Experience

உதவின்னு வந்துட்டா…

Print Friendly, PDF & Email
உதவி செய்றதுலே நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

நமக்கு ஒரு உதவி தேவைப்படும்போது குபீரென்று நாலாபக்கமிலிருந்தும் ஹீரோவிடம் அடிவாங்க வரும் வில்லன் போல பாய்ந்து வருவார்கள். நிற்க. உதவி என்ற சொல்லில் பண உதவி அடங்காது. பொதுவாக உதவி என்பது அறிவுசார் (intellectual) உதவியாகவே இருக்கும். சிம்பிளா தமிழ்லே சொன்னா அட்வைஸ். நண்பனுக்கு நண்பன் எனக்கு நண்பனே என்ற கான்செப்டே இங்கு கிடையாது. எவனும் எனக்கு நண்பனேதான். உங்கள் வண்டியை சற்று ஓரமா நிறுத்திட்டு சற்று சாய்த்தோ அல்லது கொஞ்சம் தட்டிகிட்டயோ பாருங்கள். சட்டென்று ஒரு மெக்கானிக் கும்பல் சேர்ந்து விடும். “ஸ்பார்க் பிளக் போயிருக்கும் ஸார்… இக்னீஷன் போட்டு நல்லா ரைஸ் பண்ணிப் பாருங்க… கடைசியா எப்போ சர்வீஸ் விட்டீங்க… எப்ப ஆயில் மாத்துனீங்க…” என்று ஆரம்பித்து இன்ஜின் மாற்றுவது வரை போய்விடுவார்கள். ஆனா ஒரு பத்து பைசா பெயராது. இது நீங்கள் ஆணாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே. பெண் என்றால் வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடுவார்கள். வண்டியையும் சரிபண்ணி கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள்.

முக்காவாசி உதவிகள் உபத்திரவத்தில்தான் முடியும். சில வரலாற்று சான்றுகளைக் காண்போம்.

உதவிகள் பலவிதம்
  • சும்மா டைம் பாஸா புலம்பிக்கிட்டு இருந்த தருமிக்கு “கொங்குதேர் வாழ்க்கை; அஞ்சிறைத் தும்பி…” எழுத கடவுளே இறங்கி வந்தது.
  • மெக்கானிக் கௌண்டமணிக்கு செந்தில் கிரீஸ் டப்பா எடுத்துக் கொடுத்தது.
  • அற்புத ஞானப்பழத்தை கொடுத்து சிவன் குடும்பத்தை  நாரதர் வாழவைத்தது.
  • கணவனின் தொழிலுக்காக கண்ணகி சிலம்பை கழற்றித் தந்தது.
  • நண்பனின் காதலுக்கு உதவ சுந்தரபாண்டியன் கிளம்பியது.

    அவங்க செய்த உதவியினால என்ன பயன்னு உங்களுக்கே தெரியும். அதனாலே உதவி ஒண்ணு உங்களுக்கு வாலண்டியரா வருதுன்னா உஷாராயிடுங்க.

    என்னைப் பொருத்தவரை உதவி என்பது முடியாவிட்டால்தான். பலர் உதவி என்ற பெயரில் அவர்கள் வேலையை நம்மிடம் தள்ளிவிடப்  பார்ப்பார்கள். கொஞ்சம் புகழ்ந்து பேசினால், நாமும் ஏற்றுக்கொண்டு உதவி செய்து விடுவோம். கவனம் தேவை.

    கடந்த வாரம் அலுவலகத்தில் எங்கள் பகுதியில் புதிதாக அமர ஆரம்பித்திருந்த ஒரு சக ஊழியர் என்னிடம் பேச்சு கொடுத்தார், “நம்ம பக்கத்துலே லைட்டிங் கம்மியா இருக்குல்லே?”.
    நான், “அப்படியா சார்… ஒரு வருஷமா இப்படித்தான் இருக்கு… எங்களுக்கு பழகிடுச்சு… உங்களுக்கு கம்மியா தோணுதா???”.
    அவர், “இல்லே கார்த்தி. கண்ணு கேட்டுடலாம். இருக்குற எல்லா லைட்டும் சுத்தம் பண்ண சொல்லணும். “
    நான், “பண்ணிடலாம் சார்… ரிசெப்ஷனுக்கு போன் பண்ணி சொன்னா சரி பண்ணிடுவாங்க…”
    அவர், “நீங்களே சொல்லிடுங்களேன்.”
    நான், “ஏன் சார்??? நீங்க கூட சொல்லலாமே… ஏதும் பிரச்சனையா???”
    அவர், “என்ன கார்த்தி இது? ஒரு சின்ன உதவிதானே?”
    நான், “இல்லே சார்… இது உதவி இல்லை… உங்கள் வேலையை நான் செய்வது போல… உங்களாலே முடியாதுன்னா கண்டிப்பா நான் பண்ணுவேன்… அதுதான் உதவி… ஆனா இப்போ உங்களாலேயே முடியும்… நீங்களே போன் பண்ணி சொல்லுங்க… உங்க பேச்சு எடுபடாட்டி அடுத்து நான் பேசுறேன்…”
    சொல்லிவிட்டு நான் அங்கிருந்து விலகி விட்டேன். அவர் மேலும் இரண்டு மூன்று பேரிடம் ‘வெளிச்சம் கம்மியா இருக்குல்ல’ புலம்பிக் கொண்டிருந்தார்.

    மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நாம் செய்யும் உதவியை கடமையாக்கி விடுவார்கள். முக்கியமாக, நாம் ஒரு உதவியை அடிக்கடி செய்தால் தொலைந்தோம். ஒரு தடவை மறந்தாலும் நம்மை ஒரு நீசனைப்போல் பார்ப்பார்கள்.

    Sodexho கூப்பன்கள்  மாதா மாதம் எங்கள் அலுவலகத்தின் வரவேர்ப்பாளரிடம் வரும். நான் எனக்காக வாங்கும் போது என் அலுவலக நண்பர்கள் மேலும் இரண்டு பேருக்கும் வாங்கி வந்துவிடுவேன். இது ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு தொடர்ந்திருக்கும். ஒரு முறை ஏதோ ஒரு கவனத்தில் என்னுடையதை மட்டும் வாங்கி வந்து விட்டேன். அன்று என் அலுவலக நண்பர்கள் இருவரும் என்னை அப்படி விசாரித்தார்கள் – “ஏன் கார்த்திக்? எங்களுடையதையும் வாங்கியிருக்கலாமில்ல? சரி. இனிமேல் உன்னுடையதை நீ வாங்கிக்கொள். நாங்கள் எங்களுடையதை வாங்கிக் கொள்கிறோம்.” அவர்கள் தொனி என் குற்றவுணர்ச்சியை தூண்டுவதாக இருந்தது. “நான் உங்கள் நண்பன். வேலையாள் அல்ல”, என்று கூறிவிட்டேன். அவர்கள் இரண்டு நாட்களுக்கு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஹேர்’ஆ போச்சுன்னு விட்டுட்டேன். நியூட்டன் கண்டுபிடித்த விதிப்படி மேல போன எதுவும் கீழே வந்துதான் ஆகணும். வர்றப்ப வரட்டும் என்று விட்டுவிட்டேன்.

    உதவியை மறப்பதை கூட விட்டுவிடலாம். ஆனால் நாம் மறக்காமல் உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை எந்தக் குழுவில் சேர்க்க?

    மற்றபடி முடிந்த பொழுது நம்மால் முடிந்த அளவிற்கு உதவி செய்யவேண்டும். கவனியுங்கள். முடிந்த அளவிற்கு மட்டுமே. நாட்டமை போல, “என்கிட்டே சொல்லிட்டீங்கல்ல. நான் பார்த்துக்கிடறேன்.” என்று சொல்லக்கூடாது. சொன்னால் சொன்ன சொல்லை திரைப்பட சரத்குமார் போல காக்க வேண்டும். நம்பிக்கையை விதைத்துவிட்டு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது. “இன்னோவோ வண்டி’தானேங்க. நம்ம நண்பன் ஒருத்தன் இருக்கான். புக் பண்ணி தர்றேன். நாளைக்கு 6 மணிக்கு வாசல்லே நிக்கும்.” நாமும் அவனை நம்பி புளியோதரை பொட்டலம் கட்டி, குழந்தைகளை எழுப்பி, குளிக்காமல் கொள்ளாமல் பௌடர் பூசி தயாராகி நின்றால் காலை எட்டு மணி வரை வண்டி இருக்காது. போன் போட்டு கேட்டால், “ஸாரி பாஸ். எல்லாம் ட்ரிப்புக்கு போயிடுச்சாம்” என்று குழைவார்கள். அந்த நேரத்துக்கு வேறு வண்டியும் கிடைக்காது. மொத்தத்தில் நாமதான் ஞே ஆகியிருப்போம். நாமளே ஏற்பாடு பண்ணியிருந்திருக்கலாம்.

    இதெல்லாம் போக, செய்த உதவிக்கு நன்றி சொல்லும் ஒரு சில பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். முக்கியமாக பெண்கள். நாம் செய்த உதவியை நம் வீட்டிலேயே வந்து போட்டுக் கொடுத்துவிடுவார்கள். மகராசிகள்.

    • உங்க கணவருக்குத் தான் நன்றி சொல்லணும். பாவம் மூணு மணி நேரம் கால் கடுக்க நின்னு இந்த தட்கல் வாங்கி கொடுத்திருக்காரு. (மனைவி – எங்க அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்துருக்கியா இந்த தட்கல்?)
    • ரொம்ப நல்லவருங்க. இரவு பத்து மணியின்னும் பார்க்காமே என்னோட ஸ்கூட்டி’ல என்னை வீட்லே விட்டுட்டு ஆட்டோலே திரும்பி வந்திருக்காரு. (மனைவி – யோவ். உங்கிட்ட டூ வீலர் லைசன்ஸ் இருக்காய்யா?)
    • இந்தாங்க சசி அக்கா, பிடிங்க தக்காளி காசு முப்பது ரூபா. உங்க கணவர்கிட்டே கொடுத்தா வாங்க மாட்டேங்குறாரு. இங்கே பாருங்க ஸார். இப்படி நீங்க காசு வாங்கலேன்னா இனிமே உங்கட்டே வேலையே சொல்ல மாட்டேன். (மனைவி – என்னய்யா பார்ட் டைம் தள்ளு வண்டி வியாபாரம் நடத்துறியா? எப்பையா இந்த வேலையெல்லாம் பாக்குறே?)
    இதுல என்னைத் தேடாதீங்க… இது வெறும் மாடல்தான்…

    சரி வேணாம்டா. யாருக்கும் உதவி செய்யவேண்டாம் நாம் உண்டு நம் வாழ்க்கை உண்டு என்று இருந்தால் நம்மை மனுஷப் பய அகராதியிலேயே சேர்க்க மாட்டாங்க.

    உதவி செய்தாலும் பிரச்சனை, செய்யாட்டியும் பிரச்சனை.
    உதவி என்பது குதிரை மாதிரி. முன்னே போனா கடிக்கும்; பின்னே போனா உதைக்கும். அதில் இலாவகமாக ஏறி ஓட்டத் தெரிந்தவனே ராஜா.
    உதவியை ரொம்ப கேர்புல்லாத்தான் டீல் பண்ணனும்.

    அப்புறம், மிக முக்கியமான ஒரு விஷயம் – பிச்சை உதவியில் சேராது.

    Karthik Nilagiri

    Related posts

    3 Comment's

    1. maheshkumar says:

      Nice Writeup boss 🙂

    Leave a Reply

    Your email address will not be published.