Review

தற்கொலை குறுங்கதைகள்

Print Friendly, PDF & Email
அராத்து

Facebook மற்றும் Twitter தெரிந்தவர்களுக்கு (அதான் இப்ப எல்லார்கிட்டயும் மொபைல் இருக்கே!) அராத்து தெரியாமல் இருக்க முடியாது. நல்ல பகடி எழுதுறவர் என்றோ அல்லது ஒரு மாதிரியான வில்லங்கமான பதிவுகள் போடுகிறவர் என்றோ அல்லது ஒரு அக்கப்போர் என்றோ அல்லது ஒரு சரியான ‘ஜெமினி கணேசன்’ என்றோ அனைவரும் ஏதோ ஒரு வகையில் அராத்து’வை அறிந்து வைத்திருப்பார்கள். அவர் சாந்தி என்ற ஒரு கதாப்பாத்திரத்தை கையாளத் தொடங்கியபோது நான் அராத்துவின் பதிவுகளை தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்தேன். கூச்சப்பட்டுக்கொண்டு பல பதிவுகளுக்கு லைக் போடாமல் நழுவியிருக்கிறேன் (சபை நாகரீகமாம்?!!). ஆனால் ரசித்து ரசித்து தொடர்ச்சியாகப் படித்தேன். பல பதிவுகள் நான் படிக்கத் தவறியிருக்கலாம் என்பதால் புத்தகமாக வருமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அட்டகாசமாக, அந்த பதிவுகளைத் தொகுத்து உயிர்மை மூலமாக ‘தற்கொலை குறுங்கதைகள்’ என்ற புத்தகமாக வெளியிட்டுவிட்டார் அராத்து.

உயிர்மையில் ஆர்டர் கொடுத்த ‘தற்கொலை குறுங்கதைகள்’ (மற்றும் ‘அராஜகம் 1000’) சற்று தாமதமாகத்தான் எனக்கு கிடைத்தது. நடைபெற்றுக்கொண்டிருந்த புத்தகக் கண்காட்சி காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கையில் வந்த அடுத்த நாளே படித்து முடிந்துவிட்டது. அத்தனை சுவாரஸ்யமான எழுத்து. நாவல் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. முன்னுரையில் சாரு கூட இதை நாவல் என்று குறிப்பிட்டாலும், தொடர்ந்து இதை ஒரு புதிய இலக்கிய வடிவம் என்றும் குறிப்பிடுகிறார். ஆம், இது நாவலோ சிறுகதைத் தொகுப்போ அல்ல; அதையும் மீறிய ஒரு புது இலக்கிய வடிவம். இந்த வடிவத்திற்கு முன்மாதிரி இருக்கா என்று தெரியவில்லை. சாருவின் ‘ஜீரோ டிகிரி’யை வேண்டுமானால் சொல்லலாம். ‘ஜீரோ டிகிரி’ எனக்கு நாவலாகப் பட்டது. ஆனால், சற்றே சிறுகதை தொகுப்பு போலத் தோன்றினாலும், ‘தற்கொலை குறுங்கதைகள்’ எதற்குள்ளும் அடங்க மறுக்கின்றது.

‘தற்கொலை குறுங்கதைகள்’இல் சட்டென்று அனைவருக்கும் பிரதானமாக தென்படுவது பாலியல். நிற்க. தருமனுக்கு அனைவருக்கும் நல்லவர்களாய் தெரிந்ததுபோல, துரியோதனனுக்கு அனைவரும் கெட்டவர்களாய் தெரிந்ததுபோல, நமக்கு ஏன் இந்த புத்தகத்தில் அனைத்தையும் தாண்டி பாலியல் தெரிந்து தொலைக்கிறது?!! இப்பொழுது தொடருங்கள். இந்த பாலியல் மட்டுமே பலரின் அறச்சீற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம். ஊருக்கு தெரியாமல் அத்தனையும் செய்தாலும் உலகுக்கு உத்தமராக உலவ வேண்டியவராக இந்த சமுதாயத்தால் பழக்கப்பட்டுள்ளோம். Facebook’இன் chat மற்றும் Whatsapp திறந்து பார்த்தாலே போதும், நம் யோக்கிதை கிழிந்துவிடும். இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பாலியலை பதுங்கி பதுங்கி படிக்கப் போகிறோம். ஆனானப்பட்ட நடிகைகளுக்கே கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்யாசம் தெரியும் போது நமக்கு தெரியாதா? அதனால், தைரியமாக படிக்க ஆரம்பியுங்கள். இதில் உள்ள பாலியல் உங்களை ஒன்றும் (இதற்கு மேலும்) கெடுத்து விடாது. தமிழில் சில வார்த்தைகளைப் படிக்கும்போது நீங்கள் சற்று அசௌகரியமாக உணரலாம். அது தமிழில் என்பதால் தான். மற்றபடி நீங்கள் ஆங்கிலத்தில் ஃபக், ஷிட் போன்றவைகளை எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் பொதுவில் உபயோகிப்பதை ஒரு முறை மனதில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். திரைப்படங்களிலும் சென்ஸார் தாண்டி இவை வந்துவிடுகிறது. கங்காஜல் எனும் இந்திப் படத்தில் மாதர்சோத் அளவில்லாமல் பிரயோகப்படுத்தப் பட்டிருக்கும். மற்றுமொரு இந்திப்படத்தில் ஃபோஸ்டிகே. இந்த கற்பித நாகரித்தில் இருந்து நாம் வெளிவருவது நல்லது.

‘தற்கொலை குறுங்கதைகள்’இன் சிறப்பு அது வாசகர்களாகிய நமது கற்பனைக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் அளிப்பதுதான். தொலைக்காட்சியில் எவ்வளவு பிரமாண்டம் காட்டப்பட்டாலும் அது நம் கற்பனையை ஒரு கட்டுக்குள் வைக்கிறது. வானொலி கொஞ்சம் சுதந்திரம் அளிக்கிறது. எழுத்து மட்டுமே முழுச் சுதந்திரம் தருகின்றது. அதிலும் கூட சில பாத்திரங்கள் இப்படித்தான் என்று நமது மனதிற்குள் வந்து உட்கார்ந்துவிடுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத் தேவன், ‘உடையார்’ ராஜ ராஜ சோழன், ‘சாரு’ பெருமாள், ‘சுஜாதா’ வசந்த் & கணேஷ், மற்றும் சிலபல. ‘தற்கொலை குறுங்கதைகள்’இல் இந்த கதாப்பாத்திர பந்தமும் கூட இல்லை. உண்மையிலேயே வாசகருக்கு அளவற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சாந்தி என்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ‘ஜீரோ டிகிரி’யில் முதலில் குறிப்பிடப்படும் எந்த ஒரு வாசகியையும் போல. ஆண்கள் – அதுவும் யாராகவும் இருக்கலாம். நமது சௌகரியப்படி உருவகப்படுத்திக் கொள்ளலாம், அவர்களின் அட்டகாசமான பெயர்களைக்கொண்டு. அதன் பின் நீக்கமற நிறைந்திருக்கும் பகடி எழுத்து நடை. இதுதான் இந்த புத்தகத்தை மேலும் மேலும் உயிர்ப்புடன் வைத்திருப்பது.

  • “பழசு ஞாபகம் இருக்கா?” / “பின்னே, எதிர்காலமா ஞாபகம் இருக்கும்?” 
  • கீழே இறக்கிவிடப்பட்ட ஆமைகள் ஐந்தும் “குறியீடு! குறியீடு!! குறியீடு!!!” என்று கத்திக்கொண்டே சமையல் அறைக்குள் சென்றன.
  • இலக்கியத் தரமாக எழுதவைக்க முடியுமா என்பதற்கு, மூளை, “நீ குடிச்சிட்டு எழுதுறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. I am totally fit.”
  • வலிக்க வலிக்க கர்ப்பமானாள்.
  • மிகப் பெரும் போராட்டத்திற்கு பிறகு C.M. ஆன பிறகு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை.
  • ஜெமோ – பொருட்சீற்றம் கட்டுரை எழுத 250 GB hard disk வாங்க கடை தேடி ஓடுவார்.
  • எஸ். ராமகிருஷ்ணன் – 45 வயது கதாபாத்திரத்துக்கு 18 வயது வேஷம் போட்டு உலாவ விடுவார்.
  • சாரு – சாந்தியையே “பேரழகி… பேரழகி…” என்று வருணித்து கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார்.
  • ‘மோகமுள்’ யமுனா, “கிளைமாக்ஸ் வருவதற்குள் எனக்கே அலுத்துவிட்டதே, நீங்களெல்லாம் எப்படிய்யா பொறுமையாய்ப் படித்தீர்கள்?”
  • பொறுமையாக அத்தனை அறை விபரங்களைத் தரும் ரிசெப்ஷெனிஸ்ட், கடைசியாக ரூம் கேட்கும்போது சொல்கிறாள், “இன்னைக்கு எல்லா ரூமும்  ஃபுல் ஸார். எதுவுமே காலி இல்லை.”
இந்த எழுத்து நடை உண்மையிலேயே மிக புதிது மற்றும் வித்தியாசமானதும் கூட. இது Facebookஇல் எழுதப்பட்டதால் அந்த வாசகர்களுக்கு ஏற்றபடியும் இருக்கிறது. பலருக்கு இது பிடிக்காமல் போகலாம். ஆனால், யோசித்துப் பாருங்கள், உங்கள் கல்லூரி, அலுவலக, காதல் அனுபவங்களை இந்த நடையில் எழுதினால் எப்படி இருக்கும்? ஒரு கொலாஜ் போல வரலாம்.

Verdict: ஒருமுறை படிக்கலாம். ஆனால், இந்த புதிய எழுத்து வகைக்காகவே இதை உங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்.

பி.கு.1: ஆப்பர்சுனிட்டி என்ற கதை இருமுறை வருகிறது.

பி.கு.2: அராத்து ‘தற்கொலை குறுங்கதைகள்’ தொடர்ந்து இதே போல் ‘சைனைட் கதைகள்’ என்று இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கிறார். Iron Man 3 அல்லது Terminator 3 போல போரடிப்பதற்குள் நிறுத்துவது நல்லது.

Karthik Nilagiri

Related posts

Leave a Reply

Your email address will not be published.