Article

பிள்ளையார் சுழி மற்றும் சில நம்பிக்கைகள்

Print Friendly, PDF & Email
நமக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்தவொரு பழக்கத்தையும் லேசில் விட மாட்டோம். ஏன் செய்கிறோம் என்று தெரியாது, ஆனால் செய்வோம். அதில் ஒன்று ‘பிள்ளையார் சுழி’.

ஒரு பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது, தலைப்பில், இந்த பிள்ளையார் சுழி போடுவது தமிழர்களின் வழக்கம் மற்றும் கலாச்சாரம். முழு முதற் கடவுள் பிள்ளையார். கோவிலிலும் அவரைத்தான் முதலில் வணங்குவோம். தெய்வீக அம்சம், மஹாபாரதம் எழுதியவர், பொதுத் தேர்வுகளில் பாஸ் செய்ய உதவுபவர் என்ற பல காரணத்தால் பிள்ளையாரும் அவர் பெயரால் நிலவும் இந்த பிள்ளையார் சுழியும் பிரசித்தம் பெற்று விட்டது. இதை ஒரு தெய்வாம்சமான விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள். இந்த சுழி வேறு நம் தலையை இடது பக்கம் திருப்பிப் பார்க்கும் போது  யானை மாதிரி தெரிகிறதா, நாம் கொண்டாடத் தொடங்கிவிட்டோம். இணையத்திலும் இந்த குறியீடின் தெய்வாம்சம் நிறையவே கொட்டிக்கிடக்கிறது. சிலர் எனக்கு தோன்றிய அதே கருத்தையும் ஷார்ட் அண்ட் ச்வீட்’ஆக விளக்கியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பிள்ளையார் சுழி

சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம். தமிழர்கள் தங்கள் எழுத்துகளை பனை ஓலைகளில் எழுதினார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே? குட்டியாக நுணுக்கி நுணுக்கி எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். திருவள்ளுவர் கூட அப்படி ஓலை + எழுத்தாணி சகிதம் போஸ் கொடுத்து பார்த்திருப்பீர்கள். கஷ்டப் பட்டு அந்த பனையோலையில் எழுதும் ஆசிரியர், கடைசி வரி எழுதும்போது அந்த ஓலை கிழிந்து விட்டால் எவ்வளவு நொந்து போவார்? திரும்பவும் முதலில் இருந்தே எழுத வேண்டியிருக்கும். இது ஒரு பெரிய தலைவலி. அதற்காக அந்த ஓலையை ‘நம் எழுத்தை இது தாங்குமா?’ என்று சோதனை செய்து, அதற்கு பிறகே எழுதத் தொடங்குவார்கள். இப்பொழுது நம் பிள்ளையார் சுழி எழுதப்படும் விதத்தை கவனியுங்கள். முதலில் ஒரு வட்டம், பின் ஒரு சுழி, அதைத்தொடர்ந்து ஒரு யூ டர்ன், பின் கிழே இரண்டு parallel கோடுகள் மற்றும் கடைசியாக இரண்டு புள்ளிகள். இந்த அத்தனை வகைகளையும் அந்த ஓலை தாங்க வேண்டும். மாறாக, வட்டம் வரையும் போதோ, கொடு இழுக்கும் போதோ, புள்ளி வைக்கும் போதோ அந்த பனை ஓலை ஒத்துழைக்காமல் கிழிந்து விட்டால் மேற்கொண்டு எதுவும் எழுதாமல் அதை அப்படியே ஓரத்தில் வைத்து விடுவார்கள். ஆக, ஒரு ஓலையின் தன்மையை அறியவே அதன் உச்சியில் “உ” போன்ற பிள்ளையார் சுழி எழுதிப் பார்க்கப் பட்டது.

இன்றைய தேதியில் இந்த பிள்ளையார் சுழிக்கு பெரிதாக அர்த்தம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பேப்பர்’இல் எழுதும் போது அதன் உச்சியில் பிள்ளையார் சுழி போடுகின்றோம். சிலர் பக்திப் பரவசத்துடன் ‘ஓம்’ எழுதுகிறார்கள் (நான் ஆங்கிலத்தில் ‘OM’ என்று எழுதும் பழக்கத்தை இந்த பதிவில் சொல்வது அவசியமில்லை என்று நினைக்கிறேன்). இது இக்காலத்தில் தேவையில்லை. ஏனென்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இன்று இல்லை. கம்ப்யூட்டர்’இல் எழுதும் போது கூட Header’இல் OM என்று செட் செய்யும் ஒரு நண்பனை எனக்குத் தெரியும். என் இன்னொரு கல்லூரி நண்பன் அதற்கும் ஒரு படி மேல். தான் எழுதும் அனைத்து பக்கங்களிலும் ‘I love my India’ என்று எழுதி வைப்பன். பரீட்சை பேப்பரிலும் இது தொடர்ந்தது. கத்தார், ஆஸ்திரேலியா என்று சுற்றியபோது இந்த பழக்கம் அவனை விட்டு நீங்கியிருக்கும் என்று நம்புவோமாக.

மொத்தத்தில், பிள்ளையார் சுழி தெய்வாம்சத்துக்காகத்தான் எழுதப் படுகிறது என்பது நம்ப முடியாததாக உள்ளது.

இதே போன்ற மேலும் சில அனுமானங்கள்:

  • முன்பு அரிசி மாவில் கோலும் போடுவோம். எறும்புகள் தின்னட்டும் என்று. எறும்பு மேல் அக்கறையா? தெரியவில்லை. ஆனால் எறும்புகள் வீட்டில் உள்ள தின்பண்டங்களை மொய்த்து இம்சை செய்யாமல், வாசலில் உள்ள அரிசியை தின்றுவிட்டுப் போகட்டும் என்ற ஒரு எண்ணம் தான். இது ஒரு வகையான ‘திசை திருப்புதல்’. இன்று நாம் அரிசிக் கோலம் போடுவதில்லை, பரவாயில்லை. பட், பிளாஸ்டிக் கோலம் வாசலில் ஒட்டி வைக்கணுமா?
  • விருந்து பரிமாறும் போது, வாழை இலையின் நுனி இடது பக்கம் வருமாறு பரிமாறுவோம். நாம் வலது கையால் சாப்பிடுவதால் அந்த பக்க இலைப் பகுதி பெரிதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தான். இது பலருக்கும் தெரிந்திருக்கும். என் வருத்தம் என்னவென்றால், இடது கை பழக்கமுள்ளவர்களுக்கும் அப்படியே இலை போடுவார்கள். மாற்றிப் போட்டால் அபச்சாரம் என்று எண்ணுவார்கள்.
  • மற்றுமொரு பழக்கம், சாப்பிடும் முன் இலையைச் சுற்றி தண்ணீரால் சுற்றித் தெளித்துக்கொள்வது. அந்த காலத்தில், மண் தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது, இலையை சுற்றியிருக்கும் உலர்ந்த மண் பவுடர் பறந்து வரக்கூடாது என்று தண்ணீர் தெளித்து அடக்கி வைப்பார்கள். டைனிங் டேபிள் மேல் உட்கார்ந்து ஸ்டீல் தட்டில் சாப்பிடும் போதும் இந்தப் பழக்கம் தேவையா? சிலர், சரக்கடிக்கும் போதும் விரல் நுனியில் ஒரு சொட்டு தீர்த்தத்தை எடுத்துத் தெளிப்பார்கள். ஐயோ ராமா.
  • ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூடும் இடமாக கோவில் இருந்தது. அங்கு எந்த தீய மிருகங்களும் அண்டக் கூடாது. மிருகங்கள் நெருப்புக்கு பயப்படும் என்பதால் ஒரு அணையா விளக்கு ஏற்றி வைக்கப் பட்டது. சத்தத்திற்கு மிருகங்கள் பயப்படும் என்பதால் மேள தாளம். இரத்த வாடை துஷ்ட மிருகங்களை ஈர்க்கலாம். அதனால், அதைத் தவிர்ப்பதற்காக இரத்த பலி மற்றும் புலால் உணவு வகைகள் தவிர்க்கப் பட்டன. வீட்டுக்கு விலக்காகியிருக்கும் பெண்களும் கோவிலில் தவிர்க்கப் பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம்.
இவையெல்லாம் காரண காரியம் அறிந்து செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.