் (Rocket Men) என்ற புத்தகம் தான்… நான் ராக்கெட் மென் படித்து, அதில் உள்ள விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை நம் தமிழில் எழுதலாம் என்ற என் ஆர்வக்கோளாறுதான் இந்தக் கட்டுரைகள்… பல விஷயங்களை இந்த புத்தகத்தில் இருந்துதான் எழுதப் போகிறேன்… புகைப்படங்கள் பிரதானமாக நாசா தளத்தில் இருந்து உபயோகப்படுத்தப்படவுள்ளன… அப்புறம், இருக்கவே இருக்கு நம்ம விக்கி…

  • க்ரேய்க் நெல்சன் பற்றியும் அவரது எழுதிய புத்தகங்களைப் பற்றியும் படிக்க அவரது தளத்துக்கு செல்லுங்கள்… http://www.craignelson.us/
  • நாசா பற்றி உண்மையிலேயே ஆர்வமிருந்தால் அந்த நிறுவனத்தைப் பற்றி படிக்க  http://www.nasa.gov/ செல்லுங்கள்…
  • விக்கிபீடியாவின் தளம்… அட, இதையும் சொல்லணுமாங்க… சரி சரி அழாதீங்க, சொல்லித் தொலைக்கிறேன்…  http://www.wikipedia.org/

இந்த என் கட்டுரை வரிசையின் மொத்த கிரெடிட்ஸ் க்ரேய்க் நெல்சன்’இன் ராக்கெட் மென், நாசா, விக்கி மற்றும் இலவச இணையத்துக்கே…

Credits for my this series on moon goes to Craig Nelson’s Rocket Men, NASA, Wiki and the free internet.