Moon

நிலவைத் தேடி – தயார் நிலை (0004)

Print Friendly, PDF & Email

(இதற்கு முன்…)

ராக்கெட் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பைட்டிருந்த சாட்டர்ன் V (1970s)

‘சாட்டர்ன் V’ ராக்கெட்டின் பாகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஃப்ளோரிடாவின் VABக்கு வந்து ஒருங்கிணைக்கப்படுகின்றது. முதல் நிலை பூஸ்டரும், இரண்டாம் நிலை பூஸ்டரும் கப்பலில் வந்து இறங்கிவிடும். மூன்றாம் நிலை பூஸ்டர் கொஞ்சம் குட்டி. அதனால் அதை முதலில் சேப்பெளின் (Zeppelin) எனப்படும் காற்றடைத்த பெரிய பலூன் வாகனம் மூலம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, சோதனை முயற்சிகள் தோல்வியடைந்ததால், கைவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஜான் கான்றாய் (John M. Conroy) என்ற அமெரிக்க போர்படை விமானி இதற்காக ஒரு பெரிய விமானத்தை வடிவமைக்க தலைப்பட்டார். பலரும் இதில் நம்பிக்கையின்றி இருக்க அவர் தன் மொத்த சொத்தையும் (வீடு, கார், வீட்டுச் சாமான்கள் வரை) பணயம் வைத்து போயிங்’இன் ஸ்ட்ராடோக்ரூஸரை (Boeing 377 Stratocruiser) சற்று வடிவம் மாற்றி ‘ப்ரெக்னென்ட் கப்பி’ (Pregnant Guppy) என்ற ஒரு மிகப் பெரிய அட்டகாசமான விமானத்தை வடிவமைத்தார். இந்த விமானம் மூன்றாம் நிலை பூஸ்டரை கொண்டுவந்துவிடும். இதே விமானம் தான் கமாண்ட் மற்றும் சர்வீஸ் மாட்யூலையும் கொண்டுவரும். லூனார் மாட்யூல் அதை விட குட்டி என்பதால் அது இரயில் மூலமும் ட்ரக் மூலமும் பயணித்து வந்து இறங்கிவிடும்.

ராக்கெட்’டின் பகுதி கொண்டுவரப்படுகிறது (1967)

VABயில் ராக்கெட்டின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக சோதிக்கப்படும். பின் ஒருங்கிணைக்கப்பட்டும் பரிசோதிக்கப்படும். பொத்தான், விளக்கு, மோட்டார், பம்ப் என்று ஒன்று விடாமல் நிலாப் பயணத்தில் பயன்படுத்தப்படும் அத்தனை கருவிகளும் சோதனைக்குள்ளாக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு சித்ரவதைக் கூடம் போல. மேலும் கொலம்பியா, ஈகள் சார்ந்த கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், உபகரணங்கள் போன்றவை வெப்பம், குளிர், அதிர்வு, தூசு, மழை முதலிய சோதனைகளுக்கும் ஆட்படுத்தப் பட்டது. எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட 587,500 வகையான சோதனைகள். இது போக சாட்டர்ன் V – அப்போலோ 11 மொத்தமாக கட்டமைக்கப் பட்டு ஏவுதளத்துக்கு (Pad 39A) கொண்டு செல்லப்பட்டபின் மீண்டும் அங்கு ஒரு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பறக்கும் தயார்நிலை உறுதி செய்யப்படும். பிறகு, நிமிடத்திற்கு பத்தாயிரம் காலன் (38000 லிட்டர்) வீதம், நான்கு மணி முப்பத்தியேழு நிமிடத்திற்கு, நான்கு வகையான எரியாயுக்கள் நிரப்பப்படும் – திரவ ஆக்சிஜன் (Liquid Oxygen), திரவ ஹைட்ரஜன் (Liquid Hydrogen), ஜெட்-கிரேட் கெரோஸின் (Jet-grade Kerosene) மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen Peroxide). அதைத் தொடர்ந்து ஐந்து நாள், தொண்ணூற்றி ஒன்பது மணிநேர புறப்பாடுகான கவுன்ட் டௌன் (Countdown). ராட்சத மிருகம் போல உறுமிக்கொண்டு இருந்த ராக்கெட்டை சுற்றி ஒவ்வொரு நிலையிலும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் நுணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கருவியின் செயல்பாட்டையும் தோண்டி துருவி நோண்டி நொங்கெடுத்துக்கொண்டிருண்டனர். எந்தப் பிரச்சனையெனினும்  அது இங்கேயே இந்த பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படவேண்டும். நிலவுக்கு கிளம்பியபின் ஒண்ணும் பண்ண முடியாது அல்லவா. இரவின் எண்ணற்ற நட்சத்திரங்கள் போல கொட்டிக்கிடந்த வேலைகளை சலிப்புடன் முனகிக்கொண்டும், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் சத்தமில்லாமல் இருக்கிற வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையை கையில் எடுத்துக்கொண்டும் பணியாளர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். விண்வெளி வீரர்களின் பெருமைகளை நாம் வியந்து புகழும் அதே சமயம் மாபெரும் மெஷின்களுக்கு இடையே, சூட்டில் வியர்த்து, வாயுக்களை சுவாசித்து ராக்கெட்டை முன்னெடுத்துச் சென்ற இந்த ஏவுதள பணியாளர்களின் மனவலிமையையும் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவர்கள் அனைவரும் இணைந்தே மனிதனை நிலவில் அமர்த்தும் ஒரு பகல் கனவை நனவாக்கினர்.

இரண்டாம் நிலை பூஸ்டர் பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

ரோக்கோ பெட்ரோன்: “அப்போலோ 11 முழுமையடைந்த கட்டத்தில், ஒரு வான்வெளி ஓடத்தை சோதிக்கும் முறைகளை அடங்கிய புத்தகம் 30,000 பக்கங்களையும் தாண்டிச் சென்றது. சோதனைகள் முறையாக கட்டமைக்கப்பட்டன. ஒரு சோதனை, அதற்கு தேவையான முந்தைய சோதனை, தொடரவேண்டிய மற்றொரு சோதனை என்று படிப்படியாக சோதனைகள் பலகட்டங்களாக விரிந்து கொண்டே சென்று இவ்வளவு பெரிய புத்தகமாக வளர்ந்து நிற்கிறது.”

இந்த நேரத்தில் மற்றுமொரு ஆளுமையையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். அவர் கென்னடி விண்வெளி நிலையத்தின் இயக்குனர் கர்ட் டீபஸ் (Kurt H. Debus). 1953இல் முதல் ரெட்ஸ்டோன் (Redstone) வகை ராக்கெட்களை நாசா சோதித்த காலத்தில் டீபஸ் (அப்போது அவர் இராணுவ தடவாள அதிகாரியாக இருந்தார்) வெர்ன்ஹர் ஃபான் ப்ரான் (Wernher von Braun) அமைத்த முதல் மூல ராக்கெட் குழுவில் இணைக்கப்பட்டார். அந்த காலத்தில் இருந்தே பெட்ரோன் மற்றும் டீபஸ் இருவரும் நாசாவின் இயக்குனரகத்தில் இணைந்தே படிப் படியாக உயர்ந்தனர். இருவருமே மிகக் கடுமையானவர்கள். நாசாவில் டீபஸ் சுத்தத்திற்கு பெயர் போனவர். தன் கீழ் வேலை செய்யும் நபர்களின் மேஜைகளையும், சற்றே குப்பை / தூசு காணப்பட்டாலும், தானே களமிறங்கி சுத்தம் செய்து விடுவார். பெட்ரோன் வேறு மாதிரி. தன் கீழ் வேலை பார்க்கும் நபர்களின் நூறு சதவித உழைப்பு மற்றும் திறமையை வெளிக்கொண்டுவந்துவிடுவார்.  சுருக்கமா சொன்னா, பிழிந்து எடுத்துவிடுவார். பெட்ரோன் மற்றும் டீபஸ் போன்ற கடுமையான, சுறுசுறுப்பான அதிகாரிகளின் தலைமையால்தான் நாசா கிட்டத்தட்ட பத்தே ஆண்டுகளில் மனிதனை நிலவில் நடக்க வைத்து, பத்திரமாக உலகுக்கு திரும்ப அழைத்து வரவும் முடிந்தது.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் – ஒரு லூனார் மாட்யூல் ஒத்திகையின்போது

உண்மையில் சொல்லப் போனால், இப்படிப்பட்ட கடுமையான சோதனைகளின் காரணமாகவே ஒரு அற்புதமான ராக்கெட் உலகுக்கு கிடைத்தது. அதாவது, ஏழே ஆண்டுக்குள், 1962இல் ஜான் க்ளென் (John Glenn) பயணித்த அட்லாஸ் (Atlas)ஐ விட ஐம்பது மடங்கு சக்தி வாய்ந்த சாட்டர்ன் ராக்கெட்’இல் 1969இல் ஆர்ம்ஸ்ட்ராங் (Armstrong) பயணிக்க முடிந்தது. அதைவிட முக்கியமாக, இந்த சாட்டர்ன் ராக்கெட்’டுக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு. இது ஏவுதளத்தில் மக்கர் செய்து எரிந்ததும் இல்லை; வெடித்துச் சிதறியதுமில்லை. கிட்டத்தட்ட இது ஒரு இன்ஜினியரிங் மிராக்கிள்.

இத்தனை சோதனைகளுக்கு பிறகு 1969இல் ராக்கெட் நிலவுக்கு புறப்பட தயாராக நின்றது.

உறுமிக்கொண்டிருந்த ராக்கெட்டைப் பார்த்தபோது அது ஒரு உயிருள்ள மிருகம் போலவே இருந்தது. அதில் கிட்டத்தட்ட 6 மில்லியன் (6,000,000) பாகங்கள் இருந்தன. நாசாவின் தீவிர சோதனைகளின் படி பாகங்களின் 99.9 சதவிகித நம்பகத்தன்மை உறுதி என்றே வைத்துக்கொண்டாலும், இந்த நம்பகத் தன்மையின் புள்ளிவிவரக் கணக்குப்படி 6000 பாகங்கள் பழுதடைய வாய்ப்பு உண்டு. பிரச்சனை எதில் என்று கண்டுபிடிப்பதிலேயே பாதி உயிர் போய்விடும். இப்படித்தான் அதற்கு முந்தைய வாரம் பெட்ரோன்’இன் ஏவுதள ஊழியர்கள் ஒரு பிரச்சனைக்காக 36 மணி நேரம் போராடினர். எங்கோ எதுவோ கசிந்து கொண்டிருந்தது. தேடித் தேடி அந்த கசிவு ஒரு எரிவாயுவின் கலன்(Tank)இல் இருந்து ஏற்படுகிறது என்று கண்டு பிடித்தனர். அதை சரி செய்ய முடியுமா அல்லது மொத்தமாக அதை மாற்றவேண்டுமா என்று போட்டு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். மொத்தமாக மாற்றவேண்டுமானால் நான்கு நாட்கள் பிடிக்கும். மொத்த புறப்பாட்டையே ஒத்திவைக்க நேரிடலாம். பொறியாளர் ஒருவர் ஏதோ ஒரு நப்பாசையில குருட்டு நம்பிக்கையுடன் ஒரு திருகாணியை இறுக்கினார். நல்ல வேளையாக கசிவு நின்றது.

நாசா ஊழியர்கள் பத்து வருடமாக காத்திருந்த தருணம் நெருங்கி விட்டது. எத்தனை கனவுகள். தூங்கா இரவுகள். எதிர்பாராத சறுக்கல்கள். சிறு சிறு முன்னேற்றங்கள். புன்னகைத் தருணங்கள். அத்தனைக்கும் இப்பொழுது ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம், மனிதனை நிலவில் இறக்கி பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவோம் என்று நம்பினார்கள், பலமுறை அவர்கள் நம்பிக்கை பொய்த்திருக்கிறது என்பதை அறிந்தே.

Launch Control Centre

இத்தனை பரபரப்புக்கிடையில், அருகிருள்ள கடலில், ஒரு சோவியத் மீன்பிடிப் படகு சிலபல கண்காணிப்புக் கருவிகளுடன் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

இங்கு, ஹூஸ்டன்’இல் ஒவ்வொரு நாசா ஊழியரின் முன்னும் கீழ்க்கண்ட வாசகம் மின்னிக் கொண்டிருந்தது.

“நீங்கள் தயாராக இருப்பீர்களா?”

Karthik Nilagiri

Related posts