Experience

ஆப்பீஸ்-8-சம்பவம்

Print Friendly, PDF & Email

ஆப்பீஸ்

சம்பவம்

முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது.

7-சுற்றல்

கழுதை, என்னைக்கு ஆப்பீஸில் நடந்ததையும் பத்தி எழுதுறேன்னு இங்க சில வாரம் முன்னாடி சொன்னேனோ அப்படியே கேப் விழுந்துருச்சு. இதுதான் ஆப்பீஸ் வேலையின் மகிமை. ஆக்சுவலி என்னன்னா, நான் ஒரு ரெண்டு வாரம் ஊருக்கு போயிட்டேன். மதுரை, சென்னை, திருப்பதி என்று சுத்தி சோம்பேறி ஆகி இதோ இந்த வாரம் மறுபடி எழுத உக்காந்தாச்சு.

பயிற்சி தாண்டி ஜாம்நகரில் இருந்த அந்த இரண்டு மாதத்தில் ஆப்பீஸில் சில சம்பவங்கள் நடந்தன. முதலில் அனைவருக்கும் ஒன்றாக சேர்ந்து பயிற்சி அளித்தார்கள். மூன்று வாரம் கழித்து துறை வாரியாக பிரித்து பயற்சி அளித்தார்கள். எங்கள் கூட்டத்தில், கெமிக்கல் மக்களே அதிகம் இருந்தார்கள். எலெக்ட்ரிக்கல் கம்மி. கருவியியல் பங்குக்கு ஒரு இருபத்தியைந்து பேர் இருந்தார்கள். இருபது ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள். இது போக, வழக்கம் போல ஆண்களால் நிறம்பப்பெற்ற மெக்கானிக்கல் துறை. இதனாலேயே மெக்கானிக்கல் சிறப்பு கவனிப்பு பெற்றது. எவ்வளவு முயற்சித்தும் கட்டுப்படுத்த முடியாத துறையாக இருந்தது. திடீரென்று அவர்கள் வேறு வகுப்பில் போய் உட்கார்ந்துவிடும் ‘கொஸக்ஸி பசப்புகழ்’கள் சிலர் இருந்தார்கள். அவர்கள் பேச விரும்பும் பெண்களுடன் போய் அந்த பஞ்சவன்’கள் அமர்ந்து கடலை போடுவார்கள். வாத்தியார் கேட்கும் கேள்விக்கும் அசராமல் பதிலளிப்பார்கள். பிற துறை ஆண்கள் பொறாமைப்பட்டாலும் காட்டிக்கொடுத்ததில்லை. பெண்களும்.

பெண்களின் கண்களுக்கு அடுத்து துருதுருவென்று இருக்கும் மக்கள் மெக்கானிக்கல் நண்பர்கள். ஒரு மதியம் அவர்களை எங்கும் காணவில்லை. பயிற்சி வளாகமே அமைதியாய் இருந்தது. சாயங்காலம் சாவகமாக வந்த நண்பர்களிடம் போட்டு வாங்குனா, மதியம் பயிற்சி என்ற பெயரில் ஆமீர் கான் நடித்த ‘லகான்’ படம் போட்டு காட்டியிருக்கிறார்கள். பின் அதில் இருந்து மேனேஜ்மெண்ட் பற்றி ஒரு மணிநேரம் விவாதித்திருக்கிறார்கள். நம்ம பய புள்ளைகளும் ஒழுங்காக படம் பார்த்து விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மத்த எல்லாருக்கும் மனசு ஒடிஞ்சு போச்சு. ஆனா பொண்ணுங்க விடலியே. எந்த பொண்ணு எந்த பையன்கிட்ட சொன்னாளோ தெரியல, மெக்கானிக்கல் பசங்க பயிற்சி அறையிலேயே ஒரு படத்த ஓட்டிட்டாங்க. ஷாஹித் கபூர் மற்றும் அம்ரிதா ராவ் நடித்த ‘இஷ்க் விஷ்க்’ என்ற படம். மதியம் சாப்பிட்டு முடிச்சு பயிற்சி அறைக்கு போய் பார்த்தா அறையில் இருந்த டிவியில் படம் ஓடுது. விளக்கை அமர்த்தி கும்பலா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. யாரும் வந்தா வார்னிங் பண்ண வாசல்ல ரெண்டு பசங்க இருந்தாங்க. யாரும் உயரதிகாரிகள் வந்து விசாரிக்கல. பசங்க அப்படி இதை சாதிச்சாங்க’ன்னு தெரியல. இதுவரை யாரும் அதை பத்தி மூச்சு விடல. பயிற்சி காலத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு புதிர். எவனோ அட்டகாசமா மேனேஜ் பண்ணிருக்கான்.

சினிமா சம்பவத்துல இவ்வளவு தளர்வா இருந்தவங்க, சாப்பாடு விஷயத்துல உயிரெடுத்தாங்க. பயிற்சி நடந்த ரெண்டு மாதத்தில் ஒரு மாலை வாங்க பழகலாம்’ன்னு கூப்பிட்டாங்க. பெருமக்களின் பேச்சுக்கு பிறகு குறை கேட்கும் முறை வந்த போது மதராஸிகள் நாங்கள் அனைவரும் வைத்த ஒரு குறை, “சாப்பாடு சரியில்லீங்க எஜமான்” என்பதே. சப்பாத்தியும் சப்ஜியும் சாப்பிட்டு நாக்கு செத்துக் கொண்டிருந்தது (எதிர்காலத்தில் பரோடாவில் சந்திக்கப் போகும் பூரி மற்றும் கடி பற்றி அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை). இரவு அரிசியும் தாலும் கிடைத்தாலும் நம்மூர் சாப்பாடாக இல்லை அது. மைக்கை கையிலெடுத்த மனிதவள துறை உயரதிகாரி, “மக்களே. இதையெல்லாம் குறையாக சொல்லவேண்டாம். நீங்கள் இங்கே சாப்பிட வரவில்லை. கிடைத்ததை உண்டு உழையுங்கள்” என்று சுருக்கமாக எங்கள் அரிசியில் கோதுமை அள்ளிப்போட்டார். இது இங்கு மனித வளம் எவ்வாறு எங்களை கையாளப் போகிறது என்பதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

அன்று அந்த விருந்தைத் தொடர்ந்து அனைவருக்கும் சபையோர் முன் பேச ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதியவர்களின் தனித் திறமைகளை தோண்டியெடுக்கவாம். பலர் முன்வந்தார்கள். அமித் வந்து கவிதை வாசித்தான். சில பெண்கள் பாடினார்கள். இரண்டு பெண்கள் நடனம் ஆடினார்கள் (வார்ரே வாவ்!). ஒன்றிரண்டு ஆண்கள் ஸ்டாண்டு-அப் காமெடி கொத்தினார்கள். ஒரு கட்டத்தில், சும்மா இருந்த என்னையும் சொறிஞ்சு விட்டு மேடை ஏற்றி விட்டார்கள். நான் முதலில் கவிதை சொல்லலாம் என்று தான் எண்ணினேன். எதற்கு கவிதை, அதையும் பாடலாகவே பாடிவிடலாமே என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. நானாக ஒரு கவிதை உருவாக்கிப் பாடி, அழகுப் பெண்கள் அனைவரும் என் பக்கம் சாய்ந்து விட்டால் என்ன ஆவது என்ற நியாயமான பயம் ஒன்று எழுந்தது. எதற்கு வம்பு என்று கருதி, சினிமா பாடலே பாட முடிவு செய்தேன். கல்லூரியில் இருந்தபோது ஒருமுறை பாடியிருக்கிறேன். நானும் சாமி என்ற செந்தில்குமாரும் என் ஹாஸ்டல் ரூமில் இருந்தோம். இரவு நள்ளிரவு தாண்டியிருக்கும். ஏதோ நினைவில் சாமி என்னை ‘பாட வருமா?’ என்று கேட்டான். ‘தெர்ல’ என்றபோது, ‘எங்க எதாச்சும் பாடு’ என்றான். ரட்சகன் படத்தில் வரும் ‘கையில் மிதக்கும் கனவா நீ’ பாடல் பாடினேன். யாரை நினைத்து பாடினேன் என்று இப்பொழுதும் நினைவில் இருந்தாலும், ஏன் அவளை நினைத்து இந்தப் பாடல் பாடினேன் என்று இன்று வரை விளங்கவில்லை. ‘நிலவில் பொருள்கள் எடையிழக்கும்’ அடி வந்தபோது சாமி என்னையே கவனித்துக் கொண்டிருந்ததை கண்டு, சட்டென்று பாடுவதை நிறுத்தினேன். சாமி பொதுவாக பொய் சொல்லமாட்டன். அன்று ஏதோ, ‘நல்லா பாடுறடா’ என்று சொன்னான். சொல்லிவிட்டு உடனே திரும்பி படுத்து தூங்கிவிட்டான். அதே பாடலை எனக்கு அன்று அந்த சபையிலும் பாடலாம் என்று தோன்றியது. பாடி முடித்த போது அனைவரும் சாப்பிடக் கிளம்பி விட்டிருந்தார்கள். தமிழ் புரியாத வடநாட்டவர்கள் மட்டும் கடைசிவரை பொறுமையாக கேட்டார்கள். பாடி முடித்த போது எங்கள் எல்லாரையும் கட்டி மேய்த்த ஷிவ்குமார் என்ற அதிகாரி மேடையேறினார். என் தாய் மொழி என்னவென்று விசாரித்தார். சௌராஷ்டிரா என்றபோது அங்கேயே ஆச்சர்யப்பட்டுப் போனார். மைக் பிடித்து “பாருங்கள். சௌராஷ்டிரா பையன் என்றாலும் தமிழில் எவ்வளவு அழகாக பாடுகிறான் பாருங்கள்” என்று என் பால் பெருமிதம் கொண்டார். வட நாட்டொருவன் தமிழ் கற்று பாடிய சந்தோஷம் அவருக்கு. ‘அண்ணே, மேற்கில் இருக்கும் சௌராஷ்டிரா வேற, தமிழ்நாட்டில் இருக்கும் சௌராஷ்டிரா மொழி பேசுபவர்கள் வேற’ என்பதை அவரிடம் சொல்லமுடியாத கள்ள மௌனம் எனக்கு. கீழே வந்து அமர்ந்த போது, நண்பன் ராம்கண்ணன் வந்து கண்ணடித்துவிட்டு கிள்ளிப் போனான். அவனும் சௌராஷ்டிரா பையன்.

இதற்கிடையில், ஜாம்நகர் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ‘ஷட்டௌன்’ எனப்படும் மராமத்து பணி வந்தது. வழக்கம் போல் வருவது தான். ஆலையில் ஏதாவது சின்னச்சின்ன வேலை செய்ய வேண்டி வந்தால், தேவையான பகுதிகளை நிறுத்தி ஆலையை சரி செய்யும் பணிகளை மேற்கொள்வர். மொத்தமாக ஆலையை நிறுத்துவதால் அதை ‘ஷட்டௌன்’ என்பர். அப்படி ஆலை ஓடாத சமயத்தில் சிறு சிறு வேலைகள் முடிதுக்கொள்வர். உதாரணமாக, சரியாக ஓடாத மோட்டார் இப்படிப்பட்ட ஷட்டௌன்’இல் பழுது பார்க்கப்படும். ரிப்பேர் ஆன கருவிகள் கழற்றப்பட்டு தயாராக இருக்கும் புது கருவிகள் மாட்டப்படும். பிறகு கழற்றப்பட்ட கருவிகள் சாவகாசமாக சரி செய்யப்படும். மொத்தத்தில் ஆலை மொத்தமாக மெருகேற்றப் படும். நாங்கள் பயிற்சியில் இருந்தபோது வந்த ஷட்டௌன்’இல் ஆட்கள் தேவைப்பட, இருந்த மெக்கானிக்கல் எஞ்சினீயர்கள் களமிறக்கப்பட்டனர். அதில் ஒருவன் எங்கள் நட்பு வட்டத்தில் இருந்த ரவீந்திரா (நினைவிருக்கா, இவன் பெயர் தான் ஆறாவது பாகத்தில் 6-பட்டறை மறந்திருந்தேன். இப்ப ஞாபகம் வந்துவிட்டது). மாலை முதல் நாள் ஷட்டௌன் வேலை முடிந்து வந்தவன் அறிவித்தான், “நான் இன்று ராஜினாமா செய்து விட்டேன்.” வேறு ஏதும் வேலை கிடைத்துவிட்டதா என்று ஆர்வத்தோடு விசாரித்த போது, “இல்லை, இந்த வேலை எனக்கு ஒத்து வராது. வெறும் ‘ஜாப் பெர்மிட்’ எடுத்து ஷட்டௌன் வேலை செய்ய நான் IITயில் M.Tech. படிக்கவில்லை. இங்கிருந்தால் என் திறமைகள் மழுங்கிவிடும். இந்த துறையில் நான் மதிப்பு இழந்து விடுவேன். அரசு துறையில் சேர முயற்சிப்பேன் அல்லது வேறு என் திறமையை பயன்படுத்தும் வேலையில் சேருவேன்” என்று அறிவித்தான்.

நம்பிக்கை நிறுவனத்தில், எங்கள் குழுவில் விழுந்த முதல் விக்கெட் அவன். அதுவும் எங்கள் நட்பு வட்டத்திலேயே விழுந்தது மிகச் சிறப்பு. அவனை வழியனுப்பிய அதே வேளையில், எங்கள் பயிற்சியும் ஜாம்நகரில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருந்தது. நாங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடத்திற்கு அனுப்பப் பட்டோம். நான் ‘பரோடா’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ‘வடோதரா’க்கு அனுப்பப்பட்டேன். நல்ல ஊர். ஆனால், அங்கு எனக்கு பிடித்த பூரியே என்னை சோதிக்கும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

Karthik Nilagiri

Related posts

1 Comment

Leave a Reply

Your email address will not be published.