Moon

நிலவைத் தேடி – நிலவை எட்டியவர்கள் (0006)

Print Friendly, PDF & Email

(இதற்கு முன்…)

அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு சென்று வந்தவர்கள் 24 பேர். அதில் 12 பேர் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளனர். 12 பேர் நிலா வரை சென்று, ஆனால் அதைத் தொடாமல், திரும்பி வந்துள்ளனர்.

ஒவ்வொரு அப்போலோ பயணத்திலும் மூன்று வீரர்கள் இருப்பார்கள். இருவர் லூனார் மாட்யூல்’இல் கிளம்பிச் சென்று நிலவில் இறங்கி ஆராய்ச்சிக்காக கல்லையும் மண்ணையும் பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஒரு வீரர் இவர்கள் திரும்பி வரும் வரை கமாண்ட் மாட்யூல்’இல் நிலவை சுற்றி வந்துகொண்டிருப்பார்.

அப்போலோ 13’இன் பாதிக்கப்பட்ட சர்வீஸ் மாட்யூல்
(கழற்றி விடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்)

அப்போலோ 8, 10 மற்றும் 13 பயணங்களில் மூன்று மூன்று பேர் நிலவை சுற்றி வந்தனர். அப்போலோ 11, 12, 14, 15, 16 மற்றும் 17 பயணங்களில் ஒருவர் நிலவை சுற்றி வர, இருவர் நிலவில் இறங்கினர் (பெருக்கினால் 27 வருதேன்னு கணக்கு பண்ணாதீங்க. சில வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயணங்களில் ஈடுபட்டிருந்தனர்). அப்போலோ 13 பயணத்திலும் இரண்டு வீரர்கள் நிலவில் இறங்கியிருக்க வேண்டியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆக்ஸிஜன் டேங்க் வெடித்ததால், சர்வீஸ் மாட்யூல் பழுதடைந்து வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி வந்ததே பெரும்பாடாகிவிட்டது.

ஒரு டஜன் பேருக்கு மேல் நிலவில் இறங்கியிருந்தாலும் நமக்கு ஞாபகம் இருப்பதென்னவோ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தான். நிலவில் இறங்கும் போட்டி அமெரிக்கா மற்றும் ரஷ்யா’வுக்கு இடையே மட்டுமல்ல, தயாராகிக்கொண்டிருந்த அப்போலோ வீரர்களுக்கிடையேயும் கூட இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில், நிலவில் முதல் தடம் எடுத்து வைப்பவர் சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் என்பது அனைவரும் அறிந்தது. நிலவுக்கான முதல் பயணத்தில் சென்றாலும், நிலவில் முதல் காலடி எடுத்து வைத்தது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’தானே தவிர தானல்ல என்ற வருத்தம் வாழ்நாள் முழுவதும் பஸ் ஆல்ட்ரின்’க்கு இருந்தது.

அது சரி, முந்தைய அப்போலோ வீரர்கள் நிலவில் இறங்க முயற்சிக்கவில்லையா?

முதல் காலடி வைத்து
நிலவில் இருந்து திரும்பிய பிறகு
லூனார் மாட்யூல்’இல் ஆர்ம்ஸ்ட்ராங்
(செல்ஃபி அல்ல, ஆல்ட்ரின் எடுத்தது)
21 ஜூலை 1969

நிலவில் இறங்குவது மட்டுமல்ல, அதற்கான பயற்சியும் சவாலாகத்தான் இருந்தது. அப்போலோ 11 ஏவலுக்கு பிறகு டேக் ஸ்லேடன், “அப்போலோ 11’க்கான பயற்சியில் மிகச் சவாலானதாக நான் உணர்ந்தது நிலவில் இறங்குவதற்கான பயற்சியை வீரர்களுக்கு அளிப்பதுதான். மற்றவைகள் எல்லாம் – பூமி/நிலவை சுற்றி வருதல், ஈர்ப்பற்ற தன்மை (அல்லது ஜீரோ-G), விண்வெளியில் ஓடத்தின் வெளியில் சென்று வருதல் – ஏற்கனவே மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்க்கப்பட்டிருந்தது. அப்போலோ 7’இல் கமாண்ட் மாட்யூல் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. அப்போலோ 9 வீர்கள் லூனார் மாட்யூல்’யை தங்கள் பயணத்தின் போது உபயோகித்தனர். அப்போலோ 8 நிலவுக்கு சென்று திரும்பியது. அப்போலோ 10, நிலவைச் சுற்றி வந்தது. அதுவரை நாங்கள் செய்யவே செய்யாத ஒன்று உண்டென்றால் அது நிலவில் மனிதனை இறக்குவதுதான். அதற்கான பயற்சியை வீர்களுக்கு அளித்தது எங்களுக்கே ஒரு புது அனுபவம்.” இதில் மேலும் சிக்கல் என்னவென்றால், சீட்டுக் கட்டு போல் அப்போலோ 7, 8, 9, 10 என்று ஏவல்களை நாசா வரிசையாக நெருக்கி அடுக்கியிருந்தது. அப்போலோ 11 வீரர்களுக்கே (நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின்) கூட லூனார் மாட்யூல் ஸிமுலேட்டரில் பயற்சி பெற வாய்ப்பு கிடைத்தது மே 1969’இல் தான். அதாவது, தங்கள் அப்போலோ 11 ஏவலுக்கு இரண்டு மாதங்கள் முன்புதான். ஏனென்றால், அதுவரை அப்போலோ 10 வீரர்கள் அந்த லூனார் மாட்யூல் ஸிமுலேட்டரில் பயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசி காலடி பதித்து
நிலவில் இருந்து திரும்பிய பிறகு
லூனார் மாட்யூல்’இல் செர்னன்

அப்போலோ 10 உண்மையிலேயே மிக விரிவான முயற்சியாக இருந்தது. அப்போலோ 8’இல் நிலவை நெருங்கிப்போய் கிட்டத்தட்ட தொட்டுவிட்டு வந்தாகி விட்டது. இனிமேலும் காத்திருக்கத் தேவையில்லை, அப்போலோ 10’ஐ நிலவில் இறக்கிவிடலாம் சிலர் உறுதியாக எண்ணினார். (அப்போலோ 10 வீரர்களும் இதை வெகுவாக ஆமோதித்தனர்.) ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், நிலவில் இறங்கிவிட்டால், மீண்டும் மேலே எழும்பும் அளவுக்கு இலகுவானதொரு எடையற்ற ஒரு லூனார் மாட்யூல்’ஐ நாசா பொறியாளர்கள் அப்பொழுது தயாரித்திருக்கவில்லை. இறங்கினால் இறங்கியதுதான். நிலவின் ஈர்ப்பு விசையை எதிர்த்து மீண்டும் லூனார் மாட்யூல் மேல் எழும்பாது. மனிதனை நிலவில் இறக்குவது அதிபர் கென்னடியின் கனவல்ல; அப்படி இறக்கி, மேலும் பத்திரமாக மனிதனை பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே அவர் கனவு.

“எங்களைப் பற்றி பலர் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ‘இவனுங்களுக்கு நிலாவுல இறங்க ச்சான்ஸ் கொடுத்துடாதீங்க. ஏன்னா, வாய்ப்பு கெடைச்சா டக்குன்னு இறங்கிருவாங்க. பீ கேர்ஃபுல்,’ என்று எங்கள் பின்னால் சொன்னவர்கள் பலர்.” சிரித்தபடி சொல்கிறார் அப்போலோ 10’இன் ஜீன் செர்னன் (Gene Cernan), “அதனால், நிலவில் இருந்து மேல் எழும்பப் பயன்படும் வாகனத்தில் பாதியளவுதான் எரிவாயு நிரப்பியிருந்தார்கள். டேங்க் ஃபுல் பண்ணவில்லை. தப்பித் தவறி, ஆர்வக் கோளாறில் நாங்கள் நிலவில் இறங்கியிருந்தாலும்கூட மீண்டும் மேல் எழும்பியிருக்க முடியாது. அப்படியே, அந்த வடை சுடும் பாட்டியுடன் இருந்திருக்க வேண்டியதுதான்.” ஒரு முரண் பாருங்கள் – நிலவில் முதல் தடம் பதிக்க முடியாவிட்டாலும், இன்றைய தேதிக்கு இவர்தான் நிலவில் கடைசியாக காலடி வைத்த மனிதர்.

எது எப்படியோ, அப்போலோ 11’இன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’க்கே நம்ம வடைப் பாட்டியை சந்தித்து கை குலுக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது.

ஆர்ம்ஸ்ட்ராங்,
மனிதன் நிலவில் காலடி வைப்பதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு.

Karthik Nilagiri

Related posts